Friday, 23 January 2009

பாவாடை தாவணியில் ....

ஒரு விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தேன் .ஒரு நாள் காலையில் பாட்டி வந்து ,"தங்கப்பாப்பாவுக்கு இன்னிக்கி சடங்கு ,வரியா ?"என்று கேட்டார் .நானும் போவதாக முடிவு செய்து கொண்டேன் .குளித்து கிளம்பும் முன் பாட்டியிடம் ,"நா சுரிதார் போட்டுக்கட்டுமா இல்லை தாவணி கட்டிக்கட்டுமா ?"என்று கேட்ட போது ,கொஞ்சம் யோசித்து விட்டு ,"தாவணி கட்டுளா "என்று சொல்லி விட்டார் .


தாவணி அதிகம் கட்டி எனக்கு பழக்கமில்லை என்று பாட்டிக்கும் தெரியும் எனக்கும் தெரியும் .அம்மாவும் முன்னெச்சரிக்கையாக ஒரு பட்டுப் பாவாடையும் தாவணியும் கொடுத்து அனுப்பியிருந்தார் .ஒரு வழியாக நீல நிறத்தில் பிங்க் கரை போட்ட பாவாடையையும் கரை நிறத்திலேயே தாவணி ரவிக்கையும் உடுத்தி கிளம்பியாகிவிட்டது .

அங்கு போன பின் சிறு வயதில் மட்டுமே என்னை பார்த்திருந்த பலர் என்னை வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர் .அதில் பெண்கள் எல்லாரும் பெண்ணுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த இடத்தில் இருந்தனர் .இதில் எனக்கு அங்கிருந்தவர்களில் அதிகம் பரீட்சையமான கனகவல்லி அக்கா ,"என்னப்பா ,தாவணியை திருப்பி கட்டியிருக்கியே ?,"என்று கேட்டார் .வெட்கமாக போய்விட்டது எனக்கு ."நா வேணா சரியா கட்டிவிடட்டுமா ?"என்றார் வாஞ்சையாக .

இதை கேட்டுக் கொண்டிருந்த பாட்டி சட்டென்று சொன்னார் ,'அது அவ பட்டணத்து ஸ்டைலுளா ,அது அப்படியே இருக்கட்டும் ".அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார் .நான் பதறிப் போய் ,"இல்ல அக்கா ,எனக்கு தாவணி ரொம்ப சரியா கட்டத் தெரியாது ",என்று வாக்குமூலம் கொடுத்ததும் என்னை தனியே அழைத்துப் போய் சரியாக கட்டி விட்டார்கள் .

எனக்கான பாட்டியின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தும் இப்போதும் .



No comments: