Sunday, 23 March 2014

போடுங்கம்மா ஓட்டு

வாராக வாராக
வாராதவுக  வாராக
வாராம இருந்தவுக
வரிசையாக வாராக

பல வருஷம் காத்திருந்தோம்
பல தெசைய பாத்திருந்தோம்
பல சமயம் தூது விட்டு
கண் நோவ காத்திருந்தோம்

தேடினப்ப கெடக்கலையே
வாடினப்ப வாரலையே
இப்ப வரிசையாக வாராக
விமர்சையாக வாராக

ஆளுக்கொரு சின்னம்  கட்டி
ஊருக்கொரு வேஷம் கட்டி
வார்த்தைக்கொரு பல்லிளிச்சு
வாசல்வரை வாராக

ஓட்டு எண்ணி முடிச்சதுமே
ஓட்டம் எடுத்து போனாக
பேரு பதவி கண்டதுமே
ஆளு  மாறி போனாக

வெறப்பாக போனவுக
நெளிஞ்சி கொழஞ்சி வாராக
மெதப்பாக இருந்தவுக
பணிவாக வாராக

அய்யான்னு  கொழையுராக 
அம்மான்னு கொஞ்சுராக
ஓட்டத்தான் போடுங்கன்னு
ஓயாம கெஞ்சுராக

சாக்கடையில தேனாக
ஓடும்ன்னு சொல்லுறாக
கேப்பையில நெய்யாக
வடியும்ன்னு சொல்லுறாக

காதுவர சிரிக்கிராக
தேனொழுக பேசுறாக
ஏதேதோ செஞ்சதாக
பெருமையாக பீத்துராக

அய்யாவே அம்மாவே
ஓட்டு கேக்கும் தொரமாரே
போட்ட வேஷம் கலச்சுபுட்டு
புது வேஷம் போட்டவரே

ஹெலிகாப்டர் பறக்கையில
வாய் பொழந்து பாத்திருப்போம்
மைக்க புடிச்சி பேசுறப்ப
 கைய தட்டி ரசிச்சிருப்போம்


புழுகித்தான் பேசினாலும்
நம்புனாப்புல கேட்டிருப்போம்
ஓட்டுக்கு நோட்டுன்னு
கொடுக்கிறத சேத்து வைப்போம்

குறிச்சு வச்ச தேதியில
ஓட்டத்தான்  போட்டிருவோம்
ஒங்க கணக்கை எல்லாம் தப்பாக்கி
புது கணக்கா மாத்திருவோம்











 

 





  






4 comments:

Seeni said...

நல்ல நக்கலான கவிதை...

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்...

இனி என்றும் பொருந்துமோ...?

பூங்குழலி said...

நன்றி சீனி

பூங்குழலி said...

இதுவரை பல தேர்தல்களில் இது தான் நடக்கிறது தனபாலன்