Thursday, 18 September 2014

கரும்புக் கொள்ளை



முன்பு நான் பகிர்ந்த  மல்லாட்டையும் மருத்துவமனையும் என்ற பகிர்வின் கதாநாயகர் இவர்  ( http://மல்லாட்டையும் மருத்துவமனையும் ).
இன்று வந்திருந்தார் .இந்த முறை கரும்பு .

"கரும்பை  போட்டவன் எல்லாம் கஷ்டப்பட்டு கெடக்குறான் .கடலூர் பக்கத்துல மில்காரன்  ஆறாயிரம் கோடிக்கு மேல  விவசாயிக்கு பாக்கி வச்சிருக்கான் .கேட்டா சக்கர  வெல போகலன்னு சொல்றான் .
இப்ப  மார்க்கெட்டுல கெடைக்கறது எல்லாம் காரட் ,பீட்ரூட் சக்கர தான் .வெளிநாட்டுலேருந்து அதுதான் இங்க வருது . கரும்பிலிருந்து சக்கர எடுக்கணும்ன்னா கிலோக்கு இருநூத்து அறுபத்து அஞ்சு ரூபா ஆகுமாம் .இங்கிருந்து வெளிநாட்டுக்கு போயிட்டு இருந்ததாம் .இந்தம்மா வந்து அத நிறுத்திப்புடிச்சி .அந்த சக்கர  டன் கணக்குல இருக்கும் .கிரேன் வச்சு தான் தூக்க முடியும் .அது அப்படியே வச்சிருந்தா பழுப்பாயிரும் .அத மறுபடியும் கழுவி தான் சக்கரையாக்கணும் .அத  செஞ்சு அத வித்தா தான் காச குடுக்க முடியும்ன்ட்டான் ."

"ஆனா மில்காரன் கெட்டிக்காரத்தனமா பத்து பதினஞ்சு ஏக்கருல கரும்பு  போட்டவனுக்கெல்லாம் காச கொடுத்துட்டான் .அதே மாதிரி பாங்குல வாங்குன கடனையெல்லாம் கட்டிருக்கான் .அதனால எவனும் அவன கேக்க மாட்டேங்குறான் .சின்ன வெவசாயி தான் வழியில்லாம பொலம்பிட்டு கெடக்கான் .அதோட மில்லிலேயே கரெண்ட்  எடுக்கிறான் .அதுல அவன் தேவைக்கு போக மிச்சத்த கவர்ன்மென்ட்டுக்கு கொடுக்குறான் .அதுல அவங்க இவனுக்கு  நாப்பத்து எட்டு கோடி பாக்கியாம் .அத கொடுத்தா வெவசாயிக்கு காச கொடுத்திருவேங்கறான்.நாப்பத்து எட்டு எங்க ?ஆறாயிரம் கோடி எங்க ?"


"இந்தம்மா  ஊரையே கவர் பண்ணிட்டோம்ன்னு நெனைக்குது .அதனால கண்டுக்க மாட்டேங்குது .எல்லாம் இந்த எலவசம் பண்ற வேல .எலவசமே வாங்கக் கூடாதுமா .நம்ம பணத்தையே எடுத்து நம்மகிட்டேயே கொடுக்கிறாங்க .ஓட்டுக்கு பணம் வாங்கலைன்னாலும் வம்புக்கு வரானுங்க .எங்களுக்கு ஓட்டு போடாம போயிருவியான்னு ?"

"வெவசாயி  தான் ,பேப்பருல கூட படிச்சிருப்பீங்க ,வேப்பில கட்டி போராட்டம் ,பிச்சை எடுக்குற மாதிரி போராட்டம்ன்னு தெருவில நின்னு என்னென்னமோ போராட்டம் பண்ணி பாக்குறான் .ஒண்ணும் நடக்கல ."

Thursday, 11 September 2014

பெண்பாவம்

தென் தமிழகத்தின் கிராமங்களில் ஒன்றை சேர்ந்தவர் இவர் .சிகிச்சைக்கு  சில மாதங்கள் வரவில்லை . விசாரித்தபோது ,இவரின்  பதினான்கு வயது மகள் பள்ளிக்கு  சென்று வரும் வழியில் ,ஒருவன் ,இவன் வயது பதினெட்டாம் ,தினமும்  கிண்டல் செய்தபடி இருந்திருக்கிறான் .கையை பிடிப்பது ,தூக்கி சென்று விடுவேன்  என்று இவன் அத்து மீறவும் ,அவன் பெற்றோரிடம் போய்  இவர் , மகனை கண்டிக்கும் படி சொல்லியிருக்கிறார் .அவர்கள் ஏதும் செய்தது போல் தெரியவில்லை .இவன் தொந்தரவு தொடர்ந்திருக்கிறது .அந்த பெண்ணோ பள்ளிக்கு போகவே பயந்து போயிருக்கிறது . பிரச்சனை பெரிதாவது போல் தோன்றவே இவர் போலீசிடம் போயிருக்கிறார் .அவர்கள் ஏதும்  கண்டுகொள்ளவில்லையாம் .பெண் வீட்டில் இருந்தாலும் எவரேனும் துணைக்கு இருக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை என்று சொன்னார் .

மீண்டும் இன்று வந்திருந்தார் .பேச்சு  வாக்கில் இது குறித்து விசாரிக்கவே ,"அவன்  அப்படியே தான் செஞ்சுக்கிட்டிருந்தான்க்கா .போலீஸ் கிட்ட  போய் சொன்னா  அவங்க ஒண்ணும் கண்டுக்குற மாதிரி தெரியல .அவன் புள்ளைய தூக்கிருவேன்னு மெரட்டிக்கிட்டே இருந்தான் .புள்ள  பள்ளிக்கூடமே  போக மாட்டேங்கு .அப்புறம் அவர புடிச்சு இவர புடிச்சு போலீசுக்கு இருபதாயிரம் கொடுத்தப்புறம் அவன மெரட்டி இப்ப  வேற ஊருக்கு போயிட்டான் ."

"அவன் பிரெண்ட்   ஒரு பய ஊருக்குள்ள  இருக்கான் .அவன் போன வாரத்துல ஒரு மூணு வயசு  புள்ளைய தூக்கிட்டு போய் அசிங்கம் செஞ்சிருக்கான்.அந்த புள்ளையோட அப்பா வெளியூருல வேலைக்கு போயிருக்காப்ல .அந்த பொண்ணு அவனோட போய் ஒத்த ஆளா மல்லுகட்டியிருக்கு .யாரும் என்னன்னு கண்டுக்கல.அப்புறம் போலீசுக்கு ரெண்டாயிரம்  குடுத்திருக்கு .அப்பவும் அவங்க கேஸ் எழுதலக்கா .வெறுமனே அவன மெரட்டி விட்டிருக்காங்க .பாவம் அந்த புள்ள பயந்து போய் கெடக்கு .

"இந்த பயலுவ செல்லுல அசிங்க அசிங்கமா படம் பாத்துட்டு இப்படி புத்தி கெட்டு திரியிறான்ங்கக்கா "

என்னைய விட்டா ஒருத்தனையாவது போட்டு தள்ளிருவேன்க்கா .ஒருத்தன போட்டாத்தான் இவனுங்க அடங்குவாங்க .பத்து லட்சம் செலவாகும் .மூணு மாசம் உள்ள இருக்கணும் .உள்ள மாத்திர முழுங்க விடமாட்டங்க .நீங்க வேற தெனம் விடாம சாப்பிடனும்ன்னு  சொல்றீங்க .அதுக்கே தான் நா பேசாம இருக்கேன்க்கா  ."

"எத்தன வயசுலேயும் பொம்பள புள்ளைய வீட்டுல வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க முடியலக்கா ."


Sunday, 7 September 2014

மங்கையராய் பிறந்திட

என்னுடன்  பணிபுரியும் பெண்ணொருத்தி .அவளின் மகள்   போன வருடத்தில் பூப்பெய்தினாள் .சொல்வழக்கில் சொல்வதானால் சற்றே மதமதவென்று இருக்கும் உடல் அமைப்பு . ஆனாலும் சிறுமி .நேற்று பள்ளிக்கு சென்று வந்தவள் வீட்டில் அம்மாவிடம் "எனக்கு ஆபரேஷன்  செஞ்சுடும்மா "என்று சொல்லியிருக்கிறாள் .என்ன ஆபரேஷன் என்றால் மார்பை அகற்றி விடும் ஆபரேஷனாம் !

எதற்கு என்று விசாரித்தால் தினமும் பள்ளியில் ஆசிரியர்கள் இவள் உடல் அமைப்பை  பற்றி விமர்சித்தப்படி இருந்திருக்கிறார்கள் .அதிலும் பள்ளி பிள்ளைகளுக்கே உரிய  மூட்டை போன்ற பையை இவள் சுமந்துவர , "ஒழுங்கா நட " என்ற கண்டிப்புகள் வேறு .பாவம் குழந்தை பயந்து போய் , தானாக யோசித்து குழம்பி ஆபரேஷன் முடிவிற்கு வந்திருக்கிறாள் .

 ஒரு சிறுமியின்  ,"எனக்கு மட்டும்  ஏம்மா இப்படி இருக்கு ?" என்ற கேள்வியை ஒரு யதார்த்த தெளிவான பதிலாக்காமல் அதை ஒரு குற்ற உணர்ச்சியாக மாற்றிய அந்த ஆசிரியர்கள்   கடும் கண்டனத்துக்குரியவர்கள் . பட்டங்கள் ஆளவும்  சட்டங்கள் செய்யவும் பெண்கள் வந்துவிட்ட இன்றைய உலகத்தில் பெண் உடல் சார்ந்த பிம்பங்களை ஆசிரியர்களே இன்னமும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது எத்தனை இழிநிலை .

ஒரு சிறுமியின் மனதை சிதைத்து தேவையற்ற  குழப்பங்களை உண்டாக்கிவிட்டிருக்கிறார்கள் .இதை தெளிவுபடுத்திக்  கொள்ளும் வாய்ப்பு இவளை  போல எல்லா சிறுமிகளுக்கும் வாய்ப்பதல்ல .


எல்லா பாலியல் வன்முறைகளுக்கும் பெண்ணின் உடலையும் உடுப்பையும் குற்றம் சாட்டிவிட்டு  நிஜக் குற்றவாளிகளை தொடர்ந்து தப்பிக்க விட்டுக் கொண்டே இருக்கிறோம் .பள்ளியளவில்  பெண் உடல் சார்ந்த சரியான  அறிவும்   அது பெருமைக்குரியது  என்ற நிஜமும்  பெண்களுக்கும் ஆண்களுக்கும்  உணர்த்தப்பட வேண்டும் .அதைவிடவும் முக்கியமாக பெண்ணுடல் ஒரு  கவர்ச்சி பொருளல்ல என்ற  தெளிவும் .ஆனால் ,நாம் முதலில் கற்பிக்க வேண்டியது நமது ஆசிரியர்களுக்கு தான் போலும்


அதுவரையில் ....
பெண் என்றால் மார்பும் சதையும் இன்னபிறவும் ..........