Wednesday, 18 March 2009

வாழ்க்கை துணைநலம்

சிகிச்சைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தம்பதியர் இவர்கள் .
இருவரும் பாதிக்கப் பட்டிருப்பது வேதனை .இவர்களுடைய ஒரே மகனிடமும் இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர் .மனைவி சொல்லலாம் என்று சொல்ல இவர் நான் இறந்து விடுவேன் என்று மிரட்ட, போய்க் கொண்டிருக்கிறது இது தொடர்கதையாய் .


கணவர் எப்பொழுதும் நான் செய்த தவறால் என் மனைவியும் பாதிக்கப்பட்டுவிட்டாள் என்று புலம்பிக் கொண்டே இருப்பார் .இதே புலம்பல் தொடர்ந்து மன நோய் அளவுக்கு கொண்டு சேர்த்தது அவரை .பின்பு ,மன நோய்க்கு வேறு சிகிச்சை எடுக்க வேண்டி வந்து சரியானார்.


போன
வாரம் வந்த போது கூட இவர் மனைவி சொன்னார் ,"எல்லாம் நான் தான் கையிலே எடுத்துக் குடுக்க வேண்டியிருக்கிறது .டவல் முதல் பிரஷ் வரை ,"என்று .நானும் விளையாட்டாக ,"கெடுத்து வைத்திருக்கிறீர்கள் அவரை ,"என்று சொன்னேன் .உடனே அவர் ,"ஆமாம் டாக்டர் ,இப்பேற்பட்ட மனைவிக்கு நான் தான் துரோகம் செய்து விட்டேன் .என்னால் அவளும் சேர்ந்து சிரமப்படுகிறாள்,"என்றார் கண்களில் நீர் மல்க .


இது மட்டுமே நோய் வரக் காரணமில்லை .வேறு வழிகளிலும் வந்திருக்கலாம் .இது குறித்து வருந்துவதை தவிர்த்து இனி செய்ய வேண்டியதை கவனியுங்கள் என்று பலவாறாக ஆறுதல் ,ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தோம் .


மனைவியிடம் இத்தனை நேசம் வைத்திருப்பவர் ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வருமுன் தடுத்திருக்கலாமே ?

Thursday, 12 March 2009

கர்ப்பசித்தர்


நன்றாக நினைவிருக்கிறது எனக்கு .நானும் என் அத்தையும், அத்தை வீட்டு பால்கனியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தோம் .

சில நாட்களுக்கு முன்பு தான் என் சித்தப்பாவின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று திரும்பியிருந்தேன் .அவர்கள் குல தெய்வம் பெயர் "பெத்தனாஷி அம்மன்" .இவர்கள் வழக்கப்படி பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட இந்த பெயர் துவங்கும் படிதான் பெயர் வைக்க வேண்டும் .இதற்கென "பெத்தம்மா","சின்ன பெத்து " என்றெல்லாம் பெயர் வைப்பார்கள் .ரொம்ப வேடிக்கையாக தோன்றியது இது எனக்கு .


என் அப்பா குடும்பத்தில் எல்லோரும் நாத்திகர்கள் ஆனபடியால் ,இவர்கள் கோவிலின் பூசாரிகள் என்று தெரிந்தாலும் ,ஆலடிப்பட்டி வைத்தியலிங்கசாமி கோவில் ரொம்ப சிறப்பு பெற்றது என்று அறிந்தாலும் வேறு எந்த விவரமும் தெரியாது எனக்கு .


இந்த பெத்து விஷயத்தை சொல்லி நான் சிரித்துக் கொண்டிருந்த போது சொன்னார் ,"நமக்கும் குல தெய்வம் இருக்கு ,பேரு கருப்பஸ்தர்",என்று .ஆச்சரியமாக இருந்தது எனக்கு ."கோயில் உள்ளேயே தான் இந்த சாமியும் இருக்கு ",என்று இடத்தையும் குறிப்பிட்டுக் கூறினார் .


பின்னாளில் தெரிய வந்தது எனக்கு ,இவர் பெயர் கருப்பஸ்தர் இல்லை கர்ப்ப சித்தர் என்று .இவருக்கென வெள்ளியில் ஒரு கிரீடம் செய்து விட்டு வந்தார் என் அம்மா .இப்போது கோவிலில் இவருக்கென ஒரு தனி பிரகாரம் அமைத்திருப்பதாகக் கூறினார்கள்.போய்ப் பார்க்க வேண்டும் .

Wednesday, 11 March 2009

பழங்கள்


கூடை நிறைய சேர்ததிருக்கிறேன்
பல வகையான பழங்களை
கனிந்ததும் கனியாததுமாக பல ரகங்கள்


எங்கே சேர்த்தேன்
எதற்காக ?
என்பதெல்லாம் நினைவில் இல்லை


வெறும் பொழுதுகளில்
ரகம் பிரித்துப் பார்க்கிறேன்
எஞ்சியவற்றை மீண்டும் கூடையில் சுமக்கிறேன்


சில அழுகல் பழங்கள்
தப்பிக் கிடக்கின்றன
மற்றவற்றையும் அழுகச் செய்து கொண்டு


வாடை வரும் வரை
உறைக்கவில்லை
கூடை நிறைய அழுகல் என்று


தெரிவு செய்ய எத்தனித்தால்
கையும் சேர்ந்தே கறைப் பிடிக்கிறது
கூடையை மாற்றலாமோ ?

Tuesday, 10 March 2009

அது ஒரு பூக்காலம்


அது ஒரு பூக்காலம்
பாரமான நீர்த் துளிகளை
சடுக்கென்று உதறி விட்டு
சட்டென்று நிமிர்ந்து விடும் பூவாக
சிரித்து திரிந்த பூக்காலம்


இதுவும் ஒரு பூக்காலம்
எங்கோ தன் இதழில்
கீறி விட்ட ஒரு வலியில்
முழுவதுமாய் வாடும் பூவாக
முட்களுக்கஞ்சும் பூக்காலம்

யாரை நம்பி

என் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண் இவர் .கணவர் முதலில் சில மாதங்கள் சிகிச்சைக்கு வந்தாலும் பின்னர் சரியாக வரவில்லை .இந்த பெண் சரியாக வந்தாலும் மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை .



ஒரு நாள் மூளைக் காய்ச்சலோடு கணவரைக் கொண்டு வந்து சேர்த்தார் .நல்லமுன்னேற்றம் ஏற்பட வீடு திரும்பினார் அவரும்.பின் சில நாட்களிலேயே நோய் ரொம்பவும் முற்றிப் போய் இறந்தும் போனார் .


இது இப்படியிருக்க இந்த பெண் கண்ணீரும் கம்பலையுமாக நேற்று வந்து நின்றார் .விசாரித்ததில் ,இந்த பெண் ஏற்கெனவே திருமணமானவராம்.தன் கணவர் ,இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இந்த நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் .இவர் உடல் நலமோடு இருந்த மட்டும் இவரை ஏற்றுக் கொண்ட அவர் குடும்பத்தினர் ,இப்போது ஒரு வேளை உணவு கூடக் கொடுக்க மறுப்பதாகக் கூறினார் . தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கூறினார் .இவர் குழந்தைகளும் இவரிடம் பேசவே மறுக்கின்றனராம் .
இந்த பெண்ணுக்கு இப்போது மிஞ்சியது எச்.ஐ.வி மட்டுமே .


நாங்கள் கேட்டோம் ,"இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது,நாங்கள் எத்தனை முறை சொன்ன பின்னும் , நீங்கள் ஏன் மருந்துகளை அவரை சாப்பிடச் செய்யவில்லை ?"அதற்கு அவர் ,"நான் என்ன கூறினாலும் எனக்கு கடவுள் வழி காட்டுவார் என்று சொல்லி அவர் மறுத்துவிட்டார்",என்றார் .

நான் சொன்னேன்," கடவுள் ,மருத்துவமனையைக் காட்டினார் ,மருந்துகளைக் காட்டினார் .அதை சாப்பிட வேண்டிய வேலையை உங்களிடம் கொடுத்தார் ,நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் நோயை அதிகமாக்கிக் கொண்டீர்கள் "என .

Saturday, 7 March 2009

என் பட்டாம்பூச்சி


ஒரு பட்டாம் பூச்சியாய்
என்னை கடந்து போகின்றன
என் சந்தோஷங்கள்


விரட்டிக் கொண்டே போகிறேன் நான்
என்னை தாண்டிப்
பறந்துக்கொண்டேயிருக்கிறது அது


எட்டிய போதெல்லாம்
கையில் பட்டது
மகரந்தமும் வர்ணங்களும் தான்


மகரந்த வாசனையும்
வர்ணத்தின் ஸ்பரிசங்களும்
இத்தனை சுகமென்றால்
பிடித்தே ஆக வேண்டும்
என்று விரட்டுகிறது மனம்


முழுதாய் பிடித்து விட்டால்
எதை தான் விரட்டவென்று
பறக்க விட்டுக் கொண்டே இருக்கிறேன் நான்

Thursday, 5 March 2009

வயதான ரேஸ் குதிரையின் ஏக்கம்

டிராக்கிலே நான் நடந்து வந்தா
ஜாக்கிக்கெல்லாம் நடுங்கி போகும்
ஓடி நான் வருகையிலே
மத்த குதிரை ஓட்டம் அடங்கிப் போகும்


ஓடி ஓடி ஓலச்சதிலே
ஓன் புகழும் கூட ஏறி போச்சு
ஓடி நான் ஜெயிச்சதிலே
ஓன் சொத்தும் கூட கூடிப் போச்சி


ஓடத் தொடங்கி நாள் முதலா
பட்டுக் கடிவாளம் கேட்டேனா
காலுக்கு தான் தங்கத்திலே
செருப்பு செய்ய சொன்னேனா


வயசான காலத்திலே
கொஞ்சம் கொள்ளு தான்னு கேட்டிருக்கேன்
ஓட்டமெல்லாம் ஒஞ்ச காலம்
வாய்க்கு தண்ணி தான் கேட்டிருக்கேன்


அதுக்குள்ள பொசுக்குன்னு
என்ன சுட்டு போட சொல்லிட்டியே
கேட்க ஒரு ஆளிலைன்னு
தட்டி விட சொல்லிட்டியே


எளங்கோ வந்து சொல்லலைன்னா
மண்ணோட போயிருப்பேன்
மவராசன் இல்லையின்னா
சுடுகாடு போயிருப்பேன்


என் உசிரை காப்பாத்த
பாட்டோட பறந்து வந்த
எஜமான்.. என் குலத்தில்
இன்னும் சில பேரை மீட்டிடையா

வெள்ளம்

மழை பெஞ்ச கோலத்தை
கண்ணெதிர சொல்லிப்புட்ட
நீ அழுத கண்ணீரில்
என் தலை மாட்ட நனைச்சி புட்ட


என்னூரில் பெஞ்ச மழை
உன் நெஞ்ச நனைச்சிருச்சே
நீ அழுத கண்ணீரில்
என் மனசெல்லாம் கரஞ்சிருச்சே


ஒத்தையில நீ அழுதா
எம்மனசு தாங்காது
உன் கண்ணீரின் ஈரத்திலே
என் கண்மையும் காயாது


ஊருக்குள்ள வெயிலெல்லாம்
கொளுதினப்ப பெய்யலியே
வருணனுக்கு தவமிருந்து
கும்பிட்டப்ப பொழியலையே
ஊர் கழுதைக்கு கல்யாணம்
செஞ்சப்ப வரலையே
என்ன கொற தீக்க
இப்ப ஊரு மூழ்க வந்திச்சோ


வயல் உழுக போன
எம்மாமன் மனம் தாங்கலையே
நெலமே ஏரி ஆக
கண்ட கோலம் பொறுக்கலையே
நெல்லடுக்கி வச்ச களமெல்லாம்
முளைச்சுதிப்ப வயலாக


கோடி கோடி பணத்தை கொட்டி
ரோட்டை போட்டு வச்சாங்க
போட்ட ரோட்டை காங்கலியே
போன எடம் தெரியலையே


தண்ணி வந்தா பேப்பர்
கப்பல் விடும் சின்னதெல்லாம்
படகெடுத்து வந்த கோலம்
கண்ணுக்குள்ள மாறலையே


என்ன சொல்லி என்ன பண்ண
பெஞ்ச மழை பெஞ்சது தான்
மவராசி அழாதே
எம்மனசு கத்தி அழும்
கண்ணீர துடைச்சிட்டு
பத்திரமா வந்து சேரு

பேர் சொல்ல

கண் கசக்கி நின்ன உடனே
கை நீட்டி நிக்கிறீங்க
நீட்டின்ன கை அத்தனையும்
கைக்குட்டை பிடிச்சிருக்கு


பிழிய பிழிய அழுதுவிட்டா
பாரம் கொஞ்சம் எறங்கி விடும்
சத்தமாக அழுதுவிட்டா
சங்கடம் கொஞ்சம் தீர்ந்து விடும்


பூவான எம் மனசு
சொமந்த பாரம் எறங்கிடுச்சி
கல்லுன்னு நெனைச்சதெல்லாம்
கற்கண்டா தெரிஞ்சிரிச்சி


எவர் வந்து அழைப்பாரோ
எமன் வந்து அழைக்கு முன்னே
எந்த பேர் சொல்வாரோ
என ஏங்கி நின்னு அழுகையிலே


மதுரையிலே வீரம் உண்டு
மதுரையிலே மல்லி உண்டு
மல்லிக்கும் மேலான
பூ மனசு அங்க உண்டு


சீனா தானான்னு எளக்காரமா பாட்டிருக்கு
அந்த பாட்டெழுதி வச்ச பய
வாயெல்லாம் வெந்து போக
பூங்குழலி ன்னு வாய் நெறைய
பேரு சொல்லி அழைச்சாங்க
புன்ணான மனசுல தான்
மருந்தள்ளி தெளிச்சாங்க
செல்வியை திருமதியா
கொண்ட அய்யன் நீ வாழ்க
உன் குலமெல்லாம் சங்கருன்னு பேர் சொல்ல
சந்தோஷமா தான் வாழ்க

பேர் சொல்ல

என்ன சொல்லி அழுதாலும்
பாவி மனம் தாங்கலையே
என்ன ஆறுதல் சொன்னாலும்
பாழும் மனம் ஆறலையே


தேன் குழலின்னு பேரு வச்சா
வாயெல்லாம் இனிக்குமின்னு
கார்குழலின்னு பேரு வச்சா
சொன்ன வாய் வலிக்குமின்னு
வாய் நோகாம கூப்பிட தான்
பூவான பேரு வச்சாங்க


குழலின்னு சொல்லிப் பார்த்தா
தமிழ் வருமேன்னு ஆசைப்பட்டு
குழலின்னு தமிழ் பேரா
தேடிப் பிடிச்சு வச்சாங்க


பேரு சொல்ல ஆளில்லாம
மனம் நொந்து வாடையிலே
ஊரு பத்தி என்ன பாட
யார் கிட்ட போய் சொல்ல


ஒத்த சனம் மட்டுமாவது
என் முன்னாலே வந்து நின்னு
பூங்குழலின்னு வாய் நிறைய
பேரு சொன்ன மறு நிமிஷம்
ஊரு பத்தி பாட்டெடுத்து
வித விதமா பாட வாரேன்

பேர் சொல்லும் பிள்ளை

தொட்டிலில என்ன வச்சு
ஊரையெல்லாங் கூட்டி வச்சி
அழகா தான் பேரும் வச்சி
ஆசையா தான் வளர்தாரே ......எங்கப்பா...


அவர் ஆசையா வச்ச பேர
சொல்ல ஒரு நாதியில்ல
வாய் நெறைய கூப்பிடவும்
அவர விட்டா ஆளுமில்ல


என் பேரு பட்ட கஷ்டமெல்லாம்
வேறு யாரு பேரும் பட்டதில்ல
வச்ச பேர வச்ச படி
மெச்சிக்கிட்டு சுத்துராங்க


கல்கி மவராசன் சொன்ன பேருன்னு
கவி கம்பரும் கூட சொன்னாரின்னு
ஆசையா தேடிப் பிடிச்சு
ஆரவாரமா பேரும் வச்சா


வாய் பேச தெரிஞ்சவங்க
வாய்க்கு வசதியா கூப்பிடுறத
யாரு கிட்ட சொல்லி அழ
எந்த பேர நெனைச்சி அழ


ஆள வெட்ட முடியாம
பேர மட்டும் பாதி வெட்டி
மீதி பேர நிர்கதியா விட்டாங்க
அத சொல்லி அழவா


பூங்கான்னு வெட்டி போட்டு
பூங்ஸ்ன்னு கட்டி போட்டு
அன்பால கட்டி போட்டு
இப்ப பூங்ஸின்னு பல் வழியே
கட்டின பல் வழியே
பேரை குத்தியத சொல்லணுமா


முழுப் பேரு பள்ளிக்கூட
வருகை ஏட்டோட அழிஞ்சி போச்சி
மிச்சமாகி கிடப்பதெல்லாம்
கண்ட பல்லு பட்டு கிழிஞ்சி போச்சி

ஒரு தேர்தல் வேட்பாளரின் ஒப்பாரி

இந்த இழையில் இடம் பெற்றிருக்கும் ஒப்பாரி பாடல்கள் எல்லாம் "அன்புடன் "குழுமத்தின் "சமுதாய ஒப்பாரி "இழைக்காக எழுதப்பட்டவை .இதை முழுமையாக சுவைக்க விரும்புகிறவர்கள் இங்கு செல்க .

http://groups.google.co.in/group/anbudan/browse_thread/thread/99a4160c23cc4a95/fadebbf44f5b8c8d?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF&lnk=ol


மண்ணுக்கு தான் பத்துன்னு
ரோட்டுக்கு தான் பத்துன்னு
பள்ளம் மேடு பாத்து வச்சி
பத்து பத்தா சேத்து வச்சேன்

சுருக்கா தான் சில கோடி
சேத்து தானே போட்டு வச்சேன்
மாமியாக்கும் மச்சிணிக்கும்
அதில் கொஞ்சம் கொடுத்து வச்சேன்

சேத்து வச்ச பணத்துக்கெல்லாம்
பங்கம் தான் வந்திருச்சி
கட்டிலிருந்து கொஞ்சம் நோட்டை
தொலைக்க வேளை வந்திருச்சி

தேர்தல் தான் வந்ததின்னு
ஊரெல்லாம் சொல்லி வச்சா
எவருக்கிண்னு கொடுக்க நா
எவருக்கு தான் மறுக்க


போஸ்டருக்கும் பாணருக்கும்
கொஞ்சம் காசு கரஞ்சி போச்சி
தலைவரு வந்த செலவுக்கு
இன்னும் கொஞ்சம் தொலஞ்சி போச்சி

வோட்டுக்கு இத்தனை ன்னு
எண்ணி தானே கொடுத்திருக்கேன்
எங்க போய் குத்துவானோ
பயத்தில தான் ஓரஞ்சிருக்கேன்

சரியாக போட்டுட்டான்னா
ஜெயிச்சி சபை போயிடுவேன்
மாத்தி தான் போட்டுட்டான்னா
கடங்காரன் ஆயிடுவேன்

திறவுகோல்


என் நொடிகளெங்கும்
சோதனைச் சாவடிகள் வைத்து
என்னை தாண்டச் செய்கிறாய்
தப்பி வரும் எனக்கு பதக்கங்கள் இல்லை
காயங்கள் மட்டுமே


என் நிர்வாணமெங்கும்
எவர் எச்சங்களையோ தேடுகிறாய்
தேடல் தோற்ற பின்னும்
தோலுரித்துப் பார்க்கிறாய்
வழிந்துக் கொண்டிருக்கும் குருதியை சட்டை செய்யாமல்


இத்தனையில் களைத்துப் போய்
தூங்கப் போகிறேன்
என் கனவுகளை கண்காணிக்க
திறவுகோல் கேட்கிறாய்
எங்கு போவேன் ?





















Monday, 2 March 2009

சிறை




நடந்து கொண்டிருக்கிறேன்
முன்னர் பலரும் நடந்த பாதை தான்
காலில் தட்டியது சின்னதாய் நூல்


தூர எறிந்திருக்கலாம் தாண்டியேனும் குதித்திருக்கலாம்
ஏதும் நினையாமல் கையில் எடுத்து விட்டு
ஏந்தியபடியே நடக்கிறேன்


நடந்துகொண்டே இருக்கிறேன்
இன்னும் சில நூல்கள் என் கையில் இப்போது
போய்க் கொண்டே இருக்கிறேன்


கண்மறைக்கும் வரையிலும்
புலனாகவில்லை
நூலுக்குள் இப்போது நான் சிறைப்பட்டிருக்கிறேன்


பட்டாம்பூச்சியாவதா ,சமாதியாவதா ?
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நுனி இன்னமும் என் கையில்