Friday 14 December 2012

என் ஊஞ்சல்







வானில் கயிறிட்டு
கட்டப்பட்டிருந்தது   ஊஞ்சல்
புன்னை மரக்கிளையில்
இளைப்பாறிய கயிற்றில்
சாக்குகள் போர்த்தி
என் ஊஞ்சலாக்கினார் அப்பா


அம்மா மடியிலோ 
அப்பா  தோளிலோ
மாமா கையிலோ
சிறு பிள்ளையாய் 
ஆடுவது  போன்றதாக இருந்தது
அவ்வூஞ்சல் ஆடுகையில்


தரையில் கால் தொட்டு
மேகம் மிதித்து
புன்னை இலைகளை அசைத்து
பறந்து போனேன் நான்
காற்றை போலவே
அங்கும் இங்கும் 


ஒரு விடுமுறை நாளின்
வெயிலிலும்  இரவிலும்
கட்டுட்டுண்டு கிடந்தேன்
ஊஞ்சலுடன்
கயிற்றைப்  போலவே ....
கயிற்றில் பிணைந்திருந்தன
பலரின் பொறாமைகளும்
ஏக்கங்களும்


கயிற்றின் கரம்பற்றி
நின்று ஆடினேன் 
வானம்  ஏகும் தேவதையென 
கயிற்றில் சாய்ந்து
கொலுவிருந்தேன்
நந்தவனத்து ராணியென


என்றோ ஏனோ
எப்பொருட்டோ 
எங்கோ போனது என் ஊஞ்சல்
எங்கென அவதானிக்கையில்
மீண்டும் தேவர்களிடத்து
சேர்ந்திருக்கக் கூடும் ....
விக்கிரமாதித்தன் சிம்மாசனம் போல்






5 comments:

Anonymous said...

அதே முகநூல் பூங்குழலியா?
கவிதை நன்று
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

ஆகாயப் பந்தலில் ஆடும்
பொன்னூஞ்சலை நினைவுறுத்திப் போனது கவிதை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

முகநூலில் நான் இருக்கிறேன் எனினும் நீங்கள் குறிப்பிடுவது நானா என்று தெரியவில்லை .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவைக்கவி

பூங்குழலி said...

மிக்க நன்றி ரமணி அவர்களே ...வாழ்த்துக்கும் உங்கள் தொடர் ஆதரவுக்கும்

பூங்குழலி said...

மிக்க நன்றி மாற்றுப்பார்வை