Monday, 18 November 2013

தாய்மை

தொடர்ந்து சிகிச்சைக்கு  வந்து கொண்டிருக்கும் பெண் .போன மாதத்தில் வந்த போது கருவுற்றிருப்பது  தெரிய வந்தது .முன்பே இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு .கண்டிப்பாக இந்த குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக் சொன்னார் .அதற்குரிய  பரிசோதனைகள் முடித்து ஒரு மாதம் சென்று மீண்டும் செக் அப் பிற்கு வர சொல்லி அனுப்பி வைத்தேன் .

இன்று வந்த போது ,"எனக்கு இந்த குழந்தை வேண்டாம் .அபார்ஷன்   செஞ்சுக்கறேன்  " என்று கூறினார் ."போன மாசம் குழந்தை வேணும்னு சொன்னீங்க ,இந்த மாசம் வேணாம்ன்னு சொல்றீங்க .மாசா  மாசம் இப்படி முடிவை மாத்திக்கிட்டு ..வெளையாட்டா என்ன ?'என்றேன் .இப்ப ஏன் வேணாம்ன்னு சொல்றீங்க ?" 

"எங்க ரெண்டு பேருக்கும் இந்த கொழந்தையை பெத்துக்கணும் ஆசை தான் .ஆனா இவங்க வீட்டுல  ஒரு மாசமா ஒரே டார்ச்சர் .இவங்க அக்கா  தெனம் போன் பண்ணி ,இந்த கொழந்த  தேவையான்னு கேட்டு திட்டுறாங்க .ஒங்க உடம்பே சரியில்ல ..இதுல மூணாவது வேறயான்னு கேக்குறாங்க .ஒங்களுக்கு ஏதாவது ஆனா யாரு பாத்துக்குவான்னு என்னமோ பேசுறாங்க .நீ ஏற்கெனவே ரெண்டு பொண்ணு பெத்தவ ,இதுவும் ஒனக்கு பொண்ணா தான் பொறக்கும் .அப்ப எப்படி சமாளிப்பன்னு திட்டுறாங்க.அதோட அவங்களுக்கு இது ப்ரெஸ்டீஜ்  ப்ராப்ளமாம் .ஊருல அவங்க நான் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்  பண்ணியிருக்கேன்னு சொல்லியிருக்காங்களாம் .இப்ப நா மாசமா இருக்கிறது தெரிஞ்சா ஊர்ல அவங்கள பொய் சொல்லிட்டாங்கன்னு தப்பா பேசுவாங்களாம் .
இப்படியெல்லாம் ஏதேதோ சொல்றாங்க ."

"கொழந்த  பெத்துக்கறது  ஒங்களோட சொந்த விருப்பம் .ஒங்க ரெண்டு பேர்  மட்டுமே சம்பந்தப்பட்டது .இதுல தலையிடவோ திட்டவோ யாருக்கும் உரிமை இல்லை ,"என்ற போது  "இவங்களையெல்லாம் சமாளிக்க முடியாது .கொழந்த பிறக்குறதுக்கு முன்னால பேசியே என்னைய கொன்னுருவாங்க ,வேண்டாம் மேடம் ,நான் அபார்ஷனே  பண்ணிக்குறேன் ." 


பின்குறிப்பு  (7.12.2013  )-இந்த பெண் இப்போது இந்த குழந்தையை பெற்று கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார் :)


Tuesday, 22 October 2013

hymenoplasty (ஹைமெனோபிளாஸ்ட்டி ),வஜைனோபிளாஸ்ட்டி (vaginoplasty) ,இன்ன பிற




நேற்று இந்தியா டுடேயின் (India  today  )தமிழ் பதிப்பு படிக்க நேரிட்டது .இதில் சமீப காலங்களில் தென்னிந்தியாவில்   hymenoplasty  எனப்படும் கன்னித்திரை மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேல் தட்டு பெண்களிடம் பரவலாகி வருவதாக சொல்லப்பட்டிருக்கிறது .இதை பற்றிய கருத்தாய்வாக பாவிக்கும் இந்த கட்டுரையில் இதை எந்த மருத்துவமனைகளில் செய்கிறார்கள் ,எவ்வளவு செலவாகிறது ,ரகசியமாக செய்து கொள்ளலாம் போன்ற விரிவான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன .

அதோடு அல்லாமல் ,திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வு தருவதாகவும் அவர்கள் திருமண வாழக்கையை எதிர்கொள்ள உதவுவதாகவும் சொல்கிறது கட்டுரை .படம் முழுதும் மதுவை ஓட விட்டுவிட்டு இறுதியில் குடி குடியை கெடுக்கும் என்று  சொல்லும் படங்களை போல ,கன்னித்திரை  உடலுறவு அல்லாது வேறு காரணங்களாலும் கிழியக் கூடும் என்பதை லேசாக சொல்லிப்போகிறது .இதில் விருந்தினர் பக்கத்தில் "குட்டி ரேவதி "-பெண்களில் உடல் ஆண்களின் உரிமை போல பாவிக்கப்படுகிறது என்பதை சாடியிருக்கிறார் .


சமுதாயத்தில்  எல்லா நிலைகளிலும் பெண்கள்  வெவ்வேறு  தருணங்களில் வெவ்வேறு  மனிதர்களிடம் தங்களுடைய தூய்மையை,கற்பெனப்படுவதை நிரூபணம் செய்து கொண்டே  இருக்க வேண்டியிருக்கும்  சமூக சூழலில் ,ஊடகங்கள் பெண்ணியம் ,empowerment என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை எழ விடாமல் மிதிக்கும் பணியை செய்து கொண்டே இருக்கின்றன .

ஆளே  தெரியாமல் நகை அணிந்து வெட்கப்படும் மணப்பெண் ,மணப்பெண் தோழியர்,சகல உடல் பகுதிகளையும் வெண்மையாக்கும் கிரீம்கள் தொடங்கி பெண் அழகிற்கும் விளம்பரத்துக்கும் உடல் இச்சைகளில் தேவைக்கும் மட்டுமே ஆனவள் அல்லது அவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டியிருப்பவள் என்று மறைமுகமாக  சொல்லிக்கொண்டே இருக்கின்றன இவை .அது மட்டும் அல்லாமல் இது மேல்தட்டு பெண்கள் செய்வது என்பதை அடிக்கோடிட்டு மேல் தட்டாக மாற விழையும் இன்றைய பொருளீட்டும் நடுத்தர வர்க்கத்தை வியாபார சந்தையாக்கும் முயற்சிகளே இவை . இன்றைய வியாபார சந்தையில் பெரும் மூலதனமும் வியாபாரப் பொருளும் பெண் தான் .



1.திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் மேல்  இல்லாத நம்பிக்கையை ஒரு உடல் உறுப்பு மட்டும் தரக்கூடும் என்றால் இந்த திருமணம் என்பது எத்தனை ஒரு அபத்தமான உறவாக இருக்கிறது?

2.எந்த விளிம்பிற்கும்  சென்று இதை நிரூபிக்கும் தேவை தான் என்ன ?

3.முதலிரவில் இதன் மூலம் தங்கள் கற்பை நிறுவும் பெண்கள் வாழ்நாள் முழுதும் எதை கொண்டு அதை நிரூபித்து கொண்டு இருப்பார்கள் ?

4.சிகிச்சை செய்து கொண்டவளோ என்று ஆணுக்கு சந்தேகம் வந்தால் இந்த பெண்கள் செய்யப்  போவது என்ன ?

5.இந்த கட்டுரையில் ஒரு மறுமணம் செய்த  பெண்ணை கணவனே இந்த சிகிச்சைக்கு அழைத்து சென்ற அதி நவீன தகவலும் பகிரப்பட்டிருக்கிறது .இதன் அடிப்படை ஆண்களின் உடல் தேவைகளை நிறைவேற்றுவது தான் மனைவியின் கடமை என்பதை வலியுறுத்துவது தான் .கட்டுரையில் வரும் கணவன் போல எல்லா ஆண்களும் அவ்வப்போது தங்கள் மனைவியரை கன்னியராக மாற்ற முயற்சி செய்தால் ,நடக்கப்போவது என்ன ?
 
பெண்கள் முன்னேறியதாக தோன்றும் ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூகத்தின் ஆணாதிக்க கட்டமைப்பு அவள் ஆணுக்குரியவள் என்றும் கற்புடையவளாக   இருக்க வேண்டியவள் என்றும்  நேரிடையாகவோ மறைமுகமாகவோ அவளை கற்பு என்ற விலங்கு  பூட்டி கட்டிவைக்க முற்படுகிறது .எங்கு பறந்தாலும் கற்பு என்னும் கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டே பறக்கிறாள் பெண் .கருத்தாய்வு ,கருத்து கணிப்பு என்ற போர்வையில் ,படிப்பும்  பொருளாதாரமும் பெண்களுக்கு தந்திருக்கும் சுதந்திரத்தை மடை மாற்றும் முயற்சிகளே  இவை .

இந்தியா டுடேவிற்கு வன்மையான கண்டனங்கள் .











Saturday, 12 October 2013

இன்று




இன்று போலவே இருந்தது நேற்றும்
இன்றும் மாறாது , நாளையும் கூட


நேற்றில் இன்று
தான் புதிதென பாவித்து
ஜோடனை செய்தபடி இருந்தது

இன்றாகி
ஜோடனைகள் கலைத்த போது
நேற்றாகி இருந்தது இன்றும்
நேற்றைய நாளையும் 


இன்றும்
நாளை வேறென 
கட்டியம்  சொல்லியபடி இருக்கிறது
நாளை  விளங்கித்தான்   போகும்
இது வெறும் நேற்றென


நேற்றும் இன்றும் நாளையும்
இன்றே என்றது இன்று


இன்றே என்றும் என்றால்
தினம் வேறொன்றாக
ஒப்பனைகள் எதற்கென 

ஒப்பனைகள் எனக்கில்லை என
என் ஒப்பனைகள்
கலைத்தபடி கடந்து போனது
நாளையாக




Tuesday, 24 September 2013

மாறாது



இப்போது மாறாது அது
இத்தனை வருடங்கள் போன பின்
அதை வாழ்க்கை உடைக்கவில்லை
பிரிவினாலோ கண்ணீராலோ.
அதை மரணம் மாற்றாது
அது உயிருடனே இருக்கும்
உனக்கான என் எல்லா பாடல்களிலும்
நான் போன  பின்



"It Will Not Change"

It will not change now
After so many years;
Life has not broken it
With parting or tears;
Death will not alter it,
It will live on
In all my songs for you
When I am gone.

Sara Teasdale

Monday, 12 August 2013

சாளரத்தில்




எவர்க்கும் எட்டாத
ஒற்றை சாளரத்தில்
நின்றிருக்கிறேன்
கண்  எட்டும் தொலைவெங்கும்
வடிந்து கிடக்கிறது
நான் கடந்த பாதை


இடியாப்ப சிக்கல்களாய்
பிணைந்து பிரிந்து
ஒற்றை நூலாய்
அயர்ந்து மெலிந்து
எட்டியிருக்கிறது
சாளரம் வரையும்


பாதை முழுமையும்
வெம்பிக் கிடக்கின்றன
வலிய  கொய்தவையாய் 
என் விழிகளும்
காற்றில் மூச்சுரைத்து
கரைந்து கிடக்கின்றன
அவ்விழிகளுள் வசித்த கனவுகளும்

சாளரம் ஏகி  
அவை மட்டுமே
ஆதரவாய்
என் கூந்தல் வருடி போகும்
அவ்வேளை
மென்வருடலாய்
என் கைகள் அணைந்து போகும்
காலம் சுமந்து வந்த
என் கவிதையொன்றும் .....





 



















Wednesday, 10 July 2013

மழை





ஏதுமில்லா
ஒற்றை இரவில்
விழித்தே கிடந்தேன் நான்
கண்மூட மறுத்து
சோம்பலில் சுகித்திருந்தேன்
வேடிக்கை பார்த்திருந்தது
வெறுமை


கருத்திருந்தது வானம்
கண்சிமிட்டி  காணாமல் போயின
நட்சத்திரங்கள்
என் தலை வருடிக்  கடந்தது
நிலா
என் கன்னம் கிள்ளிப் போனது
காற்று


இன்னமும்  விழித்திருந்தேன்
பிடிவாதமாய்
கண்டிப்பதாய் வந்து போனதொரு
மின்னல்
பெருமூச்செறிந்து அகன்றது
காற்று


கனவுகள் அமர்ந்து
இமை அயர்ந்த நொடியில்
ஜன்னல் ஓரமாய் எட்டி
விளையாட்டாய் நீர் தெளித்து
உறக்கம் கலைத்து
இரவெல்லாம் என்னுடன் கதைத்திருந்தது
மழை



 

Friday, 10 May 2013

மக்களாட்சி

 

 
மக்களாட்சி வராது
இன்றோ
இவ்வருடத்திலோ
இல்லை என்றுமே
பயத்தினாலும் சமரசத்தினாலும்

எனக்கும் அத்தனை உரிமையும்  உண்டு
அடுத்தவன் போலவே ....
நிற்க 
என் இரண்டு பாதம் ஊன்றி 
நிலத்தை உரிமை கொள்ளவும்

அத்தனை அயர்வாய் இருக்கிறது
மக்கள் சொல்ல கேட்கையில்
நடக்கும் படி நடக்கட்டும் என்று
இறந்தபின் என்  சுதந்திரம்
எனக்கு தேவையில்லை
நாளைய ரொட்டியில்
நான் வாழ முடியாது

சுதந்திரம்
ஒரு வலிய விதை
ஒரு அதீத தேவையில்
விதைக்கப்படுவது

இங்கே வாழ்கிறேன் ,நானும்
எனக்கு சுதந்திரம் வேண்டும்
உன்னை போலவே ....

 
 

Democracy

Democracy will not come
Today, this year
Nor ever
Through compromise and fear.

I have as much right
As the other fellow has
To stand
On my two feet
And own the land.

I tire so of hearing people say,
Let things take their course.
Tomorrow is another day.
I do not need my freedom when I'm dead.
I cannot live on tomorrow's bread.

Freedom
Is a strong seed
Planted
In a great need.

I live here, too.
I want freedom
Just as you.


Wednesday, 8 May 2013

பிரதமர் - நிழலும் நிஜமும்




To .
Mr .Prime Minister ,

பிரதமராக அறிவிக்கப்பட்ட  போது நல்லவர் நேர்மையாளர் பொருளாதார மேதை என்ற வெள்ளை  இமேஜுடன்  பதவியேற்றவர் நீங்கள்  .
சோனியாவின் கைப்பாவையாக இயங்க  முன்வைக்கப்படுபவர் என்பதை உணர்ந்திருந்த போதும்  நல்லது செய்வீர்கள்  என்ற எதிர்பார்ப்பு இருந்தது நிஜம் .

முதலில் ஏதும் செய்ய அதிகாரமற்றவர் ஆனால் நல்லவர் நேர்மையாளர் என்ற ஒருவித குழப்படி இமேஜை தோற்றுவித்தன உங்களின்  செயல்பாடுகள் .இயலாமை காரணமாகவே நீங்கள் அமைதி காப்பது போல தோன்றியது .தன்னுடைய அமைச்சரவையில் யார்  இடம்பெறுவது என்பதை கூட தீர்மானிக்க முடியாதது உங்கள்  மேல் ஒரு பரிதாபத்தை தோற்றுவித்தது .


காலம் போக போக இந்த அரசின் பல ஊழல்கள் வெளியே வர துவங்கின .அப்போதும் உங்களுக்கும்  அவற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே  இருந்தது .நீங்களும் அமைதியாகவே இருந்தீர்கள் .ஐயோ பாவம் என்று தோன்றியது .
ஆனால் உங்கள்  மீது நேரிடையாக குற்றம் சாட்டப்பட்ட போது மட்டும் நீங்கள்  கோபமாக பதில் பேசியது கவனிக்கப்படாமல் போனது  .


இன்றோ சுரங்க ஊழலிலும் அலைக்கற்றை ஊழலிலும் உங்கள்  பெயர் நேரிடையாகவே அடிபடுகிறது .பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும் ராஜா JPC  முன்  அனுமதிக்கப்படவில்லை .இப்போது  உங்கள் கைவசம்  இருந்த சுரங்க துறை
ஊழல் திரிக்கப்பட்டு  பழி சட்ட அமைச்சர் மீது போடப்படுகிறது .இரண்டு விஷயங்களிலும் நீங்கள்  சட்டம் முன்பும் மக்கள் முன்பும் பதில் சொல்ல தொடர்ந்து மறுக்கிறீர்கள் .


சரி  ,ஊழலை அமைச்சர்கள் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம் .உங்கள்  பொருளாதார பேரறிவால்  நாட்டிற்கு நடந்த நல்லது என்ன ?ஒரு பக்கம் வரலாறு காணாத ஊழல்கள் ,அந்நிய முதலீடு துவங்கி நாட்டை அயல்நாடுகளுக்கு விற்றிடும் அவலம் ,பெரு முதலாளிகளுக்கு அனாவசிய சலுகைகள் அவர்கள் சொற்படி நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் என்று,மன்னிக்கவும் , உங்கள்  பலவீனத்தின் பட்டியல் முடிவில்லாதது .


மக்களின் தலைவராக வருபவர் மக்கள் மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும் .அவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது .அப்போதேனும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேரிடக் கூடும் .நீங்களோ மீண்டும் மீண்டும் தேர்தலை சந்திக்க பிடிவாதமாக மறுப்பவராக  இருக்கிறீர்கள்  .உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதே  மிகப்பெரிய அவமானம் தான்   .

அரசின் தலைவர் என்ற முறையில் ஆட்சியில் நடக்கும்  தவறுகளுக்கு  மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர் பிரதமர் மட்டுமே .நீங்களோ , சொற்ப சந்தர்ப்பங்களில் ,சில கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டிகள் கொடுப்பதோடு நிறுத்திக்  கொள்கிறீர்கள் .வேறெங்கும் பேச பிடிவாதமாக மறுக்கிறீர்கள் .


உங்களின் பதவி ஆசை உங்களை தொடந்து மேல் சபை உறுப்பினராக வைத்திருக்கிறது .அதே பதவி ஆசையே  ஏதோ ஒரு அமைச்சரை பலிகடாவாக்கும் சாதூர்யத்தை உங்களுக்கு தருகிறது .உங்களின் அகம்பாவம் உங்களுக்கு ஒரு ஒளிவட்டம் இருப்பதாக  உங்களை நம்ப வைக்கிறது .உங்கள் நேர்மையாளர் பிம்பம் சிதறாமல் உங்கள் கார்ப்பரெட் நண்பர்கள் உங்களை பாதுகாக்கிறார்கள்.இழப்புகள் எல்லாம் கட்சிக்கே என்று தூற்றிவிட்டு நீங்களும்  கார்ப்பரேட்காரர்களுக்காக மட்டுமே கவலைப்படுகிறீர்கள் .


ஓய்விற்கு பின்னாலும் ஒரு சொகுசான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கக் கூடும் .வரலாறு உங்களை இந்திய வரலாற்றின் மிக பலவீனமான பிரதமர் என்று தூற்றக்கூடும் .நீங்கள் வெளிநாடுகளுக்கு தாரைவார்த்த வளங்கள் பற்றி கோஹினூர் வைரத்தை நாம்  படித்தது போல நாளைய தலைமுறை படிக்கக்கூடும் .ஆனால் ,இது குறித்து  உங்களுக்கு கவலை வேண்டாம் ,ஏனெனில் ,இதனால் நீங்கள் இழக்கப் போவது ஏதுமில்லை ,உங்கள் வெள்ளை முகத்திரையை தவிர ...
 

Wednesday, 24 April 2013

தீண்டாமை

பல வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் பெண் .ஆதரவான கணவன் ,அழகான குழந்தை போதுமான வசதிகள் என நிறைவான வாழ்க்கை.
எல்லாம் இப்படி நலமாக போய்க் கொண்டிருக்கும் போதுதான் ,பரிசோதனையின் போது பிறப்புறுப்பில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது .முதலில் அழுது புலம்பினாலும் பின்னர் சிகிச்சைக்கு செல்ல ஒப்புக் கொண்டார் . புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தோம் .பரிசோதனைகள் முடிந்தபின்  ஒருமுறை வர சொல்லியிருந்தேன் .அதன்படியே வந்தார் .

"எல்லா டெஸ்ட்டும் எடுத்திட்டாங்க மேடம் .ஆரம்ப ஸ்டேஜ் தான் அதனால ரேடியோதெரபி மட்டும் போதுன்னு சொல்லியிருக்காங்க .அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க .ஒங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன் ,"என்று சொல்லிவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தார் .ஏற்கெனவே எச்.ஐ.வி இருக்க இப்போது  புற்றுநோயும் வந்துவிட்ட வருத்தத்தில்  போலும் என "அவங்க சொல்றபடி சரியா தொடர்ந்து செஞ்சுக்கோங்க .ஒண்ணும் பிரச்சனை வராது "என நான் சொல்லிமுடிக்க ஓவென்று அழத்துவங்கினார் .

"மேடம் ,அந்த ஹாஸ்பிட்டல்ல என்னைய ரொம்ப மோசமா நடத்திட்டாங்க மேடம் .எனக்கு ப்ளட் ஏத்தி தானே எச்.ஐ.வி வந்தது .என்னைய ஏதோ பிராஸ்டிட்யூட்ட  பாக்குற மாதிரி  பாக்குறாங்க .அங்க போங்கன்னு சொல்லிட்டு ஒரு நர்ஸ் என்னைய தள்ளிவிட்டாங்க .இங்க வந்து எங்க
உயிர வாங்குறீங்கன்னு காதுல விழற  மாதிரி  பேசுறாங்க .பெட்டுல ஷீட் கூட இல்லாம படுக்க வச்சாங்க .தொடக்கூட மாட்டேங்குறாங்க .
இத்தனை வருஷம் எனக்கு எச்.ஐ.வி இருக்குன்னு நான் வருத்தப்பட்டதே இல்ல மேடம் .ஆனா அங்க போனதிலிருந்து ஏன்டா  இந்த நோயோட உயிரோட இருக்கோம்ன்னு   தோணுது .ஆனா நா என் பொண்ணுக்காக எல்லாமே  பொருத்துக்குவேன்  மேடம்."

எச்.ஐ.வி என்பது பல வழிகளில் பரவும் நோய் .உடலுறவு வழியாக அது அதிகம் பரவுகிறது என்றாலும் நோயாளியாக வரும் ஒருவருக்கு தேவை சிகிச்சையும்  நலம் பெறுவோம் என்ற நம்பிக்கையுமே  ,சிகிச்சை அளிப்பவர்களுக்கு தேவை நோய் குறித்த  அறிதலும்  மனிதநேயமும் மட்டுமே



 

Tuesday, 19 March 2013

மாற்றம்

நான் அன்றிருந்தது போல 
என்னை நினைவில் கொள் .
இப்போது என்னிடமிருந்து திரும்பி போ 
ஆனால் எப்போதும் பார்த்திரு..
கோடை இரவில் 
நடுங்கும் நட்சத்திரங்கள்  போல 
கண்களை காதல் மின்ன செய்ய,
நள்ளிரவில் நிழலாய் 
பூத்துக் குலுங்கும் மரத்தடியில்
சிரிப்புதிர நின்ற அந்த சின்னவளை ...   
 
 
இப்போது என்னிடமிருந்து திரும்பி போ 
ஆனால் எப்போதும் கேட்டிரு ,
நம்மிடமிருந்த  இளமையின் ஒற்றை  வருடத்தின்   
பனியில் ஓசை நழுவிய சிரிப்பை
நாம் அறிந்த ஒரே  இளமை ...
இப்போது என்னிடமிருந்து திரும்பி போ
இல்லையேல் நீ காணலாம் 
என்னை என்ன செய்திருக்கின்றன
பிற வருடங்கள் என...  
 

 

Change

By Sarah Teasdale 

Remember me as I was then;
Turn from me now, but always see
The laughing shadowy girl who stood
At midnight by the flowering tree,
With eyes that love had made as bright
As the trembling stars of the summer night.

Turn from me now, but always hear
The muted laughter in the dew
Of that one year of youth we had,
The only youth we ever knew --
Turn from me now, or you will see
What other years have done to me.

Monday, 18 March 2013

ஒரு பிராத்தனை

பூமியின் அழகிற்கு குருடாக ,
இரைந்தே கடப்பினும் 
காற்றிற்கு செவிடாக,  
மனக்களிப்பின் புயலில் ஊமையாக 
என் ஆவி தொலைத்து 
நான்  சாயும்  வரை  

என் இதயத்தின்  தாகமெல்லாம் 
தணிக்கப்படும் வரை
மனிதர்களின் மண் விடுத்து 
நான் போகும் வரை
ஓ ,என் மொத்த  வலுக்கொண்டு 
நான் நேசிக்க வேண்டும் ,
நேசிக்கப்பட வேண்டும் 
என்ற கவனமின்றி ....

 

 


A Prayer

By Sarah Teasdale 

Until I lose my soul and lie
Blind to the beauty of the earth,
Deaf though shouting wind goes by,
Dumb in a storm of mirth;

Until my heart is quenched at length
And I have left the land of men,
Oh, let me love with all my strength
Careless if I am loved again.


Thursday, 14 March 2013

ரசவாதம்

மஞ்சள் நனைத்த டெய்சியை  
மழைக்கு ஏந்தும் 
வசந்தம் போல 
என் இதயத்தை ஏந்துகிறேன் ,
ஒரு அழகிய கோப்பையாயிருக்கும் 
என்  இதயம் 
அதில்  ஏந்தியிருப்பது வலியே  எனினும் 

ஏனெனில் ,
ஏந்தும் துளியிலெல்லாம்  வர்ணம் பூசும் 
மலரிடம்  இலையிடம்  கற்றுக்கொள்வேன் 
உயிரற்ற வைன்னான  விசனம் -அதை 
உயிர்ப்புள்ள தங்கமாக  மாற்ற 

 

Alchemy

By Sarah Teasdale 

 I lift my heart as spring lifts up
A yellow daisy to the rain;
My heart will be a lovely cup
Altho' it holds but pain.

For I shall learn from flower and leaf
That color every drop they hold,
To change the lifeless wine of grief
To living gold.


Wednesday, 13 March 2013

பிரிந்த பின்

 

ஓ , என் காதலை அத்தனை அகல விதைத்திருக்கிறேன்
அவன் எங்கும் காணக் கிடைக்கும்  வகையில் 
அது இரவில் அவனை விழிக்க செய்யும் 
அது காற்றில் அவனை  அரவணைத்திருக்கும் 

என் நிழலை அவன் பார்வையில் நிறுத்தியிருக்கிறேன் 
நிறுத்தியிருக்கிறேன் ,ஆசை சிறகுகள் பூட்டி
அது பகலில்  மேகமாய் இருக்கும் படியும்
மேலும் இரவில் நெருப்பு பிழம்பாய் 

 

After Parting

By Sarah Teasdale 

Oh, I have sown my love so wide
That he will find it everywhere;
It will awake him in the night,
It will enfold him in the air.

I set my shadow in his sight
And I have winged it with desire,
That it may be a cloud by day,
And in the night a shaft of fire.


Tuesday, 12 March 2013

என் இதயம்

 

என் இதயம் கனத்திருக்கிறது
பல பாடலால் 
கனிந்த கனிகள் அழுத்தும்
கனிமரம் போல
இருந்தும்  ஒரு பாடலை
தரவே முடியாது நான்
என் பாடல்கள்
என்னுடையவை  இல்லை

ஆனாலும்
மாலையில் அந்தியில்
அங்கும் இங்கும்  அந்துப்பூச்சிகள்
உலாவும்  வேளையில்  
சாம்பல் பொழுதில்
கனி விழுந்திருந்தால்
எடுத்துக் கொள் .
எவர்க்கும் தெரியாது 





 "My Heart Is Heavy"
By Sarah Teasdale 
My heart is heavy with many a song
Like ripe fruit bearing down the tree,
But I can never give you one --
My songs do not belong to me.

Yet in the evening, in the dusk
When moths go to and fro,
In the gray hour if the fruit has fallen,
Take it, no one will know.


Saturday, 2 March 2013

திருமணம் -இனியொரு விதி செய்வோம்

இன்று ஒரு நாளிதழில் வந்திருந்த இரண்டு செய்திகள் .

1. தன் கணவரை சுட்டு கொன்றதற்காக  ஒரு பெண்ணிற்கு தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டது
2. கணவன் மனைவியை உறவிற்கு வற்புறுத்துவது  வன்முறை என்று சட்டமாக்கினால்  திருமணத்தின் புனிதத்தை அது கெடுக்கும் என்ற திரு .வெங்கையா நாயுடுவின் வாதம் .

 திருமணம் என்பது  புனிதமானதாகவும்  தெய்வீகமானதாகவும் போற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது .தெய்வங்களுக்கு இடையே நடக்கும்  திருமணங்களிலேயே பலவித சிக்கல்கள் நேர்ந்ததாக நம்முடைய புராணங்கள் சொல்கின்றன .இதில் இங்கு நடப்பவை   வெறும் மனிதர்களிடையே என்பதால் இதில் சிக்கல்கள் தவிர்க்க  முடியாததாக இருக்கின்றன .

பெண் ஆணைவிட வயது ,உயரம் ,படிப்பு என்று  வசதியை தவிர்த்து எல்லாவற்றிலும்  குறைந்தவளாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே இங்கு பொருத்தங்கள் ஆரம்பிக்கின்றன .பெண்  கணவனுக்கும் அவனது   குடும்பத்தினருக்கும் அவள் கொண்டு செல்லும் சீதனம் போலவே உரிமையுள்ள  பொருளாகிறாள் .இதில்  படிப்பு ,பணி ,குழந்தை பிறப்பு ,கருத்தடை ,குழந்தைகளுக்கு பெயரிடுவது முதற்கொண்ட எந்த உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டதான ஆண்டான் அடிமை உறவாகவே பெரும்பான்மையான நேரங்களில் திருமணம்  இருக்கிறது .

இன்றைய  சூழலில் பெண்கள் கல்வியும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும்  இந்த உறவுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை விவாத பொருளாக்கியிருக்கின்றன .

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விருப்பமில்லாத ஒரு செயலை செய்ய  கட்டாயப்படுத்துவது   மனதை வருத்தும் வன்முறையே .இதில் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் திருமண எல்லைக்குள் நடைபெறுபவையாகவே   இருக்கின்றன .பல காரணங்களுக்காக இவை தொடர்ந்து ஏற்கப்பட்டு வருகின்றன .ஆனால் இவை சகித்துக் கொள்ளப்படுவது இவற்றை நியாயப்படுத்திவிடாது .

 ஏற்ற தாழ்வுகளையும்  பிரச்சனைகளையும்,விவாதத்திற்கு உட்படுத்தி  களைவது மட்டுமே  திருமணங்களை  பலப்படுத்த முடியும் .தவறுகள் புனிதம் ,கலாச்சாரம் என்ற  பினாமிகள் பெயரால் நியாயப்படுத்தப்படுவது  புண்களை சீழ்பிடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது   போன்றதாகும் .

மனைவி என்ற ஒரே காரணத்திற்காக ஒரு  பெண் ஆண்  எதிர்பார்க்கும்  நேரத்தில் உறவுக்கு உட்பட வேண்டும் என்பது மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் வருத்தும் உச்சகட்ட வன்முறை .விருப்பமில்லாத பெண்ணுடன் உடலுறவு கொள்வது என்பது வன்புணர்ச்சியே ,அந்த பெண் பாலியல் தொழில் செய்பவளாக  இருந்தாலும் ,மனைவியாக  இருந்தாலும் ...

Tuesday, 29 January 2013

என் கல்லறையில்

என் கல்லறையில் நின்று அழ வேண்டாம் 
நான் அங்கு இல்லை .நான் உறங்கவில்லை .
வீசும் ஆயிரம் காற்றுகள் நான்
பனிமேல் வைரச் சுடர்கள் நான்  

முதிர்ந்த கதிர்மேல் கதிரொளி நான் 
இலையுதிர் காலத்தின்  மெல்லிய மழைத்துளி  நான்
விடியலின் நிசப்தத்தில் நீ விழிக்கும் போது

சத்தமின்றி வட்டமிடும் பறவைகள்  சிறகுகள் 
துரிதப்படுத்தும்  வேகத்தின் விசையும் நான் 
இரவில் ஒளிரும் மென்மை  நட்சத்திரங்கள் நான் 
என்  கல்லறையில் நின்று   அழ  வேண்டாம்
நான் அங்கு இல்லை .நான் இறக்கவில்லை .



 
Do not stand at my grave and weep 
 By Mary Elizabeth Frye 

 
Do not stand at my grave and weep
I am not there. I do not sleep.
I am a thousand winds that blow.
I am the diamond glints on snow.
I am the sunlight on ripened grain.
I am the gentle autumn rain.
When you awaken in the morning's hush
I am the swift uplifting rush
Of quiet birds in circled flight.
I am the soft stars that shine at night.
Do not stand at my grave and cry;
I am not there. I did not die.