Saturday, 10 July 2010

அம்மா என்று ...

இறந்து போனவர்களைப் பற்றிய செய்திகளை அதிகம் சுமந்து வரக்கூடாது என்றே பல நேரங்களில் நினைக்கிறேன் .ஆனால் அருகிலிருந்து பார்க்கும் போது சில மரணங்கள் அதிகம் பாதிப்பது நிஜம் .

நேற்று ஒரு பெண்ணை கொண்டு வந்து சேர்த்தார்கள் .உடன் ஒரு பெண் ,அவரின் மகள் ,வயது பதினெட்டு இருக்கும் .இந்த பெண்ணே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.உன்னுடன் துணைக்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்ட போது ,என் தம்பி இருக்கிறான் என்று சொன்னாள்,அவனின் வயது பத்து இருக்கும் .இவர்களை அழைத்து வந்த சித்தப்பா ,செலவுக்கான பணத்தை இந்த சிறுவனிடம் கொடுத்து விட்டு ,இன்னமும் பணம் ஏற்பாடு செய்து வர ஊருக்கு சென்றிருக்கிறார் .

நோயாளியோ மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் .நோயாளியின் உடல் நலம் மோசமாக இருக்கிறது என்பதை தெரிவித்து விட்டோம் என்று உறவினர்களிடம் கையெழுத்து வாங்கும் வழக்கம் உண்டு (DIL).இவர்களிடம் எதை சொல்வது என்று யோசித்துவிட்டு ,சீரியசாகவே இருக்கிறது நிலைமை என்று மட்டும் சொல்லி வைத்தோம் ."ஏதாவது செய்யுங்க ,எங்கப்பாவும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி செத்து போயிட்டார் .இப்ப எனக்கு அம்மாவும் இல்லாம போயிடுவாங்க போலிருக்கு "என்று சொல்லி ஓவென்று அழுதாள் அந்த பெண் .

இன்று அதிகாலையில் அவளின் அம்மா இறந்து போனார் .இருந்ததோ இந்த பெண்ணும் அவள் தம்பியும் .அவள் சித்தப்பா வந்து சேரவே ஒரு மணி ஆயிற்று .தொலைபேசியில் செய்தி சொல்லிய போது ,இவர்களில் சித்தப்பா குழந்தைகளிடம் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளவே ,இருவரையும் கொஞ்ச நேரம் வெளியிலேயே உட்கார வைத்திருந்தோம் .

ஆனாலும் சிறிது நேரத்தில் விளங்கி விடவே ,சிறிது நேரம் அழுது விட்டு ,ஒன்றுமே பேசாமல் எங்களை கடந்து போனாள் அந்த பெண் .வேறு நோயாளிகளுடன் வந்தவர்கள் ஆறுதல் சொல்லி ஏதோ சாப்பிட வாங்கித் தந்தார்கள் .சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தாள்.ஆம்புலன்சில் ஏற்றி போகும் வரையும் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியுடனே கிளம்பி போனாள் .மனம் வாடிப் போனோம் எல்லோருமே .


6 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

:((((((((

இவர்களுக்கு அரசு தரப்பில் உதவிகள் கிடைக்குமா?...

ரிஷபன் said...

என் அம்மா இறந்ததும் நடு நிசி. சிஸ்டர் வந்து இன்னும் அரை மணி.. அவ்வளவுதான் என்றதும்.. ஏதோ ஒரு நிதானம். பில் பணம் கட்டி, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வீட்டிற்கு தகவல் சொல்லி.. வளர்ந்த எனக்கே சங்கடமாய் இருந்தது. அந்தப் பெண் எப்படித்தான் தாங்கினாளோ..

Anonymous said...

//சில மரணங்கள் அதிகம் பாதிப்பது நிஜம்//

உண்மை...உண்மை...உண்மை...உண்மை...உண்மை...உண்மை...

பாவம் அந்த குழந்தைகள்

பூங்குழலி said...

//இவர்களுக்கு அரசு தரப்பில் உதவிகள் கிடைக்குமா?... //

இவர்களில் பலரும் எச்.ஐ.வி என்று வெளியே சொல்லக் கூச்சப்படுவதால் ,அரசு உதவிகள் ஏதும் கிடைப்பதில்லை

பூங்குழலி said...

//அவ்வளவுதான் என்றதும்.. ஏதோ ஒரு நிதானம்.//

அது போலவே தான் ,இனி ஒன்றும் இல்லை என்பது போல் ஒரு அமைதி .


//வளர்ந்த எனக்கே சங்கடமாய் இருந்தது. அந்தப் பெண் எப்படித்தான் தாங்கினாளோ.. //

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கே ரொம்பவும் சங்கடமாக இருந்தது

பூங்குழலி said...

//உண்மை...உண்மை...உண்மை...உண்மை...உண்மை...உண்மை...

பாவம் அந்த குழந்தைகள்//

அவ்வப்பொழுது மரணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சில மரணங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன ,அந்த குழந்தைகளின் நிலை கூட காரணமாக இருக்கலாம்