Tuesday, 30 August 2016

மீண்டும்

                                                  Image result for watching rain  paintings


ஏதோ ஒரு நாளின் காதல்
சற்றே  பூவின் வாசம்
எதற்கோ வந்த கோபம்
காரணமில்லா புன்னகை
தேநீர் குவளையின் சூடு
நனையும் மண்ணின் வாசம்
எல்லாம்  தேடி வந்து
என் வாசலில் கொட்டித்தீர்த்தது
மழை
மழை போன பின்னும்
அவை வழிந்து கொண்டே இருக்கின்றன
ஜன்னல் கம்பிகளிலும்
தாழ்வாரத்திலும்
என் விரலிடுக்குகளிலும்
இன்னும் பிறவிலும்

Tuesday, 23 August 2016

கபாலி

                                      Image result for kabali


எல்லாரும் பாத்து  சிலாகிச்சு திட்டி அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சப்புறம் கபாலிய பத்தி எழுத கொஞ்சம் கூச்சமா தான்  இருக்கு .ஆனாலும் நானும் படத்தை பாத்துட்டேங்கறத இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல வேற வழி இல்லாததால இந்த பதிவு ...

படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு  போச்சு .கண்ண மூடுனா ரஜினி தெரியுறாரு .கண்ண திறந்தாலும் ரஜினி தெரியறாப்பல .என்னத்துக்கு வழ வழா கொழகொழானு ..

எனக்கு பிடிச்சது

கஷ்டப்பட்டு  ஸ்டைல் பண்ணாம ரஜினி இயல்பாவே ஸ்டைலா இருக்கிறது -ஒவ்வொரு ஷாட்லேயும் -எம்புட்டு நாளாச்சு இப்படி பாத்து ..கண்ணெல்லாம் பளிச் பளிச்
அவரோட அழகான வார்டுரோப் -குறிப்பா அந்த மஞ்சளும் சிவப்பும் ?கட்டம் போட்ட லுங்கி  -விசில்ஸ்
குமுதவள்ளிய பாக்க போறதுக்கு முந்தின நாள் இரவெல்லாம் நிக்கிற அந்த ஷாட்  /தாடியை ஷேவ் பண்ணிட்டு இறங்கி வர ஷாட் - சுத்திப்போடுங்கய்யா 
மகளோட கைய பிடிச்சிக்கிட்டு  அவ கூட வர சீன்ல குழந்தை மாதிரி ஒரு முகபாவம் -வாவ்
அந்த தாடி போக எஞ்சின கொஞ்ச ஸ்பேஸ்ல என்னாமா குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்ஸ் - ஆஸம்
 அழுமூஞ்சியா இல்லாத strong நாயகி - இந்த ரோலுக்கு ரீல் ரீலா அழுத்திருக்கலாமே ?
assassin மக
எங்கேயோ நைசா மொளகா தேய்க்கிற மாதிரியே  இருக்கு வசனமெல்லாம்
குறிப்பா கோட் சூட் வசனங்கள்  - படத்துல அந்த கோட் சூட் கூட ஒரு கதாபாத்திரம் ?

பாட்டு
டேன்ஸ்-  இல்லாதது

அப்புறம்... எல்லாமுமே

ரஜினியை இயக்குனர் நல்லா மடை கட்டி இயக்கியிருக்காப்ல

சொல்லாம இருக்கவே முடியாது - மகிழ்ச்சி




 

Saturday, 20 August 2016

வீடு





எந்த பாதையிலும்
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு வீட்டையேனும்
கதவுகள் கழற்றப்பட்டு
செங்கல்கள் உதிர்க்கப்பட்டு
நிர்வாணமாய் நிற்கிறது
அந்த வீடும்


அவ்வீட்டில்  குடியிருந்த
நினைவுகளையும்
சிரிப்புகளையும்
துக்கங்களையும்
எவரும் அறியாமல்
எங்கோ  தொலைதூரத்தில்
கொண்டு கரைக்கிறது காற்று


மிஞ்சியிருக்கும் 
செங்கலும் மண்ணும்
பழங்கதைகள் பேசிக்கழிக்கின்றன
எஞ்சியிருக்கும் பொழுதுகளை
எல்லாம் களையப்பட்டு
அடித்தளம் அகற்றும் போது
ஓவென்று அழுகிறது மண்
தான் அனாதையென




Tuesday, 9 August 2016

இரவில் நினைவுகள்

என் படுக்கையின் முன்னே
பளிச் நிலவொளி இருக்கிறது
பளிச்சென்பதால் 
தரையில் பனிபோல் 


தலையை தூக்கி
பளீர் நிலவை பார்க்கிறேன்
தலையை தாழ்த்தி
கனவு காண்கிறேன்
நான் வீடு வந்ததாக 


Quiet Night Thoughts - Poem by Li Po

Before my bed
there is bright moonlight
So that it seems
Like frost on the ground:

Lifting my head
I watch the bright moon,
Lowering my head
I dream that I'm home.

Tuesday, 2 August 2016

வைன்

குடித்துக்கொண்டு ,உட்கார்ந்திருக்கிறேன்
இரவுக்கு தொலைந்து .
உதிரும் இலைகளை
தரையிடமிருந்து ஏந்தி
தொடர எழுகிறேன்
ஓடையின் வெள்ளை நிலாவை
பறவைகளின் அறிகுறிகள் இல்லை
மனிதர்கள் போய்விட்டிருக்கிறார்கள்




 Wine - Poem by Li Po

Drinking, I sit,
Lost to Night,
Keep falling petals
From the ground:
Get up to follow
The stream’s white moon,
No sign of birds,
The humans gone.