Wednesday 7 January 2009

நோய் முதல் நாடி ...

மருத்துவக் கல்லூரியில் ஐந்தாண்டுகளில் கற்பிக்க முடியாத பாடங்கள் பலவற்றை நோயாளிகள் சில நிமிடங்களில் கற்பித்து விடுவார்கள் .அப்படிதான் நடந்தது இன்றும் .


இந்த பெண்ணும் அவர் கணவரும் எச்.ஐ.வி யினால் பாதிக்கப் பட்டவர்கள் .இருவரும் ஆசிரியர்கள் .இவர் கணவர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விடவே ,தனது இருபத்து ஏழாம் வயதில் மூன்று வயது மகனுடன் விதவையானார்.இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த தன் தம்பியின் திருமணத்திற்கு ,நகைகள் மற்றும் நல்ல பட்டுப் புடவை கட்டிக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வந்தவரை ஊராரின் பேச்சுகள் மனநோயாளியாக்கியது .


சிகிச்சைக்கு பிறகு உடல் நலமும் மன நலமும் ஓரளவு தேறியது .இன்று வந்த போது இவர் தந்தை சொன்னார் ,"சாப்பாடு நேரா நேரத்திற்கு சாப்பிடுறதில்லை .வெறும் வயிற்றில் மாத்திரையை போட்டுக்கறா .எதுக்கெடுத்தாலும் கோவம் வேற .அந்த டாக்டரையும் (மன நல மருத்துவர் )பாக்க வரதில்லை ,"என்று .


அவர் மகளின் பதில் இது ."என்னைய எல்லாத்திலேயும் தனியாவே வைக்கிறாங்க .என் பாத்திரம் ,அத விளக்குற நாரு,படுக்கை எல்லாமே தனி தான் .நான் தொடுற பலகாரத்த யாரும் சாப்பிடுறதில்ல .ஒரு நாள் நா இட்லி துணியை அலசப் போக எங்கம்மா அத திரும்பவும் அலசினாங்க. நா எங்கப்பாவுக்கு இட்லி எடுத்து வைக்க போறேன்னு எங்கம்மா வேகமா வந்து அதிலே கரண்டியை போட்டாங்க .


எல்லாருக்கும் எங்க வீட்டில தனியா ரூம் இருக்கு ,நானும் என் மகனும் நடுவீட்டிலே தான் படுக்குறோம் .எங்களுக்குன்னு தனி அறை இல்லை .
நா குளிச்சிட்டு வந்தாலும் ,டாய்லெட் போய்ட்டு வந்தாலும் நா அந்த இடத்த டெட்டால் போட்டு கண்டிப்பா கழுவி விடனும் .


இப்ப எங்கக்கா ஆபரேஷன் பண்ணி வீட்டிலே இருக்காங்க .நா சமைக்கறது தெரிஞ்சா அவங்களும் எங்க மாமாவும் சாப்பிட மாட்டங்க ன்னு எங்கம்மா என்னைய சமைக்கவே விடுறதில்ல .இதுனால நா மத்தியானம் சாப்பாடே எடுத்துக்காம பள்ளிக்கூடம் போறேன் .


நானும் என் மகனும் தனியா எங்கையாவது வீடு எடுத்து தங்கிக்கறோம்னு சொன்னாலும் விட மாட்டேங்குறாங்க .என்னை இப்படி ஒண்ணா வச்சி நோயாளின்னு கஷ்டப்படுத்துறாங்க .என் மகன் மட்டும் இல்லைன்னா நா என்னைக்கோ செத்துப் போயிருப்பேன் .அவன் வந்து எங்கிட்ட கேக்கறான் ,ஏன் ஒனக்கு எல்லாமே தனியா இருக்குன்னு .


இதெல்லாம் மாறாம, நா எந்த வைத்தியம் பாத்து எனக்கு என்ன சரியாக போகுது ?"






1 comment:

shanevel said...

எயிட்ஸ் நோய் பற்றி புரிதலின்மை தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம், மருத்துவரான நீங்கள் அவங்களோட அப்பாவிற்கு எயிட்ஸ் பத்தி சொன்னீங்களா? இல்லையா? தனித்து விடறது ரொம்பவே கொடுமைங்க...