Thursday, 28 August 2008

பாட்டி

பாட்டி வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்."என் அம்மா எனக்கு நாற்பது கழஞ்சு நகை போட்டாள்" என்று அவ்வப்போது பெருமையாக சொல்வார் .என் தாத்தாவும் வசதியானவர் தான் . ஆனால் பாட்டி தன் திருமணத்திற்கு பின் அறிந்தது கடனும் கடுமையான உழைப்பும் தான் .அத்தனை சங்கடங்கள் நடுவிலும் தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் தாத்தாவும் பாட்டியும் உறுதியாக இருந்தனர் .

இத்தனை சங்கடங்கள் சமாளித்த பாட்டிக்கு கொஞ்சம் இருமல் உண்டு .அடிக்கடி தலையெடுக்கும் இதற்கு பயந்து பாட்டி எப்போதும் ஒரு இருமல் மருந்தை வைத்திருப்பார் .அதை தினம், இருமல் உண்டோ இல்லையோ குடிக்கவும் செய்வார் .இது தீரும் முன் புதிதாக வாங்கிவிட வேண்டும் .இல்லையென்றால் கோபம் சற்று அதிகமாகவே வரும் பாட்டிக்கு .இந்த இருமல் மருந்திற்கு துணையாக அரிசியும் பனங் கற்கண்டும் கலந்து வைத்திருப்பார் .அதையும் அவ்வப்போது மென்று கொள்வார் .என் பாட்டியை நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டும் எனக்கு தவறாமல் நினவுக்கு வரும் .



இன்னொரு கொஞ்சம் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் எல்லா பேத்திகளின் பெயரையும் மாறி மாறிக் கூப்பிடுவார் .என்னை என் அத்தை மகள் கனிமொழி பெயரைச் சொல்லியும் அவளை என் அக்கா பெயரை சொல்லியும் இப்படி .இதனால் எங்களுக்குள் கொஞ்சம் சச்சரவு கூட வந்ததுண்டு .ஆனால் பாட்டி இது எதற்கும் அசந்ததில்லை. இது சம்பந்தமான எங்கள் அங்கலாய்ப்புகள் எதையும் அவர் பொருட்படுத்தியதே இல்லை .


புது காலர் டியூன்

எச் .ஐ.வி நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இப்போது ஒரு புது காலர் டியூன் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது .இது "காண்டோம் காண்டோம் "
என்று ஒலி எழுப்புமாம் .

சரி ,ஏதோ புது முயற்சிகள் வரும்போதெல்லாம் குறை காணுவதா என்று எண்ணத் தோன்றலாம் .ஆனால் இது எந்த வகையில் பயன் தரும் ?விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் தன்னார்வலர்கள் வேண்டுமானால் இதை பெருமையாக ஏற்றுக் கொள்ளலாம் .பொது மக்கள் இதை எத்தனை தூரம் ஏற்கக்கூடும் ?

தமிழ் கூறும் நல்லுலகில் இதை "ஆணுறை ஆணுறை "என்று சொல்லும் படி
மாற்றி அமைப்பார்களோ ?

கடையில் சென்று தங்கள் தேவைக்கு ஆணுறை வாங்க தயங்கும் எத்தனையோ
சகோதரர்கள் இதை எவ்வாறு பயன்படுத்துவார்கள் ?
இவர்கள் வாங்கத் தயங்குவது மட்டுமல்லாமல் தங்கள் மனைவியை சென்று வாங்கச் சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .இவர்களுக்கு இது எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறது ?

ஆனால் பயனே இல்லை என்று மொத்தமாக ஒதுக்குவதும் கடினம் தான் .ஏனெனில் ,கடையில் "ஆணுறை வேண்டும்"என்று கேட்கத் தயங்குபவர்கள் இந்த டியூனைப் போட்டுக் காட்டி வாங்க முடியும் தானே !

நடைமுறையில் இருக்கும் எத்தனையோ விழிப்புணர்வு யுக்திகள் இன்னும் பலப் படுத்தப் பட வேண்டும் .இதுவரை இந்த பிரச்சாரத்தில் செலவழிக்கப் பட்டிருக்கும்
பணம் சரியாக பயன் படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் இந்நேரம் விழிப்படைந்திருக்க வேண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம் .

Wednesday, 27 August 2008

பாட்டி


பாட்டியின் பெயர் பத்திரகாளி .கொஞ்சம் பயமுறுத்தும் பெயர் தான் .


காதில் தண்டட்டியும் ரவிக்கையில்லா சேலையுமாக பாரதிராஜா படங்களின் பாட்டி போலவே இருப்பார் .நல்ல சிவந்த நிறமாம் .இதில் என் பாட்டிக்கு ரொம்ப பெருமை .தன் நிறத்தை மங்கிக் காட்டக் கூடும் என்று தோன்றிய புடவைகளை கூட அவர் உடுத்தியதில்லை . நான் பார்த்த காலங்களில் சிவந்த நிறத்தை பல சுருக்கங்கள் மறைத்துவிட்டிருந்தது .அவர் கன்னத்தில் இருந்த மச்சமே, அவர் என் அண்டை வீட்டில் ஒருவருக்கு இருந்த மச்சத்தை பார்த்து விட்டு" எனக்கும் இதே போல் உண்டு " என்று சொல்லும் போது தான் தெரிந்தது .மச்சத்தை கூட காலம் சுருக்கங்களில் ஒளித்து விட்டிருந்தது .

அதிக உயரமில்லை பாட்டி .ஆனால் அழகாக இருந்தார் .கத்தையாக முடி, சாகும் வரை இருந்தது (அதில் குண்டு குண்டாக பேனும் கூட ) .அதை எண்ணெய் வைத்து சீவி நுனியில் கொண்டை போட்டிருப்பார்.

பாட்டியை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவருடைய தெளிவு .எந்த மருமகளிடமும் கெட்ட பெயர் வாங்காத சண்டை போடாத மாமியாராகவே இறுதி வரை இருந்தார் .

ஆம் .அமைதியான வைத்தியலிங்க தாத்தாவை வழிநடத்திய சாமர்த்தியமான
பத்திரகாளி இவர் .

Wednesday, 20 August 2008

என் முகம் ?


பிறந்த பொழுதில் இருந்தது
என் முகம்
எனதே எனதாக .


பார்த்துப் போனோரும் பார்க்க வந்தோரும்
அவருக்கு பிடித்தமான சாயங்களை பூசிப் போக
மறு நொடியே மாறிப் போனது ...


வர்ணங்கள் பல தாங்கியும் புதிதாக பூசிக் கொண்டும்
பிறரின் நிறங்களை வியந்தபடி
வலம் வருகிறேன் நான்



பல பொழுதுகளில்
சில வண்ணங்கள் களைந்தும் சில ஏற்றியும்
ஒப்பனை செய்வதும் எளிதாகிறது



வண்ணங்களை கழுவி விட்டால்
தெரியும் நிஜ முகம்
எனக்கே அன்னியம் தான்


நிஜமுகம் தோண்டும் போதெல்லாம்
வர்ணங்களை நீக்குவதன்
களைப்பே மேலிடுகிறது


இருந்தாலும் தேடத்தான் வேண்டும் நான்-
சவப்பெட்டியில் தெரிவவாவது
என் முகமாக இருக்க வேண்டும் எனில் ..





Saturday, 16 August 2008

அன்புடைமை ?

நான் மருத்துவம் பயின்ற நாட்களில் நடந்தது இது .
சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த பெண்..தையல் எடுக்கும் நாளில் நான் அதுவரை தையல் பிரிக்காததால் என் முறையானது .
எனக்கு தெரியும் அனுபவம் இல்லாததால் வலி சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று .

ஆரம்பிக்கும் முன் சொன்னேன் ,"கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க"என்று.முடியும் வரை அந்த பெண் ஒரு முனகல் கூட எழுப்பவில்லை .முடித்தவுடன் "ரொம்ப வலித்ததா ?"என்று நான் கேட்டதற்கு
அந்த பெண் சொன்னாள் ,"உங்கள் அன்பான வார்த்தையில் என் வலி தெரியவில்லை "என்று .

சாதாரணமாக தோன்றினாலும் யார் குற்றம் இது ?
சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம், அன்பாகக் கூட வேண்டாம் ,குறைந்த பட்சம்
மரியாதை கூட இன்றி ,வாடி போடி என்று பேசி பழகியது யார் குற்றம் ?

பணம் தரும் நோயாளிகளிடம் நாம் இவ்வாறு பேசத் துணிவோமா ?

நம்மிடம் இருந்து விலகி வேறு மருத்துவரிடம் செல்லக் கூடும் என்ற நிலை இருந்தால் இவ்வாறு செய்வோமா ?

அதிகமோ குறைவோ இவர்களுக்கு பணி புரிய தானே நாம் ஊதியம் பெறுகிறோம் ?

Monday, 4 August 2008

அறியாமை ????

சில தினங்களுக்கு முன் ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .கணவர் சொன்னார் எங்களிருவருக்கும் ஹச் .ஐ.வி உண்டு .ஆனால் இது பற்றி என் மனைவிக்கு தெரியாது .என் குழந்தையும் கூட பாதிக்கப்பட்டுள்ளது .
நாங்கள் மூவரும் நோய்க்கான எ.ஆர்.டி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எப்படி இந்த பெண் எதற்கென்று தெரியாமலேயே சில நாட்கள் அல்ல நான்கு வருடங்கள் மருந்து சாப்பிட முடியும்?
தான் சாப்பிடுவது மட்டுமல்லாமல் தன் குழந்தைக்கும் கொடுக்க அனுமதிக்க முடியும் ?
ஏன் இவள் ஒருமுறை கூட தன் கணவனிடமோ வேறு எவரிடமோ இவை எதற்கான மருந்துகள் என்று கேட்கவில்லை ?


இதில் அறியாமையை விட அலட்சியமே அதிகம் .
ஒன்று இந்த பெண் உலகமே அறியாத அப்பாவியாக இருக்க வேண்டும்
இல்லை உண்மையை தெரிந்து கொண்டே அதை சந்திக்க பயந்து போய் ' கணவன் கொடுத்தான் ' என்ற முக்காடின் பின் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் .



Friday, 1 August 2008

பெயர்க்காரணம்




என் பெயரை யாராவது பாராட்டும் போது இல்லை பொருள் கேட்கும் போது எனக்கு மனசுக்குள்ளே ரொம்ப பெருமையா இருக்கும் .


ஆனா, சின்ன வயசுலே அப்படி இல்லை ..
நிர்மலா ,ஷீலா இது மாதிரி பெயரையெல்லாம் கேட்கும் போது பொறாமையா இருக்கும் .நம்ம பெயர் ஸ்டைலா இல்லையேன்னு.அதோட நம்ம பேர்ல ஒரு சினிமா பாட்டு கூடஇல்லையேன்னு வருத்தமா இருக்கும் .
'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி'இந்த பாட்ட நான் முதல் தடவ கேட்டப்ப
ஏற்பட்ட சந்தோஷம் ..


இந்த பெயரோட ஆரம்பம் எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி ,கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தான் .இந்த பெயர் எங்கப்பாவ ரொம்ப பாதிச்சிருச்சி .பெண்களுக்கு வைக்க இத விட்டா வேற பெயரே கிடையாது ன்னு முடிவு பண்ணி யாருக்கு வைக்கலாம்ன்ணு யோசிச்சப்ப எங்க அக்கா பொறந்தாங்க (பெரியப்பா மகள்).என் பெரியப்பா "யாருக்குமே வாயில நுழையாதுப்பா " ன்னு பயந்து போனதும், அப்ப திருமணம் ஆகாத எங்கப்பா இது தன் மகளுக்கு தான்னு முடிவு பண்ணியிருப்பார் ன்னு நினைக்கிறேன்.



எங்கப்பா ஆசை பட்டபடியே நான் பிறந்து எனக்கும் வெற்றிகரமா" பூங்குழலி" என்ற இந்த கிடைத்தற்கரிய பெயரையும் வச்சாச்சி .இந்த பெயரோட பொருள் என்னனா "பூவைச் சூடிய கூந்தலுடையவள் ,பூ போன்ற மென்மையான கூந்தலுடையவள் ".ஆக முக்கியமான விஷயம் கூந்தல் .ஆனா நான் பிறந்தப்ப ,காஞ்ச நிலத்தில லேசா அங்கொண்னும் இங்கொண்னுமா இருக்குமேபுல் ,அது மாதிரி தான் என் கூந்தல் இருந்ததாம்.(உங்கப்பா உனக்கு இந்த பெயர் வச்ச நேரம் உன் கூந்தல் நிஜமாவே பூங்குழலாயிருச்சி ன்னு எங்கம்மா சொல்வாங்க)

 என் தம்பி பிறந்தப்ப இவன் பேரு குழலனான்னு எங்க மாமா கிண்டல் பண்ணியதா அம்மா சொல்வாங்க.அதோடஅவங்க ழகரம் பத்தி ரொம்ப அசட்டையா இருந்துட்டாங்க ..இப்ப அத வேற பழகவேண்டியதா போச்சி.
(வீட்டுல எல்லாரும் குழலி ன்னு என்னை கூப்பிடுவாங்க ).


இப்ப பெயர் வைச்சாச்சி !இத ஆங்கிலத்திலே எப்படி எழுதணும் ?இது அடுத்த பிரச்சனை .எங்கப்பா ,பேர் தெரிஞ்சவுங்க எப்படி எழுதினாலும்
சரியா தான் சொல்வாங்க ,தெரியாதவங்க எப்படி எழுதினாலும்
தப்பு தப்பா வாசிப்பங்க ன்னு முடிவு செஞ்சி Poongulali ன்னு எழுதினாங்க.
எல்லாரும் என்னை எப்படி எப்படி விளிச்சாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?சில பேர் அவங்களே Poonkuzhali எழுதிட்டு பூந்குஸலி ன்னு படிச்சாங்க .....
அண்டை வீட்டிலே ஒரு சிறுவன் 'குர்லி' னும் ,
என் தம்பி கதிரவன்' கொல்லி 'னும், என் மாமியார் ' கொலலி' னும் அவங்க அவங்க வசதிக்கு கூப்பிட்டாங்க. எங்க மருத்துவமனைக்கு வரும்
வெளி நாட்டு நண்பர்கள் வசதியா' பூங்கா 'ன்னு சொன்னாங்க .
(Your name isa tongue twister ).

என் பள்ளியில் நான் ஒரே பூங்குழலி தான் .அன்புடன் குழுமத்தில் ஒரே பூங்குழலி நான் தான் ஒரு தடவை சேது சொன்னாங்க ..
ஒரு வழியா நானும் என் பெயரும் இரண்டற கலந்து ஒரு
சந்தோஷமான வாழ்க்கைய வாழ்ந்திட்டு இருக்கோம்.


இத்தனை வருஷம் முடிந்து திரும்பி பார்க்கும் போது
இவ்வளவு அழகான பெயரை எனக்கு சூட்டிய
அப்பாவிற்கு நன்றிகள் சொன்னால் போதாது .
அதோடு இந்த பெயர் சூட்ட தடை ஏதும் சொல்லாத
என் அம்மாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.