மழை பெய்யும்
என்று சொன்னீர்கள் ,
குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .
மழை பெய்யாது என்று சொன்ன நாளில் ,
கொட்டிய மழையில் நனைந்தோம்.
ஏதேனும் ஒருநாளில்
நீங்கள்
பெய்யும் எனும்போது
பெய்கிறது மழை.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
மழை பெய்யும்
என்று சொன்னீர்கள் ,
குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .
இணையத்துல நம்ம மேல எறியப்படுற பல பேட்டிகள்ல நேத்து ரொம்ப ரசிச்சது திருமதி சுஜாதா ரங்கராஜன் அதாவது எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி அவள் விகடனுக்கு கொடுத்த பேட்டி .எதுக்குமே பெருசா யோசிக்காம அசால்ட்டா பதில் சொன்னாங்க .
வெளில நாம பாக்கறதுக்கு பெர்சனல் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்ங்கிறது நாம எதிர்பார்த்த ஒண்ணு தான் .ஆனாலும் சுஜாதா விஷயத்துல நிறைய .மனிதர் வீட்லேயே strangerஆ தான் இருந்திருக்கார் .
கல்யாணம் ஆகி அவரோட குடித்தனம் போன டைம் கேப்ல அவர் முகமே மறந்து போச்சுன்னும் ஸ்டேஷனுக்கு வந்த அவர அடையாளம் தெரியலைனும் யதார்த்தமா சொன்னாங்க .Laapataa ladies மாதிரி ....
இவங்களோட அம்மா அப்பாவ Mr and Mrs னு பேர் சொல்லித்தான் அழைப்பார்னு சொன்னாங்க .என்னடா இதுனு நாம யோசிச்சா அது ஏன்னு தனக்கு தெரியாதுனும் சொன்னாங்க .ஏன்னு கேக்கவே இல்லை போல !
ஒரு நாளிலேயே நாலு அல்ல அஞ்சு வார்த்தை தான் பேசிப்பாங்களாம்.எல்லாத்துக்குமே அந்த காலத்துல அப்டித்தான்னு ஒரு பதில் வச்சிருந்தாங்க .முக்கியமா அவர் இறந்தப்ப அவரோட finances பத்தி எதுவுமே அவர் சொல்லாம போய்ட்டார்ங்கறது ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது .எல்லாத்திலேயும் அப்டேட்டடா இருந்த சுஜாதா !
பிள்ளைகள் படிப்பு விஷயம் கூட தெரியாதாம் .அது நிறைய இடங்கள்ல சகஜம் தான் .சுஜாதா ஒரு குழந்தை பாத்திரம் குறித்து சொல்லிருப்பார் ."நான் பாக்காமலேயே அடக்கம் செய்யப்பட்ட என் குழந்தையின் நினைவாக அது தன்னை அறியாமல் நடந்திருக்கலாம் போல"னு ...
ஆனா அவர் நல்ல மகனா, தன்னோட அம்மா அப்பாவை நல்லா பாத்துக்கிட்டார் போல .
நிறைய பிரபலங்களோட இணையர் அவங்கள பத்தி பொதுவில் பேசும் போது ரொம்பவே உயர்வு நவிற்சியிலேயே பேசுவாங்க .அதுக்கு மாறா இவங்க ரொம்ப இயல்பா பேசினாங்க .
போன்ல ,
"சுஜாதா இருக்காரானு கேட்டா என்ன சொல்வீங்க ?"
"வெளிய போயிருக்கார்னு சொல்வேன் ."
"நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்வீங்க ?"
"மிஸஸ் -ரங்கராஜன்னு சொல்வேன் "😍
நேற்று Chennai Bookfair போனவங்க பிங்க் சுரிதார் +கண்ணாடி +backpack +shoes போட்ட ஒரு பெண்மணியை காண நேர்ந்திருக்கலாம் .நான் தான் . சென்னை bookfair போய் வந்தாச்சு .நுழைவு சீட்டு 9ஆம் எண் கவுன்ட்டரில் கிடைக்கும்னு அறிவிக்க ஆரம்பிச்சு நான் வெளியே வரும் போது மூணோ நாலோ அறிவிச்சிட்டிருந்தாங்க.சுழற்சி முறை போல .நாலு மணி போல போனேன் .7 மணி போல கிளம்பியிருப்பேன் .
கூட்டம் குறைவு தான் .நடக்க நிறைய இடம் .ஒரு நாய் உள்ள திரிஞ்சிக்கிட்டு இருந்தது .அதுக்கு நாலு பேர் விளையாட்டு காட்டிட்டு இருந்தாங்க .அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ? ஸ்டால்ஸ் விசாலமா இருந்தது .புதுசா எதுவும் பார்த்ததா நினைவு இல்ல .
சுயமரியாதை பதிப்பகத்துல எப்பவும் போல எட்டாத இடத்துல பெரியார் புத்தகங்களை வச்சிருந்தாங்க .குறியீடு போல .நான் பெண்ணுரிமை பாகம் 1 கேட்டப்ப (யார்கிட்ட கொடுத்தேன்னு நினைவு இல்ல ),வழக்கம் போல தேடி கண்டுபிடிச்சு கொடுத்தாங்க .ஆசிரியர் வாழ்க .இத பார்த்திட்டிருந்த ஒருத்தர் பெரியாரை பத்தி ரெண்டு நிமிஷம் பேசறீங்களான்னு கேட்டு ,பதிவு பண்ணிக்கிட்டார் .
தேசாந்திரியில எஸ்.ரா இல்லாதது வருத்தமா இருந்தது .அவரும் மனுஷும் பெரும்பாலும் இருப்பாங்க .புக் வாங்கிட்டு வரதுக்குள்ள வந்துட்டார் .அவர்கிட்ட கையெழுத்தும் வாங்கி போட்டோவும் எடுத்தாச்சு.நெடு நாள் ஆசை திருநாளாச்சு மொமன்ட் .மூக்க உறிஞ்சிட்டுகிட்டு இருந்தார் . மேலுக்கு முடியல போல .அப்பக்கூட முகம் சுழிக்காம சிரிச்சிக்கிட்டே பேசினார் . கூட்டத்துல மாஸ்க் போட்டுக்கோங்கனு வாய் வரைக்கும் வந்தது .ஓரமா அதக்கிட்டேன் .எவ்வளவோ தெரிஞ்சவருக்கு இது தெரியாதா ?
புத்தர் சம்பந்தமான புத்தகம் நிறைய இருந்த மாதிரி தோணிச்சு .ஏறக்குறைய எல்லா ஸ்டாலிலேயேயும் பெரியார் ,அம்பேத்கர் பத்தின புத்தகங்கள் இருந்தது .நிறைய Tintin collections பார்த்தேன் .சில பாலஸ்தீனம் சம்பந்தமான புக்ஸ் தென்பட்டது .அதோட மோடி பத்தி சில புக்ஸ் .அநேகமா எதிர்த்து எழுதினது.ரெண்டே இடத்துல ராகுல் காந்தி போஸ்டர் சின்னதா இருந்தது .இந்த பாரத் ஜோடோவை இந்நேரத்துல புக்காகிருக்கலாம் .
அண்ணா படைப்புகள் தொகுப்புல ,தனியா ஒரு புத்தகம் தர முடியாதுனு சொல்லிட்டாங்க .134ம் வாங்க முடியுமா ?ஏன் நீங்க பெரியார் புத்தகங்களை தர மாதிரி தனியா தரக்கூடாதுனு கேட்டுட்டு வந்தேன் (நாட்டுக்கு நல்லது சொல்வோம் ).டிநகர்ல பதிப்பகத்துல அப்படி தருவாங்களாம் .இங்க இல்லையாம் .தனியா படிச்சா continuity இருக்காதாம் .கட்டுரை தொகுப்புல என்ன continuity ?
வலைபேச்சு பிஸ்மி புத்தகங்கள் கிடைக்கும்னு ஒரு ஸ்டால்ல அறிவிப்பு வச்சிருந்தாங்க !exit கோபிநாத் enter பிஸ்மி போல .
சிலை ஸ்டால் இல்லை ?கருஞ்சட்டை பதிப்பகத்துல பெரியார் சிலை இல்லை.தென்கச்சி ,சுகி சிவம் பெரிய அளவுல இல்ல .மல்லிகா பத்ரிநாத் ஸ்டால்லாம் காலியா இருந்தது .புக்கும் இல்ல ஆளும் இல்ல .முன்னெல்லாம் கூட்டம் அம்மும் .swiggy zomato வந்தப்புறம் பழசை ரீடிசைன் பண்ணுற தேவை ஒழிஞ்சிருச்சி போல .சமீபமா பெருசா பேசப்படும் Outlive பாக்கவே முடியல .
அரங்கத்துல பாரதி பாஸ்கர் .தட்டி காலத்து சினிமா விளம்பரம் மாதிரி அறிவிச்சிக்கிட்டே இருந்தாங்க .ஆளே கிடைக்கலையா ? சினிமா சம்பந்தப்பட்ட ஒரு ஸ்டால்ல ஜெகஜோதியா லைட்டிங் செஞ்சிருந்தாங்க .லேசா எட்டிப்பாத்தப்ப விசாரணை திரைக்கதைனு ஒரு புக் சட்டுனு கண்ணுல பட்டது .படத்தை பாத்தே மீள முடியல ,இதுல படிக்கறத நினைக்கவே முடியல .
சில ஸ்டால்ல உள்ள வந்து பாருங்கன்னு கூப்பிட்டாங்க .இதுக்கு முன்னாடி இப்படி யாரும் அழைச்சதா நினைவு இல்ல.ஒரு ஸ்டால்ல புக் வாங்கலைன்னா பரவாயில்லை ,டயர்ட்டா இருந்தா சேர்ல உக்காந்துக்கோங்கன்னு எழுதியிருந்தாங்க .அட !
காதுல விழுந்தது - குலுக்கல்ல அத்தனை குளறுபடி பண்ணினாங்க இப்பவுமா ?தமிழ்ல சில வருஷமாவே புதுசா சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பெருசா வராம ஒரு தேக்கம் உண்டாகிருச்சி .
காலைல ரவுண்ட்ஸ் போகும் போது ஒரு பேஷண்டோட மனைவி என்கிட்ட தனியா பேசணும்னு கேட்டாங்க .அறைக்கு வரும் போது கூடவே வந்தாங்க , கணவரோட உடல்நலம் பத்தி சில விஷயம் கேட்டப்புறம் ,"இதுக்கு வரல,உங்க கிட்ட வேற ஒண்ணு சொல்லணும் .நான் நாப்பது வருஷமா காலைல பூஜை பண்றேன் .அதோட மெடிட்டேஷனும் பண்றேன் .தினம் நாலு மணி நேரம் .முடியற வரைக்கும் சாப்பிடவே மாட்டேன் .சுகர் இருந்தா கூட இத எப்படி சமாளிக்கறனு என் சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்க .ஆனா நான் ஒருநாள் கூட விட்டதில்லை .அது என்னோட குருவோட அருள் .இப்ப நானே ஒரு குருவா இருக்கேன் .
ஏன் சொல்ல வந்தேன்னா ,ஒரு பட்டு புடவை .பூஜைல வச்சது .பிரசாதம் மாதிரி . பிரசாதம் யார்கிட்ட கொடுக்கணும்னு மெடிட்டேஷன்ல தெரியும் .நான் கண்மூடி பார்த்தப்ப உங்க முகம் தான் தெரிஞ்சது .என்ன டாக்டரம்மா முகம் தெரியுதேனு என் பிள்ளைங்கள நினைக்க பார்த்தேன் .ஹூஹும் .அப்பக்கூட உங்க முகம் தான் தெரிஞ்சது ,அவங்க முகம் தெரியவே இல்லை .அப்ப அத நான் உங்களுக்கு தான் கொடுக்கணும் .
அந்த புடவையை எடுத்துட்டு வரேன் .பத்திரமா பூஜைல வச்சுக்கோங்க .உங்களுக்கு நல்லதே நடக்கும் ."
எனக்கு இத கேட்டதும் ,சத்தியஜித் ரேயோட தேவி படம் நினைவுக்கு வந்தது .ஷர்மிளா தாகூரோட கணவர் கொல்கொத்தால படிச்சிட்டிருப்பாரு .இவங்க மாமனாருக்கு பணிவிடை செஞ்சுகிட்டு கிராமத்துல இருப்பாங்க .நல்லா கவனிச்சிக்கவே திடீர்னு மாமனாருக்கு கனவுல மருமக துர்க்கையா தெரிஞ்சிருவாங்க .அவரு உடனே இவங்க தான் தேவின்னு ,ஊருக்கே அம்மனாக்கிருவாரு .இதுல ஒரு கட்டத்துல வர போற ஆபத்தை புரிஞ்சிகிட்ட கணவர் அவங்கள "நீ தேவியில்லைனு தெரியறதுக்குள்ள வா ,நாம ஊரைவிட்டு போயிரலாம்"னு கூப்பிடறப்ப ஷர்மிளா தாகூர் சட்டுனு கேப்பாங்க "நான் தேவியா இருந்தா ?"
மருத்துவதுறைல ,இப்படி தேவியாகும் ஆபத்து அதிகம் .
சின்ன வயசிலிருந்து வீணை மேல ஒரு மோகம் .என் கிளாஸ்மேட் ராதிகா வீணை படிச்சிட்டிருந்தா .ஆனா அவங்க வீணை மிஸ் எங்க வீட்லேருந்து ரொம்ப தூரம் ."எங்க வீணை மிஸ் உங்க வீட்டுக்கிட்ட வீடு மாறிட்டாங்க"னு ராதிகா ஒருநாள் சொன்னப்ப ஏகப்பட்ட சந்தோசம் .எங்கன்னு பார்த்தா அடுத்த தெருல .கிரிக்கெட்டர் ரங்காச்சாரியோட (அந்த நாள்ல இவர் தான் ரேடியோ பாலாஜி மாதிரி -ஆனா மழலை குரல் -டீம்ல இருந்தவர் )மகள் தான் வீணை மிஸ் ஜெயலக்ஷ்மி என்கிற ஜெயாம்மா ஆன்ட்டி .அதே கம்பவுண்ட்ல இன்னொரு வீடு கட்டிக் குடி வந்திருந்தாங்க .
இப்ப வீட்ல பெர்மிஷன் கிடைக்கல .கொஞ்சம் பூசுனாப்ல இருந்தேன் .பத்தாவது வேற .வெயிட் குறைஞ்சா போகலாம்னு கண்டிஷனோட விடுமுறைல போக ஆரம்பிச்சேன் .(வெயிட் குறைஞ்சதானு நினைவு இல்ல ).
மத்தியானமா கிளம்பிப் போவேன் .பட்டுப்பாவாடை தாவணி ,வீட்ல பறிச்சு கட்டின மல்லிப்பூனு மங்களகரமா ஏறக்குறைய தினமும் .வீணைய விட பிடிச்சது எங்க வீணை மிஸ்ஸை .எக்கச்சக்கமா கதை பேசுவோம் .அவங்க வீட்ல அஞ்சாறு வீணை இருந்தது .பாய் விரிச்சு உக்காந்து ஆளுக்கொரு வீணையை எடுத்து வச்சுக்குவோம் .ரெண்டு மீட்டு மீட்டிட்டு வீணையை மடியிலேயே வச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் பேசுவோம் .அப்புறம் வீணையை கீழ வச்சுட்டு பேசுவோம் ,அப்புறம் திரும்ப பழைய பாடத்தை வாசிச்சிட்டு திரும்ப பேசுவோம் ,அப்புறம் புதுப்பாடம்.அவங்க மக என் வயசு தான், வெளிய யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்தா -"பேச்சு சத்தமா கேக்கறதே ,யாரு?பூங்குழலியா இருக்கும் .வாசிக்கறாளோ இல்லையோ ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பா "னு .
நான் ரொம்ப சுமாரா தான் வாசிப்பேன் .அதோட பெரிய இசை அறிவெல்லாம் கிடையாது .கணக்கு வாய்ப்பாடு மாதிரி நோட்ஸ் மனப்பாடமா தெரியும் .என் தம்பி சொல்லுவான் "யாராவது செத்துட்டா டிவில உன்னை வாசிக்க அனுப்பலாம்"னு (அப்ப பெரிய தலைவர்கள் இறந்துட்டா DD எல்லா நிகழ்ச்சியையும் ரத்து பண்ணிட்டு சாரங்கி வதன்னு ,சாரங்கிய போட்டு இழுத்திட்டிருப்பாங்க -அந்த கிண்டல் ).ஆனா ஒருநாள் கூட என்னை குறை சொன்னதே இல்லை .நோட்ஸ் எப்படி மறக்காம வாசிக்கறேனு என்னோட ஒரே பாசிட்டிவான அதையே தான் சொல்வாங்க .உன் தம்பிக்கென்ன தெரியும் நீ நல்லா தான் வாசிக்கறேனு வேற . தினம் கிளாஸ்சுக்கு போனதுல வர்ணம் கீர்த்தனைனு ஜெட் வேகமா முன்னேறிட்டேன் . "என்னடி இவளே ,இத்தனை நாள்ல இவ்வளவு கத்துண்டுட்ட!"னு ஒருநாள் ஆன்ட்டியே ஷாக்காயிட்டாங்க .
கல்லூரிலாம் போனப்புறம் முன்ன மாதிரி போக முடியல .அப்புறம் ஆண்ட்டியும் வீடு மாத்தி பம்மல் கிட்ட போய்ட்டாங்க .வீணை சொல்லிக்கொடுக்கறதையும் அதுக்கு முன்னமே நிப்பாட்டிட்டாங்க.என் வீணை சில வருஷம் முன்னால ரிப்பர் பண்ணி வச்சேன் .ஆனா எந்த ஸ்வரத்துக்கு எங்க இழுக்கனும்ங்கறதெல்லாம் மறந்து போச்சு .
விஜயதசமி எப்பவுமே ஸ்பெஷல் .அன்னைக்கு கண்டிப்பா புதுப்பாட்டு பழகணும் .பழசு பாதில நின்னாலும் கூட .கண்டிப்பா வரவீணாவும் ,விநாயகா நின்னுவும் வாசிக்கணும் .அன்னைக்கு ஆண்ட்டி வீடே அலங்காரம் பண்ணி ஜேஜேனு இருக்கும் .எல்லா ஸ்டூடன்ட்ஸும் கண்டிப்பா வருவாங்க. .எல்லாருக்கும் ஆசீர்வாதம் உண்டு .அத்தனைக்கும் மேலா அவங்க அன்பும் வாஞ்சையும் மறக்கவே முடியாதது .Miss you Aunty ...
🎶🎶 அந்த நாளும் வந்திடாதோ ....🎶🎶
நீதி ஒரு குருட்டு தேவதை
கறுப்பர்கள் நாங்கள் அறிந்தது தான்
ரெண்டு சீழ்ப்பிடித்த சிரங்குகள் ஒளிக்கும் அவள் கட்டு
எப்போதோ அவை கண்களாக இருந்திருக்கலாம் .
Justice
That Justice is a blind goddess
Is a thing to which we black are wise:
Her bandage hides two festering sores
That once perhaps were eyes.
Langston Hughes
அதிகமா பாக்கல ஒரு episode தான் .
திமுக ஆட்சி கொஞ்சம் செட்டில் ஆகி அந்த பரபரப்பு குறைஞ்சிருக்க நேரத்துல நல்ல டைமிங் தான் .
ஆனா நமக்கு பாக்க கொஞ்சம் கோட்டை விட்ட மாதிரி தெரியறதால சிலபல இலவச அறிவுரைகள் (பிளாக்ல வேற போஸ்ட் எழுதி நாளாகுது )
ப்ளஸ்
டைமிங்
ஜெவோட சில போட்டோஸ் /விடீயோஸ்
சில பல தனிப்பட்ட உரையாடல்கள்
அந்த backdrop -சுவர் முதல் vase வரை 💓💓💓
மைனஸ்
அந்த புடவை -ஜெ ஆரம்பத்துல கட்டின garden vareli போல (மெட்டீரியல் கிழியவே கிழியாது )-சென்டிமெண்ட் ?நல்ல அடர்வா சின்ன பார்டர் வச்ச பட்டுப்புடவை கட்டியிருக்கலாம் .கெத்தா இருந்திருக்கும் .
பிளவுஸ் - கண்ணாம்பா காலத்து மெட்டிரியல் .
அந்த ஹேர்ஸ்டைல் - சரியாக condition செய்யப்படாத முடி லூசா விடவோ /போனி டெயில்க்கோ சரிவராது .
அப்புறம் அந்த ஹேர் கலர் - மோசமான தரம் -ரொம்ப அடர் கருப்பு (கூந்தல் கருப்புனு வாத்தியாரே பாடியிருந்தாலும் வயசுக்கு கொஞ்சம் வெள்ளை முடி அழகு )
ரொம்ப முக்கியமா சாய்ஸ் of anchor - யோசிக்காம கோபிய பிக்ஸ் பண்ணிருக்கலாம் .அவரு இயல்பா கேக்குற மாதிரி இருக்கும் .இயல்பா பேசுறப்ப கொஞ்சம் நல்லாவே தான் பேசுறாங்க .ஆனா ஹரி பேச விடமாட்டேங்குறாப்பல .அதோட அவரோட நோட்ஸ் செக் பண்ணி அந்தம்மாவ ப்ராம்ப்ட் பண்ணிட்டே இருக்காப்ல -LKG பிள்ளைங்க ஸ்டேஜ்ல ஆடுறப்ப சைடுல ஆடுற டீச்சர் மாதிரி .கண்ணுல தண்ணி /கேரம் போர்ட் /கொடநாட்டில் குழந்தை இன்ன பிற .அதனாலேயே ரொம்ப rehearsedஆ தெரியுது .மொத்தத்துல சசி ஒரு terror /ஆளுமை /குயின் மேக்கர்ங்கற இமேஜ் டோட்டல் டேமேஜ் .
டவுட்ஸ்
இந்த பேட்டி இவங்கள ஆளுமையா establish பண்ற மாதிரி தெரியல .அப்ப இதோட நோக்கம் சிம்பதியா ?
அதோட இன்னும் என்னெல்லாம் வீடியோ வச்சிருக்காங்களோ?
இத்தனை வருஷத்துல ஜெயலலிதாவோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ கூட இவங்க கத்துக்கலையே வேற எத கத்துக்கிட்டு இருக்கப்போறாங்க ?
எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன்
வேக்சினை எங்கே தேடுவேன்
கொரோனா தடுக்க
உதவும் வேக்சினை
எங்கே தேடுவேன்
18 வயது முதல் அனைவர்க்கும்
தேவைப்படும் வேக்சினை
எங்கே தேடுவேன்
பாரத் பயோடெக்கில் சிக்கிக் கொண்டாயோ
சீரம் இன்ஸ்டிட்யூட்டில் குடிப் புகுந்தாயோ
வேக்சின் பாலிசியில் கிறுகிறுத்தாயோ
ஒன்றிய அரசிடம் இல்லாத வேக்சினை
எங்கே தேடுவேன்
அண்டை நாடுகளில் டோஸ்கள் ஆனாயோ
கார்ப்பரேட் கைகளில் ஹோர்டிங் ஆனாயோ
பிராமின் கேம்ப்புகளில் குடிப்புகுந்தாயோ
மாட்டு மூத்திரத்தில் கரைந்து போனாயோ
எங்கே தேடுவேன்
குஜராத் மாடலில் மறைந்து கொண்டாயோ
பிகார் மாடலில் பெருகிப்போனாயோ
உத்தர பிரதேசத்தில் தேடப் போனாயோ
கங்கையில் புண்ணியமாய் மிதந்து போனாயோ
எங்கே தேடுவேன்
தேர்தல் பரப்புரையில் தேய்ந்து போனாயோ
தாடியில் சிக்கி தொலைந்து போனாயோ
cowin ஆப்புகளில் கலங்கிப்போனாயோ
ஆன்டி வாக்சர்ஸால் அழிந்து போனாயோ
எங்கே தேடுவேன்
நன்றி
கலைவாணருக்கும் கவியரசருக்கும் மெல்லிசை மன்னர்களுக்கும்
https://youtu.be/LUzOsShOKjQ
அந்த அழகி இருந்தபோது ,
பூக்களால் நிறைந்திருந்தது அறை
அவள் போய் விட்டாள் ,காலியாக கிடக்கிறது படுக்கை
பூ தைத்த கம்பளி சுருட்டிக்கிடக்கிறது படுக்கையில்
ஒருவரும் தூங்குவதில்லை
மூன்று வருடங்கள் போய்விட்டன
அந்தவாசம் இன்னமும் இருப்பதாக முகர்கிறேன்
அந்த வாசம் முடிந்துவிட்டது, அழியவில்லை .
அவள் போனாள் ,வருவதில்லை .
ஏக்கம் ,விழும் இலையை பழுக்க வைக்கிறது .
வெள்ளைப் பனி கோர்க்கிறது பச்சை புல்லை.
Long yearning
By Li Po
When the beautiful woman was here, the hall was filled with flowers,
Now the beautiful woman's gone, the bed is lying empty.
On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,
Though three years have now gone by, I think I smell that scent.
The scent is finished but not destroyed,
The woman's gone and does not come.
Yearning yellows the falling leaf,
White dew beads the green moss.
குழந்தைகள் சலித்துவிட்டதாக
சொல்லிக்கொள்பவர்களுக்கு
பூக்கள் இல்லை
For those who proclaim
they've grown weary of children,
there are no flowersடெங்கி தமிழ்நாட்டில பரவல்ல இருந்த நேரம்.அரசு பெரிய அளவுல நிலவேம்பு குடிநீரை பரபரப்பா கொடுத்திட்டிருந்தாங்க .ஒரு பிரபல தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க .அவங்க வழக்கமான பேனல் தான் .அவங்க அரசியல் விமர்சகர் /டாக்டர் ,பிரபல சித்த மருத்துவர் ,அதிமுக சார்பில ஒரு டாக்டர் ,நான் .
உள்ள போனதுமே நெறியாளரும் சித்த மருத்துவரும் ,"நாம இந்த ஆங்கில மருத்துவத்த அடிச்சி பேசிறனும்"னு பேசிக்கிட்டாங்க .நிகழ்ச்சி வழக்கமான வகையில ,ஆனா பேசுறதுக்கே சொற்ப நேரமே கொடுத்தாங்க .எப்ப பேசினாலும் சித்த மருத்துவர் இடைமறிச்சி பேசிக்கிட்டே இருந்தாரு .நெறியாளரும் தடுக்கல .
அப்ப டிவிட்டர்ல யாருக்கும் நான் தான் அந்த நிகழ்ச்சியில பங்கேற்ற டாக்டர்ன்னு தெரியாது .இங்கே பிரபல ட்வீட்டர்கள் பலரும் நிலவேம்பு குடிநீருக்கு ஆதரவா ஆக்ரோஷமா களமாடிட்டு இருந்தாங்க .அதிலேயும் ஒருத்தர் அல்லோபதி டாக்டர்களுக்கு அவங்க களமோ என்னவோ சொன்னாரு பறிபோயிடும்ங்கற பயம் நல்லாவே தெரிஞ்சதுனு சொன்னாரு .அப்புறம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாளில்லை டைப் விவாதங்கள் வேற .நானும் ரெண்டு மூணு ட்வீட் போட்டுட்டு கடந்து போய்ட்டேன் .
போன வருஷம் கொரோனா வந்தப்ப இப்படித்தான் கபசுர குடிநீர் அறிமுகம் ஆச்சு .என்ன டோஸ் எத்தனை நாளைக்கு குடிக்கனும் எத்தனை நேரம் குடிக்கனும்ங்கிற எந்த தெளிவும் இல்ல .அவங்கவங்க அவங்கவங்க இஷ்டம் போல பயன்படுத்திட்டிருந்தாங்க/ இருக்காங்க . இப்ப கபசுர குடிநீர் ,கிராம்பு ,இஞ்சி ,மஞ்சள் ,வேப்பிலை அப்புறம் ஒரு நாள்ல்ல கணக்கில்லாத முறை ஆவி பிடிக்கறதுனு நோய் தீவிரமானதுக்கு அப்புறம் மருத்துவமனைக்கு வரவங்களுக்கு என்ன சொல்றது ?
மக்களை குறை சொல்லி பலனில்ல .இதுக்கு பின்னால ஊடகங்களும் இருக்கு .சித்த மருத்துவர்களும் எந்த ஒரு அறிவியல் வட்டத்துக்குள்ள வர மறுத்து ,ஒரு ஒளி வட்டத்தோடயே வலம் வராங்க .நாங்க இதுக்கு தரவு இல்ல ,இப்ப புது ஆய்வு இது வேலைப்பாக்காதுனு தெளிவா உள்ளத உள்ளபடியே சொல்றோம் ,ஆனா அதுல எல்லாருக்கும் ஆயிரம் சந்தேகம் வருது .
இதுக்கு எல்லா நிலையிலேயும் science சார்ந்த புரிதல கொண்டு வரணும் .ஒரு இயந்திரம் பழுதானா பெரும்பாலும் பணமோ நேரமோ தான் இழப்பாகும் .ஆனா மருத்துவம் அப்படியில்ல .அதனால தான் மருத்துவர்கள் இத்தனை மதிக்கப்படுறாங்க .அதனாலேயே அவங்களுக்கும் மக்கள் நலனிலேயும் அவங்க சரியான சிகிச்சையை செஞ்சுக்க வழிகாட்டுறதிலேயும் பெரிய பொறுப்பு இருக்கு .
திருநெல்வேலி ஜங்க்ஷனின் உலகம்மன் கோவில் .நினைவில் ஒரு பெரிய மரமும் நிறைய காலி இடமுமாய் .எதிரே முதல் வீடு ஆச்சி வீடு .அடுத்து சரசா அத்தை அகிலா அப்புறம் மீனா அத்தை பிரேமா அக்கா ,எதிர் வீட்டில் குட்டி இம்ரு (தாத்தா கிரிக்கெட் பிரியர் ),பின்வீட்டில் பாரதி .தெருவெங்கும் ஓடிய திண்ணை .திண்ணை ஒட்டிய சாக்கடை .பொழுதும் மேயும் பன்னிகள் .கோவில் திருவிழாவின் பெரிய ஸ்பீக்கர் .அது பாடிய மச்சானை பாத்தீங்களா ,வாங்கோண்ணா .அதற்கு ஆட்டம் .
கோவிலுக்கும் வீட்டுக்கும் நடுவே பெரிய ரோடு .தட்டியில் அடித்த சினிமா விளம்பரங்கள் .படம் பார்க்க வர சொல்லி கூவிக்கொண்டே போகும் குரல் .பறக்க விட்ட துண்டு சீட்டுகள் .தேர்தல் கூட்டங்கள் .போடுங்கம்மா ஓட்டு வாக்கு சேகரிப்புகள்.இன்னொரு திருவிழா பலிக்கு வாழைப்பழ ருசி காட்டப்பட்ட பன்னிகள் ...
அப்படியே நடந்தால் தாமிரபரணி .நீர் வற்றாத தாமிர ருசி கொண்ட தாமிரபரணி. அம்மா அத்தை கர்ப்பமாயிருந்த சித்தி சேர்ந்தே நீந்திய தாமிரவருணி .தாத்தா .காலையில் ஆற்றில் குளித்து கோமணம் அலசி அருகம்புல் ஆற்றில் அலசி மடியில் சுற்றி நேராக பிள்ளையாருக்கு தரும் தாத்தா .உயரமாக சிகப்பாய் வழுக்கை தலையாய் அச்சு போல் எழுதிய தாத்தா .
ஆச்சியை தூக்கி அடுப்புல வை என்று ஏசிய ஆங்கிலம் படிக்க தெரிந்த ஆச்சி.ஆச்சி வீட்டு செல்லம்மா ,செல்லம்மாள் மகள் உலகு .உலகம்மன் கோவில் .
நன்றி - https://twitter.com/5Murugesan/status/1334317330940116992?s=20
இன்றிரவில்
மிக சோகமான
வரிகளை எழுத முடியும்
இந்த இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது -
நீல நட்சத்திரங்கள் தூரத்தில் நடுங்குகின்றன
என்பது போல
இரவு காற்று வானத்தில் சுழன்று பாடுகிறது
மிக சோகமான
வரிகளை எழுத முடியும்
இன்றிரவில்
நான் அவளை காதலித்தேன்.
அவளும் என்னை காதலித்தாள்,
சில நேரங்களில் .
இதே போல் இரவுகளூடே
அவளை அணைத்திருந்தேன்
முடியாத வானத்தின் கீழ்
முத்தங்களிட்டேன்
மீண்டும் மீண்டும் .
சில நேரங்களில்
அவள் என்னை காதலித்தாள் ;
அவளை நானும் .
உறைந்த அந்த பெருங்கண்களை
எப்படி காதலிக்காமல் இருப்பது
இன்றிரவில்
மிக சோகமான
வரிகளை எழுத முடியும்
அவள் என்னுடன் இல்லை
அவளை தொலைத்துவிட்டேன்
விசாலமான ஒலிக்கும் இரவு -
இன்னமும் விசாலமாக இருக்கிறது
அவளில்லாமல் .
புல்லில் பனி போல
உயிரில் விழுகிறது
கவிதை .
என் காதல் அவளை தக்க வைக்காததால்
என்னவாகபோகிறது
இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது
அவள் என்னுடன் இல்லை .
இவ்வளவுதான் .
தூரத்தில் யாரோ பாடுகிறார்கள் ,தூரத்தில் .
அவளை தொலைத்ததாக மனம் நம்பவில்லை
அவளை அழைத்து வருவது போல
என் பார்வை அவளை தேடுகிறது ,
என் இதயமும் .
அவள் என்னுடன் இல்லை .
அதே மரங்களை வெள்ளையாக்கும் அதே இரவு .
அன்றைய நாங்கள் இன்று நாங்களில்லை .
இப்போது நான் நிச்சயமாக அவளை காதலிக்கவில்லை
ஆனால் எப்படி காதலித்தேன் !
அவள் காது எட்டும் காற்றை என் குரல் தேடுகிறது
வேறொருவருக்கு ,
அவள் வேறொருவருக்கு,
என் முத்தங்களுக்கு முன் போல்.
அவள் குரல்
அவள் பளீர் உடல்
அவள் முடிவில்லா கண்கள்...
அவளை நான் இப்போது காதலிக்கவில்லை .
நிச்சயமாக.
ஒருவேளை காதலிக்கக்கூடும் ?
காதல் சுருக்கமானது
மறப்பது நீளமானது .
இதே போல் இரவுகளில்
அணைத்திருந்ததால்
அவளை தொலைத்ததாக மனம் ஏற்கவில்லை .
இது அவள் எனக்கு உணர்த்தும் கடைசி வலியாகவும்
இது நான் அவளுக்கு எழுதும் கடைசி பாடலாகவும்
இருந்தும் கூட ....
Tonight I can write the saddest lines
Pablo Neruda
அம்மா அப்பா அக்க்ஷரா