Friday, 30 December 2011

மீண்டும் மழை

மழை வெறித்திருந்த  சில நாளில்
சில்லென்றே  இருந்தது   வானம்
தாகம் தணியாமல்
அலைந்து கொண்டிருந்தன  தெருக்கள்
எங்கோ ஒளிந்திருந்தன  
பெரும் திரளான மேகங்கள்
சிறகுலர்த்திக் கொண்டன  
காகங்கள்,
வாடிப்போயிருந்தோம்
நானும் செடிகளும் ......
வானம் பார்த்தே காத்துக் கிடந்தோம்
சில சாபங்கள் சொல்லி .
மனமுணர்ந்து
என் முகம் துடைத்து
நான் பெய்யென பெய்தது
மாமழை ......
படம் :நன்றி Google images

Friday, 9 December 2011

முத்துப்பகடை

அப்பா ,அப்பாவிற்கு இரண்டு அண்ணன்கள் .எங்கள் அப்பாவிற்கு நான் ,என் இரண்டு பெரியப்பாக்களுக்கும் ஆளுக்கொரு பெண்ணாக ,நாங்கள் மூவர் . எங்கள் வீட்டு பெண்களுக்கு ஆளுக்கொரு விதமாக பிரச்சனை வந்து போக ,இதற்கெல்லாம் காரணம் தேட புறப்பட்ட என் அக்கா தோண்டிக் கொண்டு வந்து சேர்த்தது தான் இந்த முத்துப்பகடை கதை .


சரி யாரிந்த முத்துப்பகடை ?


இதை அறிய நாம் சில நூற்றாண்டுகள் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது .எங்கள் குடும்ப மூதாதையர் ,ஆலடிப்பட்டிக்கு வரும் முன், திருச்செந்தூர் அருகே ஒரு ஊரில் குடியிருந்தார்களாம் .யாருக்கும் அகப்படாத பெரும் புதையல் ஒன்று இருப்பதாக யாரோ புரளியையும் பேராசையையும் கிளப்பிவிட பெரும் மகான்களாக இல்லாத என் முன்னோர் அதை அடையும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் .புதையலை எடுக்கும் முன் பலி கொடுக்க வேண்டும் என்ற சடங்கிற்கு ஏற்ப, பலி கொடுக்க ஆள் தேடி ,நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துப்பகடை என்ற தாழ்த்தப்பட்ட குலத்து பெண்ணை பலியிட்டிருக்கிறார்கள் .இதை தொடர்ந்து ஊரில் கலவரம் ,தீவைப்பு என்று நிலைமை கைமீற ,தப்பியோடியவர்கள் வந்து சேர்ந்த இடம் தான் ஆலடிப்பட்டியாம் .



ஆனால், அநியாயமாக கொலை செய்யப்பட்ட  முத்துப்பகடை இட்ட சாபம், பூசாரி குடும்ப பெண்களான எங்களை ஏழு தலைமுறையாக தொடர்கிறதாம் .நானும் என் அக்காக்களும் ஏழாவது தலைமுறை .இனி வரும் தலைமுறை பெண்களுக்கு இந்த சாபம் இல்லை.இந்த துப்பு துலக்கலை தொடர்ந்து இந்த ஊரில் இருக்கும் கோவில் எங்கள் பூர்வீக குலதெய்வ கோவில் என்பதாக அறிவிக்கப்பட்டு எல்லோரும் அங்கு படையெடுப்பது வழக்கமாகி இருக்கிறது .



இங்கு கோவிலுக்கு வெளியே முத்துப்பகடைக்கென ஒரு சின்ன கோவில் போல இருக்கிறது ,அருகில் ஒரு கிணறும் .இங்கு தான் தப்பியோடும் முன் முத்துப்பகடையின் உடல் போடப்பட்டதாம் .
இந்த கதையை வருவோர் போவோருக்கு சொல்லி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் அந்த கோவிலின் பூசாரி .



எங்கள் குடும்பத்து பெண்கள் முத்துப்பகடையை கண்டிப்பாக வணங்க வேண்டுமென்றும் வலியுறுத்தி சொன்னார் .வளையல் ,புடவை போன்றவற்றை படைத்து வழிபடலாமாம் .ஆனால் சாதாரண நூல் புடவை தான் படைக்க வேண்டுமாம் .பட்டுப்புடவை சாமிக்கு மட்டுமானதாம் .பட்டைப் படைத்துவிட்டால் முத்துப்பகடையும் சாமியாக உயர்ந்துவிடுவார் என்பதால் பட்டு மட்டும் கூடவே கூடாதாம் .


தலைமுறைகள் தாண்டியும் சாபங்கள் இட்டும் முத்துப்பகடையின் தீண்டாமை தொடர்கிறது .....



(நன்றி :என் அப்பா எழுதிய  "ஆலடி கண்ட கற்பகசித்தர் " )

Friday, 25 November 2011

மழை






ஏதுமில்லா வெறும் வானம்
உற்றுப்பார்க்க ஒன்றுமில்லாமல் ...
எங்கோ கைகாட்டும் சில நட்சத்திரங்கள்
அரை மனதாய் நிலா
கால் நீட்ட நாற்காலி
பிசுபிசுத்த செய்திகள்
போகாத பொழுது
ருசிக்காத உணவு
செய்ய ஏதுமில்லா அந்த
வெற்று பொழுதில்
எங்கிருந்தோ ......
வானம் பிரட்டி
கருமை பூசி
மேகம் நிறைத்து
என் உயிர் எழுப்பி
நா நனைத்து
தேனென இனித்தது மழை

Tuesday, 22 November 2011

பாடகனின் பாடல்

என் வாய் சிரிப்பில்  
விரிந்திருப்பதால்
என் தொண்டை பாடலில்
ஆழ்ந்திருப்பதால்
இத்தனை காலமும்
வலி பற்றிக்கிடந்த பின்
நான் வருந்தவில்லை
என  நீ எண்ணிவிட்டாயா ...


என் வாய் சிரிப்பில்
விரிந்திருப்பதால்
என் உள்ளத்தின் குரல்
உனக்கு கேட்கவில்லையா ?
என் கால்கள் ஆட்டத்தில்
மகிழ்ந்திருப்பதால்
நான் இறந்து கொண்டிருப்பது
உனக்கு தெரியவில்லையா ?

Minstrel Man  By Langston Hughes
Because my mouth
Is wide with laughter
And my throat
Is deep with song,
You do not think
I suffer after
I have held my pain
So long?

Because my mouth
Is wide with laughter,
You do not hear
My inner cry?
Because my feet
Are gay with dancing,
You do not know
I die?

Monday, 7 November 2011

ஏன் பெண்ணென்று ?

இந்த பெண்ணை நான் சில வருடங்களாக அறிவேன் .பொலிவுடன் அழகாக இருக்கும் பெண் வரவர அழகு குறைந்தும் மெலிந்தும் படபடப்பாகவும் காணப்பட்டாள் .இந்த முறை வந்த போது ,"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?ஏதாவது பிரச்சனையா ?"என்று கேட்டவுடன் ஒரு சிரிப்பு .எதைக் கேட்டாலும் அதே சிரிப்பு .


பரிசோதனைகள் எல்லாம் முடித்துவிட்டு ,மறுபடியும் ,"உடம்பு மெலிஞ்சிக்கிட்டே போகுது ,எதைக் கேட்டாலும்   கெக்கபிக்கேன்னு  ஒரு வெத்துச் சிரிப்பு வேற ?என்னதான் பிரச்சனை ?இஷ்டமில்லேன்னா சொல்லவேணாம்  " என்று சொன்னவுடன் ஆரம்பித்தாள் .


"இவருக்கு நா யார்கிட்டயாவது எங்களுக்கு நோய் இருக்குதுன்னு சொல்லிடுவேன்ன்னு பயம் .அதனாலே என்னைய யார்கிட்டயும் பேசவே விடமாட்டார் .இவர் வெளியே போனவுடனே கதவ சாத்துனா  இவரு ராத்திரி வரும் போது தான் தொறக்கணும் .எதுனாலும் அவங்க அம்மா ,சொல்றபடித்தான் கேட்பார் .அவரு ஒடம்புக்கு ஏதாவதுன்னா ஒடனே ஆஸ்பத்திரில போயி பார்த்து சரி பண்ணிக்குவார் .எனக்குன்னா அவங்க அம்மா சொன்னாதான் கூட்டிட்டு போவார் .அவங்க அம்மாவும் பாதி நேரம் கஷாயம் வச்சி குடின்னு சொல்லிருவாங்க ."


"எங்கம்மா வீடு ரெண்டு மணிநேரம் தூரம் தான் .நான் போயி மூணு மாசம் ஆகுது .எங்கம்மாவும் எங்க தாத்தாவும் தனியா இருக்காங்க .எங்கம்மா எங்க வீட்டுக்கு வந்தா கூட இவரு இல்லைன்னா இவங்க அம்மா முன்னாடி தான் பேசணும் .அவங்களையும் சாயங்காலம் அனுப்பிடுவாங்க ."


"இவங்க அக்காவுக்கு பைக் வாங்கி கொடுத்திருக்காரு .எனக்கும் வாங்கி கொண்டுங்கன்னா ,நீ ஊர் சுத்தனும்மான்னு கேக்குறாரு .அவங்க அக்கா பைக்குல நா ஓட்டி பழகிருவேன்னு அத வீட்டுக்கு கொண்டுவர விடுறதில்ல .வீட்டிலேயிருந்த பழைய ஸ்கூட்டியையும்  அங்கே கொண்டு  போய்  விட்டுட்டாரு ."

"என்னைய வேலைக்கு அனுப்புங்க ன்னு சொன்னா .அதெல்லாம் எனக்கு சரியா வராது ன்னு சொல்றாரு .
எங்க  மாமியாரும் கூட அதிசயமா வேலைக்கு அனுப்புன்னு சொல்லிட்டாங்க .ஆனா இவரு டி வியை பாத்துட்டு படுத்து தூங்கிட்டு வீட்டிலேயே கெடன்னு  சொல்றாரு ."


"இத்தனை  வருஷத்துல எனக்கு என்ன பிடிக்கும்ன்னு கூட அவருக்கு தெரியாது ."


"அம்மா வீட்லேயும்  எதுவும் கேக்க பயப்படுறாங்க .நா கல்யாணம் ஆகாமலேயே இருந்திருக்கலாம் .கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பிள்ளையும் பெத்துட்டு நாலு வருஷமா நரகத்தில இருக்கேன் ."


"இப்பக் கூட நா வெளியே போன  ஒடனே என்னடி அவ்வளவு நேரம் பேச்சு ன்னு வீட்டுக்கு போறவரைக்கும் கேட்டுக்கிட்டே இருப்பாரு ,"என்றார் அழுதுகொண்டே .

 



Friday, 4 November 2011

மழை

                                      
                                                                         
வெயில் களவாடிப்  போயிருந்தது
என் மழையை .....
மேகங்களுள்
அதை பதுக்கி வைத்திருக்கக் கூடும்
ஒருவேளை மலைகளின்
பின்னால் கூட ....




காண சகியாமல்
கண்மூடி பயணிக்கிறேன்
என்னைப் பார்த்து
எக்காளமாய் சிரிக்கிறது வெயில்
எங்கென தேடுவாய் என
ஏளனம் செய்கிறது

மலை ஏற முடியாமல்
மேகம் எட்ட வழியின்றி
மின்னல் வரும் திசை பார்த்து
காத்துக் கிடக்கிறேன்
ஒரு துளியேனும் ... என
ஏக்கம் சுமக்கிறேன்

எவர் சொல்லி தெரிந்ததோ...
என் குறிப்புணர்ந்து
இடியால் மேகம் இளக்கி
என் கைப்பற்றி
பெரும் பிரவாகமாய்
பொழிந்தது
என் பூமியெங்கும் மழை....

Monday, 31 October 2011

மழை

                                                              





இந்நாளில் ,
என்னுடன் கண்ணாமூச்சி
விளையாடுகிறது மழை
மேகங்களுள் ஒளிவதும்
வெளியே தெரிவதுமாக ...

மின்னலென சிரித்து
பரிகாசம் செய்கிறது
வானவில்லை அழித்துவிட்டு
அழுவதாக நடிக்கிறது

குடைக்குள் ஒளிவதும்
வெளியே வருவதுமாக
கண்ணாமூச்சி விளையாடுகிறேன்
மழையுடன் நானும்

நான் ஏமாந்த
பொழுதொன்றில்
ஹோவென சிரித்து
என்னை இறுகப் பிடித்தது மழை

சினந்ததாய் போக்குக் காட்டி
சிலிர்த்து நனைகிறேன்
கால்வரை கிச்சலம் காட்டி
கண்ணைக் கட்டுகிறது

"மழை பொழிந்து கொண்டே இருக்கும்"
எங்கோ பாடுகிறது
எவரின் வானொலியோ ..
உடல் ?
அட ,நனைந்து கொண்டே தான் இருக்கட்டுமே !



படத்திற்கு நன்றி :http://photobucket.com/images/girl+in+rain/

Tuesday, 25 October 2011

மழை








உரத்த குரலில்
என்னை அழைக்கிறது மழை
சின்ன தூறலாய்
சிணுங்கிப் பார்த்து  
பெரும் துளியாய்
செல்ல சண்டை செய்து
பெரிய மழையாய்
இப்போது
கோபம் காட்டுகிறது .

எது செய்வதென்று தெரியாமல்
தவிக்கிறேன் நான் ...
கதவடைத்து காது பொத்தி
காணாதது போலிருக்கிறேன்
ஜன்னலில் ஆங்காரமாய்
அடிக்கிறது மழை .
தேநீர் கோப்பையுடன்
கவனியாதது போலிருக்கிறேன்
படி தாண்டி வருவேனென
அழிச்சாட்டியம் செய்கிறது.

உரத்த குரலில் அழைத்தபடியே
இன்னமும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை .
இனி தவிர்க்க முடியாதென
கதவை திறந்து
தெருவில் வந்து
தயக்கமாய் கால் நனைக்கிறேன்
ஜில்லென பாய்ந்து
என்னை ஆலிங்கனம் செய்து
உச்சி முகர்ந்தது  மழை ....




படத்திற்கு நன்றி :http://www.ghulmil.com/latest-animated-fantasy-wallpapers/animated-3d-girl-in-rain-wallpaper/

Sunday, 9 October 2011

ஆலோசனை


நன்கு பரிச்சயமான நோயாளி தான் .தொடர்ந்து சிகிச்சைக்கு வருபவர் .மாத்திரைகளை சமீபத்தில் மாற்றியிருந்தேன் .

உடல் நலம் பற்றி பேசிக் கொண்டே இருக்கையில் ,"எனக்கு வரவர அதிகமா கோவம் வருது .வீட்டிலேயும் எங்கிட்ட வேல பாக்கிறவங்க கிட்டேயும் ரொம்பவே கோபப்படுறேன் .யாராவது நா சொன்னத சொன்னபடி செய்யலைன்னா நெறைய கோவம் வருது .இது புது மாத்திரையாலா ?எப்படி இந்த கோவத்த கொறைக்கலாம்  ? "என்றவுடன்  ." யார்கிட்டயாவது அடி வாங்கினா கோவம் தானா கொறையும் "என்றேன் விளையாட்டாக .


கண்ணில் நீர் வரும்வரை சிரித்தவர் ,"நா சாவற வரைக்கும் இத மறக்க மாட்டேன் "என்று சொல்லிவிட்டு போனார் .

Wednesday, 5 October 2011

என் மௌனம்








சொற்களால் நிரம்பியிருக்கின்றன

என் மௌனங்கள்

சொற்கள் தவிர்த்து

சில புன்னகைகளும்

கேலி சிரிப்புகளும் கோபங்களாலும் கூட




பல நேரங்களில்

பல்லிடுக்குகளில் வழியே

மௌனம் தப்பி

வெளியேறுகின்றன சொற்கள் .



சில இக்கட்டுகளில்

பயந்தோடும் சொற்கள்

தொண்டைக்குழியில் பதுங்கி

மௌனத்தில் ஒளிகின்றன .



கதவுகள் அடைத்து

சாவி தொலைத்து

அவற்றை சிறை வைத்திருக்கிறது

மௌனம் .



விழுங்கப்பட்ட சொற்கள்

வேதனையில்

மௌனம் பிராண்டிக் களைக்கின்றன .



ஓய்ந்து போய்

மீண்டும் மீண்டும்

மௌனத்தில் கரைகின்றன .



என்றேனும் ஒருநாளில்

பேரிரைச்சலாய்

அவை சிறை தகர்க்கக் கூடும் .

அந்நாளில்

வெடித்து வெளியேறும்

சொற்களுடன் என் மௌனமும் .....






Thursday, 18 August 2011

அனுபவம் புதுமை

அப்பாவோட சொந்த ஊரு ஆலடிப்பட்டி .அம்மாவோட அம்மா (ஆச்சி ),தாத்தா ,மாமா எல்லாரும் இருந்தது திருநெல்வேலியில .எங்க பெரிய பெரியப்பா அடிக்கடி ஊருக்கு போயிட்டு வந்துட்டு இருந்ததால அவரோட லக்கேஜோட சேத்து என்னையும் அனுப்பிவிட்டுருவாங்க .அங்க ஸ்டேஷனில என்னோட பெரிய மாமாவோ தாத்தாவோ வந்து கூட்டிட்டு போவாங்க .அங்க ஏதோ ஒரு பாலர்வாடிக்கு அப்பப்ப போயிட்டு வந்த நெனப்பிருக்கு .அதோட டீச்சர் டேபிள் மேலேயே உட்கார்ந்திட்டு இருந்ததும் ஜன்னல் வழியா டிரைன்ன பார்த்தும் புகைமூட்டத்துக்கு பின்னால லேசா தெரியுது .




ஆச்சி வீடு திருநெல்வேலி ஜங்ஷனில இருந்துது .வீடு என்னவோ நல்லவீடு தான் .ஆனா அன்றைய நிலவரப்படி டாய்லெட் கிடையாது .தனியறையில் கல்ல நட்டுவச்சி எறும்பா மேயும் ,அது பேரு ஐயோ, கக்கூஸ் .இது தவிர திண்ணையை தொட்டு சாக்கடை ஓடும் .இதுதான் பலபேருக்கு கழிவறையா இருந்திச்சு .இத சுத்தி எப்பவும் பன்னிங்க ,நம்ம சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, கூட்டம் கூட்டமா சுத்திட்டு இருக்கும் .அதுங்களுக்கு அந்த சாக்கடை தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் .இப்ப எதுக்காக இந்த கதைன்னு மூக்கை மூடிக்கிட்டு கேக்குறவங்களுக்கு ,மேட்டரை சொல்றேன் .



வழக்கம் போல எங்க தாத்தா வீட்டுல நான் இருக்கேன் .என் அம்மா ,அப்பா ,தம்பி மெட்ராசில .அன்னைக்கு காலையில நெல்லையில எங்கம்மாவும் என் தம்பியும் ஊருக்கு வராங்க .இதுக்காக காலையிலேயே எங்க சித்தி என்னைய குளிப்பாட்டி ,மேக்கப் போட்டு ரெடி பண்ணி வச்சிருந்தாங்க .கொஞ்ச நேரத்தில ஆட்டோ ? சத்தம் கேட்டதும் ,எங்க சித்தி "குழலி கண்ணு ,அம்மா வந்தாச்சு "ன்னு சத்தம் குடுத்தாங்க .இந்த அலெர்ட் வந்த உடனே நா வேகமா கிட்சனை தாண்டி ,பெட்ரூமை தாண்டி ,திண்ணையை தாண்டி ஓஓஓஓஓஓஓ.......... டி வந்து பொத்துன்னு விழுந்தேன், சாக்கடையில ....நான் விழ பன்னியோட புல் மீல்ஸ்  ஒண்ணு  அடிச்சிக்கிட்டு வர டைமிங் சரியா இருந்துச்சி ...



எங்கம்மா என்னைய சாக்கடையிலிருந்து தூக்கி அப்படியே பின் வாசல் வழியா கொண்டு போயி தண்ணிய மேல ஊத்தி கழுவி ...அன்னையோட என்னோட நாடாறு மாசம் காடாறு மாசம் முடிவுக்கு வந்துது .


Wednesday, 20 July 2011

வெஜிடேரியன் வீடுகள்




இரண்டு வருடங்களுக்கு முன் நான் அப்போது குடியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டியிருந்தது .ஹிந்துவின் ரெண்டல்ஸ் பகுதியில் தேடிய போது ,சில விளம்பரங்களில் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள் .இன்னமும் சிலரோ ,பிராமின்ஸ் ஒன்லி என்று போட்டிருக்கிறார்கள் .



எனக்கு வீடு பார்த்த ஒரு  தரகர் சொன்ன சம்பவம் இது .ஒரு வெஜிடேரியன் குடும்பத்தினருக்கு வாடகைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தாராம் .அவர் சொன்ன வாடகைக்கு ஒப்புக் கொண்டு வந்தவர்கள் பலரும் நான்- வெஜிடேரியன்ஸ் .அதனால் வீடு முடியாமலேயே இருந்ததாம் .வீட்டில் சமைக்க மாட்டோம் என்று சிலர் சொன்னதை கூட வீட்டுக்காரர் ஏற்றுக் கொள்ளவில்லையாம் .சுத்த சைவமாக இருக்கவேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம் .ஒருநாள் இவர் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது ஏதேச்சையாக பார்த்தால் வீட்டுக்காரர் நின்றுக் கொண்டிருந்தது ஒரு மீன் கடையில் !"எனக்கு சரியான கோபம்மா என்னெல்லாம் சொல்லி என்னைய அலைய விட்டாரு ....ங்க அசைவம் சாப்பிட்டாக் கூட கோழிக் கறி சாப்பிடுவாங்க ,பார்த்திருக்கேன் ...ஆனா மீன் சாப்பிட மாட்டாங்க .இவரு மீன் கடையில மீன் வாங்கிட்டிருக்காரு.இதுல ஆயிரம் கண்டிஷன்.எனக்கு வந்த கோபத்துல ,டேய் ! ...ன்னு கத்திட்டேன் ."



என் தோழி ஒருத்தி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அசைவம் சமைக்கக் கூடாது .வாங்கிக்கொண்டு வந்து வேண்டுமானால் சாப்பிடலாம் . ஆனால் வீட்டில் சமைக்க அனுமதியில்லை .இன்னமும் சில இடங்களில் வாடகை குறைவாக இருக்கிறதே என்று விசாரித்தால் ,இதுவும் சைவம் மற்றும் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமாக இருக்கிறது .சிலர் வாடகைக்கு மட்டுமல்ல விற்கும் போதும் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று கண்டிஷன் போட்டே விற்கிறார்கள் .




இதற்கெல்லாம் உச்சமாக நேற்று ஜெயின்ஸ் ஹவுசிங் இன் விளம்பரத்தில் கீழ்பாக்கத்தில் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் "ஆர்ச் வே " என்ற குடியிருப்பை பற்றி விசாரிக்கையில் அது,
"பார்    வெஜிடேரியன்ஸ் அண்ட் நார்த் இந்தியன்ஸ் ஒன்லியாம் !!!!!! "


நான் சிறுமியாக இருந்த போது ,திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் குடியிருந்தோம் .அந்த ஓனர் சொல்வாராம் ,"என்னுடைய வீட்டை "நான் -வெஜிடேரியன்ஸுக்கு" மட்டுமே வாடகைக்கு தருவேன் .அவர்கள் வெஜிடேரியன்ஸுக்கு மட்டும் என்று சொல்வது சரியென்றால் நான் சொல்வதும் சரிதான் ."

Tuesday, 12 July 2011

தொட்டில் பாடல்





ஏலக்காடுகளிலிருந்து

நெல் வயல்கள் மீது

தாமரை தடாகங்கள் தாண்டி

பனித்துளியின் மினுமினுப்போடு

உனக்கென ஏந்தி வருகிறேன்

ஒரு அழகிய சிறு கனவை



தித்திப்பே ,கண்கள் மூடிக் கொள்

மின்மினிப் பூச்சிகள்

வேப்பந் தேவதை ஊடே ஆடிப்போகின்றன

கசகசா தண்டுகளிலிருந்து

உனக்கென நான் திருடினேன்

ஒரு அழகிய சிறு கனவை ...




பிரியமான கண்களே ,நல் இரவு

தங்க ஒளியில் விண்மீன்கள்

உன்னை சுற்றி தகதகக்கின்றன

மெல்ல வருடி

உன்மீது போர்த்துகிறேன்

ஒரு அழகிய சிறு கனவை ....




Cradle Song

By Sarojini Naidu


From groves of spice,

O'er fields of rice,

Athwart the lotus-stream,

I bring for you,

Aglint with dew,

A little lovely dream.



Sweet, shut your eyes,

The wild fire-flies

Dance through the fairy neem;

From the poppy-bole

For you I stole

A little lovely dream.



Dear eyes, good night,

In golden light

The stars around you gleam;

On you I Press

With soft caress

A little lovely dream.

Tuesday, 7 June 2011

என் நினைவுகள்



குப்பைக் கிடங்கென கொட்டிக்கிடக்கின்றன

என் நினைவுகள்

தேவையானவையும் தேவையற்றவையுமாய்

பிரிக்க முடியாமல் 



மங்கி போனதாக நான் எண்ணியிருந்த

சில நினைவுகள்

கிளறிப் பார்க்கையில்

கங்கென கனன்று கைசுடுகின்றன .

இன்னும் சுடுமோ என்றெண்ணி

சிலவற்றை அண்டாமல் இருக்கிறேன்

என்றோ தவறி தொடும் போது

ஆறி உணர்வு தீண்டாமல் கிடக்கின்றன அவை .



சிலவையோ சந்தோஷங்கள் ஏந்தி

சிறகடித்துக் கொண்டிருக்கின்றன

இவற்றை தக்கவைத்து பிறதை

கழிக்க முடியாமல் திணறியே

இன்னமும் சேர்க்கிறேன் .

தானாக மக்கி போகும்

என்று சுமந்துகொண்டே காத்திருக்கிறேன்

இருக்க முடியாமலும் வெளியேற இயலாமலும்

பந்துக்குள் காற்று போல

சுற்றிக் கொண்டேயிருக்கின்றன அவை .



இவை அத்தனைக்கும் அடியில்

நீண்ட கருநாகம் போல

அடைந்துக்  கிடக்கிறது ஒன்று  மட்டும்,

அகற்ற முடியாததாய் .

வேறெந்த நினைவின் சீண்டலுக்கும் அசையாமல்

செத்தது போல பாசாங்கு செய்து கொண்டு.

என்றேனும் நான் அதை கவனியாது

போனால் மட்டும்

புஸ்சென்று    தலைதூக்கி

எனை கொத்துவதாய் பாவித்து

மீண்டும் சுருண்டு கொள்கிறது .

என்றேனும் ஒருநாள் பெரிதாய் படமெடுக்க...








Wednesday, 1 June 2011

மருதாணி


மருதாணிப் சிவப்பிலிருந்து   ஒரு  கோகிலம் கூப்பிட்டது

லிரா லிரீ லிரா லிரீ

விரையுங்கள் பெண்களே விரைந்து செல்லுங்கள்

மருதாணி மரத்தின்  இலைகளை   சேர்க்க    

குடங்களை அலைமேல் மிதக்க விடுங்கள்

பொழுது முதிரும் முன்னால் இலைகளை  பறியுங்கள்

தங்கமும் அம்பருமான உரல்களிலிட்டு  அரையுங்கள்

பச்சை பசேல் மருதாணி மரத்தின் இலைகளை



மருதாணிப் சிவப்பிலிருந்து  ஒரு கோகிலம் கூப்பிட்டது

லிரா லிரீ லிரா லிரீ

விரையுங்கள் பெண்களே விரைந்து செல்லுங்கள்

மருதாணி மரத்தின்  இலைகளை   சேர்க்க .

மணப்பெண் புருவத்திற்கு திலகத்தின்  சிவப்பு

இனிக்கும் உதடுகளுக்கோ   தாம்பூலத்தின்  சிவப்பு

லில்லி போலும் விரல்களுக்கும் பாதங்களுக்கும் மட்டும்

சிவப்பு ,சிவப்பு ,மருதாணி மரத்தின் சிவப்பு.





IN PRAISE OF HENNA

By "The Nightingale of India " Sarojini Naidu


A kokila called from a henna-spray:

LIRA! LIREE! LIRA! LIREE!

Hasten, maidens, hasten away

To gather the leaves of the henna-tree.

Send your pitchers afloat on the tide,

Gather the leaves ere the dawn be old,

Grind them in mortars of amber and gold,

The fresh green leaves of the henna-tree.



A kokila called from a henna-spray:

LIRA! LIREE! LIRA! LIREE!

Hasten maidens, hasten away

To gather the leaves of the henna-tree.

The tilka's red for the brow of a bride,

And betel-nut's red for lips that are sweet;

But, for lily-like fingers and feet,

The red, the red of the henna-tree.



































Monday, 23 May 2011

பாசவலை



கண்ணுக்குள்ள ஒன்ன வச்சி
கனின்னு பேரு வச்சு
ஆசையெல்லாம் சேத்து வச்சு
மகளே ஒன்ன வளத்து வச்சேன்

வார்த்தை ஒண்ணு நீ சொன்னா
கவிதையின்னு களிச்சிருந்தேன்
ஒயிலா நீயும் சிரிச்சப்ப
ஓவியம் போலன்னு ரசிச்சிருந்தேன்

அரசியல் வேல செய்ய வந்தா
அலஞ்சு திரிய வேணுமுன்னு
அலங்காம கவித பாட
அரங்கத்துக்கு அனுப்பி வச்சேன்

யாரு கண்ணு பட்டிருச்சோ
எவரு பாவம் வெரட்டிரிச்சோ
காணாத கொடுமையெல்லாம்
கண்டதென்ன கண்மணியே

ஒன் அரும தெறமயெல்லாம்
தமிழ்நாடு தாங்காதுன்னு
கட்டியம் அறிஞ்சு நானும்
தல நகரம் செயிக்க சொன்னேன்

ராசாத்தி ஒன் வரவ
ரணமில்லாம செஞ்சுவிட
ராசாவ ஆள் பாத்து
தோதாக அனுப்பி வச்சேன்

வலியில்லாம நோகாம
புள்ள ஒண்ணு பெத்தாப்புல
கண்ணு ஒன் வழியெல்லாம்
பூவாத்தான் விரிச்சு வச்சேன்

சங்கமம்ன்னு நீ சொன்னா
தலையாட்ட சம்மதிச்சேன்
செல்லமே நீ கைகாட்ட
நோட்டாக நெறச்சு வச்சேன்

அப்பா என் பேர் வெளங்க
டிவி ஒண்ணு ஆக்கி வச்ச
அதில நானும் ஒன்பங்க
துண்ட போட்டு பிடிச்சு வச்சேன்

ஒனக்காக எவரையும் தான்
முடிச்சு விட நானிருக்கேன்
முள் மேல தலகீழா
நடந்து வர காத்திருக்கேன்

இப்படி ஒண்ணு வாருமின்னு
அறியாம நானிருந்தேன்
என்னை கேக்க யாருன்னு
தைரியமா தானிருந்தேன்

சீமைக்கு போனவங்க
சேதி பாத்து சொல்லலையே
செயிலில் களி திங்கனுமின்னு
கனவில் கூட நெனைக்கலியே

என்னருமை கண்மணியே
கண்ணு மட்டும் கலங்காதே
இந்த நெலம வந்துதுன்னு
தைரியமும் கொறையாதே

கட்டுமரமா நா மாறி
ஒன்ன கர செத்திடுவேன்
ராசாவதான் பணயம் வச்சு
ஒன் தலைய காத்திடுவேன்


ஏழு மல கடல் தாண்டி
ஒன்ன மீக்க வந்திடுவேன்
மதுர வீரன் போல நானும்
அசராம போர் தொடுப்பேன்

கேஸ எல்லாம் தூசாக
தூள் தூளா தகர்த்திடுவேன்
கவலையெல்லாம் மறந்துபுட்டு
கண்ணுறங்கு என்மகளே

Monday, 16 May 2011

அன்புள்ள கலைஞருக்கு ,

அன்புள்ள கலைஞருக்கு ,

எல்லோரும் உங்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நானும் எழுதுவதற்காக வருந்துகிறேன் .ஆனாலும் விவரம் தெரிந்த நாள் முதலே தலைவர் என்றால் நீங்கள் மட்டும் என்று வரையறுக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் உங்களிடம் எனக்கு கொஞ்சம் உரிமை அதிகம் உண்டு தானே .

பூசாரி குடும்பத்தில் பிறந்தும் பேரறிஞர் அண்ணாவாலும் உங்களாலும் ஈர்க்கப்பட்டு மஞ்சள் துண்டு அணிந்த உங்களின் அபிமானியாக இன்று வரையிலும் நாத்திகராக இருப்பவர் என் அப்பா . ஜெயா டிவியில் பாடல் ஒளிபரப்பைக் கூட காண சகியாதவர்.நீங்கள் முனாகாவன்னா வாக இருந்து, கலைஞராகி, தமிழின தலைவர் மற்றும் வாயில் எச்சில் போல் வந்து கொண்டே இருக்கும் பட்டங்கள் அளவும் நீங்கள் பேர் பெற்றதை பார்த்து பெருமை கொண்டவர் .நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட காட்சிகளை கண்டு கதறி அழுதவர் . எம் ஜி ஆர் அசைக்க முடியாத மன்னாதி மன்னராக கோலோச்சிய என்னுடைய சிறு வயதில் கருணாநிதி என்று சொன்ன போது கலைஞர் என்று சொல் என்று கண்டிக்கப்பட்டவள் நான் .

புரட்சி தலைவர் மறைந்து (உங்களை தமிழின தலைவர் என்று சொல்லும் போது அவரை புரட்சி தலைவர் என்று சொல்லலாம் தானே ) நீங்கள் முதல்வரான போது தெருவெங்கும் உங்கள் பேரை சொல்லிக் கொண்டு ஊர்வலம் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை எனக்கு நினைவிருக்கிறது ,ஆட்சி இல்லாத போதும் கட்சியை கட்டிக்காத்த உங்களின் ஆளுமையை பத்திரிக்கைகள் சிலாகித்து எழுதியதும் ...ஆனாலும் மாறி மாறி ஆட்சியில் இருந்தும் இன்று எதிர்கட்சியாக கூட இல்லாமால் போகுமாறு உங்களை கைவிட்டு எங்கு போனார்கள் ?அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் உங்களின் சாணக்கியம் தோற்றது ஏன் ?

அண்ணாவிற்கு நெருக்கமாக இருந்த சம்பத் விலக அவரிடத்தை பிடித்துக் கொண்டீர்கள் .பின்னர் உங்கள் மகன் முக முத்துவை எம் ஜி ஆரை போல் வேடம் புனைய செய்தீர்கள் .அது பலிக்காமல் போனது .இதில் மனக்கசப்புகள் அதிகமாக இதயக்கனியை வண்டு துளைத்துவிட்டதாக சொல்லி உங்களின் அருமை நண்பராக இருந்த எம் ஜி ஆரை வெளியேற்றினீர்கள் (இதற்கான உண்மை காரணத்தை என்றாவது மக்கள் அறியக் கூடும் ).அதன் பலனாக பல ஆண்டுகள் ஆட்சியை நெருங்க முடியாமல் அவதிப்பட்டீர்கள் . செத்தும் கொடுத்தான் சீதக்காதி ,அது போல் எம்ஜி ஆர் இறந்தும் உங்களுக்கு முதல்வர் பதவியை தந்திருக்கிறார் என்று காளிமுத்து சொன்னார் ..நிஜம் தானே .அன்றும் உங்களுக்கு உங்கள் குடும்பம் முக்கியமாகவும் உங்கள் மருமகன் மாறன் மட்டுமே அறிவாளியாகவும் இருந்தனர் .


சில ஆண்டுகள் சென்ற பின் ஸ்டாலினை முன்னேற்ற தடையாக இருந்த வைகோவை ஏதோ காரணங்கள் சொல்லி மதிமுகவை உண்டாக்கினீர்கள் .சரி அதன் பிறகு தான் அவருக்கு வழி காலியானதே என்று சும்மா இருக்கவில்லை .அவரை இன்றளவும் காக்க வைத்திருக்கிறீர்கள் (இளவரசர் சார்லசுக்கு அடுத்தப்படியாக பட்டத்திற்கு அதிக காலம் காத்திருக்கும் யுவராஜர் இவர்தான் ).பிறகு மெதுவாக மூக்கை உள்ளே நுழைத்த அழகிரியை வெளியே நிறுத்தாமல் அவரையும் அதிகார மையம் ஆக்கினீர்கள் .உங்கள் ஆரம்ப கால அரசியல் தோழர் தா கிருஷ்ணன் கொலையுண்ட போதேனும் அவரை அப்புறப்படுத்தி இருக்கலாம் .வழக்கை நீங்கள் கையாண்ட விதம் பார்த்து நாடே வாய் பிளந்து நின்றது .

சரி இதோடு முடிந்ததா ?தயாநிதி மாறன் ,கனிமொழி என்று இருவரையும் களமிறக்கினீர்கள்.(ஏனோ கயல்விழி மட்டும் இன்னமும் பதவியில்லாமல் இருக்கிறார் . )இவர்கள் எல்லாருக்கும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை விட ஏதேனும் தகுதி இருக்கிறதா ?எஞ்சிவிட்ட உங்கள் மற்ற மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரையும் திரையுலகம் நோக்கி திருப்பிவிட்டீர்கள் .இதை நியாயப்படுத்த உங்கள் சக நண்பர்கள் மற்றும் ஜால்ராக்கள் பிள்ளைகளையும் வளர்க்க விட்டீர்கள் .யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாது இல்லையா ?உங்கள் சாமர்த்தியம் ஊர் அறிந்தது தானே ?

இவற்றையெல்லாம் கூட நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்போம் நீங்கள் இதற்கான காரணங்களை பணிவோடு கூறியிருந்தால் ..ஆனால் கேட்ட போதெல்லாம் "என் குடும்பத்தினர் பிழைக்க கூடாதா ?என் மனைவி மலடாக இருக்க வேண்டுமா ?"என்ற ஆணவங்களை பதிலாக்கினீர்கள்.அலைகற்றை பற்றியும் ஈழம் பற்றியும் அதிகம் பேசியாகிவிட்டது .

இவை எல்லாம் ஆன பின்னும் கூட பணம் வாக்கு பெட்டிகளை நிரப்பும் என்ற வக்கிர கணக்கோடு காத்திருந்தீர்கள் .தட் வாஸ் தீ அன்கைண்டஸ்ட் கட் அப் ஆல்.இன்றளவும் ஓயாத உங்களின் உழைப்பும் ,தெவிட்டாத உங்களின் தமிழும் ,நகைச்சுவை மிளிரும் உங்களின் பேச்சும் என்றளவும் மறக்க முடியாதவை .மூன்று தலைமுறைக்கு தமிழ் கற்றுத் தந்த ஆசான் நீங்கள் .திமுக என்றாலே திரு . முக எனும் ஆளுமை நீங்கள் .

இனி என்றுமே நீங்கள் மீண்டும் முதல்வாராகும் வாய்ப்பு இல்லை என்றான அந்த மாலை பொழுதில் ,"மக்கள் எனக்கு நல்ல ஓய்வை தந்திருக்கிறார்கள் "என்று நீங்கள் புன்னகையோடு கூறி நகர்ந்த போது மனதின் ஒரு ஓரத்தில் ஒரு கீறல் தோன்றி மறைந்தது நிஜம் .

பணிவன்புடன் ,
பூங்குழலி

Wednesday, 11 May 2011

சுட்டி

சில வருடங்களுக்கு முன் ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .வீட்டை எதிர்த்து காதல் திருமணம் ,மனைவியின் கர்ப்பம் அதோடு இருவருக்கும் எச் ஐ வி இருப்பது தெரிய வர ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்தார்கள் .பின்னர் மகன் பிறந்து ,வீட்டில் சமாதானமாகி இன்று நன்றாக இருக்கிறார்கள் .

போன வாரத்தில் பரிசோதனைக்காக வந்திருந்தார்கள் .அவர்களின் நான்கு வயது மகனின் குறும்புத்தனத்தில் மருத்துவமனையே அல்லோகலபட்டுக் கொண்டிருந்தது .என் அறையின் உள்ளே வந்ததும் ,"அப்பா ஒனக்கு ஊசி தான் . எங்கப்பாவுக்கு ஊசி போடுங்க .வீட்டில ஒரே சேட்ட .அம்மாவுக்கு வேண்டாம் ."பேசிக் கொண்டே இருந்தான் .ரைம்ஸ் சொன்னான் .அதட்ட முயன்ற அவன் அப்பாவை கண்டுகொள்ளாமல் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டே இருந்தான் .

வெளியே கிளம்பும் போது ,வெள்ளை கோட் அணிந்திருந்த என்னை சட்டென்ற குனிந்து பார்த்துவிட்டு சொன்னான் ,"என்ன நீங்க சுரிதார் போட்டிருக்கீங்க ?நீங்கல்லாம் பொடவ தான கட்டனும் ?"

Friday, 15 April 2011

எங்கூரு ...

போன வாரத்தின் சுவாரசியம் இது .ஒரு நோயாளி ,இதுவரை எங்கள் மருத்துவமனையில் வேறு மருத்துவர்களையே பார்த்து வந்தவர் .இந்த முறை என்னை பார்க்க வந்தார் .அதிமுக கரை வேட்டி கட்டியிருந்தார் .தீவிர கட்சிக்காரராக இருக்கிறாரே என்று, சும்மா பேச்சு கொடுத்தேன் .


"என்ன உங்கம்மா இந்த தடவை ஜெயிச்சுருவாங்களா ?"என்று கேட்டதற்கு "ஆமாம் மாறி மாறி வரலையா ?அப்படி பாத்தா ,அம்மா தான இந்த தடவ ஜெயிக்கணும் ?என்று கேட்டார் ."அது சரிதான் ,நிலவரம் எப்படியிருக்கு?"என்றதும் .எலெக் ஷன் கமிஷன் கெடுபிடியா இருக்குறதால அம்மா ஜெயிக்க நெறைய சான்ஸ் இருக்கு .இல்லைன்னா செரமம் தான் ."இதற்கு நாங்கள் ,"சரி ஒங்கம்மா ஜெயிச்சாப்புல பெருசா என்ன செஞ்சுருவாங்க ?"என்று வம்பளக்க ,கோபமான அவர் ,"படிச்சவுங்க ,நீங்க இப்படி சொல்லலாமா ?கருணாநிதி குடும்பத்துக்குன்னு அரசியல்ல இருக்காரு .இந்தம்மாவுக்கு குடும்பமா குட்டியா ?ஊருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி ..."


அவர் கிளம்பும் போது ,"சரி ஒங்கம்மா ஜெயிச்சவுடன் எங்களுக்கு சுவீட் எடுத்துட்டு வாங்க "என்ற போது ,"கண்டிப்பா கொண்டு வரேன், நீங்களும் மறக்காம வோட்ட போடுங்க ." "ஒங்க தொகுதி எது ?" மதுரையா மதுரைக்கு பக்கத்துலையா ?"மதுரைக்கு பக்கத்துல தான் ,ஓட்டுக்கு மூவாயிரம் ரூவா கொடுத்தாங்களே ,அந்த ஊரு தான் .திருமங்கலம் ."


Wednesday, 13 April 2011

இன்று தேர்தல்

வாக்குப்பதிவு துவங்கிவிட்டது.எசன்ஷியல் சர்வீசாக மருத்துவமனை இருக்கிறதால ,இன்னைக்கி லீவு இல்ல (இல்லைனாலும் ரொம்ப குறைவாதான் லீவு தருவாங்க-நாளைக்கு நாளனைக்கு கூட லீவு இல்லைன்னா பாத்துக்கோங்க ).வெளிய கூட சொல்ல முடியாது .உடனே மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் ன்னு கொடி பிடிச்சிகிட்டு கிளம்பிடுவாங்க .அவசரம்ன்னு வரவங்களுக்கு பார்க்கிறதுக்கு மருத்துவர் இருக்கனும்ங்கறது நியாயம் தான்,ஆனா மத்தவங்க ?ஒரு வேலையும் இல்லாம கும்மி அடிக்க வேண்டியது தான் .கரென்ட் ,நெட் எல்லாம் வேஸ்ட் .இப்பக் கூட நாலு மருத்துவர்கள் இருக்கோம் .வந்த நோயாளிகள் ?மூச்சைப் பிடிச்சிக்கோங்க ...ஏழு பேர் .


வெளிய என்ன நடக்குதுன்னு தெரியல .விறுவிறுப்பா வாக்குப்பதிவு நடந்திட்டு இருக்கும்ன்னு நெனைக்கிறேன் .மத்தியானம் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க .ஆனா மத்தியானம் போனா ஒங்க வோட்டே இருக்காதுன்னு பயமுறுத்துறாங்க .சில பேர் இந்த தடவ அப்படியெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க .போய் பாத்தா தெரியும் .என்னோட வோட்டு இல்லன்னா அங்கேயே தர்ணா பண்ணலாம்ன்னு இருக்கேன் .விளம்பரமாவது கிடைக்கும் .


வேட்பாளரை தேர்ந்தெடுக்கறது கட்சிக்கு கூட சுலபம் தான் போலிருக்கு .பல சி களுடைய பெரும்பான்மை சாதியை சேர்ந்தவரா இருந்தா போதுமாமே ?(பெரியாரா ?யாருங்க அவரு ?தாடி வச்ச சத்தியராஜ் மாதிரி இருப்பாரே ?) நமக்கு தான் எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல ? கொள்ளின்னு கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு .இப்படியிருக்கேன்னு ஓட்டே போடாம விட்டிரலாம்ன்னா மனசாட்சி வருத்தப்படும் போலிருக்கு .


அய்யா கட்சிக்கு போடலாம்ன்னா எலெக்க்ஷனுக்கு அப்புறம் வடிவேலுவை முதல்வரக்கிடுவாங்களோ ன்னு பயமாயிருக்கு .அப்புறம், திருமதி ஸ்டாலின் வெயில கூட பட்டுபுடவ கட்டிக்கிட்டு ஓட்டு கேக்குறாங்க ,வயித்தெரிச்சலா இருக்கு .சரி இவங்கள விட்டுட்டு அம்மாவுக்கு போடலாம்ன்னா தலைநகரை கொடநாட்டுக்கு மாத்திடுவாங்களோன்னு யோசிக்க வேண்டியிருக்கு .கேப்டன் கட்சியில அவங்க வீட்டுக்காரம்மா நின்னிருந்தா கண்டிப்பா அவங்களுக்கு போட்டிருக்கலாம் .இந்த குழப்பம் போதாதுன்னு காங்கிரஸ் ,பி ஜே பி எல்லாம் வேற போட்டியிடறாங்களாமே ?சொல்லவே இல்ல ..


என்னோட தொகுதி மைலாப்பூர் .இங்கே காங்கிரஸ் சார்பா நடந்த பலே வேலையெல்லாம் பார்த்தப்புறம் ..(இது மாதிரி ஒரு களவாணி தலைவர் எந்த கட்சிக்கும் கொடுத்து வைக்கல ) 49 ௦ போடலாமான்னு பாக்கறேன் ,அதையும் போட்டு பாக்க வேண்டாமா .எங்கேயோ எழுதணுமாமே ?பி ஜே பி சார்பில வானதி மட்டும் தான் எங்க ஏரியாவில வோட்டு கேட்டு வந்தாங்க .மத்தவங்க கண்டுக்கல ,அதையும் யோசிக்க வேண்டியிருக்கு .அப்புறம் அவங்க பேரும் என்னோட பேரும் பொன்னியின் செல்வன் பேரா வேற இருக்கு .இதுவும் கொஞ்சம் சென்டிமென்ட்டா இருக்கு .அதிமுகவில ராஜலட்சுமி ன்னு ஒருத்தங்க நிக்கறாங்க .ரொம்ப அமைதியானவங்க போல .சத்தமே காணோம் .எங்கம்மா பேரும் அவங்க பேரும் ஒண்ணா இருக்கு .இப்படி பல குழப்பத்துல இருக்கேன் .பேசாம டிப் டிப் டிப் போட்டு பாக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் .வாத்தியார் ஐயோ ஸாரி புரட்சிதலைவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா .........ம்


Tuesday, 12 April 2011

தேர்தல் ஸ்பெஷல் -2



கண் மூடி தெறக்கும் முன்னே
கனவு போல போச்சுதையா
பொசுக்குன்னு தான் நாள் குறிச்சு
பொது தேர்தல் வந்ததைய்யா

வெறப்பா தான் நின்னு நின்னு
காலு தேஞ்சு போச்சுதய்யா
கும்பிட்டு தான் நின்னதில
கை மரத்து போச்சுதையா


இளிச்சிக்கிட்டே இருந்ததில
வாய் கோணி இழுத்திருக்கு
கத்தி கத்தி பேசி பேசி
தொண்ட சுளுக்கி போய் கெடக்கு


சீட்டு கேட்டு போன போது
சிட்டாத்தான் நானிருந்தேன்
மனுதாக்கல் செய்யும் போதும்
தெம்பாத்தான் நானிருந்தேன்


கண்ணுல தான் வெரல விட்டு
கமிஷன் தண்ணி காட்டும் வர
மல்லுவேட்டி மைனர் போல
மொறப்பா தான் நானிருந்தேன்

அஞ்சு வருஷம் ஊருக்குள்ள
வாராம நானிருந்தேன்
கார் போகிற போக்கில தான்
தொகுதியையே பார்த்திருந்தேன்


காது குத்து வச்சப்போ
கட்சிகாரனின்னு மதிக்கலையே
ஆஸ்பத்திரியில இருந்தப்ப
அவசரமின்னு நெனைக்கலையே


வீடெல்லாம் வெள்ளத்தில
வெறகு போல மெதக்கையில
வீட்டுக்குள்ள ஏசி போட்டு
வெதுவெதுப்பா தான் இருந்தேன்


பதவியில பத்திரமா
பவுசாக இருந்த வர
ஆளுன்னு தெரியலையே
அவன் தேவைன்னு புரியலையே


இப்ப தெருக்குள்ள நான் போனா
ரோட்ட வெட்டி போட்டிருக்கான்
வோட்டு கேட்டு தான் போனா
வராதேன்னு போர்டு வைக்கான்


நோட்ட மட்டும் எடுத்து விட்டா
வோட்டு போட வருவானுன்னு
துட்ட எடுத்து போகையில
தேர்தல் கமிஷன் சீலு வைக்கான்


பணமுன்னு அழுவேன்னா
பதவின்னு அழுவேன்னா
என்னத்த நான் செய்ய
என் பாடு எங்க சொல்ல


கோடியாக கொட்டி வச்சு
சீட்டு வாங்கி வந்திருக்கேன்
தலைவர் பேரன் கொள்ளுப்பேரன்
வரை கால பிடிச்சி தொங்கியிருக்கேன்


நாலு பக்கம் நான் அழுது
வேட்பாளர் ஆகியிருக்கேன்
நெனைப்பு கெட்ட ஜனங்க கிட்ட
என்னன்னு சொல்லிடுவேன்


சொமையோட இருந்துபுட்டா
சொமக்குறது கஷ்டமில்ல
சொகுசாக இருந்துவிட்டா
சொமக்குறது சுலபமில்ல


பதவி பறி போச்சுதுன்னா
ஒரு நாயும் மதிக்காது
கட்சி ஆபிஸ் தரையிலதான்
குந்த இடம் கிடைக்காது


என் நெலம புரிஞ்சுக்கிட்டு
வோட்ட கொஞ்சம் போட்டிருங்க
செய்யாம போனதையெல்லாம்
பெரிய மனசு பண்ணி மறந்துருங்க


எம் எல் ஏ ஆகிபுட்டா
பெரிய மினிஸ்டர் ஆகிடுவேன்
தீராத ஒங்க கொற
அப்ப நானும் தீத்து வைப்பேன்


தாய்மாரே அய்யாக்களே
வோட்டிருக்கும் தொரமாரே
கண்தொறந்து பாருமையா
வோட்டத்தான் போடுமையா


Wednesday, 6 April 2011

தேர்தல் மேடை -2

எல்லா கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சி வைத்துக் கொண்டு அவரவர் சொந்த கொள்கைகளை பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள் .சும்மா சொல்லக் கூடாது தலைவர்களோ அவர்களின் ஆஸ்தான எழுத்தாளர்களோ ,தெரியவில்லை சிறப்பாகவே சிந்திக்கிறார்கள் .கேட்டதில் பிடித்தவை சில .


"தலைவர்கள் தொண்டர்களை ஏமாற்றுவார்கள் ஆனால் மனைவிமார்களை ஏமாற்றும் பழக்கத்தை முதல்முதலாக தங்கபாலு தொடங்கி வைத்திருக்கிறார்." --- வேற யாரு ! ஈ .வி .கே .எஸ்.இளங்கோவன் தான் .


"வெள்ளையனே வெளியேறு போல இது கொள்ளையனே வெளியேறு போராட்டம் "--புரட்சியாக ஜெயலலிதா .


"கரும்பு தோட்டத்திற்கு யானையை காவல் வைக்கலாமா ?கொய்யா தோட்டத்துக்கு குரங்கை காவல் வைக்கலாமா ?அதனால தான் சொல்றேன் ,மக்களே ,கலைஞர முதல்வராக்காதீங்க "---விஜயகாந்த் .


"கொலை செய்வதும் கலையப்பா ,கொள்ளை அடிப்பதும் கலையப்பா ,மந்திரிகுமாரியில இவர் எழுதுன வசனம் தான்"--விஜயகாந்த் .


"எனக்கு எதிரி என்று சொல்ல மாட்டேன் ,எதிர்ப்பாளர் என்றும் சொல்ல மாட்டேன் ,என்னைப் பிடிக்காதவர் ,அவ்வளவு தான் "---ஜெ பற்றி உருக்கமாக கலைஞர் .


"என் மடியில் தவழ்ந்த குழந்தை இளங்கோவன் "---சென்டிமென்ட்டாக கலைஞர் .


"இலவசம் தேவை தான் .ஆனால் எவை இலவசமாக தேவை தெரியுமா ?இலவச கல்வி தேவை ,இலவச தண்ணீர் தேவை ,நல்ல ரோடுகள் தேவை .."---- ஜெயிக்க போவதில்லை என்ற தன்னம்பிக்கையில் யாதவ சபை தலைவர் தேவநாதன் யாதவ் .


கலைஞர் டிவியில் இப்போதெல்லாம் ஸ்டாலினை விட கனிமொழியைவிட ஏன் கலைஞரை விடவும் கூட வடிவேலுவை தான் அதிகம் காண்பிக்கிறார்கள் .இந்த தேர்தலே விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் நடக்கும் சொந்த தகராறைப் போல காட்டுகிறார்கள் .


பிரேமலதா விஜயகாந்த் சுலபமாக புரியும் படி சுற்றி சுற்றி பேசுகிறார் .ஆனால் இந்த வெயிலில் எப்படித்தான் அத்தனை நீள கை வைத்த சட்டை போட்டிருக்கிறாரோ தெரியவில்லை .பார்க்கும் போதே வேர்க்கிறது .


அம்மாவின் வண்டிதான் இந்த தேர்தலின் ஹைலைட் .ஆனால் அவர் வைத்துக் கொண்டு படிக்கும் பெரிய எழுத்து நல்லதங்காள் கதை வகை குறிப்புகள் சரி தமாஷ் .அப்புறம் பக்கத்து மேட்டில் வேட்பாளர்கள் வரிசையாக நிற்பதும் ஜெ பேர் சொல்லும் போது உள்ளேன் அம்மா சொல்வதும் ....:))) .


Tuesday, 5 April 2011

முன்பொரு காலத்தில் தேர்தல் .....

முன்பெல்லாம் தேர்தல் என்பது திருவிழா போல் இருந்தது .படங்கள் மாற்றப்படும் போது ஒரு தட்டியை மாட்டு வண்டியில் வைத்து கொண்டு வழி நெடுக துண்டு சீட்டு கொடுத்துக் கொண்டு போவார்கள் ,தேர்தல் நேரத்தில் கும்பிட்டபடியே இந்த தட்டிகளில் ஊர்வலம் வருவார் வேட்பாளர். அதன் பிறகு அவரின் உறவினர்கள் பலரும் வீடு வீடாக வந்து வாக்கு கேட்பார்கள் .



பல இடங்களில் பெண்கள் வந்து ஆரத்தி எடுத்து வசூல் செய்து கொண்டு போவார்கள் .இதிலும் முன்பெல்லாம் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆரத்தி. பின்பு எல்லாருக்கும் எடுத்து பணத்தை பிராக்கெட் பண்ணுவது வழக்கமாகிப் போனது .ஊருக்குள் நுழையும் போதே ஓட்டு விழுமா விழாதா என்று தெரிந்து விடுமாம் .


ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி ,சுவரெல்லாம் சித்திரம் தீட்டி திரும்பும் இடமெல்லாம் கட்சியின் சின்னங்களாக இருக்கும்.மற்ற கட்சிகளை கிண்டல் செய்தும் தங்கள் கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்தியும் ஒரு இளைஞர் கூட்டம் பாட்டு பாடி ஓட்டு கேட்டு வரும் ("போடுங்கம்மா ஓட்டு ,ரெட்டை இலையைப் பார்த்து இல்லை உதயசூரியனைப் பார்த்து ", "காமராஜர் ஹிந்தி படிக்கணும் ,கக்கன்ஜியும் சேர்ந்து படிக்கணும் "-இது இந்தி எதிர்ப்பு போராட்டம் போது ) .கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசும் நாட்களில் அக்கம் பக்கம் ஊர்களிலிருந்து எல்லாம் வந்து சேர்வார்கள் அவர்களின் பேச்சைக் கேட்க .


தேர்தல் கமிஷன் திடீரென்று இவையெல்லாம் மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பின் ஏதேதோ காரணங்களுக்காகவும் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது .இதன் பின் சுவர்களில் படம் வரைவது போஸ்டர் ஒட்டுவது தடை செய்யப்பட்டது .சத்தமாக பிரச்சாரம் செய்வது ,நடு இரவு பிரச்சாரம் செய்வது போன்றவையும் நிறுத்தப்பட்டன .எங்கேனும் ஏதேனும் அண்ணா ,கலைஞர் ,எம் ஜி ஆர் என்று யாராவது ஒலி நாடாக்களில் பேசிக்கொண்டே இருப்பார்கள் .எம் ஜி ஆர் எல்லா பட்டி தொட்டிகளிலும் தத்துவபாடல்களும் அவ்வப்போது காதல் பாடல்களும் பாடிக் கொண்டே இருப்பார் .அனைவரையும் ஆப் செய்தது தேர்தல் ஆணையம் .


செலவுகளும் நிறைய கண்காணிக்கப்பட்டன .ஆனால் அதிசயமாக போஸ்டர்கள் காணாமல் போனது போல் பணம் காணாமல் போகவில்லை .அண்டர்கிரவுண்ட் போனது .அங்கங்கே சாராயம் ,நிறைய இடங்களில் பிரியாணி ,பூத்திற்கு பணம் ,ஆரத்திக்கு பணம் என்று சில்லறைகளாக செலவழிந்து கொண்டிருந்த பணம் ,பாதாளம் வரை பாய்ந்து ஓடத் துவங்கியது .பூத்திற்கு பணம் என்பது போய் ஒவ்வொரு ஓட்டிற்கும் பணம் (பொன்னான வாக்குகள் இல்லையா சும்மா போடா முடியுமா )என்றானது .


தற்சமயம் எல்லா கட்சிகளும் ஆளுக்கொரு தொலைகாட்சி வேறு வைத்திருக்கிறார்கள் .விளம்பர இடைவெளியின் போதெல்லாம் தலைவர்கள் வந்து தலைக்காட்டுகிறார்கள் ,பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறார்கள் .ஆனாலும் மனப்பாடம் ஆகாமல் துண்டு சீட்டுகளில் இருந்தும் பெரிய அட்டைகளில் இருந்தும் படிக்கிறார்கள் .அப்புறம் கிராபிக்ஸ் வேறு ,எம் ஜி ஆர் விஜயகாந்தாகிறார் (எம் ஜி ஆரின் ஆன்மா அவரை மன்னிக்கட்டும் ) .அவரவர் செய்தி தொலைக்காட்சிகளில் தலைமையின் ஆணைக்குட்பட்ட விரிவா ஆஆஆஆஆன அலசல்கள் .அப்புறம் பாடல்கள் அதற்கு தலைவர்களில் நடிப்பு .


இப்படியாக டிவி பொட்டிகளுக்குள் அடங்கிப் போன தேர்தல் நிறைய களையிழந்து தான் போனது .கோடி லட்சம் என்று பிடிபடுவதையும் எல்லா கட்சிகளிலும் உள்குத்து நடந்து போட்டி வேட்பாளர்கள் நிற்பதையும் தவிர சுவாரசியமாக எதுவும் இல்லை .சுவர்களில் படம் வரைந்தால் , கமிஷனே ஆள் வைத்து வெள்ளை அடிக்கிறது .எதிர்கட்சிகள் கிழிக்க வேண்டிய போஸ்டர்களையும் கூட தேர்தல் கமிஷனே கிழிக்கிறது .மக்கள் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் கவரில் பணமோ சேலையோ கிடக்கும் என்ற ஆசையில் தேர்தல் நேரத்திலும் வழக்கம் போலவே தூங்கப் போகிறார்கள் .


Wednesday, 16 March 2011

ஜோத்பூர் -யார் பொறுப்பு ?

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று நமக்கு காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது .உலகெங்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் கர்ப்பம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இறக்கிறாள் .
பல வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இன்னமும் பிரசவங்கள் வீடுகளிலேயே இதற்கென ஏதும் பயிற்சி இல்லாதவர்களாலேயே செய்யப்படுகிறது .பிரசவம் சம்பந்தப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பலவாக சொல்லப்பட்டாலும் சரியான பயிற்சி இன்றி செய்யப்படும் பிரசவங்களும் போதிய வசதிகள் இல்லாத இடத்தில் செய்யப்படும் பிரசவங்களும் முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது .


சமீபத்தில் ராஜஸ்தான் ஜோத்பூர், உமைட் மருத்துவமனையில் நிகழ்ந்துவிட்ட மரணங்கள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை .கடந்து மூன்று வாரங்களில் மட்டும் இந்த மருத்துவமனையில் பதினெட்டு பெண்கள் இறந்திருக்கின்றனர் .இதில் பதினேழு பேர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டவர்கள் .ஒருவர் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் .இது தவிரவும் பச்சிளம் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகி இருக்கின்றனர் .

இறந்தவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர ரத்தபோக்கு ஏற்பட்டு பின்னர் நிலைமை மோசமடைந்து மரணம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது .பதினாறு மரணங்கள் நிகழ்ந்து விட்ட பிறகே மாநில அரசு விழித்தெழுந்து காரணங்கள் கண்டறிய முற்பட்டிருக்கிறது .ஆரம்ப விசாரணையில் இந்த பெண்களுக்கு ஏற்றப்பட்ட ஐ வி ப்ளூயிட்ஸ் எனப்படும் குளுகோஸ் பாட்டில்களில் காளான் இருப்பது கண்டறியப்பட்டது .இதை தொடர்ந்து இந்த பாட்டில்களை சப்பளை செய்த இண்டோரை சேர்ந்த பேரென்டெரல் சர்ஜிகல் நிறுவனத்தின் கிடங்குகள் சோதனையிடப்பட்டு அங்கிருந்த பத்தாயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .அதன்பின் ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்து கொண்டிருக்கிறது .மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன .

மாநில அரசு இறந்தவர்களுக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறது

கொல்கத்தாவில் சோதனை செய்யப்பட பாட்டில்களில் மூன்றில் ஒன்றில் OD 0077 என்ற நச்சுப் பொருள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருந்தது .

இவையெல்லாம் நமது நாட்டு நடப்பின் விதிமுறைகள் படி சரியாக நடந்து கொண்டிருந்தாலும் ,பதில் காணப்படவேண்டிய கேள்விகள் இதில் நிறைய உண்டு .

1.ஆரம்ப நிலை விசாரணையிலேயே மருத்துவமனையில் பல குறைபாடுகள் ,குறிப்பாக ,ஆபரேஷன் தியேட்டர் பராமரிப்பு ,பணிபுரியும் மருத்துவர்களின் பயிற்சியின்மை ,சீனியர் மருத்துவர்கள் மேற்பார்வையிட வராதிருத்தல் போன்ற பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டும் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் மீது கூட இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ?

2.கெட்டு போயிருந்த ப்ளூயிட்ஸ் தான் காரணமென்றால் மற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஏன் எதுவும் நேரவில்லை ?இல்லை இது வெளியில் தெரியவில்லையா ?

3.தொடர்ந்து ஒரே வகையான மரணங்கள் ஏற்பட்ட போது ஏன் நிர்வாகம் உடனே காரணங்களை ஆராய்ந்து பார்க்கவில்லை ?

4.மருத்துவமனை சுகாதாரமும் அதன் மேற்பார்வையும் இத்தனை சீர்கெட்டு கிடக்கும் நிலையில் ,அதை தற்காலிகமாகவேனும் மூடாமல் தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார்கள் ஏன் ?

5.ஏன் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தரக்கூடாது ?

சிகிச்சை என்பது நோய்க்கு ஏற்றாற்போல் என்பது மாறிப்போய் நோயாளியிடம் இருக்கும் பணத்திற்கேற்றார் போல் என்று மாறிக் கொண்டிருக்கிறது .பணம் இருப்பவர்களுக்கு நல்ல ? உயர்தர சிகிச்சையும் இல்லாதவர்களுக்கு இருக்கும் பணத்திற்கு ஏற்றாற்போல் சிகிச்சை வழங்குவதும் நடைமுறையாகிவிட்டது .கார்பரேட் சலுகைகள் ,ஊழல் என்று லட்சக் கணக்கான கோடிகளை இழக்கும் அரசு எல்லோருக்கும் சமமான மருத்துவம் கிட்ட வேண்டும் என்பதில் ஏனோ பாராமுகமாக இருக்கிறது .

பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் நட்சத்திர மருத்துவமனைகளில் போய் படுத்துக்கொள்கின்றனர் .வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளில் வேறு வழியின்றி தஞ்சம் புகுகின்றனர் .இதை சரி செய்ய அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு ,மாநில அரசு தனியாருக்கு காப்பீடு என்ற பெயரில் கோடிகளை இறைக்கிறது .நடுவண் அரசோ ,இந்தியாவை வல்லரசாக்கவும் பதவியில் உள்ளோர் எதிர்காலத்தை வளமாக்கவும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஜோத்பூரில், அலட்சியத்தால்,பல குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர் .இன்று வரையில் சரியான பதில் சொல்லவோ பொறுப்பேற்றுக் கொள்ளவோ எவரும் தயாராக இல்லை. இந்த மரணங்கள் ஒளிருவதாக நாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்தியாவில் அழிக்க முடியாத கறைகள் ,அவமானங்கள்.

Monday, 14 March 2011

ஆன்ட்டி வைரஸ்

முதன் முதலாக எச் ஐ வி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு வரும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான் ,"நோய் இல்லாம பண்ண மருந்து வந்திரும்ல ,எப்ப வரும் ?"இதை கேட்காத நோயாளிகள் கிடையவே கிடையாது .

இதோடு இது தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்திதாள்களில் வரும் அத்தனை செய்திகளையும் வெட்டி எடுத்துக் கொண்டும் வருவார்கள் ."இப்படி போட்டிருக்கிறதே ,இந்த மருந்து சாப்பிட்டு சரியாகும் என்று எழுதியிருக்கிறதே ?இது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பத்திரிகை ,இதில் போட்டிருந்தால் சரியாக இருக்கும் ,"என்றெல்லாம் நம்பிக்கையை மனதில் ஏந்திப் பிடித்துக் கொண்டு வருவார்கள் .

இன்னும் சிலர் ,நாங்கள் எச் ஐ விக்கு மட்டுமான பிரத்தியேக மருத்துவமனையாக இருப்பதால் நோய் ஒழிக்கும் மருந்து வந்தால் அது எங்கள் வருமானத்தை குறைக்கும் ,அதனால் நாங்கள் அதை கொடுக்காமல் போகக் கூடும் என்று முடிவு செய்துகொண்டு ,நாசூக்காக ,"அப்படி நோய் இல்லாமல் செய்வதற்கு மருந்து வந்தால் நீங்கள் கொடுப்பீர்கள் தானே? இந்த நோய்க்கு மருந்து வந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?" என்று கேட்டு வைப்பார்கள் ."வேறே நோய்க்கு வைத்தியம் பார்க்க போவோம் .ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக மருந்தை தருவோம் ,"என்று சளைக்காமல் நாங்களும் பதில் சொல்லுவோம் .

எல்லாருக்கும் நாங்கள் சொல்லும் பதில் அனேகமாக ,"ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன .கண்டிப்பாக அவை வெற்றி பெற்று மருந்து வரும் .அதற்கு இன்னமும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் .அதுவரை உங்கள் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுங்கள் ,தொடர்ந்து செக் அப்புக்கு வந்து கொண்டிருங்கள் "என்பதே .

போன மாதத்தில் வந்த ஒரு பெண் எல்லாம் கேட்டுவிட்டு சொன்னார் ,"கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்தா ஏதோ ஆன்ட்டி வைரஸ் சிடி போட்டு அத எடுத்திடுறாங்களே ,அதமாதிரி இதையும் அந்த மாதிரி ஏதாவது போட்டு எடுக்கக் கூடாதா ?"

Thursday, 10 March 2011

தேர்தல் மேடை -1

இரண்டு நாட்களாக ஜெயா பிளஸில்? என்று நினைக்கிறேன் ,திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் மேடைப் பேச்சுகளை ஒளிபரப்பி வருகிறார்கள் .நான் பார்த்தது இரண்டு நாட்கள் தான் .ஏற்ற இறக்கத்துடன் எளிமையான வாதங்களுடன் தங்கு தடையில்லாமல் அழகான தமிழில் அவர் பேசுவது கேட்கவே அருமையாக இருக்கிறது .இவரை போன்ற மேடைப் பேச்சாளர்கள் இப்போது விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள் .

இவரின் பேச்சில் நான் அதிகம் ரசித்த பகுதிகள்,

தன் பெயரை சொல்லாமல் வைகோவின் தம்பி சொல்கிறேன் என்று இவர் தன்னை விளித்துக் கொள்ளும் பாங்கு வித்தியாசமாக இருக்கிறது .

2ஜி ஊழல் பற்றி பேசும் போது ,"ஒரு லட்சம் எழுபத்தி ஆறாயிரம் கோடினா எனக்கு எழுதவே தெரியல .ஒரு சார்டர்ட் அக்கவுண்டன்ட் கிட்ட கேட்டேன் ,எண்பத்து அஞ்சாயிரம் கொடி பேருக்கு இந்த பணத்தை பிரிச்சு கொடுத்தா தலைக்கு எவ்வளவு வரும் ?ஆளுக்கு பத்தாயிரம் வரும்.
ஒரு பையர் இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டேன் ,இத கொளுத்தணும் ன்னா எத்தனை நாளாகும்ன்னு ,இருபத்து ரெண்டு நாளாகும் .ஒரு பஸ் கம்பனி முதலாளி கிட்ட கேட்டேன் ,இந்த பணத்தை எல்லாம் எடுத்துகிட்டு வரணும் ன்னா எத்தனை வண்டி தேவைப்படும்ன்னு ,இருநூத்தி அம்பது வண்டி தேவைப்படும் .அத்தனையையும் ஒருத்தனே எடுத்துகிட்டு வந்துட்டான் .அதனால தான் அவன் பேரு ராஜாவாம் ."

தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கொலைகளையும் அது தொடர்பான பெரியவீட்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு ....இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது வரை ...."இவர் இதயம் இனிக்கனும் கண்கள் பனிக்கனும்ன்னா மூணு பேராவது சாகனும் ."

அவரின் விதவை தங்கை ;தங்கையின் பொருளாதார சூழல் என்று பேசிவிட்டு ,"நான் சொன்னேன் ,ஏனம்மா ,ரேஷன் அரிசி வாங்கி சமைக்க வேண்டியது தானே என்று ,அவள் சொன்னாள் அது சமைக்க முடியாது அண்ணா ,அதை சமைக்க வேண்டுமானால் அரை சிலிண்டர் கேஸ் காலியாகிவிடும் ."

எல்லாவற்றிற்கும் மேலாக ,"கலைஞர் சொல்கிறார், நான் அவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேனாம் .எதற்காக நான் பொறாமைப்படவேண்டும் ?அவருக்கு என்ன ஆறடி கூந்தலா இருக்கிறது நான் பொறாமைப்பட ?"

ஆனால் ராஜாவையும் கனிமொழியையும் இணைத்து பேசும் சில சிலேடை பேச்சுகளை இவர் தவிர்க்க வேண்டும் .நேரம் கிடைத்தால் கேட்டு மகிழுங்கள் .

Thursday, 17 February 2011

செய்திகள் வாசிப்பது ...

பிரதமரின் பரபரப்பு பேட்டி

உப்பு சப்பில்லாமல் போரடிக்கும் கல்லூரி லெக்சர் போல இருந்தது .நான் "நொண்டி வாத்து" பிரதமர் இல்லை என்ற தனது நம்பிக்கையையும் தான் பதவி காலம் முழுக்க பதவியில் எப்பாடுபட்டேனும் ஒட்டிக் கொண்டிருக்க முடிவு செய்திருப்பதையும் தவிர வேறு எதையும் தெளிவாக சொல்லாமல் முடித்துக் கொண்டார் பிரதமர் .
இதை உடனே எல்லா தொலைக்காட்சிகளும் அக்குவேறு
ஆணிவேறாக பிரித்து போட்டு விவாதித்தார்கள் .

ஜெயா ..ராஜா மீது பிரதமர் குற்றச்சாட்டு என்றது
கலைஞர் /சன் ..நான் சரியாக பார்க்கவில்லை ..அவர்கள் இந்த பேட்டியை அதிகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
என் டி டி வி ...இதில் பிரணாய் ராயும் விக்கிரமும் விவாதித்தார்கள் ..வழக்கமாக இத்தகைய விவாதங்களில் பங்கேற்கும் அரசியல் தலைவர்களை டைம்ஸ் நவ்வும் சி என் என் னும் ஆக்கிரமித்தது காரணமாக இருக்கலாம் .பிரதமர் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நன்றாக பதில் அளித்ததாகவும் (நம் நாட்டின் விலைவாசியும் பொருளாதாரமும் இருக்கும் நிலையில் நம் பிரதமர் ஒரு பொருளாதார மேதை என்பதே நமக்கு மறந்து போகிறது ),மற்ற கேள்விகளை சாமர்த்தியமாக கையாண்டதாகவும் பிரணாய் கூறினார் .அவர் போட்ட மார்க் பத்திற்கு மூன்றாக இருக்கலாம் .
டைம்ஸ் நவ்வில் அர்னப் ,காரசாரமாக விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார் .நடிகர் திலகம் கோலோச்சிய காலத்து முகபாவங்களுடன் அவர் விவாதங்கள் நடத்தும் பாங்கே தனி ஸ்டைல் தான் .ஸ்பெக்டிரம் அலைக்கற்றையை குறைவான விலைக்கு விற்றதை மானியங்களுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியது இங்கு கடுமையாக விவாதிக்கப்பட்டது .இதனுடன் வழக்கமான மசாலாக்கள் சேர்க்கப்பட்டன .
சி என் என் னிற்கு போனால் அங்கும் மனிஷ் திவாரியும் ,வினோத் மேத்தாவும் இருந்தனர் .ஆளை விடுங்க சாமி என்று டி வியை அணைத்துப் போட்டேன் .

கண்டனக் கவிதை :
சேனல் சேனலாக தாவிக் கொண்டிருக்கையில் ஜெயா டிவியில் ஏதோ வனவிலங்கு வார விழா கவிதை போன்ற ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்கள் .பன்னி ,யானை என்று மாறி மாறி வந்து கொண்டிருந்தது .அந்த கவிதையை முழுவதுமாக கேட்டிருந்தால் இவை இரண்டையும் பற்றி ஒரு கட்டுரையே எழுதியிருக்கலாம். கொஞ்ச நேரம் போன பின் தான் தெரிந்தது "தத்தாரி" என்று முரசொலியில் ஏதாவது வந்திருக்கும் போல ,அதற்கு பதிலடியாக இந்த கவிதை .கடைசியில் "........வாழும் பன்றிகளை விட ,யானையாய் இருப்பதே மேல் "என்று முடிந்தது கவிதை ?அதைவிட பெரிய ஆச்சரியம் இதை இயற்றிய கவிஞர் நமது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமாம் .ஓஹோ ! !(ஜாக்கிரதையா இருங்க ஓ பி, உங்களுக்கும் கலைமாமணி விருது கொடுத்திரப் போறாங்க )தேர்தல் நெருங்க இன்னமும் யார்யாரின் வெளியிடப்படாத திறமைகள் எல்லாம் வெளிவருமோ !

கனிமொழி கைது :
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ,
ஸ்பெக்டிரம்-ராஜாவே காரணம் பிரதமர் பேட்டி ...
கனிமொழி கைது ...
திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
என்று ஒரு மாலை நாள் இதழின் விளம்பரம் ,கொஞ்சம் விஷமத்தனமாகவே சொல்லிக் கொண்டிருந்தது .ஆர்வமாக டிவியை பார்த்தால் ,மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டமாம் .டில்லியிலிருந்து சுஷ்மா ஸ்வராஜே வந்து போயாகி விட்டது .இவர் இப்போது தான் விழித்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய கிளம்பியிருக்கிறார் (இவரும் கொடநாடு போல எங்காவது போய் தூங்கிவிடுவாரோ ?)இந்த ஆர்ப்பாட்டமே ஒரு தமாஷ் என்றால் அதற்கு கைது அதைவிட பெரிய தமாஷ் . மகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார் ,அப்பா +அண்ணன் கைது செய்கிறார்கள் .புல்லரிக்கிறது ..ஆயிரம் தான் சொன்னாலும் மனுநீதி சோழர் பரம்பரை இல்லையா ?

இதை தவிரவும் அனில் அம்பானி நேற்று சி பி ஐ யின் முன் ஆஜராகி மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டது ,ரத்தன் டாட்டா தாத்தாவுக்கு அதாவது உதயநிதியின் தாத்தாவுக்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதம் ,தேவாஸ் -தங்கள் ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும் ,அதை மதிக்கும் கடமை அரசிற்கு இருக்கிறது என்று சொன்னது ,இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வென்றது ,மற்றும் சிலபல விபத்துகள் +கொலைகள் பற்றிய செய்திகளும் நேற்றும் பேசப்பட்டன .

Friday, 11 February 2011

ஒன்று எங்கள் ஜாதியே

இந்த பெரியவர் பல நாட்களாக சிகிச்சைக்கு வருபவர் தான் .சொந்த ஊர் ஆந்திரா .என்ன சொன்னாலும் சரியென கேட்டுக் கொள்வார் ."நீ என்ன சொல்றியோ ,அத நான் கேட்டுக்குறேன் ,நீ எப்ப ஆஸ்பத்திரிக்கு வரணும்ன்னு சொல்றியோ அப்ப வரேன்,வீட்டில எனக்கொண்ணும் வேல இல்ல .பொண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சி .அதனால நா எப்பவும் ப்ரீ தான் ."ஒவ்வொரு தடவையும் இதை சொல்லாமல் போக மாட்டார்


போன வாரம் வந்தவர், போகும் போது திடீரென ,"நீ பிராமினா ?"என்று கேட்டார் .நான் ஒண்ணும் சொல்லாமல் சிரித்த போது ,"பிராமினா ?ரெட்டியா ?நாயுடுவா ?"என்று மீண்டும் கேட்டார் .


திரும்ப திரும்ப கேட்கவும் எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது எனக்கு ."நான் என்னவாக இருந்தால் என்ன ?அதை நான் சொன்னாலும் உங்களுக்கு எப்படி புரியும் ?"என்று கேட்டவுடன் ,"அதில்லம்மா ,எங்க ஊரில எனக்கு நிறைய கோழிக்கறி கிடைக்கும்.நல்லா சுத்தம் பண்ணி ஐஸ் போட்டு கொண்டு வந்தா ,அப்படியே இருக்கும் .டேஸ்ட்டும் அவ்வளவு நல்லா இருக்கும் .என் பொண்டாட்டி டாக்டருக்கு கொண்டு போங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கா .நா தான் சாப்பிடுவாங்களோ என்னவோ ,நா கேட்டுக்கிட்டு வரேன் ன்னு சொல்லிட்டு வந்தேன் .அதான் அப்படி கேட்டேன் ,"என்று அவர் சொல்லவும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது எனக்கு ."உங்களுக்கு தெரியவேண்டியது நான் வெஜிடேரியனா இல்லை நான்-வெஜிடேரியனா என்பது தான் ,நான் ரெட்டியா ,பிராமினா என்பது இல்லை .நான் கண்டிப்பாக நான் -வெஜிடேரியன் தான் ,"என்று சொல்லி அனுப்பி வைத்தேன் .



Thursday, 10 February 2011

தேர்தல் ஸ்பெஷல் -1



மகராணி போல நானும்
ஊர் மெச்ச வாழ்ந்திருந்தேன்
மந்திரிங்க துதிபாட
ஆரவாரமாய் தானிருந்தேன்

எந்த கொள்ளி கண்ணு பட்டோ
கத மாறிப் போச்சுதிங்கே
தலையில் உதிர்ந்த முடிகூட
ஓடித்தான் போச்சுதங்கே

அறிக்கை எழுதி படிச்சாலும்
பகல் பொழுதே போகலியே
சி எம் மா இல்லாம
கண் உறக்கம் போதலையே


போயசு தோட்டத்தில
பல நாளு தூக்கமில்ல
பையனூறு போய் படுத்தா
கண் உறக்கம் கொள்ளவில்ல

கொடநாடு போனதில
உச்சி மண்ட குளுந்து போச்சு
கண்ண மூடி உறங்கையில
வெளி ஒலகம் மறந்து போச்சு

அட கண் முழிச்சு பாக்கையில
வருஷம் நாலு ஓடி போச்சு
பொசுக்குன்னுதான் அல போல
ஊர் நெலம மாறிப் போச்சு

லட்ச்சமாம் கோடியாம்
லட்ச்சத்தில கோடியாம்
தெருக்கோடி காணா கேடிஎல்லாம்
கோடியில பொரளுறாங்க

சுடுக்காட்டில் சில கோடி
தங்கமா சில கோடி
ஆயிரம் கூட தேறலையே
மனசும் தான் ஆறலையே

எங்க போயி வெசனப்பட
எவரிடத்தில் போய் நிக்க
பாவி மக வாயிகிட்ட
ஒரு லட்சம்கோடி வாய்க்கலையே

தேர்தல் இப்ப வந்திருச்சி
வாய்க்கு வேல வந்திருச்சி
கோடி மேல கோடியெல்லாம்
வாய்க்கும் வேள வந்திருச்சி

வானம் முட்ட மேட போட்டு
கலர் கலரா லைட்டு போட்டு
காது கிழிய செட்டு போட்டு
டிவியில லைவ்வு போட்டு

கால் கடுக்க நிக்கனுமே
கையைத்தான் ஆட்டனுமே
தலைவர் பேர் சொல்லணுமே
வாய் வலிக்க பேசணுமே

கூட்டணிய சேக்கனுமே
பல பேர பாக்கணுமே
ஆளுக்கு இத்தனைன்னு
பேரத்த முடிக்கன்னுமே

என்னத்த சொல்லிகிட
பல சோலி பாக்கணுமே
கண்டவங்க மொகம் பாத்து
பல்லிளிச்சு பேசணுமே

ஊர் ஊரா போகணுமே
காருல தான் திரியனுமே
குப்பை கொட்டி விட்டாப்புல
நோட்டத்தான் கொட்டனுமே



எத்தன தான் வேல பாக்க
எப்படி நான் பாடு பட
சேதி வெளங்க வார வர
சங்கடம்தான் எங்க சொல்ல

ஜெயிச்சு தான் வந்துபுட்டா
ஜோராத்தான் இருந்திடலாம்
அட தோத்துத்தான் போச்சுதுன்னா
கொடநாட்டில் ஒறங்கிடலாம்




Tuesday, 8 February 2011

மூன்று மீனவர்கள்



மூன்று மீனவர்கள் கடலுக்கு போனார்கள், மேற்கு நோக்கி
மேற்கு நோக்கி போனார்கள் ,சூரியன் மறையும் நேரம்
தன்னை மிக நேசித்தவளை தத்தம் நினைவில் நிறுத்தி
ஊர் தாண்டும் வரை சிறுவர்களும் பார்த்து நின்றார்கள்
ஏனெனில், ஆண்கள் உழைக்க வேண்டும்,
பெண்கள் அழ வேண்டும்
ஈட்டிட சொற்பமே ஆனால் காத்திட அநேகர்
அழிவாய் முனங்கிக் கொண்டிருந்தாலும்


மூன்று மனைவிகள் பார்த்திருந்தார்கள் ,கலங்கரை விளக்கத்தில்
,சூரியன் குறைய தங்கள் விளக்குகள் தூண்டி
மழைபொழிவை பார்த்தார்கள், வரும் புயலைப் பார்த்தார்கள்
இரவுப்புயல் ,கரடுமுரடாய், புழுதியாய் உருண்டு வந்தது.
ஆனால் ஆண்கள் உழைக்க வேண்டும், பெண்கள் அழ வேண்டும்
புயல்கள் அறிவிப்பற்றதாக இருந்தாலும் நீர் ஆழமாகவும்
அழிவாயும் முனங்கிக் கொண்டிருந்தாலும்

மூன்று பிணங்கள் ஒளிரும் மணல்மேல் கிடந்தன
காலைச் சுடரில் அலைகள் வடியும் போது
கைபிசைந்து பெண்கள் கதறி அழுகிறார்கள்
இனி வீடு வாராது போனவர்களுக்காக
ஏனெனில் ஆண்கள் உழைக்க வேண்டும்,
பெண்கள் அழ வேண்டும்
விரைவில் முடிந்தால் விரைந்து உறங்கலாம்
பிரியாவிடை அழிவாய்க்கும்,
அதன் முனகலுக்கும்


The Three Fishers


THREE fishers went sailing away to the West,
Away to the West as the sun went down;
Each thought on the woman who loved him the best;
And the children stood watching them out of the town;
For men must work, and women must weep,
And there's little to earn, and many to keep,
Though the harbor bar be moaning.




Three wives sat up in the lighthouse tower,
And they trimmed the lamps as the sun went down;
They looked at the squall, and they looked at the shower,
And the night-rack came rolling up ragged and brown.
But men must work, and women must weep,
Though storms be sudden, and waters deep,
And the harbor bar be moaning.




Three corpses lay out on the shining sands
In the morning gleam as the tide went down,
And the women are weeping and wringing their hands
For those who will never come home to the town;
For men must work, and women must weep,
And the sooner it's over, the sooner to sleep;
And good-by to the bar and its moaning.




Charles Kingsley


harbour bar என்பதற்கு அழிவாய்
என்ற பொருளை இந்த தளம் சொன்னது நன்றி :eeehttp://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.1669202







Tuesday, 4 January 2011

தனியே






மறுபேச்சில்லாத நிலத்தின் மௌனமும்
மறுமொழியல்லாத கடலின் ஒலிகளும்
ஒரே பொருளில் ஒன்றையே எனக்கு சொல்லும்
தனியே தனியே தனித்து நிற்கிறோம்
அதனால் நில், நீயும் தனியே
அப்பழுக்கில்லாத
உன் உள்மன தனிமையின் பிணையில் இருக்கிறாய்
நாங்கள் பிணைக்கவில்லை உன்னை


ஆனால் ,
உன் சுயகட்டுகளிலிருந்து விடுவிப்பது யார் ?
எவர் இதயம் உன் இதயம் தொடும் ?
எவர் கைகள் உன் கைகளை ?


நானும் ,
சில போதுகளில் செருக்காகவும்
சில போதுகள் பணிவாக
இன்னும் சில வேளைகள்
கடந்த நாட்களின் நினைவுகளில்...
நானும் உலகமும் இத்தனை விறைப்பாய் இல்லாத நாட்கள்
நட்பு எட்டும் தொலைவில் கிடைத்த நாட்கள்
வாழ்க்கை பலம் குறைந்தது போல் அல்லாமலும்
நம்பிக்கை வலுவாகவும்
வானவில்லின் பாதங்களில் தங்கம் நிச்சயம் கிடந்தது



ALOOF



by: Christina Rossetti (1830-1894)









      HE irresponsive silence of the land,

      The irresponsive sounding of the sea,

      Speak both one message of one sense to me:--

      Aloof, aloof, we stand aloof, so stand

      Thou too aloof, bound with the flawless band

      Of inner solitude; we bind not thee;

      But who from thy self-chain shall set thee free?

      What heart shall touch thy heart? What hand thy hand?

      And I am sometimes proud and sometimes meek,

      And sometimes I remember days of old

      When fellowship seem'd not so far to seek,

      And all the world and I seem'd much less cold,

      And at the rainbow's foot lay surely gold,

      And hope felt strong, and life itself not weak.