மொக்கைகளை பற்றிய ஒரு பதிவு .
படிப்பது என்பது எளிதானதல்ல .நமக்கு அது எளிதானதாக வாய்க்கப் பெற்றிருந்தால் அது ஒரு வரம் .எத்தனையோ தேடல்கள் தேவைகள் நோக்கி நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் நீ படிக்காததால் மொக்கை என்று சொல்வதே ஒரு மேட்டுமைத்தனம். இதை தெரியுமா அதை தெரியுமா என்றெல்லாம் ஏளனம் பேச நாம் யார் ?
எங்கப்பா கணித பேராசிரியர் ,எல்லாம் படிப்பார் .கம்பராமாயணம்,சிலப்பதிகாரம் முதல் ஷேக்ஸ்பியர் ,வுட்ஹவுஸ் வரையும். .Wodehouse ,Thomas Hardy எல்லாம் எனக்கு ஆறாம் வகுப்பிலேயே அறிமுகம் செய்து வைத்தார் .அருகில் கிடைக்காத சூழலில் நண்பர்களின் கல்லூரி நூலகங்களில் இருந்து தேடி எடுத்து வந்து தந்தார் .இன்று வரையில் அப்பா நாத்திகர் .பெரியார் அண்ணா கலைஞர் அபிமானி .ஆனாலும் நானாக தேடியே பெரியார் நூல்களை படித்தேன் .என்ன சொல்லியிருக்கிறார் பார்க்கலாமே என்று வாங்கி இன்று ஓரளவு படித்திருக்கிறேன் .
எங்கம்மா சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் முதல் பெண் தலைவர் .தன் துறை சார்ந்து பல புத்தகங்கள் எழுதியவர் .சிறு வயதில் குமுதம் படித்ததற்காக அடி வாங்கியவர் .அவர் சொல்வார் "reading is a luxury ".அதற்கு பணம் இடம் நேரம் அனுமதி என்று பல விஷயங்கள் தேவைப்படுகிறது .அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை .எங்கு படிப்பீர்கள் ?நூலகங்கள் வரையில் செல்ல நேரம் இருக்கிறதா ?உங்கள் அருகில் இருக்கும் நூலகங்களில் நீங்க படிக்க விரும்பும் நூல் இருக்கிறதா ?இல்லை வாங்குவீர்களானால் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவீர்கள் ?எங்கே வைப்பீர்கள் ?எங்கு படிப்பீர்கள் ?படித்த பின் என்ன செய்வீர்கள்? எல்லாம் எல்லோருக்கும் எளிதாய் அமைவதில்லை .இணையம் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறதா ?
என் அப்பா தலைமுறை தமிழகத்தை பொருத்த வரையில் பெரியார் அண்ணா என ஒரு மறுமலர்ச்சியின் தலைமுறை .அந்த தலைமுறையின் உழைப்பை அறுவடை செய்கின்றன பின்வந்த தலைமுறைகள் .ஆனால் அந்த தலைமுறை தங்கள் உழைப்பையும் அதற்கு முன்னான நிலைமையையும் முன்னேறிய மகிழ்ச்சியில் சரியாக சொல்ல மறந்து போனார்கள் .அதுவும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் .
ஆனாலும் இவை எல்லாவற்றையும் தாண்டியும் வாசிப்பையே ஒரு தேடலாக செய்பவர்கள் இருக்கிறார்கள் .இருப்பார்கள் .
2 comments:
சிந்தனை பாதியே... தொடர்க...
நன்றி
Post a Comment