Tuesday, 13 October 2009

அத்தை சொன்ன கதை- 2


(ராஜம்மா அத்தை -செல்லமாக சின்ன அத்தை )

என் தாத்தா வெகு அருமையாக கதை சொல்வாரென சொல்வார்கள் .அதனாலோ என்னவோ, என் பெரிய அத்தையும் (அப்பாவின் அக்கா -பகவதி அத்தை  ) அப்பாவும் கூட அழகாக கதை சொல்வார்கள் .சாதாரண செய்தியைக் கூட ஒரு கதை போல் நேர்த்தியாக சொல்லும் திறமை வாய்ந்தவர்கள் இவர்கள் .ஆனால் என் சின்ன அத்தை (அப்பாவின் தங்கை )கதை சொல்லி நான் அதிகம் கேட்டதில்லை .இந்த முறை ஊருக்கு சென்ற போது சின்ன அத்தைக்கும் அந்த திறமை இருப்பது தெரிந்தது .



அவர் சொன்னதில் ஒன்று ."நானும் எங்க சின்ன அண்ணனும் (என் அப்பா )தான் எங்கம்மா கூட கட்டில்ல படுப்போம் .எங்கம்மா நடுவில படுத்திருப்பா .செவரு பக்கமா நா படுத்திருப்பேன் ,அந்தப் பக்கம் எங்க சின்ன அண்ணே படுத்திருப்பான் .இதுல யார பாத்து எங்கம்மா படுக்கனும்ன்னு போட்டி நடக்கும் .ஏன்பக்கம் திரும்பி படும்மான்னு நா சொல்லுவேன் .இல்ல ஏன்பக்கம் தான் பாக்கணும்ன்னு எங்கண்ணே சொல்லுவான் .இப்படியே சண்ட போடுவோம் .அப்புறம் ,வாரத்தில நாலு நாளு ஏன்பக்கம் பாத்து எங்கம்மா படுப்பா ,மீதி மூணு நாளு எங்கண்ணே பக்கம் . இப்படி முடிவு பண்ணிக்கிட்டோம் ."

என் பாட்டி இறந்த போது அவருக்கு வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கும் .சில காலம் வேறு படுக்கையில் இருந்தார் .சில மாதங்களாக எதிர்பார்த்த நிகழ்வாகவே இருந்தது பாட்டியின் மரணம் .அப்போது கேவிக் கேவி அடக்க மாட்டாமல் அழுத அன்று ஐம்பது வயதை தாண்டிய என் அப்பாவை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள் .பாட்டி அப்பாவை "ஏலே ,சின்ன மணி "என்றே அழைப்பார். அப்பாவுக்கும் பாட்டி மீது நிறைய பாசம் உண்டு என்றறிந்த எனக்கும் கூட அது ஆச்சரியமாகவே இருந்தது இதைக் கேட்கும் வரையில் .


4 comments:

தருமி said...

உங்கள் சின்ன மாமா குறும்பலாபேரி தர்மர் நன்றாக இருக்கிறார்களா?

பூங்குழலி said...

மாமா சிலகாலம் உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்தார் .இப்போது நலமே

தருமி said...

என்னை எங்கே நினைவில் இருக்கப்போகிறது?

நலமோடு இருக்க வாழ்த்துகள்.

பூங்குழலி said...

உங்கள் பேர் சொல்லுங்களேன் ..கேட்டு சொல்கிறேன் .உங்கள் வாழ்த்துக்கு நன்றி