Wednesday, 12 February 2014

விடுதலை

எந்த ஒரு நீண்ட கால   நோயாளிக்கும் தன் நோயிலிருந்து விடுதலை கிடைத்து விட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும் .என்றேனும்  அது பலிக்கும் என்ற நம்பிக்கையை சார்ந்தே பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நான் பணிபுரிவது எச் ஐ வி நோயாளிகளுக்கான ஒரு  சிறப்பு மருத்துவமனையில் .சிகிச்சைக்கு தொடர்ந்து வந்தாலும் இது குறித்த கனவுகளும் நம்பிக்கையும் கண்டிப்பாக எல்லாருக்கும் உண்டு .சிலர் சளைக்காமல் ஒவ்வொரு முறையும் வரும் போது விசாரித்து போவார்கள் .சிலர் மருந்து வருமா ?என்பதோடு நிறுத்தி கொள்வார்கள் .சிலர் ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகளை கொண்டு வந்து விளக்கம் கேட்பார்கள் .அனேகமாக என்னுடைய பதில் கண்டிப்பாக சில வருடங்களுக்குள் வரும் என்பதாகவே இருக்கும் .

வழக்கம் போல் சிகிச்சைக்கு வந்தார் ஒரு பெண் .

பெண் -"நோயே  இல்லாம பண்ண  மருந்து வருமா ?"
நான் -    "கண்டிப்பா வரும் "
பெண்  -"எப்ப வரும் ?"
நான் -  "எப்ப வேணும்ன்னா வரலாம் ...ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள .."
பெண் -"இந்த ஆஸ்பத்திரி எச் ஐ வி இருக்கறவங்களுக்கு மட்டும் வைத்தியம்    பாக்குறது தான?"
நான் - "ஆமா "
பெண் -"அந்த மருந்து வந்தா இங்க தருவீங்களா ?"
நான் -"கண்டிப்பா தருவோம் ..."
பெண் -எங்களுக்கெல்லாம் மருந்து கொடுத்து நாங்க நல்லாயிட்டா ,நீங்க என்ன செய்வீங்க ?"
நான் -"தொழில் கெட்டு போயிரும்ன்னு மருந்து வந்தா கொடுக்காம
வச்சிக்குவோம்ன்னு நெனச்சீங்களா ?நோயா இல்ல ..ஒங்களுக்கெல்லாம் மருந்து கொடுத்திட்டு நாங்க வேற நோய்க்கு வைத்தியம் பாக்க போயிருவோம் ."


Sunday, 9 February 2014

மனதில் புற்று

எச்.ஐ வி தாக்குதல் இருப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம் .இந்த சந்தேகத்தினால்  கருப்பை புற்றுநோய்  என்று கண்டறியப்பட்ட போது எச் ஐ வி பரீட்சையும் செய்யப்பட  இந்த பெண்ணுக்கு அதுவும் இருப்பது தெரிய வந்தது ,சென்னையின் பிரபல புற்றுநோய்க்கான மருத்துவமனை ஒன்றில் .

கிராமத்திலிருந்து வந்து புற்று நோய் சிகிச்சைக்கென சென்னையில் இருக்கும் இவருக்கு மருத்துவமனையின் சார்பில் சிகிச்சை ,தங்குமிடம் ,உணவு என்று எல்லாமே இலவசமாகவே செய்யப்படுகிறது .ஆனாலும், மருத்துவர்கள் ,பெரும்பாலான செவிலியர் என்று எல்லாருமே அன்பாக இருந்தாலும் ஒருவர் மட்டும் வார்த்தையால் தன்னை நோகச் செய்வதாக சொல்லி அழுதார் அந்த பெண் ."தேள் மாதிரி வார்த்தையால கொட்டுறாங்க மேடம் .எனக்குன்னு தனியா ஒரு ரூம் கொடுத்திருக்காங்க ,அதிலே இருந்து நான் வெளியவே வரக்கூடாது .வந்துட்டா ஒனக்கிருக்கிற நோய் எல்லாருக்கும் வரணுமா ?உள்ள இருக்க முடியாதான்னு சத்தம் போடுறாங்க .யார் கிட்டயாவது பேசுனா ஒண்ணைய அசிங்கப்படுத்தவாங்குறாங்க ?

நானும் எவ்வளவு நேரம் தான் அந்த ரூம்குள்ளேயே அடைஞ்சு கெடக்க முடியும் ?அன்னைக்கு ஒருத்தங்க இந்த ஆரஞ்சு பழத்த உரிச்சு கொடுன்னு கேட்டாங்க .நானும் யதார்த்தமா உரிச்சு கொடுத்தேன் .பாத்துட்டு ஒரே திட்டு.அவங்க தானே கொடுத்தாங்க ,நா என்ன செய்யட்டும்ன்னு கேட்டா 
அறிவில்லையான்னு கேக்குறாங்க .எம்பிள்ளைகல நெனச்சுக்குவேன் மேடம் .இன்னமும் ரெண்டு வாரம் தான் .அதுக்கப்புறம் ஊருக்கு  போயிருவேன் .அங்க என்ன காத்திட்டு இருக்கோ தெரியல .பயமா இருக்கு .ஆஸ்பத்திரியிலேயே இப்படி நடத்துறாங்களே ,அது கிராமம் ,அங்க என்ன செய்வாங்களோ ?"


Friday, 7 February 2014

மல்லாட்டையும் மருத்துவமனையும்

நேற்றைய தினத்தில் நடந்தது இது .
கணவனும் மனைவியாக வந்திருந்தனர் .விவசாயக் குடும்பம் .மனைவி அளவாக பேசுவார் .கணவர் நிறைய பேசுவார் ."நல்லா இருக்கீங்களா ?"என்று நான் கேட்டது தான் தாமதம் ,"என்னவோ போங்க ,என்னத்த நல்லா இருக்க .போட்டதொண்ணும் சரியா மொளைக்கல .வேல பாக்க ஆள் கெடைக்க மாட்டேங்குறாங்க .ஒரு ஏக்கருக்கு நாப்பது மூட்டையாவது நெல் வெளையனும் .வெளையல.காய்கறி போட்டோம் .சொர காயெல்லாம் பிஞ்சில வெம்பி விழுகுது .அதிகாரிகளுக்கும் என்னன்னே புரியல .இனிமே தான் என்ன நோய்ன்னு கண்டுபிடிச்சு மருந்து கண்டுபிடிக்கணுமாம் .அதுவரைக்கும் பயிறு தாங்குமா என்ன ?

தண்ணி கெடைக்க மாட்டேங்குது .தண்ணிக்கு தகராறு வந்து ,பங்காளிகளே போன வருஷம் என்னோட மூணு ஏக்கர் பயிர கொளுத்தி போட்டாங்க .நெலம் வேற நல்லா  இல்லையாம் .மூணு அடி தோண்டி டெல்லி வரைக்கும் அனுப்பி வச்சேன் .ஒன் நெலம் பூரா வெசமா இருக்குன்னு சொல்லிட்டாங்க.மாற நூறு  வருஷம் ஆகுமாம் .ஒரம் ,அதுலேயும் கலப்படம் செய்யறனால இப்படியாம்.இது கம்மியா தான் மகசூல் தரும்னு சொல்லிட்டாங்க .

பக்கத்துல ஒருத்தன் பத்து ஆடு வச்சிருந்தான் .திடீருன்னு பத்தும் செத்து போச்சு .ஒண்ணு ஆறாயிரம் பெறும் .அப்படியே நொடிச்சு போய்ட்டான் .மாடெல்லாம் கோமாரி நோய் வந்து சாகுது .ராத்திரியில உயிரோட இருக்குற மாடு காலையில பாத்தா செத்து கெடக்குது .அதிகாரிகளும் என்னெனவோ செஞ்சு தான் பாக்குறாங்க .ஒண்ணும் பண்ண முடியல .இவ்வளவு வருஷத்துல இப்படி நெலம் ,ஆடு ,மாடு எல்லாம்   ஒரே நேரத்துல வீணா  போயி பாத்ததில்ல.ஏதோ பாம்பு கடிச்சு சாகும்பாங்க அவ்வளவுதான் .

இப்ப வந்து இன்சூரன்ஸ் எடுக்க சொல்றாங்க . இனி எடுத்து என்ன பண்ண ?ஏதோ மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு பேசிட்டேன் .ரொம்ப பேசுறானேன்னு நெனச்சிற போறீங்க !"


இவர்களுக்கு முன்பு வந்த ஒருவர் ,அதே ஊர்க்காரர் தான் .ஆனால் அவர் பொதுவாக அதிகம் பேச மாட்டார் .அதிசயமாக இந்த முறை "மல்லாட்ட போட்டு அறுக்க முடியாம கெடக்குது .மூட்ட 2500 ரூவாய்க்கு வாங்கிட்டு வந்து வெதச்சது .இப்ப கவர்ன்மெண்ட் வெறும் 3200 ரூவா வெல வச்சிருக்காங்க.அந்த வேலைக்கு வித்தா போட்டதே கூட எடுக்க முடியாது .என்ன செய்யனே தெரியல .எல்லாரும் இந்த ஆன்லைன்ல பதுக்கிட்டு இப்ப விக்குறாங்க .இந்த ஆன்லைன்  வியாபாரத்தால தான் வெவசாயமே ஒழிய போகுது,"என்று சொல்லிவிட்டு கிளம்பி போனார் .

போனவுடன் திரும்பி வந்தவர் ," ஒங்களுக்கு அடுத்த தடவ வரும் போது கொஞ்சம் எடுத்திட்டு வரேன் .ஒங்களுக்கு பச்ச பிடிக்குமா ,காஞ்ச கடலை பிடிக்குமா ?விடுங்க ரெண்டுலயும் கொஞ்சம் எடுத்திட்டு வரேன் ."