சிறிதும் பெரிதுமாக
பலபல ஊர்கள்
ஊரெங்கும் அரசர்கள் ...
ஓலை வீடுகளில் சிலரும்
ஓட்டு வீடுகளில் சிலரும்
மாடி வீடுகளில் சிலரும்
வீடுகள் தவிர்த்து சிலரும் என
தத்தம் சாம்ராஜ்யங்களில்
கோலோச்சி இருந்தார்கள்
அவரவர் ராஜ்யத்தில்
வந்துதித்தார்கள் ராஜகுமாரிகள்
அவரவருக்கு இடப்பட்ட தொட்டில்களில்
பஞ்சில் சிலவும்
பட்டில் சிலவும்
இரு கைகள், சிறகுகள் என
அநேகமாயிருந்தன தொட்டில்களும்
இத்தொட்டில்களை அலங்கரித்திருந்தனர்
ராஜகுமாரிகள்
பொன்னும் மணியும் அன்பும் உடுத்தி
சிறுதேர்கள் உருட்டி நடைபயின்று
அரசர்களின் கையில் நடந்து
பட்டாம் பூச்சிகளின் சிறகுகள் சுமந்து
பள்ளிக்கும் போனார்கள்
பட்டங்களும் சட்டங்களும்
வென்றே வந்தார்கள்
வானவில் வண்ணங்கள் சூடி
மழை நீர் முத்துக்கள் அணிந்து
விண்மீன்கள் ஆடைகளில் உடுத்தி
தேர்களில் பவனி வந்தார்கள்
அரசிகளாகப் போகிறோம்
என்ற மமதையுடன்
காலம் விதித்த ஒரு கரிநாளில்
ராஜகுமாரிகளுக்கு ராஜகுமாரர்களை
தேட போய் வந்த அரசர்கள்
சாம்ராஜ்யங்கள் பறிக்கப்பட்டு
சாமான்யர்களிலும் கீழென சபிக்கப்பட...
கனவுகள் அகற்றப்பட்டு
இளவரசிகள் விற்கப்படுகிறார்கள்
சேடிப் பெண்களாக .....
2 comments:
//சபிக்கப்பட...
கனவுகள் அகற்றப்பட்டு
இளவரசிகள் விற்கப்படுகிறார்கள்
சேடிப் பெண்களாக .....//
நேற்று வரை இது யதார்த்தம்.
காலம் மாறி வருகிறது.
இன்னும் மாறக்கூடும்.
மணம் புரிய பெண்கள் கிடைக்காமல்
அலைந்து வரும் இளவரசர்களே இப்போது அதிகமாக உள்ளனர்.
கவிதைக்குப் பாராட்டுக்கள். vgk
மிக்க நன்றி வைகோ அய்யா ..காலம் மாறும் என நம்புவோம்
Post a Comment