Friday, 29 May 2009

நிலாச்சோறு

அதே வானம்
அதே பௌர்ணமி நாள் நிலா
அதே நட்சத்திரங்கள்
அதே மொட்டைமாடி
அன்று போலே தயிர்சாதம்
அன்று போலே மாவடுவும்
சுவை மட்டும் வேறாய்
அன்று எதை சேர்த்து பிசைந்தாய் அம்மா

Thursday, 28 May 2009

ஆந்திராவின் உள்துறை அமைச்சர்

பொதுவாக பெண்களுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படும் போது அதிகமாக வழங்கப்படுவது சமூக நலத் துறை .ஏதோ பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்ட துறை போல் ஆகிப் போனது இது .


இந்த வழக்கத்தை முறிக்கும் விதமாக ,புதிதாக பதவியேற்றுள்ள ஆந்திர மந்திரி சபையில் ,முதல் முறையாக ஒரு பெண் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் .சபீதா இந்திரா ரெட்டியின் கணவரும் இதே பொறுப்பை முன்பு வகித்தது குறிப்பிடத்தக்கது .


மூன்றாவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர் முந்தைய மந்திரிசபையிலும் அமைச்சராக இருந்தவர் .

வாழ்த்துவோம் .

Wednesday, 27 May 2009

இறந்து போனாள்

அத்தனை செருக்காய் இறந்து போனாள்.
வெட்கித்தான் போனோம் தெரிந்தபோது
எங்கள் நேசத்தில் நிறைந்ததொன்று
அவள் பிரியத்திலொன்றாய் இருக்கவில்லை


எத்தனை நிறைவு விடைபெற்றுப் போவதில்
எவருக்கும் இருக்கக் கூடாததாய் .
அப்பொழுதில் வேதனை பொறாமை என
சட்டென மாறி தளமிறங்கும்



So Proud She Was to Die
Emily Dickinson


So proud she was to die
It made us all ashamed
That what we cherished, so unknown
To her desire seemed.

So satisfied to go
Where none of us should be,
Immediately, that anguish stooped
Almost to jealousy.

Saturday, 23 May 2009

வாராதிருக்கும் வரை

இவைகளை மட்டுமே நான் கொணர்ந்து கொண்டிருக்கிறேன்
கொண்டு வர என்னிடம் வேறெதுவும் இல்லாமல் ..
பார்த்துப் புளித்திட்ட கண்களுக்கு -இரவு
நட்சத்திரங்களையே கூட்டி வருவது போல


ஒருவேளை ,அவை வாராது இருக்கும் வரை
நாம் கண்டும் காணாதது போல் இருப்போமோ ?
அப்போது புதிராயிருக்கக்கூடும்
எப்படி வீடு சேர்வதென்று ...



I,ve nothingelse to bring
By Emily Dickinson

I've nothing else — to bring, You know —

So I keep bringing These —
Just as the Night keeps fetching Stars
To our familiar eyes —


Maybe, we shouldn't mind them —
Unless they didn't come —
Then — maybe, it would puzzle us
To find our way Home —



Friday, 22 May 2009

போன மச்சான் திரும்பி வந்தா ?

ஓட்டு எண்ணி முடிச்சதுமே
ஓடித்தானே போனாக
பொட்டியை தான் கட்டிக்கிட்டு
கூட்டமாக போனாக


ஆளுக்கொரு ஆசயின்னு
ஆரவாரமாக போனாக
அவசரமா எடம் புடிக்க
வெரசா தான் போனாக


பேசித்தான் முடிக்கனுமின்னு
பவுசாதான் போனாக
கோட்டையை தான் புடிப்போமுன்னு
பெருசாக போனாக


என்ன போயி என்ன பண்ண
எவரத் தான் நொந்து அழ
கட விரிச்சும் விக்காம
வந்த கத எங்க சொல்ல


ஊருக்கு வந்தப்ப
ஒறவாட மறக்கலியே
ஏனின்னு கேக்கலையே
சொன்ன வார்த்த மீறலியே


பேசிப் பேசி தீரலையே
சிக்கலொன்னும் அவுரலையே
கேட்டத தான் கொடுக்கலையே
சொல்ல சொல்லு போதலையே


சேத்து வச்ச சில்லறையில்
பங்கு தர மறுக்கலியே
எதுக்கு கோவம் கொண்டாக
என்ன கொற கண்டாக


ராவெல்லாம் கண் முழிச்சு
காத்திருந்தும் கூடலையே
ப்ளேன் ஏறி போறோமுன்னு
சொன்ன பின்னும் எளகலையே


ஊராளும் மன்னரெல்லாம்
நாடாளும் நாளும் எப்போ
இனி நண்டுக் கறி திங்குறப்ப
நடுத் துண்டு வாரதெப்போ


போன மச்சான் திரும்பி வந்தா
ஊரு பாத்து சிரிச்சிடுமே
மொகம் பாத்து கேலியாதான்
கை கொட்டி நகச்சிடுமே


பரிதவிச்சு நிக்குறாக
கண்கலங்கி ஏங்குறாக
கடைக்கண் தொறந்து பாருமம்மா
வாட்டத்த தான் தீருமம்மா

வாக்காளனின் புலம்பல்

தண்ணியில்லா பொட்டலிலே
தர்மராசா நிக்குறாரு
செழிச்சு பொங்கும் பூமியிலே
பாரிவள்ளல் நிக்குறாரு
பக்கத்து பட்டியிலே
தர்மதொரை நிக்குறாரு
என் மச்சினர் ஊரில தான்
கர்ண ராசா நிக்குறாரு


ஊருக்கொரு ராசனா
ஒய்யாரமா நிக்குறாங்க
நோட்ட தான் தண்ணிபோல
தெவிட்டாம கொட்டுறாங்க
இந்த வக்கத்த பூமியில
வந்து வாச்சதொன்னும் சரியில்ல
இந்த போக்கத்த பாவிக்குன்னு
வந்து வாச்சதுவும் சரியில்ல


கலர் கலரா போஸ்டருண்டா
அட துண்டு சீட்டு தானுண்டா
வெள்ளியில தரவேணாம்
பித்தளையில் விளக்குண்டா
பக்கத்து ஊரிலெல்லாம்
எட்டு கல்லு வச்ச மூக்குத்தியாம்
ஒத்த கல்லு மூக்குத்திக்கு
இந்த ஊரில தான் வழியுண்டா


வெல வாசி ஏறிப் போச்சு
வோட்டு வெல கூடிப் போச்சு
கணக்கு சரியாகும் வர
வோட்டு போட மனசு இல்ல
துட்டு வேணாம் ,சீல வேணாம்
கொடம் கூட தர வேணாம்
ஒசத்தியா ஒன்னும் தர வேணாம்
சீப்பான நானோகாரு
ஆளுக்கொன்னு தந்தா என்ன

எனது ?




நீ கட்டிய தாலி
நீ போட்ட மெட்டி
நீ இட்ட குங்குமம்
என் பெயருக்கு பின்னால் உன் பெயர்
என
உனதடையாளங்களை ஏற்றிப் போனதில்
எனதற்றுப் போகிறேன் நான்

Thursday, 21 May 2009

பள்ளியில்

நான் 12 படிக்கும் போது எங்க வகுப்பு தான் பள்ளியிலேயே அதிகம் சேட்டை செய்யற வகுப்புன்னு (most indisciplined class ) எங்க மேல ஒரு முத்திரை இருந்தது .எங்களுக்கெல்லாம் அறிவு அதிகமா இருந்ததால இந்த பிரச்சனை ன்னு நினைக்கிறேன் .ஏன்னா அப்புறம் அதிக மதிப்பெண் வாங்கின வகுப்பும் என்னோடது தான். ரொம்ப வருஷமா இந்த பேர் வாங்கியிருந்த பல வகுப்புகள் பன்னிரண்டில் பொறுப்பு வந்து திருந்தினப்புறம் கூட நாங்க மாறல . இதிலே SPLன்னு அழைக்கப்பட்ட ஸ்கூல் பியுபில் லீடர் ,இன்னும் பல ஸ்கூல் அமைச்சர்கள் இருந்த வகுப்பு என்னோடது (நான் போக்குவரத்து துறை அமைச்சர் ).

எங்க வகுப்புக்கு அடுத்த வாசல் ஸ்டாப் ரூம் வேற .
தினம் இம்போசிஷன் எழுதலைன்னா பள்ளிக்கு போன மாதிரியே இருக்காது .முதல்ல நிக்க வைப்பாங்க ,கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நிக்கலாம் ,அப்புறம் ....?அடுத்தது இம்போசிஷன் எழுத சொல்வாங்க ...பல நேரங்கள்ல மொதல்லேயே எழுதி வச்சிருப்போம் .இதில ஒரு தடவ எங்க வகுப்புல ரெண்டு பேருக்கு போட்டி .யாரு ஒரே பக்கத்தில அதிக தடவை எழுதுறாங்கன்னு ."I will not talk in class" ன்னு எழுதணும் .ஒருத்தி "I'll not talk in class " ன்னு எழுத போட்டிக்கு எழுதினவ "I'll talk in class "ன்னு எழுதிட்டா .அப்புறம் மிஸ் பாத்திட்டு இன்னும் ஐந்நூறு தடவ எழுத சொன்னாங்க .

இதுக்கு மேல போயி ஒரு தடவ எல்லாரும் கிரவுண்ட சுத்தி மூணு ரவுண்ட் ஒடனும்ன்னு சொன்னாங்க எங்க இங்கிலீஷ் மிஸ் .கீழ போயி பாத்தோம் .இந்த வெயில (மணி 11.30 போல)சுத்தினா உடம்புக்கும் அழகுக்கும் கேடுன்னு ,கிரவுன்ட் ஓரத்தில ஒரு மரம் இருக்கும் . அரச மரம் வேற .பனிஷ்மெண்டும் ஆச்சு புண்ணியமும் ஆச்சுன்னு நாங்க அத சுத்தி மூணு ரவுண்ட் ஓடிட்டு கிளாசுக்கு போய்ட்டோம் . இவ்வளவு சீக்கிரம் ஓடிட்டீங்களா ன்னு மிஸ் ஆச்சரியப்பட்டு போனாங்க .ஆனா அடுத்த தடவ பாக்க நான் வருவேன்னு சொல்ல மறக்கல .

பழக்கம் விடுவோம் !

ஊரில் பலரையும் சந்தித்துக் கொண்டு வரும்போது ,என்னிடம் பேசியவர்கள் ,"நல்லா பழக்கம் விடுதாளே",என்று சொல்லிக் கொண்டனர் .வேறு ஏதோ ஒரு பேச்சின் ஊடே ,"ராத்திரி பூரா பழக்கம் விட்டுக்கிட்டு கிடப்பாங்க "என்று வேறு சொன்னார்கள் .

சரி ," பழக்கம் விடுவது" என்பது என்ன ?


இது ஒன்றும் பிரமாதமில்லை .கதை பேசுதல் ,புரணி பேசுதல் ,அரட்டை அடித்தல் என்று பலவாறாக சொல்லப்படுவதே அங்கு பழக்கம் விடுவது என்று சொல்லப்படுகிறது .

Wednesday, 20 May 2009

யாருமில்லை

நான் யாருமில்லை , நீ யார் ?
நீயும் யாருமில்லையா ?
எனில் நாம் ஜோடியாய் இருக்கிறோம் , சொல்ல வேண்டாம் ,
வெளியகற்றுவார்கள் நம்மை ......

யாராவதாயிருப்பது எத்தனை வெறுமையானது.
தவளை போல,அம்பலத்தில்
நிதமும் தன் பேர் உச்சரித்துக் கிடப்பது,
மெச்சிக் கேட்கும் சேற்றுக் குழாமிடத்தே..


I'm nobody! Who are you?
By Emily Dickinson

I'm nobody! Who are you?
Are you nobody, too?
Then there's a pair of us — don't tell!
They'd banish us, you know.

How dreary to be somebody!
How public, like a frog
To tell your name the livelong day
To an admiring bog!

Tuesday, 19 May 2009

போர் முடிந்தது ?

இலங்கை, போர் முடிந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது .இனியாவது அங்கு சீரமைப்பு முயற்சிகள் துவங்கப்படும் என்று நம்புவோம் .

இதனிடையே விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ,பிரபாகரன் உட்பட, கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது .இதற்கு ஆதாரங்கள் ஏதும் அளிக்கப்படாத நிலையில் இது எத்தனை தூரம் உண்மை என்றும் தெரியவில்லை .இத்தகைய குழப்பத்தை விளைவிப்பதே இந்த செய்திகளின் நோக்கம் போலும் .

இலங்கை அரசுக்கு மேலாக, இங்குள்ள பல ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் ,தப்பியோடும் போது மரணம் என்ற கேலிப் பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கின்றன .இன்று என்.டி.டி.வி ,"இலங்கையின் மிகப் பெரிய தீவிரவாதி மரணம் "என்று செய்தி வெளியிடுகிறது .இவர்களுக்கு இதில் என்ன இத்தனை கொக்கரிப்பு என்று புரியவில்லை .


ராஜீவ் காந்தியின் கொலையை மட்டுமே முன்னிறுத்தி ,விடுதலை புலிகள் அமைப்பின் அடையாளமே அதுதான் என்பது போல செய்திகள் பூசப்படுகின்றன .
இந்த போராட்டத்தின் ஆரம்பம் ,ஏன் போராடினார்கள் ,ஏன் ஆயுதம் எடுத்தார்கள் போன்ற கேள்விகளை கேட்டுப் பார்த்தால் அரசின் சலுகைகள் குறையும் இல்லை ரேட்டிங்குகள் குறையும் என்று அஞ்சுகிறார்களோ என்னமோ ?

பிரபாகரன் இறந்து விட்டாலே அமைதி திரும்பி விடும் என்ற கூற்று சரியா ?
நேற்று பி பி சி யில் ஒரு கேள்விக்கு இலங்கை அரசு சார்ந்த ஒருவர் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்பதையே ஏற்க மறுத்தார் .இந்நிலையில் ,இவர்கள் எல்லா அதிகாரங்களையும் பகிர்ந்து அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எழ மறுக்கிறது .இதை சரியாக செய்திருந்தால் இந்த போராட்டமே நீர்த்துப் போயிருக்காதா ?

முன்பு பாலஸ்தீன போராட்டத்தில் யாசர் அராபாத் மீது இப்படியே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன .அவரில்லையெனில் அங்கு அமைதி திரும்பும் என்பது போல செய்திகள் பரப்பப்பட்டன .ஆனால் அவரில்லாத பாலஸ்தீனம் இன்று எப்படியிருக்கிறது ?


அராபாத் இறந்த போது ஒரு செய்தியாளர் சொன்னார் ,"அவரிடம் குறைகளே இல்லை என்று சொல்லமுடியாது ,ஆனாலும் பாலஸ்தீன பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு வந்ததில் மட்டுமல்ல ,அதை அங்கு நிரந்தர இடம் பெற செய்ததிலும் அவர் ஆற்றிய பங்கு சிறப்பானது .அவர் இல்லாமல் இருந்திருந்தால் பாலஸ்தீனமும் அங்கு மக்களுக்கு இழைக்கப்படும் அவலமும் உலக பார்வைக்கு வராமலேயே அழிந்திருக்கும் ,"என்று .


அது மட்டுமல்ல ,தினம் மிதிக்கப்படும் ஒரு இனத்தின் உணர்வுகள் உணர்த்தப்படாமல் ஓய்ந்திருக்கும் .

Monday, 18 May 2009

ஊருக்கு போனேன்

ஊரே மாறிப் போயிருக்கிறது .

எல்லா வீடுகளும் ஒரே அச்சில் வார்த்து வரிசையாக அடுக்கி வைத்தாற் போல் இருக்கும் முன்பெல்லாம் .இப்போது எல்லோரும் அவரவர் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வீடுகளை மாற்றிக் கட்டிக் கொண்டுள்ளனர் .

எல்லா வீட்டு திண்ணைகளிலும் பெண்கள் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருப்பார்கள் எப்போதும் .இப்போது ஏதோ ஒரு தெருவில் மட்டுமே பெண்கள் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் .அனேக பெண்கள் படித்துவிட்டு பணிக்கு செல்கிறார்கள் ,குறிப்பாக ஆசிரியப் பணி.

விருந்தினர் வந்தால் சட்டென்று எவராவது அருகிலுள்ள கடைக்கு சென்று டீயோ காபியோ வாங்கிக் கொண்டு வருவார்கள் .இப்போது எல்லாம் வீட்டிலேயே செய்கிறார்கள் .

நிறைய மாறித்தான் போயிருக்கிறது .ஆனால் ,இன்னமும் இவர்களின் அன்பும் ,"நல்லா பழக்கம் விடுதாளே!" என்று மகிழ்ந்து கொள்ளும் இவர்கள் பாசமும் மாறாதிருக்கிறது .

Saturday, 16 May 2009

ஒரு எண்ணம்

ஒரு எண்ணம் என் மனதில் வந்து போனது
முன்பே வந்தது தான்
முன்பு வந்தபோது முடிவுறாமல் போனது
எந்நாளென்று நினைவில் இல்லை


முன்பு எங்கு போனது ?
ஏன் என்னிடம் மறுபடி வந்தது?
அன்று வந்தபோது என்னவாக இருந்தது ?
அதுவும் சொல்லத் தெரியவில்லை

ஆனால் என் மனம் அறியும்
இதை நான் முன்னர் சந்தித்தது .
எனக்கு நினைவுறுத்தி போனது, அவ்வளவே -
மீண்டும் என்வழி வரவேயில்லை






A Thought went up my mind today -- by Emily Dickinson

A Thought went up my mind today --
That I have had before --
But did not finish -- some way back --
I could not fix the Year --

Nor where it went -- nor why it came
The second time to me --
Nor definitely, what it was --
Have I the Art to say --

But somewhere -- in my Soul -- I know --
I've met the Thing before --
It just reminded me -- 'twas all --
And came my way no more --

Thursday, 14 May 2009

என் சொற்கள்



வழி நெடுகிலும் சிந்தியிருக்கின்றன
நான் பேச நினைத்த
பேசியிருக்க வேண்டிய
பேசிய
பேசியிருக்கக் கூடாத சொற்கள்


அவற்றினால்
ஆகிய புன்னகைகளும்
சிந்திய குருதிகளும்
விளைந்த கோபங்களும்
குழம்பாயிருக்கிறது வழியெங்கும்


கைக்கெட்டிய குப்பைகளை
வாயில் ஏந்தியிருக்கிறேன்
பல நேரங்களில்
சில நேரங்களில்
முத்துக்களும்தான் கோர்த்திருக்கிறேன்

வாயுலர்த்த மறுக்கும் சோம்பலில்
வார்த்தைகளை வீசிவிட்டு
என்ன நேர்ந்தது
என்று எண்ணாமல்
நெடுந்தொலைவு கடந்துவிட்டேன்


ஆனாலும், மறுபக்கம் பார்க்கையில்
தெரியும் ஒரு புன்னகையும்
ஒரு கோபமும்
ஒரு பாராமுகமும் சொல்லிப் போகின்றன
என்ன ஏந்திப் போயின என் சொற்கள் என்று



Tuesday, 12 May 2009

ஊருக்கு போனேன்

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆலடிப்பட்டிக்கு சென்று வந்தேன் கோவில் கொடை பார்க்க .சின்ன வயதில் பாட்டியோடு கொடை பார்த்த ஞாபகம் லேசாய் மனதில் . எதுவும் சரியாக நினைவில்லை .

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவசரமாய் வைத்தியலிங்க சாமியை பார்த்துவிட்டு ஓடி வந்த ஞாபகம் ,நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என் பெரியப்பாவின் அஸ்தியை புதைத்து கல்லறை கட்ட போன ஞாபகம் எனப் பல ஞாபகங்கள் ரயிலில் ஏறியதிலிருந்து .இத்தனை காலமாக ஏன் போகாமலிருந்தோம் என்ற கேள்வியும் கூட .

இத்தனை சுகானுபவமாய் இருக்க போகிறதென்று அறியாமலேயே கிளம்பினேன் .இன்னமும் என் காதுகளில் மேள சத்தமும் , கூட்டத்தின் சலசலப்பும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது .