Friday, 2 January 2009

புத்தாண்டில் ....

புத்தாண்டில் எனக்கு வந்து நல்ல செய்தி இது .

என் நோயாளி இவர் .இவர் மனைவி (சொந்த அக்கா மகள் தான் )கோபித்துக் கொண்டு தன் மகனுடன் தன் அம்மா வீட்டில் வசித்து வந்தார் .மகள் தந்தையுடன் இருந்தாள் .அங்கிருந்து வழக்கு தொடர்ந்து தன் கணவர் பேரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார் .

பெண்கள் காவல் நிலையத்தில் வேறு சொல்லப் போக ,அவர்கள் இவரை அடித்த கொடுமையெல்லாம் நடந்தேறியது .இவர் காவல் நிலையத்தில் தனக்கு எச்.ஐ.வி இருப்பதை தெரிவிக்கவும் (நல்ல வேளையாக இவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நோய் இல்லை ) அவர்கள் இவர் மேல் பரிதாபப்பட்டு இவரை விடுவித்திருக்கிறார்கள் .இருவரையும் வைத்து அறிவுரைகளும் கூறியிருக்கிறார்கள் .இதற்கும் இவர் மனைவி அசையவில்லை .
வழக்கு விசாரணைக்கு வந்த போது இவர் வேறுவழியின்றி செலவு செய்து தனக்கென்று ஒரு வழக்கறிஞர் வைக்க வேண்டியதாயிற்று .


இது இவ்வாறு போய்க் கொண்டிருக்கையில் ,வீட்டிலும் சமாதான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன .இதனூடே இவர் மனைவியின் அண்ணனும் ,பிறரும் இவர் மனைவியையும் ,மகனையும் உதாசீனமாகவும் பாரமாகவும் குத்திக் காட்டிப் பேசவே மனமுடைந்த இவர் மனைவி ,வழக்கை திரும்ப பெறவும் இவருடன் மறுபடி சேர்ந்து வாழவும் முன் வந்தார் .ஆனால் வழக்கறிஞரோ ,ரூ.ஐந்தாயிரம் கொடுத்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று கூறிவிட்டார் .அன்றாடம் கூலி வேலை செய்யும் இவர் ,அந்த பணத்துக்கு எங்கே போவார் ?எங்கெங்கோ கடன் வாங்கி இரண்டாயிரம் கொடுத்த பின்னரே வழக்கு முடிவுக்கு வந்தது .

இன்று வழக்கம் போல் சிகிச்சைக்கு வந்த இவர் ,வந்து அமர்ந்த மறுநிமிடமே ,"சம்சாரம் வீட்டுக்கு வந்துட்டாங்கம்மா ,பையனை இந்த வருஷம் எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடத்திலே போடப் போறோம் .இப்ப கொஞ்சம் வேலை சரியா இல்லாததால ,பொங்கல் துணி கூட அப்புறம் பாத்துக்கலாம் ன்னு சொல்லிட்டா ...எனக்கு இன்னிக்கி சாப்பாடு கூட கட்டிக்
கொடுத்திருக்கா ..",என்றார் .நான் அவருக்கு சிகிச்சை செய்து வரும் இந்த இரண்டு ஆண்டுகளில் அவரை இத்தனை மகிழ்ச்சியாக நான் கண்டதில்லை .

இந்த புத்தாண்டு அவருக்கு இன்னமும் பல சந்தோஷங்களை கொண்டு சேர்க்கட்டும் .


6 comments:

ஆகாய நதி said...

நல்ல தொடக்கம் அவருக்கு :) புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்(நோயாளிகள்) :)

ஆர்.வேணுகோபாலன் said...

அந்த நல்ல மனிதர் நீண்ட ஆயுளும் நிறைந்த உடல்நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பல விவாகரத்து வழக்குகளின் லட்சணம் இதுதான்.


//...எனக்கு இன்னிக்கி சாப்பாடு கூட கட்டிக்
கொடுத்திருக்கா ..",என்றார்//

எவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார்..


காலம்தான் பல நோய்களைத்தீர்க்கிறது.

பூங்குழலி said...

நன்றி ஆகாயநதி

பூங்குழலி said...

நன்றி வேணு .

பூங்குழலி said...

காலம்தான் பல நோய்களைத்தீர்க்கிறது

ரொம்ப சரி SUREஷ்