Tuesday, 4 November 2014

போய் விடாதே

தொலைவில்  போய் விடாதே ,ஒரே ஒரு நாளுக்கு  கூட,
ஏனெனில்..
ஏனெனில் -அதை சொல்ல தெரியவில்லை -
ஒரு நாள் நீளமானது
அப்புறம் ,உனக்காக நான் காத்திருப்பேன் 
வேறெங்கோ ரயில்கள் நிறுத்தப்பட்டிருக்கும்
ஆளில்லா  நிலையத்தில் , உறங்கிப்போய்

என்னை விட்டு போகாதே ,ஒரு மணி கூட ,ஏனெனில்
வேதனை சிறு துளிகளெல்லாம் ஒன்றாகி   ஓடும்...
வீடு  தேடி அலையும்  புகை  எனக்குள் அடையும் 
தொலைந்த என் இதயத்தை திக்குமுக்காட செய்து ...

ஓ ,உன் நிழல்பிம்பம் கரையில் எப்போதும் கரையாதிருக்கட்டும்
உன் கண் இமைகள் வெற்று  தொலைவுகள்  பார்த்து  படபடக்காதிருக்கட்டும்

ஒரு நொடி கூட என்னை விட்டு போகாதே ,என் அன்பே
ஏனெனில் ,நீ அந்த தூரம் போன அந்த நொடியில்
நான் உலகம்  முழுக்க திரிந்து  கொண்டிருப்பேன்
நீ திரும்ப வருவாயா ?
நான் இங்கே இறக்கும்படி விடுவாயா ?என  கேட்டபடி  



Don't go far off ...
Pablo Neruda 


Don't go far off, not even for a day, because --
because -- I don't know how to say it: a day is long
and I will be waiting for you, as in an empty station
when the trains are parked off somewhere else, asleep.

Don't leave me, even for an hour, because
then the little drops of anguish will all run together,
the smoke that roams looking for a home will drift
into me, choking my lost heart.

Oh, may your silhouette never dissolve on the beach;
may your eyelids never flutter into the empty distance.
Don't leave me for a second, my dearest, because in that moment you'll have gone so far
I'll wander mazily over all the earth, asking,
Will you come back? Will you leave me here, dying?

Tuesday, 28 October 2014

யாகாவாராயினும் நா காக்க ...

வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார்  .வயது 70.எப்பொழுதும் அவருடன் அவர்  இளைய மகன் வருவார் .இன்று   புதிதாக இன்னொருவரும்  வந்திருந்தார் .தம்பி போலும் என  நினைத்துக்கொண்டேன் .முதலில் உள்ளே வரவில்லை .Viral load  test  செய்ய வேண்டும் ,இரண்டாயிரம் ரூபாய் ஆகும் இன்று  செய்து கொள்கிறீர்களா அடுத்த முறை செய்து கொள்கிறீர்களா என்று கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தார் .

"என்ன ?" என்று மகனை பார்த்து   கேட்கவும் ,"நீங்க யாரு ?"என்றேன் நான் ."அவங்க மகன் தான் " என்றார் ."நா பாத்ததே இல்லையே ?" என்றவுடன் ."நீங்க எங்கம்மாவுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .வேல கீல செய்யாம கெடக்க சொல்லுங்க .நா மாசாமாசம் மாத்திரைக்கு செக் போட்டு கொடுக்குறேன் .அப்புறம் என்ன கேடு ?பதிமூணு  மாசத்துக்கு இப்பவே செக் கொடுத்துட்டேன் .இன்னும் என்ன எப்படி தேய்க்கலாம்ன்னு தான் பாக்குறாங்க ."அவர் உடனே ,"நீ செய்யலைன்னு நா சொல்லலையே தம்பி ?வாடகைக்கு கொஞ்சம் பணம் கொடுன்னு தானே சொல்றேன் .""ஒனக்கே எல்லாத்தையும் அழுதுட்டா ,நா ரெண்டு பொண்ணு பெத்துருக்கேன் . அதுங்களுக்கு கார் பங்களா கொடுத்து கட்டி கொடுக்க வேணாமா ?வரவன் ஒசியிலையா கட்டிக்க போறான் ?"


"ஒங்க  பொண்ணுக்கு பங்களா கொடுக்கணும்ன்னு சொல்றீங்க ,ஒங்கம்மாவுக்கு வாடகை கொடுக்கறதுக்கு இவ்வளவு பேசுறீங்க ?
"நா நெறைய படிச்சிருக்கேன் ."
"ஒங்கம்மா தானே படிக்க வச்சாங்க ?"
"ஆமா இவங்க தான் வந்து எக்ஸாம் எழுதுனாங்க "
"அவங்க அறிவு தானே உங்களுக்கும்  இருக்கும் ?"
"இப்ப கூட வந்திருக்கேன் ,பொழப்ப விட்டுட்டு ...நீங்க என்ன டெஸ்ட் வேணுமோ பண்ணிக்கோங்க "
"ஒங்கம்மாவுக்கு தானே கொடுக்கிறீங்க ?ஏன் கொடுத்தேன் கொடுத்தேன்னு கணக்கு சொல்லிகிட்டே இருக்கீங்க ?இத்தன வருஷத்துல இன்னைக்கு தான வந்திருக்கீங்க ?எப்பவும் ஒங்க தம்பி தான வருவாரு ?
"அந்த பொறுக்கி பயல கட்டிட்டு அழுறாங்க .அவன ஏதாவது செஞ்சு பிழைக்கட்டும்ன்னு மெட்ராசுக்கு அனுப்ப வேண்டியது தானே ?"
"அவர் கிராமத்துல இருக்கறதுல உங்களுக்கு  என்ன பிரச்சனை ?"


"நா ப்ரொபசரா இருக்கேன் .என் பொண்டாட்டியும் கெட்டிக்காரி அவளும் ப்ரொபசரா இருக்கா .இவங்களுக்கு மகனா பொறந்தது என் தப்பு .லூசு ,பைத்தியம் ....."

சட்டென்று கையெடுத்து கும்பிட்டு அவர் அம்மா சொன்னார் ,"நல்லா சாமிய கும்பிட்டுக்க தம்பி .அடுத்த ஜென்மத்திலயாவது ஒனக்கு புடிச்சாப்புல  ஒனக்கு அம்மா கெடைக்கனும்ன்னு ."





Saturday, 18 October 2014

ஒரு சொல் கேளீரோ !

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நேற்று ஒரு டாக்ஸ்சியில் போய்க் கொண்டிருந்தேன் .எனக்கும் அந்த ஓட்டுனருக்கும் நடந்த உரையாடல் இது .

ஓட்டுனர் -என்ன மேடம் நாளைக்காவது அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்குமா ?
நான் - தெரியலையே ?ரொம்ப கஷ்டம்ன்னு சொல்றாங்க .

ஓட்டுனர் -இவ்வளவு முக்கியமான ஆள உள்ளேயே வச்சிருக்க முடியுமா மேடம் ?
நான் - கேஸ் தோத்து போச்சு ,என்ன செய்ய !

ஓட்டுனர்-அது என்ன பெரிய கேஸ் ?ஊர்ல நடக்காததா ?
நான்  - அந்த தடவ இவங்க ஆடுன ஆட்டம் தெரிஞ்சது தான ?

ஓட்டுனர்-என்ன மேடம் அப்படி சொல்றீங்க ?ஒரு முதலமைச்சரா ஆவரவங்க ஒரு அறுபது  கோடி  சம்பாதிக்க மாட்டாங்க ?
நான் - சம்பளம் தான்  கொடுக்கறாங்க இல்ல ?


ஓட்டுனர் -அப்படி  சொல்லாதீங்க மேடம் .வெறும் அறுவது கோடியும் நகையும் தான் .இந்தம்மா முதலமைச்சர் .ஒரு  காசு கூடவா சம்பாதிக்காம இருக்க முடியும் .அதுக்கெல்லாமா கணக்கு வச்சிருப்பாங்க ?அத போய் இந்த கோர்ட் கேக்கலாமா சொல்லுங்க ?அப்புறம் நகை அவ்வளவு இருந்துது இவ்வளவு இருந்துதுன்னுட்டு  .என் பொண்டாட்டி கிட்டயே கிட்டத்தட்ட இருபது பவுன் இருக்கு .நம்மூர்ல எல்லா வீட்லேயுமே  பத்து இருபது பவுன் நகை இருக்கு.அந்தம்மா ,நடிச்சிருக்காங்க ,அரசியல்ல இவ்வளவு வருஷம் இருந்திருக்காங்க , அவங்க கிட்ட இவ்வளவு நகை கூடவா இருக்காது ?அதையெல்லாமா தப்புன்னு சொல்ல முடியும் ?


இந்த பிஜேபிகாரங்க   வேணுன்ட்டே  இந்த மேயர் தேர்தல் பிரச்சனைய மனசுல வச்சுக்கிட்டு இப்படி செஞ்சுட்டாங்க மேடம்.இந்தம்மாவும் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் .


பாவமா இருக்கு .நாளைக்காவது   வெளிய விட்டுறணும் .
 அம்மா வரலைன்னா நாமெல்லாம்  என்ன ஆகுறது ?

அந்தம்மா  ஜெயில இருக்கறது ,ஏதோ நம்ம வீட்ல  ஒரு ஆள்  கொறையர மாதிரி இருக்கு மேடம் .

Tuesday, 7 October 2014

அம்மாவும் அரெஸ்ட்டும் சதிகளும் -The Conspiracies

பதினெட்டு வருஷம் எப்படி எப்பிடியோ எங்க எங்கயோ இழுத்து அம்மாவோட வழக்கு முடிவுக்கு வந்தது நாம  எல்லாரும் அறிந்தது தான் .கேஸ் நடந்தது தண்டனை கெடச்சுதுங்கறதை தாண்டி ,இதுக்கு தினத்துக்கு ஒரு போராட்டமும் தினம்  ஒரு சதி திட்ட பின்னணியும்  நமக்கு சொல்லப்படுது . இத பத்தி கொஞ்சம் யோசிப்போம் .இதுல இன்னைக்கு மீண்டும் ஜாமீன் வேற மறுக்கப்பட்டிருக்கு .

1.இது அம்மாவே திரும்ப திரும்ப சொன்னது தான் .அரசியல்  சதி என்ற முது பெரும் தியரி .அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குகள் புனையப்பட்டது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் வழக்குகளுக்கு அடிப்படை இருந்தது   அன்றைய ஆட்சியை காண நேர்ந்த அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் இது இந்த தீர்ப்போடு முடிந்துவிடவில்லை .இனி வரும் காலங்களிலும் இது பலமுறை பேசப்படும் என்பதிலும் சந்தேகமில்லை .

2. இந்த தியரி புதுசு .காவிரி நடுவர் மன்ற ஆணையை  gazetteல் வெளியிட செய்ததற்கு கோபம் கொண்ட கர்நாடக அரசு இந்த விதமாக அம்மாவை பழிவாங்கியது என்பதே  தியரி நம்பர் டூ .அதற்கு வலு சேர்க்கும்  விதமாக அம்மா சிறையில் தண்ணீர் கேட்ட போது  குடத்தில் இருக்கும் காவிரி தண்ணீரை குடிக்க சிறை அலுவலர் சொன்னதாக செய்திகள் (?) வேறு .அதோடு அம்மா அந்த ஆணையை கையில் பிடித்தபடி இருக்கும் போஸ்டர்கள் என்று இந்த தியரி புது பூச்சோடு வலம் வருகிறது .

3.நல்லா யோசிச்சு பாத்தா இந்த தீர்ப்புல நேரடியா பலன் பெற்றது ஓபிஎஸ் தான் .மோசமான வழக்கறிஞர்கள ஏற்பாடு செஞ்சு ,கேஸ்ஸ தோக்கடிச்சு ,அம்மாவை உள்ள தள்ளி ,இவரு முதல்வராகி -இப்படி நீளுது இந்த தியரி .

4.அடுத்தது ஒரு டாக்ஸி டிரைவர் சொல்ல கேட்ட அட்ரா சக்க தியரி ."மோடி அம்மாக்கு வேண்டியவர் .மோடி ஊர்ல இல்லாத நேரமா  பார்த்து இந்த பாஜக காரங்க அம்மாவ கேஸ்ல தோக்கடிச்சு உள்ள போட்டுட்டாங்க ."

5.எனக்கு பிடிச்ச தியரி இது .இந்த தேர்தல்ல மோடி அலை  கரை சேர முடியாம போனது நம்மூர்ல மட்டும் தான் .என்னடா இந்தம்மா இப்படி நம்பள ஜுஜுபி ஆக்கியிருச்சேன்னு கோபப்பட்ட பாஜக ,கேஸ் என்னமோ நிஜம் தான் ஆனாலும் ,வழக்கை இந்த நேரத்துல முடிச்சு, அம்மாவ உள்ள தள்ளி  ,தமிழ் நாட்டில ஆட்சிய பிடிக்க முடியாம போனாலும் ,ஏதோ கால் பதிக்கலாம்ன்னு எடுத்த முயற்சியோ என்னவோ ?இப்ப இதுக்கு வலு சேக்குற மாதிரி சில விஷயங்கள்  இருக்கு ..

முதல - முக்கிய எதிர்கட்சியான திமுகவே அடக்கி வாசிக்கும் போது இந்த பாஜக குறிப்பா தமிழ்நாட்டுக்காரங்க ,சட்டம் ஒழுங்கு அது இதுன்னு உதார் விடுறது .அப்புறம் ,நாங்க தமிழ்நாட்டுல கால் பதிப்போம்ன்னு தில்லா  பேசுறது .அப்புறம் இன்னைக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் .அம்மா உள்ளே ,ஏற்கெனவே திமுக தலைக்கு மேல கத்தி மாதிரி 2G  வழக்கு  இருக்கு .இந்த ரெண்டு சைடும் இப்படி வீக்கா இருக்கிறப்ப ரஜினியை கூட்டிட்டு வந்து தமிழ்நாட்டுல டூயட் பாடலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ ?

6.கடைசியா நாம எப்பவும்  பல கேப்டன் படங்கள்ல பார்த்த அந்நிய நாட்டு சதி ஆங்கிள மறந்துட கூடாது .அம்மா ஆட்சியில ஏக சுபிட்சமா இருக்கிற  தமிழ்நாட்டோட வளங்களை சூறையாட அந்நிய ஆட்சியாளர்கள் செய்த சதி .ஒரு பலம் மிக்க தலைமை செயலிழக்கும் போது நாட்டில்  விளையும் குழப்பங்களின் ஆதாயம் தேடும் தியரி -
அப்படி இருந்தா நமக்கு ஒரே கதி கேப்டன் தான் .

Thursday, 18 September 2014

கரும்புக் கொள்ளை



முன்பு நான் பகிர்ந்த  மல்லாட்டையும் மருத்துவமனையும் என்ற பகிர்வின் கதாநாயகர் இவர்  ( http://மல்லாட்டையும் மருத்துவமனையும் ).
இன்று வந்திருந்தார் .இந்த முறை கரும்பு .

"கரும்பை  போட்டவன் எல்லாம் கஷ்டப்பட்டு கெடக்குறான் .கடலூர் பக்கத்துல மில்காரன்  ஆறாயிரம் கோடிக்கு மேல  விவசாயிக்கு பாக்கி வச்சிருக்கான் .கேட்டா சக்கர  வெல போகலன்னு சொல்றான் .
இப்ப  மார்க்கெட்டுல கெடைக்கறது எல்லாம் காரட் ,பீட்ரூட் சக்கர தான் .வெளிநாட்டுலேருந்து அதுதான் இங்க வருது . கரும்பிலிருந்து சக்கர எடுக்கணும்ன்னா கிலோக்கு இருநூத்து அறுபத்து அஞ்சு ரூபா ஆகுமாம் .இங்கிருந்து வெளிநாட்டுக்கு போயிட்டு இருந்ததாம் .இந்தம்மா வந்து அத நிறுத்திப்புடிச்சி .அந்த சக்கர  டன் கணக்குல இருக்கும் .கிரேன் வச்சு தான் தூக்க முடியும் .அது அப்படியே வச்சிருந்தா பழுப்பாயிரும் .அத மறுபடியும் கழுவி தான் சக்கரையாக்கணும் .அத  செஞ்சு அத வித்தா தான் காச குடுக்க முடியும்ன்ட்டான் ."

"ஆனா மில்காரன் கெட்டிக்காரத்தனமா பத்து பதினஞ்சு ஏக்கருல கரும்பு  போட்டவனுக்கெல்லாம் காச கொடுத்துட்டான் .அதே மாதிரி பாங்குல வாங்குன கடனையெல்லாம் கட்டிருக்கான் .அதனால எவனும் அவன கேக்க மாட்டேங்குறான் .சின்ன வெவசாயி தான் வழியில்லாம பொலம்பிட்டு கெடக்கான் .அதோட மில்லிலேயே கரெண்ட்  எடுக்கிறான் .அதுல அவன் தேவைக்கு போக மிச்சத்த கவர்ன்மென்ட்டுக்கு கொடுக்குறான் .அதுல அவங்க இவனுக்கு  நாப்பத்து எட்டு கோடி பாக்கியாம் .அத கொடுத்தா வெவசாயிக்கு காச கொடுத்திருவேங்கறான்.நாப்பத்து எட்டு எங்க ?ஆறாயிரம் கோடி எங்க ?"


"இந்தம்மா  ஊரையே கவர் பண்ணிட்டோம்ன்னு நெனைக்குது .அதனால கண்டுக்க மாட்டேங்குது .எல்லாம் இந்த எலவசம் பண்ற வேல .எலவசமே வாங்கக் கூடாதுமா .நம்ம பணத்தையே எடுத்து நம்மகிட்டேயே கொடுக்கிறாங்க .ஓட்டுக்கு பணம் வாங்கலைன்னாலும் வம்புக்கு வரானுங்க .எங்களுக்கு ஓட்டு போடாம போயிருவியான்னு ?"

"வெவசாயி  தான் ,பேப்பருல கூட படிச்சிருப்பீங்க ,வேப்பில கட்டி போராட்டம் ,பிச்சை எடுக்குற மாதிரி போராட்டம்ன்னு தெருவில நின்னு என்னென்னமோ போராட்டம் பண்ணி பாக்குறான் .ஒண்ணும் நடக்கல ."

Thursday, 11 September 2014

பெண்பாவம்

தென் தமிழகத்தின் கிராமங்களில் ஒன்றை சேர்ந்தவர் இவர் .சிகிச்சைக்கு  சில மாதங்கள் வரவில்லை . விசாரித்தபோது ,இவரின்  பதினான்கு வயது மகள் பள்ளிக்கு  சென்று வரும் வழியில் ,ஒருவன் ,இவன் வயது பதினெட்டாம் ,தினமும்  கிண்டல் செய்தபடி இருந்திருக்கிறான் .கையை பிடிப்பது ,தூக்கி சென்று விடுவேன்  என்று இவன் அத்து மீறவும் ,அவன் பெற்றோரிடம் போய்  இவர் , மகனை கண்டிக்கும் படி சொல்லியிருக்கிறார் .அவர்கள் ஏதும் செய்தது போல் தெரியவில்லை .இவன் தொந்தரவு தொடர்ந்திருக்கிறது .அந்த பெண்ணோ பள்ளிக்கு போகவே பயந்து போயிருக்கிறது . பிரச்சனை பெரிதாவது போல் தோன்றவே இவர் போலீசிடம் போயிருக்கிறார் .அவர்கள் ஏதும்  கண்டுகொள்ளவில்லையாம் .பெண் வீட்டில் இருந்தாலும் எவரேனும் துணைக்கு இருக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை என்று சொன்னார் .

மீண்டும் இன்று வந்திருந்தார் .பேச்சு  வாக்கில் இது குறித்து விசாரிக்கவே ,"அவன்  அப்படியே தான் செஞ்சுக்கிட்டிருந்தான்க்கா .போலீஸ் கிட்ட  போய் சொன்னா  அவங்க ஒண்ணும் கண்டுக்குற மாதிரி தெரியல .அவன் புள்ளைய தூக்கிருவேன்னு மெரட்டிக்கிட்டே இருந்தான் .புள்ள  பள்ளிக்கூடமே  போக மாட்டேங்கு .அப்புறம் அவர புடிச்சு இவர புடிச்சு போலீசுக்கு இருபதாயிரம் கொடுத்தப்புறம் அவன மெரட்டி இப்ப  வேற ஊருக்கு போயிட்டான் ."

"அவன் பிரெண்ட்   ஒரு பய ஊருக்குள்ள  இருக்கான் .அவன் போன வாரத்துல ஒரு மூணு வயசு  புள்ளைய தூக்கிட்டு போய் அசிங்கம் செஞ்சிருக்கான்.அந்த புள்ளையோட அப்பா வெளியூருல வேலைக்கு போயிருக்காப்ல .அந்த பொண்ணு அவனோட போய் ஒத்த ஆளா மல்லுகட்டியிருக்கு .யாரும் என்னன்னு கண்டுக்கல.அப்புறம் போலீசுக்கு ரெண்டாயிரம்  குடுத்திருக்கு .அப்பவும் அவங்க கேஸ் எழுதலக்கா .வெறுமனே அவன மெரட்டி விட்டிருக்காங்க .பாவம் அந்த புள்ள பயந்து போய் கெடக்கு .

"இந்த பயலுவ செல்லுல அசிங்க அசிங்கமா படம் பாத்துட்டு இப்படி புத்தி கெட்டு திரியிறான்ங்கக்கா "

என்னைய விட்டா ஒருத்தனையாவது போட்டு தள்ளிருவேன்க்கா .ஒருத்தன போட்டாத்தான் இவனுங்க அடங்குவாங்க .பத்து லட்சம் செலவாகும் .மூணு மாசம் உள்ள இருக்கணும் .உள்ள மாத்திர முழுங்க விடமாட்டங்க .நீங்க வேற தெனம் விடாம சாப்பிடனும்ன்னு  சொல்றீங்க .அதுக்கே தான் நா பேசாம இருக்கேன்க்கா  ."

"எத்தன வயசுலேயும் பொம்பள புள்ளைய வீட்டுல வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க முடியலக்கா ."


Sunday, 7 September 2014

மங்கையராய் பிறந்திட

என்னுடன்  பணிபுரியும் பெண்ணொருத்தி .அவளின் மகள்   போன வருடத்தில் பூப்பெய்தினாள் .சொல்வழக்கில் சொல்வதானால் சற்றே மதமதவென்று இருக்கும் உடல் அமைப்பு . ஆனாலும் சிறுமி .நேற்று பள்ளிக்கு சென்று வந்தவள் வீட்டில் அம்மாவிடம் "எனக்கு ஆபரேஷன்  செஞ்சுடும்மா "என்று சொல்லியிருக்கிறாள் .என்ன ஆபரேஷன் என்றால் மார்பை அகற்றி விடும் ஆபரேஷனாம் !

எதற்கு என்று விசாரித்தால் தினமும் பள்ளியில் ஆசிரியர்கள் இவள் உடல் அமைப்பை  பற்றி விமர்சித்தப்படி இருந்திருக்கிறார்கள் .அதிலும் பள்ளி பிள்ளைகளுக்கே உரிய  மூட்டை போன்ற பையை இவள் சுமந்துவர , "ஒழுங்கா நட " என்ற கண்டிப்புகள் வேறு .பாவம் குழந்தை பயந்து போய் , தானாக யோசித்து குழம்பி ஆபரேஷன் முடிவிற்கு வந்திருக்கிறாள் .

 ஒரு சிறுமியின்  ,"எனக்கு மட்டும்  ஏம்மா இப்படி இருக்கு ?" என்ற கேள்வியை ஒரு யதார்த்த தெளிவான பதிலாக்காமல் அதை ஒரு குற்ற உணர்ச்சியாக மாற்றிய அந்த ஆசிரியர்கள்   கடும் கண்டனத்துக்குரியவர்கள் . பட்டங்கள் ஆளவும்  சட்டங்கள் செய்யவும் பெண்கள் வந்துவிட்ட இன்றைய உலகத்தில் பெண் உடல் சார்ந்த பிம்பங்களை ஆசிரியர்களே இன்னமும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது எத்தனை இழிநிலை .

ஒரு சிறுமியின் மனதை சிதைத்து தேவையற்ற  குழப்பங்களை உண்டாக்கிவிட்டிருக்கிறார்கள் .இதை தெளிவுபடுத்திக்  கொள்ளும் வாய்ப்பு இவளை  போல எல்லா சிறுமிகளுக்கும் வாய்ப்பதல்ல .


எல்லா பாலியல் வன்முறைகளுக்கும் பெண்ணின் உடலையும் உடுப்பையும் குற்றம் சாட்டிவிட்டு  நிஜக் குற்றவாளிகளை தொடர்ந்து தப்பிக்க விட்டுக் கொண்டே இருக்கிறோம் .பள்ளியளவில்  பெண் உடல் சார்ந்த சரியான  அறிவும்   அது பெருமைக்குரியது  என்ற நிஜமும்  பெண்களுக்கும் ஆண்களுக்கும்  உணர்த்தப்பட வேண்டும் .அதைவிடவும் முக்கியமாக பெண்ணுடல் ஒரு  கவர்ச்சி பொருளல்ல என்ற  தெளிவும் .ஆனால் ,நாம் முதலில் கற்பிக்க வேண்டியது நமது ஆசிரியர்களுக்கு தான் போலும்


அதுவரையில் ....
பெண் என்றால் மார்பும் சதையும் இன்னபிறவும் ..........




Friday, 4 July 2014

இன்னொரு நாளில்



வருவாயோ என்றேன்
வரலாமே   என்றது
வரலாம்  என்றேன்
வருவேன்  என்றது
என்றோ என்றேன்
இன்னொரு  நாளில் என்றது
இன்னும் ஒரு  நாளிலோ  என்றேன்
ம் ..பின்னர்  ஒரு நாளில் என்றது
பல நாள் போனது என்றேன்
இன்னமும் சில போகட்டுமே என்றது
நாள் நில்லாதே என்றேன்
செல்லட்டுமே என்றது
பொல்லாத்தனம் என்றேன்
பொல்லாதவள் என்றது
சொல்லால் அயர்ந்து
சுணங்கிக் கிடந்தேன் ...
இடியாய் மேளதாளம் கொட்ட
நான் நினையாத ஒரு நாளில்
என் வாசல் வந்து
சதிராடிச் சென்றது
மழை 

Thursday, 29 May 2014

களவு போன கதாநாயகர்

எம்ஜிஆர் -மக்கள் மனங்களை தன் தனி வசீகரத்தாலும் ஆளுமையாலும் கொள்ளை கொண்ட ஒரு மாமனிதர் . தன் படங்களிலும் பாடல்களிலும் நல்ல கருத்துகளை விதைத்து அவை இன்றளவும் எடுத்தாளப்படும் அளவிற்கு அவற்றை நிலை பெற செய்தவர் .

எதற்கு இந்த முன்னோட்டம் என்று குழம்புவர்களுக்கு ,என் http://mgrsongs.blogspot.in/இன் ஆரம்ப புள்ளி இதுதான் .எம்ஜிஆர் பாடல்களின் ரசிகை நான் .பாடல் வரிகளை ஒரே தளத்தில்  தேடிய போது அவ்வாறாக அவை கிடைக்கவில்லை என்பது தெரிந்தது .அதனாலேயே இந்த பிளாக்கை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது .

ஆரம்பித்த போது எம்ஜிஆரை பற்றி ஒரு கவிதை எழுதினால் என்ன என்று எழுதிய கவிதை தான் பிளாக்கில் காணும்

"கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்"


சில நாட்களுக்கு முன்னால்  ஏதோ தேடலின் போது மைய்யம் வலைத்தளத்திற்கு செல்ல நேர்ந்தது .இதில்  ஒரு நண்பர்  என்னுடைய இந்த  கவிதையை  தன்னுடைய  கவிதையாக என் அனுமதியின்றி பதிவு  செய்திருந்தார் .

Makkal thilagam mgr part 7 - Page 340 - The Forum Hub

வலைத்தளத்தின்   நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி ஆனது ஏதுமில்லை .
இன்று ஏதேச்சையாக இந்த கவிதை வரிகளை இட்டு கூகுளில் தேடிய போது இது  இன்னமும் சில இடங்களில்  பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது .

 












இதில் ஒரு தளத்தில் மட்டுமே என்னுடையதாக இந்த கவிதை பதிவு
செய்யப்பட்டிருக்கிறது .இதை தொடர்ந்து செய்வதற்கு  பெரிதாக ஏதும் இல்லை என்றாலும் இது குறித்த வேண்டுகோள் ஒன்றை என் பிளாக்கில் இன்றிலிருந்து இணைத்திருக்கிறேன் .