Wednesday, 26 December 2012

என் கனவு

 


 

என் கைகள் அகல  வீச 
அகல என் கைகள் வீசி 
சுழல,சுழன்று ஆட
வெயிலின் வெளியில் எங்கோ
வெள்ளைநாள் முடியும்  மட்டும்...
நெட்டை மரத்தின்  நிழலில்
குளிர் மாலை ஓய்ந்திருக்க
மெல்ல இரவு  வர
என்னை போலவே  கருப்பாய்
அது என் கனவு !


என் கைகள் அகல வீச 
சூரியன் முகத்தை நோக்கி..
ஆட,சுழல ,சுழல
விரையும் நாள் முடியும் மட்டும்
மங்கல்   மாலை ஓய்ந்திருக்க 
மெலிந்து வளர்ந்த ஒரு  மரம் 
மெள்ள இரவு  வர 
என்னை போலவே  கறுப்பாய் ....

 

Dream Variations

To fling my arms wide
In some place of the sun,
To whirl and to dance
Till the white day is done.
Then rest at cool evening
Beneath a tall tree
While night comes on gently,
Dark like me-
That is my dream!

To fling my arms wide
In the face of the sun,
Dance! Whirl! Whirl!
Till the quick day is done.
Rest at pale evening...
A tall, slim tree...
Night coming tenderly
Black like me.



Friday, 14 December 2012

என் ஊஞ்சல்







வானில் கயிறிட்டு
கட்டப்பட்டிருந்தது   ஊஞ்சல்
புன்னை மரக்கிளையில்
இளைப்பாறிய கயிற்றில்
சாக்குகள் போர்த்தி
என் ஊஞ்சலாக்கினார் அப்பா


அம்மா மடியிலோ 
அப்பா  தோளிலோ
மாமா கையிலோ
சிறு பிள்ளையாய் 
ஆடுவது  போன்றதாக இருந்தது
அவ்வூஞ்சல் ஆடுகையில்


தரையில் கால் தொட்டு
மேகம் மிதித்து
புன்னை இலைகளை அசைத்து
பறந்து போனேன் நான்
காற்றை போலவே
அங்கும் இங்கும் 


ஒரு விடுமுறை நாளின்
வெயிலிலும்  இரவிலும்
கட்டுட்டுண்டு கிடந்தேன்
ஊஞ்சலுடன்
கயிற்றைப்  போலவே ....
கயிற்றில் பிணைந்திருந்தன
பலரின் பொறாமைகளும்
ஏக்கங்களும்


கயிற்றின் கரம்பற்றி
நின்று ஆடினேன் 
வானம்  ஏகும் தேவதையென 
கயிற்றில் சாய்ந்து
கொலுவிருந்தேன்
நந்தவனத்து ராணியென


என்றோ ஏனோ
எப்பொருட்டோ 
எங்கோ போனது என் ஊஞ்சல்
எங்கென அவதானிக்கையில்
மீண்டும் தேவர்களிடத்து
சேர்ந்திருக்கக் கூடும் ....
விக்கிரமாதித்தன் சிம்மாசனம் போல்





Tuesday, 16 October 2012

ஹோட்டல் அறையில் ...








                                                             

என்றோ
கடந்த ஒரு பயணத்தில்
தங்க நேர்ந்தது  
அவ்வறையில்
 

நான்கு சுவர்களும்
பளீர் வர்ணங்களுமாக
வழமை போலவே 
இருந்தது அவ்வறை ...
இறகுகள்  தைத்த  தலையணையும்
மேகங்கள் பொதித்த மெத்தையும்
இடப்பட்டிருந்தது  வழமை போலவே ....


நான்  நுழைந்த 
ஒரு நொடியில்
வெளியேறிப் போனது
பிறருடைய தடங்களும்
அறையை நிரப்பியிருந்த
அவர்களின் மூச்சுக் காற்றும்


வெற்றாகிப்  போன
அவ்வறையில்
தேங்கிப் போயின
என் மூச்சும்
என் சிரிப்புகளும் 



சுவர்கள் எங்கும் பதிந்து கிடந்தன
என் கண்கள்
தலையணையில் சிக்கிக் கிடந்தன
சில கனவுகள்
தரையெங்கும் சிதறிக் கிடந்தன
சில விசும்பல்களும்
என்னின்  தலைமுடியும்  



பயணம் முடிந்த  ஒரு நாளில் 
ஏதும்  சொல்லாமல்
என் தடயங்கள் அழித்து
புறப்பட்டு வந்தேன் நான்


மறுநாளில்
எவருக்கோ சொந்தமாகியிருக்கும்
அவ்வறையும் 


அந்நாளில்
ஜன்னலில்
என் தலைகோதிய காற்று
சொல்லி போயிருக்கக் கூடும்
அவள்  இங்கிருந்தாளென ....



Wednesday, 26 September 2012

மழை

                                                            



தூர தேசமொன்றில்
தொலைந்து போயிருந்தேன் நான்
பெயர் அறியாத தெருக்களில்
உலவித் திரிந்தேன்


யார் இவள்  என
கிசுகிசுத்து  போனது காற்று
முகம் காண
வந்து போனதொரு மின்னல்


ஆதரவாய் கூந்தல் வருடிப்
போனதொரு மலர்
எவளோ  என கடந்து
போயினர் பலரும் 


யாரும்  இல்லாமல்
முகவரியற்று
நான் போன
அந்நாளில்


தேடி வந்து 
என் தோள் பற்றி
நானிருக்கிறேன் என
கரம் சேர்த்து 
என்னுடன் நடந்தது
மழை ......




Wednesday, 19 September 2012

தமிழ் அம்மா

சின்ன வகுப்பிலிருந்தே எனக்கும் என்னோட தமிழ் அம்மாக்களுக்கும் நல்ல ஒரு புரிந்துணர்வு இருந்துட்டே இருக்கும் .நல்லா படிக்கிற பட்டியல்ல இருந்ததும் ஒரு காரணமா இருக்கலாம் .எனக்கு  வெவரம் தெரிஞ்சு எனக்கு முதல் தமிழ் அம்மாவா இருந்தவங்க மிசஸ் .ராட்ஜெர்ஸ் (Mrs .Rodgers ).அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு மிசஸ் .சைமன் (Mrs .Simon ).


இவங்க ரெண்டு பேர் கிட்ட ஆனா  ஆவன்னா தொடங்கி சில பல திருக்குறள் எல்லாம் படிச்சு கொஞ்சம் தமிழ் சுமாரா எழுத ஆரம்பிச்ச காலத்துல (என்னோட ஆறாங்  கிளாசில ) எனக்கு தமிழ் அம்மாவா வந்தவங்க மிசஸ் .ரோசலின் ஜான்சன் (Mrs .Roselin Johnson )-இனிமேல் ரோசலின் மிஸ் .இவங்களும் அடுத்தடுத்த வகுப்புகள்ல எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த மிசஸ் .வசந்தா செல்லப்பா  (Mrs .Vasantha  Chellappa )-இனிமேல் செல்லப்பா மிஸ் ,இவங்க ரெண்டு  பேரும்   தான் என்னோட தமிழ் இன்னமும் அதிகம் மழுங்காம இருக்கக்  காரணம் .அதுல இருக்கிற தப்புகளுக்கும்  பொறுப்பு இவங்க ரெண்டே பேரு தான் .


இதுல முக்கியமா சொல்ல வேண்டியது ரெண்டு பேருக்கும் நேரெதிர் குணம் .செல்லப்பா மிஸ் பொறுமை, அமைதி ,புன்னகை .+இன்ன  பிற ..ரோசலின்  மிஸ் வேகம் ,பரபரப்பு ,சிரிப்பு +இன்ன பிற .பேச்சில மட்டுமில்ல நடை செயல்ன்னு எல்லாத்துலேயும் செல்லப்பா மிஸ் நிதானம்ன்னா  ரோசலின் மிஸ் வேகம் தான் .வேகத்திலேயும் மித வேகம் கிடையாது  மின்னல் வேகம் தான் .கர்ப்பாமாக இருக்கிறப்ப இவங்க நடக்கிற வேகத்த பாத்து நாங்க நெறைய நேரம் மூச்சடச்சு  போயிருக்கோம் .



சரி இப்படி டொண்ட டொய்ங் போட்டு நா எதுக்கு இந்த ப்ளாஷ் பேக் சொல்றேன்னு  கடுப்பாகறவங்களுக்கு  மேட்டருக்கு வரேன் .இப்ப கி பி  2012 செப்டம்பர் மாதத்துக்கு  வந்திருவோம்  .என்னோட முகநூல் (தமிழ் அம்மாவ பத்தி பேசும்  போது  தமிழ்ல பேசுவோம்ல ) அக்கவுண்டிலேயிருந்து  என்னோட +2 கணக்கு மிஸ்ஸோட  ஐடி கெடச்சுது .இவங்க Sports  Day  ன்னு  போட்டிருந்த போட்டோவில ஒரு ஓரமா டாக்   பண்ணி ரோசலின் மிஸ் .  இன்னொரு பக்கம் மல்லிகா  ஜான்சன் மிஸ் (அவங்கள பத்தி இன்னொரு சமயம் விவரமா பாக்கலாம்  ).அப்படியே ரோசலின் மிஸ்ஸுக்கு friend  request  போட்டா ,"குழலி ,கால் மீ "ன்னு படக்குனு வருது ஒரு மெசேஜ்,அவங்களோட சராசரி வேகத்துல .



நம்பர  குறிச்சிகிட்டு   டயல் செஞ்சு  ஹல்லோங்கறேன் ,"குழ...................லி "ன்னு ஒரு உற்சாகக் குரல்."அட ,எப்படி மிஸ் தெரியும்  ?""நீ பேசுவேன்னு தெரியும் .இன்னும் என்னைய ஞாபகம் வச்சிருக்கியே ."அட இருவது வருஷமும்  ஆயிரம் ஆயிரம் மாணவர்களுக்கு  அப்புறமும் இவங்க நம்மள நெனவு வச்சிருக்கிறத விடவா இது பெருசு ன்னு என் மனசு கேக்குது .அப்புறம் பழைய  கத புது கத எல்லாம் பேசி  முடிச்சப்புறம் சொல்றாங்க .ரெண்டு நாளைக்கு  முன்னால தான் இந்த அக்கவுன்ட்டே  ஆரம்பிச்சேன் ,என் மருமக சொன்னான்னு ..இன்னைக்கு ஒன்ன கண்டுபிடிச்சிட்டேன் .நானும் செல்லப்பா மிஸ்ஸும்  அப்பப்ப ஒன்ன  பத்தி பேசுவோம்.நாமெல்லாம் எப்படி கலகலப்பா சந்தோஷமா இருந்தோம் .இப்பல்லாம் அப்படி இல்லடா . இனிமே எனக்கு எப்ப மனசு  சங்கடமா இருந்தாலும் நா ஒங்கிட்ட பேசுவேன் .""நா சொன்னேன் நடு ராத்திரின்னா  கூட பேசுங்க மிஸ் ."என் செல்லமே,எனக்கு இன்னைக்கு  பசியும் எடுக்காது ,தூக்கமும் வராது   "ன்னு சொல்லி போன  வச்சாங்க.பேஸ்  புக்கில  "excited "ன்னு ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு  தூங்கப் போனேன்,நான் .


Sunday, 2 September 2012

மழை







வெயில் தகித்த ஒரு கடும்நாளில்
எதிரெதிராய்  வீதியில்
நானும் வெயிலும்


கண் எரித்து
முகம் கருக்கி
பாதம்  சுட்டு
எக்காளமாய்
என் தாடை சுடும்
பொல்லா வெயில்


கண் மறைத்து
நிலம் நோக்கி
வியர்வை குளித்து
தாகித்து   நான் ....
இன்னும்  கிட்டத்தில்
எனை சாடும் வெயில்


என் தவிப்புணர்ந்து
வந்து
சடசடவென பொரிந்து
வெயில் விரட்டி
வியர்வை களைந்து
சட்டென என் முகம் மறைக்கும்
குடையாய்
மழை



Saturday, 25 August 2012

மழை





இன்றிரவில் 
என் வாசல் வந்து நின்றது மழை
யாசிப்பதாய்  பாவித்து ....

காணாதது போல் நான் இருக்க 
படிதாண்டி மெல்ல 
கூடம்  தொட்டு 

என் வழியெங்கும் 
முத்துக்கள் 
கொட்டி 

செல்லமாய் 
சாளரம் வழியே 
என் கன்னம் வருடி 

ஏதோவென்று 
நான் இருக்க 

பொய்க் கோபத்தில் 
 படபடவென்று  
மொட்டை மாடி ஏறி 
என் துணிகள் நனைத்து 

துணி எடுக்க 
தவிப்புடன் நான் ஓட    
என் கரம் பற்றி  
ஹோவென சிரிக்கும் மழை ......  







இளவரசிகள் :விற்பனைக்கு .....


          


சிறிதும் பெரிதுமாக 
பலபல ஊர்கள் 
ஊரெங்கும் அரசர்கள் ...


ஓலை வீடுகளில் சிலரும்  
ஓட்டு வீடுகளில் சிலரும் 
மாடி வீடுகளில் சிலரும்
வீடுகள் தவிர்த்து சிலரும்  என 
தத்தம்  சாம்ராஜ்யங்களில் 
கோலோச்சி இருந்தார்கள் 


அவரவர் ராஜ்யத்தில் 
வந்துதித்தார்கள்  ராஜகுமாரிகள் 
அவரவருக்கு இடப்பட்ட தொட்டில்களில் 


பஞ்சில் சிலவும் 
பட்டில் சிலவும் 
இரு கைகள், சிறகுகள் என
அநேகமாயிருந்தன தொட்டில்களும் 
இத்தொட்டில்களை அலங்கரித்திருந்தனர் 
ராஜகுமாரிகள் 
பொன்னும் மணியும் அன்பும் உடுத்தி 


சிறுதேர்கள் உருட்டி நடைபயின்று 
அரசர்களின் கையில் நடந்து 
பட்டாம்  பூச்சிகளின் சிறகுகள் சுமந்து
பள்ளிக்கும் போனார்கள் 
பட்டங்களும் சட்டங்களும் 
வென்றே வந்தார்கள் 


வானவில் வண்ணங்கள் சூடி 
மழை நீர் முத்துக்கள் அணிந்து 
விண்மீன்கள்  ஆடைகளில்  உடுத்தி 
தேர்களில் பவனி வந்தார்கள் 
அரசிகளாகப் போகிறோம் 
என்ற மமதையுடன் 
  

காலம் விதித்த  ஒரு கரிநாளில் 
ராஜகுமாரிகளுக்கு ராஜகுமாரர்களை 
தேட போய் வந்த அரசர்கள் 
சாம்ராஜ்யங்கள் பறிக்கப்பட்டு 
சாமான்யர்களிலும் கீழென  சபிக்கப்பட... 
கனவுகள் அகற்றப்பட்டு 
இளவரசிகள்  விற்கப்படுகிறார்கள் 
சேடிப் பெண்களாக .....
















Wednesday, 22 August 2012

என் கனவுகள்





உயிர் களைந்து
இமை போர்த்தி 
உறங்கப் போகிறேன்  நான்
மூடிய கண்களுக்குள்
விழிக்கின்றன என் கனவுகள்


உறக்கத்தின் திறவுகோலிட்டு
திறந்துவிட
சிறகுணர்ந்த  பறவைகள் போல்
சிறு செருக்குடன்
பறந்து  கலைகின்றன  திசைக்கொன்றாய்  ....


எங்கோ என்றோ  எதுவோ என
இனம் புரியாதவையாக
ஏந்தி வருகின்றன எதையெதையோ
வகை பிரிக்காமல்
கொட்டி சேர்க்கின்றன சலிப்பின்றி


இதமாக  தலைகோதும்
தளிர் கை போலொன்றும் 
நறுக்கென்று கிள்ளும்
நகமென ஒன்றும்
கண்சிமிட்டி ஜாடை காட்டி
சிரிக்கின்றன என் கனவுகள்


தொலைந்து போனவை சிலவும்
அகலாதிருப்பவை சிலவும்
அருவருப்பானவை அழகானவை என
என் விடியா நீள் இரவுகளின்
விளக்குகள் என் கனவுகள்


விடியலில்
செல்ல கோபம் காட்டி
அடைய மறுக்கின்றன என் கனவுகள்
மீண்டும் பறக்கவிருப்பதாக
பாவித்து பாசாங்கு செய்கின்றன



மெல்ல கையிலேந்தி
வாஞ்சையாய் தலைகோதி
சிறகுகள் மடக்கி
தொட்டில்கள் இட்டு
உறங்கச் செய்கிறேன்


உறங்கப் போனதும்
இமை அகற்றி
உயிர் உடுத்தி
கண்விழிக்கிறேன்
எப்பொழுதும்  போலவே ...





Monday, 13 August 2012

பெண் +போலீஸ்

காவல்துறை   மக்களிடத்து தன்  நம்பிக்கையை இழந்து பல காலமாகிவிட்டது .முற்றிலும் பெண்காவலர்களால் ஆன
காவல் நிலையங்கள் நிறுவப்பட்ட  போது அவை பெரும் புரட்சியாக சித்தரிக்கப்பட்டன .அதுமட்டுமல்லாமல் பெண்கள் முன்னேற்றத்தில்  முக்கியமானதொரு மைல்கல்லாகவும்  ...

நான் அறிந்த சில  பெண் +காவலர்கள்  சார்ந்த  அனுபவங்களில் சில  இவை ..

1.இவரே பெண் காவலர்  .தெருவில் நடந்து கொண்டிருந்த  போது  இவரின் ஐந்து பவுன் சங்கிலி  திருட்டு போனது .மூன்று வருடங்கள் ஆகியும்   நகையையும்  மீட்க முடியவில்லை ,திருடனையும் பிடிக்க முடியவில்லை .அந்நேரம் கூட அந்த திருடனை விரட்டி சென்று இவர் பிடிக்க முயலவே இல்லை .அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாராம் ?!

2. இவரும்  பெண் காவலரே .உடல் நலக் குறைவுக்கென இவர் ஒய்வெடுக்க வேண்டிருக்க
தக்க சான்றிதழ்கள்  (எல்லாமே உண்மையானவை )முறையாக கொடுத்த பின்னும்   "லீவ் அப்ரூவல் " ஆக  தன் மேலதிகாரிகளுக்கு இவர் கொடுத்தது சில ஆயிரங்கள் ?!

3.தெரிந்த பெண்ணொருத்தி .குழந்தையில்லை என விவாகரத்து ஏதும் செய்யாமல் திருட்டுத்தனமாக  இன்னொரு திருமணம் செய்து  கொண்டான் கணவன் .இவளின் நகைகளையும் அடமானத்தில் வைத்து விட்டு .அதை மீட்டு தர பெண் காவல்  நிலையம்  சென்றவளால் சில  முறைக்கு மேல்  செல்ல முடியவில்லை .ஏன் என்று கேட்ட போது ,"போங்க மேடம் ,அங்க போயி நிக்குறதுக்கு என்  வீட்டுகாரரரு   கிட்டயே  கேட்டு வாங்கிறலாம் போலிருக்கு .எப்ப  போனாலும் காசு கேக்குராங்க .இல்லன்னா  சாப்பாடு  ஜூஸ் ன்னு ஏதாவது வாங்கிட்டு வர சொல்றாங்க .சாப்பாடு  நேரம்ன்னா பிரியாணி வாங்கித் தரனும் .செலவளிக்க முடியல ."

4.கணவனை இழந்த பெண் .கணவன் நோயுடன் கடனையும் வைத்துவிட்டு போக ஒரே மகளுக்கு மாமியார் சொத்தில் ஏதேனும் வாங்க போராடிக்   கொண்டிருக்கிறாள் .காவல் நிலையம் ,மாமியார் வீடு  என்று  மாறி மாறி அலைந்தவள்    சில நாளில் ஓய்ந்து போனாள் ."போ மேடம் ...ஒரொரு தடவையும்  மாமியார் கிட்ட  பேச காசு கேக்குறாங்க ..அந்த பக்கம்  மாமியார் கிட்ட காசு  வாங்குறாங்க .அந்தம்மா துட்டு வச்சிருக்கு .எங்கிட்ட என்ன இருக்கு ?ஒரேடியா என் மாமியார்  இது என் மகனுக்கே பொறந்ததில்லன்னு சொல்லிருச்சி .போலீசுல அம்பதாயிரம்  கேக்குறாங்க .சொத்தே அவ்வளவு தான் பெறும் . போகட்டும் விட்டுட்டேன் .விடு மேடம் ."

நீதி தேவதை புறக்கண் மட்டுமல்ல அகக்கண்ணும்  அறிவும்  கட்டப்பட்டே இருக்கிறாள்  ஊமையாக ...

Tuesday, 7 August 2012

மழை







வெகு நாட்களாக மறந்து போயிருந்தேன் 
மழையை நான் 

எங்கோ தூர தேசம் போயிருக்க வேண்டும் 
என்று எண்ணியிருந்தேன் ..

எவர் ஊர்களிலோ தன்னை  மறந்து 
அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் ..

வெறும்வானம் பரிகசித்த சில நாளில் 
கோபித்தே  இன்னமும்  மறந்து போனேன்  

நான் 
எனை  வெறுத்த ஒரு நாளில் 
செல்லமாய் 
என் தலை தட்டி 
கண் மூடி 
கன்னம் தொட்டு 
நான் 
என்றது  மழை  ..........









Tuesday, 31 July 2012

என் வெளி








ஒரு அண்டமெங்கும் விரிந்திருக்கிறது
என் வெளி
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம்
என ஐந்தும் சேர்த்து


சில காடுகள் மலைகள் சோலைகள் நீரோடைகள்
எனவும் பரவிக் கிடக்கிறது
என் வெளி
எங்கோ ஒரு பாலைவன மணல் பொட்டலும் சேர்த்து


தெளிந்த நீரோடைகளில்
நீந்திக் கிடக்கிறேன் நான்
காடுகள் தோறும் சுற்றித் திரிகிறேன்
சோலைகளில் மலர் கொய்து
சூட்டிக் களிக்கிறேன்
என் மனம் போல்


சிகரங்களில் ஏறி தொட்டுப் பார்க்கிறேன்
விண்ணைக்  கூட
நட்சத்திரங்களை பறித்து
ஓடைகளில் நனைக்கிறேன்
நீரெல்லாம் ஜொலிக்கின்றன
என் மீன்கள்



குயில்கள் கூவிக் கடக்கின்றன என்னை
மான்கள் கொஞ்சிப் போகின்றன
சில எருமைகளும் பாம்புகளும்
உரசிப் போகின்றன
அதனதன் விருப்பம் போல்



கீறும் சிறு முட்களும்
நாறும் சில குப்பைகளும்
குறுக்க  முடியாததாக இருக்கிறது என் வெளி
மலர்கள் சொரிந்து கிடக்கின்றன
என் பாதையெங்கும்
மகரந்த வாசம் ஏந்தி



எவரும்  தீண்ட  முடியாததாக
இருக்கிறது என் வெளி
எனதே எனதாக -
எவர்க்கும்  வசப்படாமல்
உலவித்  திரிகிறேன்-
நானோர்
வனதேவதையென











Tuesday, 12 June 2012

நதிக்கரையில்



இரவில் ,
சில நிலாக்கள் கொய்து
நகைக்கிறது நதி.

நிலாக்களை தேடி
நதியில் குதிக்கின்றன
விண்மீன்கள் .

விண்மீன்களை
ஒளித்தும் மறைத்தும்
விளையாடுகிறது நதி.

வானம் நீந்திகிடக்கிறது
நதியில்
எப்பொழுதும் .


விளையாட்டாய் மேனி நனைத்து சிறுவர்கள் 
அலசி செல்கிறார்கள் நதியில்
தத்தம் சிரிப்புகளை


சிரிப்புகளை   
சிதறவிட்டு
கலகலவென சிரிக்கிறது நதி .


காதலர்கள் ,
களவும் ஊடலும்
கரைத்து  நடக்கிறார்கள்  நதிக்கரையில்


அவர்கள் ரகசியம் உணர்ந்து
காலோரமாய்
கிசுகிசுக்கிறது நதி .


களைந்த இளமையை
சிலர் துழாவி ரசிக்கிறார்கள்  மணலில்.
பொக்கை  வாய்  திறந்து
பரிகாசம் செய்கிறது  நதி


நிழலும் நிஜமுமாக
வெவ்வேறு முகங்கள்  காட்டி
காலம் கடக்கிறது 
நதிக்கரையில்


எனினும்
சலனமின்றி
நதி ஓடிக் கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக....


Wednesday, 18 April 2012

சொல்வதற்கு ஒன்றுமில்லை

முப்பது ஆண்டுகள் சென்றும் கூட, எச் ஐ வியை பொறுத்தவரையில் மருத்துவர்களிடமும் மக்களிடமும் அதை குறித்த அச்சம் இன்னமும் விலகாமலேயே இருக்கிறது .சிலரோ இதை பயன்படுத்தி தவறான சிகிச்சைகள் அளித்து நோயாளிகளின் நிலைமையை இன்னமும் சிக்கலாக்குகிறார்கள் .இப்படி நோய் அதிகமாகியும் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருந்த மருந்துகள் சரியாக   பணிசெய்யாமலும் எங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் இவர்.


பரிசோதனைகள் செய்ததில் டிபியும் இருப்பது தெரியவர இரண்டாம் கட்ட மருந்துகள் ஆரம்பித்துவிட்டு டிபிக்கான சிகிச்சையும் ஆரம்பித்தோம்.உடல்நலம் நன்றாக தேறி பெரிய தொந்தரவுகள் ஏதும் இல்லாமலேயே இருந்தார் அவரும்.


இரண்டு மாதங்களுக்கு முன் அடிக்கடி தலைசுற்று ஏற்படுவதாக  சொல்லவே மூளைக்கு ஸ்கேன் எடுத்தோம் .இதில் கட்டி இருப்பது தெரியவந்தது .இதன் பிறகு ஆரம்பித்தது எல்லா தொந்தரவும் .சில மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தன .சில பல லட்சங்களில் பணம் கேட்டன .எதிர்பாராவிதமாக சென்னை பொது மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு ஏற்பாடானது .கட்டி அகற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் கேன்சர் கட்டி என்பது உறுதி ஆனது .இடைப்பட்ட காலத்தில் அவரின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது .


இன்று என்னை சந்திக்க வந்திருந்தார் அவரின் மனைவி .நான் நோயின் தீவிரத்தை சொல்லி விளங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன் ."ஆபரேஷனே செய்ய முடியாம இருந்ததே ,இப்ப செஞ்சுட்டோம் ,அதனால ஜெயிச்சிட்டோம்ன்னு நெனச்சேன் மேடம் ",என்று சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் இருந்தார் ."இனி நம்ம கையிலே எதுவுமே இல்லை " என்று மட்டும்  சொல்லிவிட்டு நானும் அமர்ந்திருந்தேன் .அமைதியாகவே இருந்தோம் இருவரும் கொஞ்ச நேரம் .


திடீரென்று பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்தார் .அதில் சில கம்மல்கள் ."அவருக்கு முடியாம போனதிலிருந்து செலவுக்கு வேணுமேன்னு இந்த இமிடேஷன் நகை வியாபாரம் செய்றேன் மேடம் .இதுல ஒங்களுக்கு பிடிச்ச ஒண்ணை எடுத்துக்கோங்க ."நான் சொல்வதறியாமல் திகைத்து போயிருந்தேன் ."வேண்டாம்மா "என்றேன் மெதுவாக .அந்த பெண் சொன்னார் ,"மேடம் ,எங்களுக்குன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சீங்க .ஒங்களுக்குன்னு முன்னவே ஒரு வளையல் எடுத்து வச்சேன் .அவருதான்  நீங்க போட மாட்டீங்கன்னு சொல்லிட்டார் .ஆனா அதுக்கப்புறம் நீங்க இத மாதிரி இமிடேஷன் நகை போடுறதை கவனிச்சேன் .இனிமே ஒங்கள பாக்க வருவேனோ என்னமோ ,இத ஒங்களுக்குன்னு பாத்து எடுத்துட்டு வந்தேன் .சங்கடப்படாம எடுத்துக்கோங்க மேடம் ."

Tuesday, 20 March 2012

கூடங்குளம்

கூடங்குளம் ,ஆறு மாதகாலமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டே தான் இருக்கிறது .அணு உலைகளுக்கு எதிரான மக்களின் குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது .


காரைக்குடி வரை வந்து ,சிதம்பரம் புகழ் பாடிச் சென்ற பிரதமருக்கு இந்த பிரச்சனை குறித்து வாய்திறக்க மாஸ்கோ போக வேண்டியிருந்தது .தன்  அமெரிக்க முதலாளிகளை குளிப்பாட்டி வைத்திருந்த பிரதமர் அன்று  மாஸ்கோவில் ,தனக்கு ரஷ்யாவிலும் முதலாளிகள் இருப்பதை வெளிப்படுத்தினார் .


மத்திய அமைச்சர் நாராயணசாமியோ ஏதோ கவுன்ட் டவுன் சொல்லிக் கொண்டே இருந்தார் .இறுதியில் இந்த விஷயத்தில் நேர்மையாக பேசியது இவர் ஒருவரே .


கூடங்குளம் பாதுகாப்பானது என்று ஒரு தரப்பும்  பாதுகாப்பில்லாதது என்று மறுதரப்பும் வாதிட்டுக் கொண்டே இருக்கின்றன .மக்கள் மத்தியில் இது குறித்து ஒரு தீர்க்கப்படாத அச்சம் இருந்துகொண்டே இருப்பதன் விளைவாக போராட்டங்கள்( ஆரம்ப காலங்களில் பெரும் ஊடக ஆதரவு கிடைக்காத போதும் )நடந்து கொண்டே இருக்கின்றன .இதில் ஏதும் வன்முறை நிகழ்ந்ததாக தெரியவில்லை .


இதில் முதல் வன்முறையாக அரசு வெளிநாட்டு ஆதரவு என்று பெரும் பூச்சாண்டி காட்டியது .இதுவரை அறியப்படாத  ? உண்மையாக தன்னார்வ நிறுவனங்களுக்கு பெரும் தொகை வருவதாக அரசு கூறியது.வெளிநாட்டு நிதியை பெறுவதற்கென்றே இங்கு பலர் தன்னார்வ நிறுவனங்களை பேப்பர் வரையிலேனும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதுவரை தெரிந்து கொள்ளாமலா இருந்தது இந்த அரசு ?

முதல்வரோ ஒரு அசாதாரண மின்வெட்டை அமல்படுத்தினார்  .பின்னர்  சாதகமாகவே அறிக்கை தர உருவாக்கப்பட்ட ஒரு குழுவை அமைத்து அதன் அறிக்கையை பெற்றுக் கொண்டார்  .ஒப்புக்கு ஆதரவாளர்களையும் சந்தித்தார் .இடைத் தேர்தல் வேலைக்கு  மொத்த மந்திரி சபையையும் அனுப்பிவிட்டு ,அது முடியும் வரை காத்திருந்தார்  .

இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே போராட்ட ஆதரவு குழுவினர் கைது செய்யப்படுகின்றனர் .அதைவிட கொடுங்கோன்மையாக சுற்றுவட்டார கிராமங்களில் 144  அமலாக்கப்படுகிறது .ஊரிலிருந்து வெளியேறும் வழிகள் சீல் வைக்கப்படுகின்றன .


முதல்வர் அவர்களே ,


1.உங்கள் குழு அறிக்கை தந்தபடி, அணு உலை பாதுகாப்பானது என்றால் அதை மக்களுக்கு எடுத்து சொல்லாமல் எதற்காக அடக்கு முறையை ஏவிவிட்டீர்கள் ?


2.மக்களை இது குறித்து சந்திக்க நீங்கள்  தொடர்ந்து  மறுப்பது ஏன் ?


3.போராட்டக் குழுவினரை கைது செய்தது கூட நியாயமில்லை என்றாலும் போர்க்களம் போல போலீசையும் ராணுவத்தையும் மக்களுக்கு எதிராக ஏன் குவித்தீர்கள் ?


4.விலைவாசி உயர்வை டிவியில் வந்து தேனை குழைத்து சொன்ன நீங்கள் இத்தனை பெரிய விஷயத்தில் மக்களுக்கு ஒரு வெறும் அறிக்கையுடன் ஏன் முடித்துக் கொண்டீர்கள் ?


5.உங்கள் குழுவினரின் அறிக்கை உங்களுக்கு சரியென தோன்றியிருந்தால் அதை சொல்ல சங்கரன்கோவில் தேர்தல் முடியும் வரை காத்திருந்தது எத்தனை மலின அரசியல் ?


6 .எதற்கு இழப்பீடு போல திடீரென இத்தனை கோடிகளை ஒதுக்கினீர்கள் ?நன்மை பயக்கும் ஒரு திட்டத்தின் பலனாளிகளுக்கு இவை எதற்காக ?


7.மக்களிடம் பேச தேவையில்லை என்ற அகங்காரத்தை உங்களுக்கு தொடர்ந்து தருவது யார் ?


8.மக்கள் ,வாழ்வு நிலை போராட்டம் போன்றதான ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது 500     கோடியை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் எங்கள் முதல்வரே ,பசியால் வாடிய தன் மக்களிடம் "EAT  CAKE " என்று சொன்ன பிரஞ்சு பேரரசி மேரி அன்டோனியெட்டுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? 

Wednesday, 7 March 2012

ராசா மகன்












பாராளும் பரம்பரைக்கு 

ஒருத்தனாக பொறந்த மகன்

ராசாத்தி ராசன் மகன்

மகராசன் கொள்ளுப்பேரன்


கன்னத்துல காத்து பட்டா 

கல்லு போல கன்னிப் போகும்

மேலுலத் தான் வெயிலு பட்டா

தோலெல்லாம்  வெடிச்சு  போகும் 



தங்க தட்டில் ரொட்டி தின்னு

நோட்டுல தான் கை தொடச்சி

பூ பாதம் நோகுமின்னு

கைமேல நடந்த தொர



அரண்மனை சொகத்த விட்டு

தெருவோட திரிஞ்சதென்ன

ஆளு சேன அம்பாரி

அத்துபுட்டு போனதென்ன   



உம்முன்னா ஓடி வர

நூறு பேரு இருக்கையில

வெறும் பய வீட்டிலெல்லாம்

சேவகம் தான் செஞ்சதென்ன



வகைக்கு ஒண்ணா தான்

சோறு பொங்கி கெடக்கையிலே

பட்டி தொட்டி பல திரிஞ்சி

பழைய கஞ்சி குடிச்சதென்ன



குடிசைக்கு தான் போனதென்ன

கடகண்ணி கண்டதென்ன

கண்ட பய தோள்மேல

கைபோட்டு நின்னதென்ன



ஆளில்லா சீமையில

அரசாள வந்த மகன்

மன்னரின்னு பட்டம் கட்டி

ஆள வந்த சீமதொர



செவத்த தோலு கருகருக்க

சேரிக்குள்ள போனதென்ன

சீமசென்ட் வாசன போய்

வியர்வ கண்ட கோலமென்ன




எடுபட்ட பயல்வளுக்கு

பெருமையெல்லாம் தெரியலையே

வீடு தேடி வந்து நின்ன

மவராசன் மனம் வெளங்கலியே



ஆகாச வெமானமெல்லாம்

வரிச கட்டி காத்திருக்க

அழுக்கான ரயில் ஏறி

போனபோதும் புரியலையே



கூட்டமா வந்து நின்னு

கூடித்தானே பாத்தாங்க

போட்டோவுல நெருக்கமாதான்

பல்லிளிச்சி நின்னாங்க



வீட்டுக்குள்ள வந்தப்ப 

கூழூத்த மறுக்கலையே 

கயத்து கட்டில் இழுத்துபோட்டு 

வீசி விட சொனங்கலையே 


வீடு வரை வந்தவுக 

வீதிவரை வாரலியே

வீதியில நின்னவுக 

பூத்து போயி சேரலையே 


போயி சேந்த பயலெல்லாம் 

மாத்தி போட்ட சோகமென்ன  

கஞ்சி ஊட்டி விட்டுபுட்டு

கைகழுவி போனதென்ன 


என்ன செஞ்சு என்ன செய்ய 

எங்க போயி சொல்லி அழ 

முச்சந்தியில் நிக்க வச்சு 

மூக்கறுத்தா ,எத சிந்த 



சொல்லி சொல்லி மாளலியே 

மனசு சொம எறங்கலியே 

மவராசன் அழகு மொகம்

காண மனம் பொறுக்கலியே 


சொரிஞ்சிவிட்ட முதுகெல்லாம் 

செரங்காத்தான் அப்பிடனும் 

கஞ்சி  போட்ட கைமொத்தம்  

வெளங்காம போயிரனும்


வோட்டு போட்ட பெரியவுக 

வேக்காட்டில் வெந்திடனும்

மாத்தி போட்ட மைனரெல்லாம் 

மக்கித் தான் போயிரனும் 


அரும தொர  மானமிப்ப 

கடசரக்கு ஆனதென்ன 

கண்ட பய பல்லுபட்டு 

பெரும கெட்டு போனதென்ன 


அழுதழுது  ஓஞ்சாலும்

போக வேற வழியுமில்ல 

அஞ்சு வருசம் ஆகும் முன்னே 

அங்க ஆள சாரமில்ல 


ஆத்தாளும்  அக்காளும்

அருமையான மச்சினரும்  

கண்ணுபட்டு வந்த  கொற 

காணாம போனதுன்னு 




மன்னருன்னு மகுடம் கட்டி 

அரசாள  பாத்திருங்க 

சீராக தோது செஞ்சி 


சிங்-காசனம் ஏத்திருங்க ....  







  


  








































Thursday, 2 February 2012

மழைப்பாடல்

மழை உங்களை முத்தமிடட்டும்
மழை உங்கள் நெற்றியில்
வெள்ளி நீர்த்துளிகள் கொண்டு தாளமிடட்டும்
மழை உங்களுக்கொரு தாலாட்டு பாடட்டும் .....
மழை நடைபாதைகளில் நடவா குளங்களை தேக்குகிறது
மழை சாக்கடைகளில் ஓடும் குளங்களை ஆக்குகிறது
மழை ,இரவில் ,எங்கள் கூரை மீட்டி
இனிய இரவுப் பாடலொன்றை இசைக்கிறது
அதோடு ,
மழையை நான் காதலிக்கிறேன்

 

 

April Rain Song

Langston Hughes

Let the rain kiss you
Let the rain beat upon your head with silver liquid drops
Let the rain sing you a lullaby
The rain makes still pools on the sidewalk
The rain makes running pools in the gutter
The rain plays a little sleep song on our roof at night
And I love the rain.

Tuesday, 17 January 2012

இளிப்புகள்

பல வேடதாரிகளின்
மேடையாக இருக்கிறது
காலம்
பல்லிளுப்புகளும் பாசாங்குகளும்
கடவு சீட்டாக
 
வசீகர இளிப்பு
ஒய்யார இளிப்பு
சொத்தை இளிப்பு என
வகைவகையாக கிடைக்கின்றன
இளிப்புகளும்
 
வசீகர இளிப்புகள்
ரசிக்கப்பட்டாலும்
வசப்படுத்துபவை என
அஞ்சப்படுகின்றன
 
 
ஒய்யார இளிப்புகள்
வகை அறியப்பட்டவுடன்
விலக்கப்படுகின்றன
பதில் இளிப்புகளுடன்
 
 
சொத்தை இளிப்புகள்
வேடிக்கை செய்யப்படுகின்றன
பொருட்டாகவே இல்லாதவை போல்
பாவிக்கப்படுகின்றன
 
 
ஆனாலும்
சொத்தை இளிப்புகள்
பெரும் மேடைகளில் வீற்றிருக்கின்றன
அலங்காரமாக .
 எது கருதியோ
இவை போதுமென்றே
ஏற்றிவைக்கிறார்கள்
மேடைக்கு உரியவர்களும்
 
 
தத்தம் பாசாங்குகள்
இவற்றினூடே பரிமளிக்கக்கூடும்
என்ற ஆவலினாலும்...
அவ்விளிப்புகளும்
இப்பாசாங்கு அறியாதது போல்
கொலுவிருக்கின்றன
வசீகரங்களுக்கான வெளியை
விழுங்கியபடி ,
 
என்றோ ஒரு மெய்நாளில்
இவ்விளிப்புகளை விலக்க நேரிடும் போது
மேடையும் காலமும்
இவற்றினுடையதென மாறியிருக்கின்றன
 
 
இம்மேடையில்
இனி ஒண்டவும் இடமில்லை என
தவிர்த்து ஒதுங்குகின்றன
பிற இளிப்புகளும் பாசாங்குகளும்
சாலையோரங்களில் அன்றாடம்
மண்டிக் கிடக்கின்றன  
நிராகரிப்புகளாக......