Monday 23 May 2011

பாசவலை



கண்ணுக்குள்ள ஒன்ன வச்சி
கனின்னு பேரு வச்சு
ஆசையெல்லாம் சேத்து வச்சு
மகளே ஒன்ன வளத்து வச்சேன்

வார்த்தை ஒண்ணு நீ சொன்னா
கவிதையின்னு களிச்சிருந்தேன்
ஒயிலா நீயும் சிரிச்சப்ப
ஓவியம் போலன்னு ரசிச்சிருந்தேன்

அரசியல் வேல செய்ய வந்தா
அலஞ்சு திரிய வேணுமுன்னு
அலங்காம கவித பாட
அரங்கத்துக்கு அனுப்பி வச்சேன்

யாரு கண்ணு பட்டிருச்சோ
எவரு பாவம் வெரட்டிரிச்சோ
காணாத கொடுமையெல்லாம்
கண்டதென்ன கண்மணியே

ஒன் அரும தெறமயெல்லாம்
தமிழ்நாடு தாங்காதுன்னு
கட்டியம் அறிஞ்சு நானும்
தல நகரம் செயிக்க சொன்னேன்

ராசாத்தி ஒன் வரவ
ரணமில்லாம செஞ்சுவிட
ராசாவ ஆள் பாத்து
தோதாக அனுப்பி வச்சேன்

வலியில்லாம நோகாம
புள்ள ஒண்ணு பெத்தாப்புல
கண்ணு ஒன் வழியெல்லாம்
பூவாத்தான் விரிச்சு வச்சேன்

சங்கமம்ன்னு நீ சொன்னா
தலையாட்ட சம்மதிச்சேன்
செல்லமே நீ கைகாட்ட
நோட்டாக நெறச்சு வச்சேன்

அப்பா என் பேர் வெளங்க
டிவி ஒண்ணு ஆக்கி வச்ச
அதில நானும் ஒன்பங்க
துண்ட போட்டு பிடிச்சு வச்சேன்

ஒனக்காக எவரையும் தான்
முடிச்சு விட நானிருக்கேன்
முள் மேல தலகீழா
நடந்து வர காத்திருக்கேன்

இப்படி ஒண்ணு வாருமின்னு
அறியாம நானிருந்தேன்
என்னை கேக்க யாருன்னு
தைரியமா தானிருந்தேன்

சீமைக்கு போனவங்க
சேதி பாத்து சொல்லலையே
செயிலில் களி திங்கனுமின்னு
கனவில் கூட நெனைக்கலியே

என்னருமை கண்மணியே
கண்ணு மட்டும் கலங்காதே
இந்த நெலம வந்துதுன்னு
தைரியமும் கொறையாதே

கட்டுமரமா நா மாறி
ஒன்ன கர செத்திடுவேன்
ராசாவதான் பணயம் வச்சு
ஒன் தலைய காத்திடுவேன்


ஏழு மல கடல் தாண்டி
ஒன்ன மீக்க வந்திடுவேன்
மதுர வீரன் போல நானும்
அசராம போர் தொடுப்பேன்

கேஸ எல்லாம் தூசாக
தூள் தூளா தகர்த்திடுவேன்
கவலையெல்லாம் மறந்துபுட்டு
கண்ணுறங்கு என்மகளே


13 comments:

அழகிய நாட்கள் said...

//மதுர வீரன் போல நானும்
அசராம போர் தொடுப்பேன்//
மதுரை வீரன் என்ற சக்கிலியப் போர்ப்படைத்தளபதியை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வச்ச கொடுமை தெரியலையா ஒங்களுக்கு. இசை பட வாழ நினைத்த இசைவேளாளர் மட்டும்தான் இந்த நாட்டின் வரலாறா என்ன? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியின் வரிகள்தான் என்னாச்சு? இந்தியாவின் ஏன் ஆசியாவின் மிகப்பெரிய முதலாளியாக உங்கள் பரம்பரையை ஆக்குவதுதான் உங்களின் கம்யூனிசக்கடமையா என்ன?

Anonymous said...

ஹே..சூப்பர்...கவிதாயினி என பெயர் எடுத்து தி.மு.க அரசியலுக்கு வலு சேர்ப்பார் என நினைத்தேன்..கமர்சியல் அரசியலுக்கு வந்து கெட்டுப்போனார்

Avargal Unmaigal said...

மிக அருமையாக எழுதி இருக்கிறிர்கள்.

பூங்குழலி said...

திலிப் நாராயணன் ,எதற்கு இந்த கோபம், இடம் மாறி ?நீங்கள் சொல்லும் அந்த வரலாறு நான் அறியாதது .அதை இனி தெரிந்து கொள்கிறேன் .எம்ஜிஆர் திரைப்படத்தின் பெயர் என்ற அடிப்படையில் மட்டுமே நான் அந்த வரியை பயன்படுத்தினேன் .அதற்கென நீங்க என் மீது ஜாதி சாயலும் கம்யூனிச சால்வையும் வலுவில் போர்த்துவதை நான் கண்டிக்கிறேன் .

பூங்குழலி said...

ஆமாம் சதீஷ்குமார் ,அப்பாவின் இலக்கிய வாரிசாவார் என்று எல்லோரும் நினைத்த வேளையில் .....ஆனாலும் அரசியலில் இருக்கும் செல்வாக்கும் பணமும் வேறு எதிலும் உண்டா என்ன ?கையருகே இருக்கும் போது விட மனம் வருமா ?

பூங்குழலி said...

நன்றி அவர்கள் உண்மைகள்

சி.பி.செந்தில்குமார் said...

m m ம் ம் ஓக்கே .. பதிவை ரசித்தேன்.. ஆனால் கமெண்ட்டில் ஒருவர் சம்பந்தம் இல்லாமல் சண்டைக்கு வருவதைப்பார்க்கும்போது .. நம்ம ஆட்களுக்கு மெச்சூரிட்டி கம்மின்னு தோணுது..

பூங்குழலி said...

ஆமாம் எதுக்கு அவருக்கு இவ்வளவு கோவம்ன்னு எனக்கு புரியவே இல்லை ....நன்றி செந்தில்குமார்

rajamelaiyur said...

Kalakal. . .
Kani DMK ku
Sani

rajamelaiyur said...

I am new visitor of your site

பூங்குழலி said...

நன்றி ராஜபாட்டை ராஜா ...உங்கள் பாராட்டுக்கு நன்றி ..ஆனால் கனியை மட்டுமே குற்றம் சாட்டுவது சரியல்ல ..இவர் அகப்பட்டுக் கொண்டார் ..அவ்வளவே

இராஜராஜேஸ்வரி said...

யாரு கண்ணு பட்டிருச்சோ
எவரு பாவம் வெரட்டிரிச்சோ//
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

பூங்குழலி said...

உண்மைதான் இராஜராஜேஸ்வரி ...செம்மொழி பாடலிலும் முதல்வரி அதுதான் ....ஆனால் மறந்து போனார்கள் ..இன்று அவதிப்படுகிறார்கள்