Saturday 14 November 2009

சில காயங்களின் கதை

காலையில நா கணினியில 8.30 க்கு பேர் போட்டாகனும் ,இல்லைனா சம்பளம், லீவ் ஏதாவது ஒண்ணுக்கு வேட்டு வச்சுருவாங்க எங்க எச்.ஆரில .நிகழும் விரோதி ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்து நாலாம் நாள் அதிகாலை மணி 8.20 இருக்கும் (எனக்கு அது அதிகாலை தான் )என் கணவரோட (எனக்கு வாங்கின ஸ்கூட்டி தான் நா ஒட்டாம அவரோடதாகிருச்சி ) ஸ்கூட்டியில அவர் ஓட்டிகிட்டு வர பின்னால நான் (வழக்கம் போல தான் ).சரியா ஆஸ்பத்திரி வாசலில எப்படி விழுந்தேன்னு தெரியல ஏன் விழுந்தேன்னு தெரியல .ஆனா விழுந்திட்டேன் .வண்டி என்னமோ மெதுவா தான் போய்க்கிட்டிருந்தது .அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல .


கண் முழிச்சி பாத்தா கட்டிலில படுத்திருக்கேன் ."நா எங்க இருக்கேன்"ன்னு கேக்க முடியல .ஏன்னா நல்லா தெரிஞ்ச எடம் ஆச்சே . என்னைய சுத்தி டாக்டர் ,எங்க நர்ஸ் ,எங்க கவுன்சிலர் ன்னு ஏகப்பட்ட கூட்டம் .எல்லாரும் அழற நெலமையில நின்னுக்கிட்டிருந்தாங்க (இத்தன அன்பா எம்மேல ன்னு எனக்கு தெரிய வச்ச இறைவனுக்கு நன்றி .ம்ம்ம்ம்....கொஞ்சம் மிதமான முறையில தெரிய வச்சிருக்கலாம் ).டிரசெல்லாம் ரத்தம் .முடியெல்லாம் ரத்தம் .மொகத்திலிருந்து வேற வழிஞ்சிக்கிட்டுருந்தது .காதுல வேற யாரோ ஆட்டோ ஓட்டுற மாதிரி ஒரு வலி .
பின்னணியில ரெண்டு கொரல் கேட்டது .ஒண்ணு என் கணவரோடது .அவர்கிட்ட அங்கே இருக்க டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார் ...."பிரெய்ன் சி.டி ஸ்கேன் எடுக்கணும் தையல் போடனும் ".
என் கணவர் ,"இன்சூரன்ஸ் இருக்கு .
"டாக்டர்:"அப்ப மலருக்கு ஷிப்ட் பண்ணிரலாம் "
கணவர் ""சரி "
இப்ப இப்ப, இந்த முக்கியமான நேரத்தில தான் எனக்கு முழுசா சுய நினைவு வந்திச்சி (இறைவனுக்கு நன்றி )
நான் :"நா அப்போல்லோவுக்கு போறேன் .அங்க என் பிரதர் இன் லா (அக்கா கணவர் )இருக்கார் (மொகத்தில அடி பட்டிருக்கு .கொஞ்சம் அங்கங்கே கிழிஞ்சிருக்கு .இவங்கள விட்டா மொகத்தில டிராக் போட்டுருவாங்க .அப்பல்லோ பணம் வாங்கினாலும் பிளாஸ்டிக் சர்ஜன் வச்சி தையல் போடுவாங்க ன்னு தான் .அம்மாவுக்கும் வரது சுலபம் . )
டாக்டர்: "ஓகே "டிடி எல்லாம் போட்டுருங்க .

அதுக்குள்ளே எங்க ஸ்டாப் எல்லாரும் வந்துட்டாங்க .ஜே ஜே ன்னு கூட்டம் .அதுக்கு அடுத்தது என்னோட தோழி கம் என்கூட வேல பாக்குற டாக்டர் அவங்களும் வந்தாங்க .அவள பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி .என்னனாலும் மொகத்தில அடி இல்லையா ,அதான். ஊசி போடவே அரைமணி நேரம் ஆச்சு (பேஷண்ட்ஸ் பாவம் ).அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் வந்திருச்சி..வீல் சேருல வந்து ஆம்புலன்சில ஏற வெளிய வந்தா அங்க ஒரு கூட்டம் நிக்குது (எங்க மக்கள் தான்-வெளியாட்கள் காஷுவாலிடியில ஏதோ மீட்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருப்பாங்க இல்லன்னா ஏதோ வி ஐ பி போலிருக்குன்னாவது ) .எல்லாரும் என்னையே டென்ஷனா பாத்திட்டிருந்தாங்க .

ஆம்புலன்சில ரெண்டு சிஸ்டர்ஸ் (அக்கா தங்கை இல்லீங்க )வந்தாங்க என் கூட .அவங்களும் வழியற ரத்தத்த பயந்து போயி பாத்திட்டிருந்தாங்க . அங்கிருந்து என் தம்பிக்கு போன் போட்டேன் .வந்து சேருன்னு .(வீட்டம்மாகிட்ட உத்தரவு வாங்கணுமே )ஒரு வழியா அப்பல்லோ வந்து சேர்ந்தேன் (ஆம்புலன்சில வந்தது கொஞ்சம் தமாஷாவே இருந்தது ).

நா வரும் போதே எங்கம்மாவும் என் தம்பியும் இருந்தாங்க .காயத்த பாத்து பயந்து போயிட்டாங்க .தாங்க மாட்டாருன்னு வீட்டிலேயே எங்கப்பாவ விட்டுட்டு வந்திட்டாங்க . எங்கம்மா கொஞ்சம் தைரியமானவுங்க .என் தம்பி மொகத்தில டென்ஷன பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி (ஷேம் ஷேம் பப்பி ஷேம்).உடனே முதலுதவி எல்லாம் செஞ்சாங்க .ஸ்கேனுக்கு அனுப்புனாங்க .அதோட மொகத்துக்கு ஒரு த்ரீ டி ஸ்கேனும் எடுத்தாங்க (அப்பல்லோன்னா சும்மாவா ).ஸ்கேன்ல ஒண்ணும் இல்ல.(மூளையாவது இருக்காமா ன்னு கேட்டான் என் தம்பி )

கொஞ்ச நேரம் கழிச்சு பிளாஸ்டிக் சர்ஜன் வந்தாரு .அழகா இன்னொருத்தருக்கு பாடம் எடுத்துகிட்டே தையல் போட்டாரு (படுத்திருந்த டெக்ஸ்ட் புக் - நான் ). நெத்தியில ,மூக்கில ,உதட்டுல ,மோவாயில ன்னு வரிசையா .மொகத்த நல்லா தரையில தேச்சிருப்பேன் போல .எல்லாம் போட்டுட்டு வலிக்கு ஊசியும் போட்டுட்டு ...நல்லா இருக்குன்னு (அவர் போட்ட தையல் தான்)சொல்லிட்டு போனார் அவர் .ஒரு நாள் அங்க இருந்திட்டு (இல்லைனா சொத்தை எழுதி வைக்கனுமே ) வீட்டுக்கு வந்திட்டேன் .

ஒரு வாரம் சென்று திடீருன்னு ஒரே தலை சுத்து ,வாந்தி ,மயக்கம் .உக்காந்தா எந்திரிக்க சொல்லுது எந்திரிச்சா உக்கார சொல்லுது . மறுபடியும் அதே அப்பல்லோ .முதல்ல இ.என் டி டாக்டர் ,அப்புறம் ந்யூரோ சர்ஜன் (மூளையில ஏதாவது லேட் ரத்தக் கட்டு இருக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க ).அவர் தான் கூலா பாத்திட்டு ...இது அடிபட்டா சகஜம் தான் .மூளையில ஒண்ணும் தொந்தரவு இல்லன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வச்சாரு .அதுக்கப்புறம் ஒரு நாலு நாள் கழிச்சு அது சரியா போச்சு (அது வரைக்கும் அப்பாடி ....சோதனை மேல் சோதனை பாட்டு தான் எம்மனசுல ரீவைன்ட் ஆகி ஆகி ஓடிகிட்டிருந்துது ---மன்னிச்சிக்கோங்க வாத்தியாரே ..ஒங்க பாட்டு எதுவும் அப்ப ஞாபகம் வரல-எப்படி வரும் ?நீங்க தான் இப்படி பிழிய பிழிய சோகப் பாட்டெல்லாம் பாடிப் படுத்த மாட்டீங்களே )


பின்குறிப்பு :இப்ப நல்லா இருக்கேன் .என்ன, வாயில தையல் போட்ட இடம் கொஞ்சம் வீங்கிப் போயிருக்கு .பேச முடியல சரியா .இன்னும் கொஞ்ச நாள் ஆகும் போல .ஒரு பல்லு கொஞ்சம் ஒடஞ்சிருக்கு .வாய தொறந்தா வலிக்குது (எங்க தாத்தா என்ன பேசாமடந்தை ன்னு கூப்பிடுவாரு -நா வளவள ன்னு பேசுவேன்னு -இப்ப நிஜ பேசாமடந்தை ஆகிட்டேன் )மொகத்தில தையல் போட்ட தழும்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு (என் தோழி சொன்னா திருநீறு அலர்ஜி ஆனா மாதிரி இருக்குன்னு சொன்னா --அப்ப மூக்கில ...சரி வரிசையா கோடு --தலையெழுத்த எழுதும் போது இங்க் லீக் ஆனா மாதிரி - நாளடைவில சரியாயிடும் )

எல்லாரும் திருஷ்டின்னு ஆளுக்கொரு பரிகாரம் சொல்ல, எங்கம்மா (காக்கைக்கும் ......) துர்க்கைக்கு எலுமிச்சைபழம் குத்தினாங்க ....அப்புறம் விழுந்த எடத்தில இப்ப யாரையாவது வச்சி எலுமிச்சை சுத்தி போடணுமாம் .அப்புறம் இன்னும் என்னென்ன சொல்லப் போறாங்களோ தெரியல ...


12 comments:

சந்தனமுல்லை said...

ஓ..சாரி..:(( ...வருத்தமாக இருக்கிறது..பூங்குழலி...!! ஆலடிப்பட்டி போஸ்ட் காணோமே என்று நினைத்தேன்...ஆனால் இப்படி ஏதாவது இருக்குமென்று நினைக்கவில்லை....ஏன்..இந்த போஸ்டை பாதி படித்துக்கொண்டிருக்கும் போது கூட ஏதோ புனைவு போல என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.

பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்...

பூங்குழலி said...

கண்டிப்பாக பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் சந்தனமுல்லை .உங்கள் அன்பிற்கு நன்றி

பாலகுமார் said...

சீக்கிரம் குணமடைய என்னுடைய பிராத்தனைகள்... டேக் கேர்.

Dr.Rudhran said...

have a speedy recovery. i like your approach to pain.

பூங்குழலி said...

மிக்க நன்றி டாக்டர்.ருத்ரன் ..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

பூங்குழலி said...

மிக்க நன்றி பாலகுமார்

மாதேவி said...

கவலையாக இருக்கிறது.விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

பூங்குழலி said...

நன்றி மாதேவி

தருமி said...

get well soon

பூங்குழலி said...

நன்றி தருமி

திருவாரூர் சரவணா said...

விரைவில் பூரணமாக குணமடைய ஆசிகள்.

பூங்குழலி said...

பூரணமா குணமாயாச்சு ...உங்கள் ஆசிகளுக்கு நன்றி