Friday, 20 November 2009

குருக்க்ஷேத்ரா




சென்னை " செட்டிநாட் வித்யாஷ்ரம் " மாணவர்களைக் கொண்ட நாடகக் குழு வருடா வருடம் ஒரு இதிகாசம் சார்ந்த கதையை மேடை நாடகமாக்கி வழங்குவது வழக்கம் .சென்ற வருடம் பீஷ்மர் என்ற நாடகத்தை இந்த குழு நடத்தியது .இந்த வருடம் "குருக்க்ஷேத்ரா "என்ற நாடகத்தை நேற்று முதலாக அரங்கேற்றினார்கள் .

கதை ,வசனம் ,இயக்கம் ,உடையலங்காரம் இவற்றை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள அரங்குகளை வடிவமைப்பது தோட்டாதரணி .நடிப்பும் இசையும் முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே .ஆங்கில நாடகமாக அரங்கேற்றப்பட்டது வழக்கம் போலவே .
திரௌபதியின் சுயம்வரத்துடன் துவங்கியது கதை .துரியோதனனின் மரணத்துடன் முடிவடைந்தது .

1. மாணவர்கள் என்றே நாம் உணர முடியாத அத்துணை நடிகர்களின் நடிப்பும் அதற்கான உழைப்பும் பாராட்டத் தக்கது .
2.விநாயகரும் வியாசரும் காட்சிகளை விவாதிக்கும் படி அமைத்து சில இடங்களில் கதையை நகர்த்திய விதம் சிறப்புக்குரியது.இதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருந்தது .
3.உடையலங்காரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் நேர்த்தியாக இருந்தது .எல்லோருக்கும் மேல் துண்டே வித்தியாசப்படுத்தும் படியாக அமைக்கப்பட்டிருந்தது.
4.அரங்க அமைப்பு நன்றாக இருந்தது .ஆனால் நிறைய காட்சிகளுக்கு ஒரே அமைப்பு பொருந்தவில்லை .
5. வசனங்கள் முதலிலேயே பதிவு செய்யப்பட்டு வாயசைத்த போதும் ..அது தெரியாத அளவிற்கு மாணவர்களின் நடிப்பு இருந்தது .
6.மிக சிறப்பாக அமைந்திருந்த காட்சிகள் முதல் காட்சியான திரௌபதியின் சுயம்வரத்தை ஊர் பெண்கள் விவாதிக்கும் காட்சி ,சிசுபாலன் வதம் ,இறுதிக் காட்சியான துரியோதனன் மரணம் .
7.மயிலிறகும் ,குழலும் இல்லாத கண்ணன் ,கதை எப்போதும் சுமக்காத பீமன் என சில உடைகள் வித்தியாசமாய் .
8.துகிலுரிதலும் ,கீதோபதேசமும் கண்டிப்பாக இருக்கும் என்று நினைத்தேன் .அவை இரண்டுமே காட்சியாக்கப் படவில்லை .
9.துரியோதனனாக நடித்த ஆதித்யா என்ற மாணவரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது .நடை ,முகபாவங்கள் என்று எல்லாமே அத்தனை அற்புதமாக இருந்தது .இந்த ஒரு மாணவரின் முன் மற்ற அனைவரின் நடிப்பும் மங்கலாக அதிகம் எடுபடவில்லை .
10.கதையில் வழக்கமான யுத்தத்தை காட்டாமல் ,பாத்திரங்களின் மனப் போக்கு ,ஆசைகள் ,ஈகோக்கள் என்ற அளவில் நாடகமாக்கியிருந்தது சிறப்பு .ஆனால் பார்க்க வந்திருந்த கூட்டத்தில் பலர் இளம் மாணவர்கள் (ஆரம்ப பள்ளி முதல் ).இவர்களுக்கு இது எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை .
11 .காட்சிகளை சிறிது நேர இடைவெளி கூட தெரியாமல் மாற்றினாலும் கொஞ்சம் அதிக நீளமாக இருந்தது போலிருந்தது .வசனங்கள் காரணமாக இருக்கலாம் .
12.நாடகம் முடிந்து அதில் நடித்த அத்தனை பெரும் மேடைக்கு வந்த போது தான் ,ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நாடகத்தில் நடித்திருப்பதே தெரிந்தது .

உழைப்பைக் கொட்டிக் கொடுத்து நாடகத்தை நேர்த்தியாக உண்டாக்கியிருக்கிறார்கள்.மகாபாரதத்தை கதையாக மட்டும் பார்க்காமல் அதை மனிதர்களின் பிரதிபலிப்பாக அலச முயன்றிருக்கிறார்கள் .இதிகாச கதைகளை வெறும் கதைகளாக இல்லாமல் அவை சொல்ல வந்த செய்திகளையும் கொண்டு சேர்க்கும் பணியில் இது ஒரு சிறப்பான முயற்சியாகும் .

(நாடகம் நேற்று 19 துவங்கி இந்த ஞாயிறு 22 வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் "செட்டிநாடு வித்தியாஷ்ரம்"பள்ளியின் ராஜா முத்தையா அரங்கத்தில்
தினம் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது )


No comments: