Friday, 20 February 2009

அறியாமை

பல நோயாளிகளுக்கு எல்லா நோய்களுக்கும் தீர்வு ஒரு பாட்டில் குளுகோஸ் அல்லது ஒரு ஊசி .தேவையற்ற மருந்துகளால் எந்த பயனும் இல்லை என்பது மட்டுமல்ல தீங்கு நேரிடலாம் என்று கூறினாலும் இவர்களுக்கு புரிவதில்லை .இதை நான் சொன்ன போது ஒரு பாட்டி சொன்னார் ,"ஊசி போடாத வைத்தியம் எனக்கு தேவையில்லை ."

நான் கடமலையில் பணி புரிந்த போது அந்த ஊரிலிருந்த பெண்கள் பலர் எப்பொழுதெல்லாம் உடல் சோர்வு தெரிகிறதோ (?) அப்பொழுதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு பாட்டில்கள் ஏற்றிக் கொள்ளும் வழக்கம் வைத்திருந்தனர் .அப்படி ஏற்ற வேறு மருத்துவர் கிடைக்காமல் என்னிடம் வந்தார் ஒரு பெண் .ஏற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ."ஒன்றும் தேவையில்லை " என்று கூறி அனுப்பி விட்டேன் .
வெளியிலேயே வெகு நேரம் அமர்ந்து கொண்டிருந்த அவரிடம் ,"பஸ்சுக்கு
உட்கார்ந்திருக்கீங்களா ?"என்று கேட்ட போது ,"எங்க வீட்டுக்காரர் குளுகோஸ் போட்டுட்டு வா ன்னு சொல்லி எர நூறு ரூவா கொடுத்து விட்டாரு .இப்ப நா ஏத்தாம போனா திட்டுவாரு ,"என்று சொன்னார் .

என்னுடன் நர்ஸ் பணிபுரிந்த பெண் படு சுட்டி ,"டாக்டர் தான் வேண்டாம் ன்னு சொல்றாங்கல்ல ,அப்புறம் நீ எதுக்கு போடணும் ன்னு வம்பு பண்ற ?"என்றார் துடுக்காக ."ஐயோ ,எங்க வீட்டுக்கார திட்டுவாருக்கா ,ரூவா கொடுத்திருக்காருல்ல " ,என்றார் அந்த பெண் மீண்டும் .இவர் மறுபடியும்,"அட போம்மா !போற வழியில ஒரு பொடவை வாங்கிட்டு போ இந்த காசுக்கு .அவர் கிட்ட போட்டாச்சு ன்னு சொல்லிரு ."அதற்கு அந்த பெண் சொன்னார் ,"ரசீது காட்டச் சொல்வாரு ..".இப்போது எவரிடமும் பதில் இல்லை .

வருத்தமாகவே வெளியேறினார் அந்த பெண் .

இதைப் பற்றி இங்கேயும் ..
http://ruraldoctors.blogspot.com/2008/12/blog-post_25.html


2 comments:

"உழவன்" "Uzhavan" said...

நன்று. விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அதுவே மிகப் பெரிய தொண்டு!

உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com

பூங்குழலி said...

மிக்க நன்றி உழவன்