Tuesday, 28 December 2010

அவள் -அவன்- அது

ஒரு இளம் பெண் .பல வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .ஆதரவுக்கு வயதான பெற்றோர் மட்டும் .கணவர் வேறு திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார் . வைத்திய செலவுக்குக் கூட பல நேரங்களில் பணம் கிடையாது .முடிந்தவரையில் அங்கும் இங்குமாக இலவசமாக கொடுத்து வருகிறோம் ."புருஷனும் இல்லை ,பிள்ளைகளும் இல்லை "என்பதே எப்போதும் இவரின் ஒரே குறை .

போன மாதம் திடீரென்று தான் கணவரோடு வந்தார் .கேட்ட போது ,கணவருக்கு ஏதோ தொந்தரவு இருப்பதாகவும் ,அந்தப் பெண் இங்கே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் சிபாரிசுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிந்தது ."இத்தனை நாள் ஒன்றுமே பார்க்கவில்லை ,இப்போது மட்டும் சிபாரிசுக்கு பொண்டாட்டி தேவையாகிறது ",என்று சொன்ன போது ,"எனக்கு அவளைப் பிடிக்கும் அவளுக்கும் என்னைப் பிடிக்கும் ",
என்றார் கணவர் .

இதெல்லாம் சரியான பிறகு மீண்டும் ஒருநாள் இருவரும் வந்தனர் .இப்போது "எனக்கு குழந்தை வேண்டும் "என்றார் அந்த பெண் .எதற்கு திடீரென்று இந்த ஆசை என்ற போது "என் அம்மா அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் .குழந்தை இருந்தால் ஆதரவாக இருக்கும் .என்னை எந்த விசேஷத்திற்கும் சேர்ப்பதில்லை .அதுவும் சரியாகும் ." "உனக்கென்று ஆதரவுக்கு எவருமே இல்லை .மருந்து வாங்கவும் பணம் இல்லை ,இந்த குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் ?","யாராவது பார்ப்பார்கள் .....?"

கணவரை அழைத்து பேசிய போது ,"ஆமாம் குழந்தை வேண்டும் என்று
சொல்கிறாள் ."குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் ?நீங்கள் பார்த்துக் கொள்வீர்களா ?""எனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன .என்னால் பார்க்க முடியாது .அவள் அம்மா அப்பாவை அழைத்துக் கேட்டுக் கொள்ளுங்கள் .பார்ப்பார்களா என்று ....."

Monday, 27 December 2010

பாட்டியின் சீலைகள்

நான் சிறு பிள்ளையாக இருந்த போது பாட்டி புடவை என்று ஒன்றிருக்கும் எங்கள் வீட்டில் .இரவில் அதை போர்த்திக் கொண்டு தான் நான் தூங்குவேன் .இது அம்மாவின் புடவை தான் என்றாலும் ,பாட்டி இதை ஒருமுறை கட்டியிருந்ததால் அது பாட்டி புடவையாயிற்று .

ஊர் பக்க வழக்கப்படி பின் கொசுவம் வைத்த சீலையை தான் கட்டியிருப்பார் பாட்டி .சாதாரண புடவைகளை விட நீளமும் அதிகமாக இருக்கும் இது .அதிலும் பளிச் நிறங்கள் தான் பெரும்பாலும் உடுத்துவார் ,தன் நிறத்தை எடுப்பாக காட்டும் என்பதால் .பாட்டி கடைக்கு போய் புடவை வாங்கிப் பார்த்ததாக நினைவில்லை .பிள்ளைகள் எடுத்து தரும் புடவைகளை உடுத்திக் கொள்வார் ,அதை பற்றிய ஒன்றிரண்டு காமென்ட்டுகளோடு ..அதில் அதிகம் அப்பா எடுத்துக் கொடுத்ததாக இருக்கும் .இந்த புடவை, வாங்கி வந்தவுடன் எவருக்கென்று என் இரண்டு அத்தைகளுள் பாகம் பிரிக்கப்படும் .சில நேரம் ,அத்தையுடைய பழைய புடவையையும் பாட்டி உடுத்தியிருப்பார் .
மஞ்சள் நிறப் புடவைகளை பாட்டி உடுத்தி பார்த்ததில்லை .

பாட்டி எப்போதுமே ரொம்ப மெலிந்து தான் இருப்பார் .ஓயாத உடல் உழைப்பு காரணமாக மெலிந்திருக்கலாமோ என்று யோசித்த போது ,பாட்டியை வசதியான காலங்களில் சிறு பிள்ளையாக பார்த்த அத்தையும் ,"அம்மா ,எப்பவும் மெலிஞ்ச ஒடம்பு தான் ",என்று கூறி விட்டார் .வயது அதிகமான காலத்தில் இந்த உடல்வாகு சிரமப்படுத்தியது .இன்னமும் அவர் மெலிந்து போக புடவை இடுப்பில் நிற்கவில்லை .புடவையின் எடையும் சுமக்க முடியாததாயிற்று .சில சமயம் பாட்டி நடக்க ,புடவை பின்னாலேயே உருவிக் கொண்டு வால் போல வரும் .இறுதி சில மாதங்களில் ,இதை கட்டவும் முடியவில்லை .
பெரியப்பா ,"பாவாடை சட்டை மாதிரி தைச்சு தரேன் போட்டுக்கோ " என்று சொன்ன போது பிடிவாதமாக மறுத்துவிட்டார் .

ஒரு தடவை எங்கள் வீட்டில் தங்கியிருந்த போது ,புடவை உருவிக் கொண்டு வந்தது .இதை உடுத்தியிருந்ததன் சிரமம் காரணமாக புடவையிலேயே கொஞ்சம் ஆய் வேறு பட்டுவிட்டது .இனி இது சரிவராது என்று முடிவு செய்த போது ,ஏற்றுக் கொள்ள மனம் இல்லாவிட்டாலும் உண்மை புரிந்தே இருந்தது பாட்டிக்கு .நான் ,அம்மா ,அப்பா எல்லோரும் வற்புறுத்தியதன் பேரில் நைட்டி அணிய ஒப்புக் கொண்டார் .அதுவும் அம்மாவின் நைட்டியைக் கொடுத்த போது ஒரே பிடியாக முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார் .பின்னர் சமாதானம் செய்து என்னுடைய நைட்டியை போட சொன்ன போது ,ஒத்துக் கொண்டார் .நீல நிறத்தில் கருப்பு புள்ளிகள் போட்ட என் நைட்டி தான் பாட்டி முதன்முதலில் அணிந்தது .இதிலிருந்து இறக்கும் வரை நைட்டி தான் .

இறந்த போது வெறும் எலும்புகள் மட்டுமே மிச்சம் இருந்தன பாட்டியின் உடலில் .இரண்டு புடவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக சுற்றி வைக்கவேண்டியிருந்தது .அதில் ஒன்று என் அண்ணன் திருமணத்திற்கு பாட்டிக்கு வாங்கி என் அக்காவின் பங்குக்கு போன புடவை .ஆனாலும் , இறுதி ஊர்வலத்திற்கு ,பாட்டி எப்போதும் விரும்பிய பளிச்சென்ற வெந்தய கலரில் சிவப்பு பார்டர் போட்ட பட்டுப் புடவையை வாங்கி வந்தார்கள் அவருடைய தம்பி மக்கள் ,தாய் வீட்டின் கடைசி சீராக ....

Tuesday, 16 November 2010

ஏடாகூடம்

குழந்தைகளின் கடத்தலும் இரண்டு குழந்தைகளின் கொலையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நேரத்தில் என் மகனின் பள்ளியில் பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் இவை .....

பல குழந்தைகள் பள்ளிக்கு செல்போனுடன் வருகிறார்கள் .பள்ளியில் இதற்கு அனுமதி இல்லையென்றாலும் இவர்கள் பெரும்பாலும் பெற்றோரின் அனுமதியுடனே இதை கொண்டு வருகிறார்கள்;வகுப்புகளுக்கு இடையே பாடல் கேட்பதற்கும் பிரவுஸ் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.இவற்றில் பல லேட்டஸ்ட் மாடல் விலை உயர்ந்த போன்கள்.இது போதாதென்று ஆசிரியர்களும் கூட வகுப்பின் ஊடே செல் போனில் பேசுகிறார்கள் .இது தவிரவும் ஐ பாட்,கேம்ஸ் சி டி போன்றவை சகஜமாக வகுப்பறைக்கு கொண்டுவரப்படுகின்றன .

ஸ்கூட்டியில் வருவதை அனுமதிக்காதீர்கள் ,அவ்வாறு வருபவர்கள் பள்ளியில் முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தும் பல பிள்ளைகள் ஸ்கூட்டியில் வருகிறார்கள் .வீடு திரும்பும் போது மூவராக வண்டியில் வேகமாக பயணிப்பது சகஜமாக நடக்கிறது .

இன்னமும் சில பிள்ளைகள் வீடு திரும்பும் போது தானாகவே தெருவில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி ,பேரம் பேசி தனியே ஏறிச் செல்கிறார்கள் .

ஒரு மாணவனின் பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள் .இங்கு தாத்தா பாட்டியிடம் வளரும் அவன் ,தினம் கொண்டு வரும் பாக்கெட் மணி ,சில நூறுகள் .இன்னொருவன் ,பள்ளிக்கு வந்ததும் அம்மாவுக்கு போன் செய்ய ,டிரைவர் கே எப்சியில் சிக்கன் வாங்கிக் கொண்டு வந்து வகுப்பில் கொடுக்கிறார் .

வார இறுதிகளில் ஒரு மாணவன் ,தன் நண்பர்களுக்கு அருகிலிருக்கும் காபி ஷாப்பில் கொடுக்கும் ட்ரீட்டில் செலவழிபவை சில ஆயிரங்கள் ..

தீபாவளிக்கு அடுத்த நாள் கலர் டிரசில் வரலாம் என்று சொன்ன போது சாதாரண உடையில் வகுப்பிற்கு வந்தானாம் கவுன்சிலரின் மகன் .இங்கு வந்து தன் அப்பாவிற்கு போன் செய்ததும் அவர் கொண்டு வந்து தந்தவை ,பட்டு வேட்டி சட்டை மட்டுமல்ல சுமார் இருபது பவுனில் ஒரு செயின் ,விலை நாலரை லட்சம் என்ற அறிவிப்போடு ..

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் ,ஒரு பிரபல அரசியல் கட்சியின் முக்கிய புள்ளியின் மகன் எல் கே ஜி யில் பள்ளிக்கு கொண்டு வந்தது ஒரு பிச்சுவா கத்தி .பள்ளியில் பதறிப் போய் பெற்றோரை அழைத்து விசாரித்ததில் ,"எங்கள் மகனை தைரியசாலியாக வளர்க்க விரும்புகிறோம் ,இதையெல்லாம் கண்டித்து அவனை பயந்தாங்கொள்ளியாக மாற்றி விடாதீர்கள் "என்று சொன்னதோடு ,அவனை வேறு பள்ளிக்கும் மாற்றி விட்டார்கள் ....





Friday, 12 November 2010

அம்மாவின் சரவெடி

நேற்றைய ஹாட் நியூஸ் அம்மாவின் பேட்டி தான் ...காங்கிரசுக்கு ஆதரவு என்று திரியை அவர் கொளுத்தி போட, டைம்ஸ் நவ் அதை விதவிதமாக விவாதித்தது .

ராசாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது தான் அவருடைய முக்கிய நிபந்தனையாம் .அமைச்சரவையில் கூட இடம் வேண்டாமாம் !ஆச்சரியம் தான் .காங்கிரசிற்கு வந்த வாழ்வு ....

பதினெட்டு எம் பிக்களின் ஆதரவை தானும் தர முடியுமாம் .ஆனாலும் "a bird in hand is worth two in a bush " இல்லையா ?

தேசிய அரசியலிலும் நாட்டின் நலன் மீதும் அவருக்குள்ள அக்கறையைப் பற்றியும் விரிவாகவே பேசினார் .பதிமூன்றே நாட்களில் வாஜ்பாயியின் அரசை கவிழ்த்த போது இந்த அக்கறையெல்லாம் எங்கிருந்ததோ தெரியவில்லை .

கடந்த காலத்தில் அவருக்கும் காங்கிரசிற்கும் நடந்த கசப்பான (இவருடன் உறவாடிய எல்லா கட்சியினருக்கும் ஏற்பட்ட மாதிரியே ஆன ) அனுபவங்களை மறந்துவிட வேண்டுகோள் விடுத்தார் .

ராசாவை அகற்ற தி மு க விற்கு விருப்பம் இருப்பதாக தெரியவில்லை .இத்தனை பெரிய ஊழலில் அவர் ஒருத்தர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது .இவரை அகற்றினால் ,கட்சியிலும் ஏன் மத்தியிலும் உள்ள சில பெரிய தலைகள் சங்கடத்திற்கு உள்ளாகலாம் .காங்கிரசும் இதை பற்றி பெரிதாக கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை .ஒருவேளை பத்திரிக்கைகள் எழுதுவது போல பீஹார் தேர்தல் முடிவுகளை பொறுத்து இது அமையுமோ என்னவோ ?

ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் போது அவரை மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கியதே தவறு .அதிலும் அவரை இன்னமும் அமைச்சராக நீடிக்க விடுவது என்ன நியாயமோ ?அவரும் வெட்கமின்றி ஆணவமாக அமைச்சராக தொடர்கிறார் ?

இந்த பேட்டியின் டைமிங் ரொம்பவே சரியானது .ஆனால் இதனால் என்ன பலன் இருக்குமோ தெரியவில்லை .கட்சியின் மூத்த தலைவர்களே அவசரத்திற்கு பார்க்க முடியாத ,எவரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ,கட்சி அலுவலகத்திற்கே மேள தாளத்தோடு வருகிற ஒரே தலைவர் செல்வி.ஜெயலலிதா தான் .இவர் நம்ப முடியாதவர் என்பதை இவரின் பல கடந்த கால நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றன .

அலங்காரமான மண் குதிரையை வேடிக்கை பார்க்கலாம் ,வழிபடலாம்,ஆனால் அதில் ஏறிக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கலாமா என்ன ?

Thursday, 28 October 2010

என்னவென்று சொல்ல

ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி .அப்பா ,அம்மா ,மகன் என்று ..போன மாதத்தில் இவர்கள் வந்த போது ஒரு துக்க செய்தியும் காத்திருந்தது .இவர்களின் ஒரே மகள் ,நோய் விட்டுவைத்தது இந்த சிறுமியை மட்டும் தான் ,ஒரு சாலை விபத்தில் இறந்து போனாள் .

"அவ ஒருத்திக்கு தான் மேடம் ,நோய் இல்லாம இருந்துது .இவளாவது நல்லா இருக்காளேன்னு தான் எப்பவும் மனச தேத்திக்குவேன் .இப்ப அவளும் போயிட்டா .நாம இல்லாம போய்ட்டா கூட அவளுக்கு வேணுமேன்னு இருபத்து ஐஞ்சு பவுன் சேத்து வச்சேன் ,மேடம் .இந்த கஷ்டம் போதாதுன்னு எங்க மாமியார் வேற ,இனிமேல் அந்த நக ஒனக்கு எதுக்குன்னு ,என் நாத்தனாருக்கு கொடுக்க சொல்லுது ,"என்று ஏதேதோ சொல்லி சொல்லி அழுது கொண்டே இருந்தார் .தேறுதல் சொல்ல கூட வார்த்தைகளின்றி அமைதியாக இருந்தோம் .

Tuesday, 26 October 2010

ஒரு இரவு



ஒரு இரவு
நாள்களுக்கு இடையே கிடந்தது
முந்தைய நாளும்
பிந்தின நாளும்
இரண்டும் ஒன்றே
இப்போது
எது இரவோ
அது இங்கிருந்தது

மெதுவாக
இரவு -
விழித்திருந்து கழிக்கப்பட வேண்டியதாக
கரையில் மணல்கள் போல்
கவனத்தில் எளிதில் புலப்படாது
இனியும் இரவாக -
இல்லாத வரைக்கும்


A Night — there lay the Days between —
— Emily Dickinson


A Night — there lay the Days between —
The Day that was Before —
And Day that was Behind — were one —
And now — ’twas Night — was here —

Slow — Night — that must be watched away —
As Grains upon a shore —
Too imperceptible to note —
Till it be night — no more —

Thursday, 21 October 2010

என்ன விலை அழகே

ஆறே வாரத்தில் மின்னிடும் சிகப்பழகு !,
அப்ப எங்கூரு எருமை மாட்டுக்கு பூசுங்களேன் ,ஆறு வாரத்துல கூட வேண்டாம் ,ஆறு மாசத்துலேயாவது செகப்பாகுதான்னு பாப்போமே !!!!!!"
இது ஒரு பட்டிமன்றத்துல கேட்டது .

ஒரு நாள் ,வேண்டாம், ஒரு மணி நேரம் டி வி பாத்தா அதுல எத்தனை அழகு பொருட்கள் விளம்பரம் ?நீண்ட கூந்தலுக்கு ,பளபளப்பான கூந்தலுக்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு ,ஆரோக்கியம் +பொலிவான கூந்தலுக்கு ன்னு தொடங்கி சிகப்பழகுக்கு ன்னு ஆசை காட்டி ,சரும பராமரிப்புக்கு ன்னு எத்தனை எத்தனையோ .பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு கூடத் தான் (வழுக்கை தலையில இருக்கிற நாலு முடிய நாலு மணிநேரம் செட் பண்றவுங்க அவுங்கன்னு விளம்பரம் பண்றவங்களுக்கு தெரியாதா என்ன ?)

அழகா இருக்கணும்ங்கறது எல்லாருக்கும் ஆசைதான் .இல்லைன்னு அடிச்சு சொல்றவுங்க கண்டிப்பா பொய் சொல்றாங்க .."என்ன விலை அழகே",அழகுக்கு மறுபெயர் பெண்ணாலிருந்து.."நெறைய கவிஞர்கள் பாடினது அழகைத்தான் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ன்னு எழுதினவரை தவிர்த்து ).பெண்ணியம் ,அடுக்களை மட்டுமே பெண்களுக்கா ?பெண்கள் அலங்காரப் பதுமைகளா ?அப்படினெல்லாம் எழுதிட்டு அழகு குறிப்புக்கள் +சமையல் குறிப்புகள் இல்லாத பெண்கள் பத்திரிக்கை தான் இருக்கா ?

படிக்கட்டுல ஓடி வந்தா பின்னாலேயே துள்ளி வர கூந்தல் ,மூச்சு பட்டாலே சிவக்கிற நிறம் ,பக்கத்துல நின்னா எதிர இருக்கவுங்க முகம் காட்டுற கண்ணாடி சருமம், இது எல்லாமே எட்ட துடிக்கிற ஆசைகள் தான் .சாத்தியமாகுதோ இல்லையோ முயற்சியாவது பண்ணாம யாராவது இருந்திருக்காங்களா என்ன?
நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப ,பயத்தம் பருப்பு மாவு தேச்சு குளி,இல்ல கடலை மாவு தேச்சு குளி இதுதான் உச்சகட்ட அழகு குறிப்பா இருக்கும் .ஸ்கூல என் கிளாஸ் மேட் ஒருத்தி ஐய்ப்ரோ பண்ணிட்டு வந்துட்டா ,எச்.எம் வரைக்கும் கூப்பிட்டு திட்டி பெரிய பிரச்சனை ஆச்சு அப்ப .அப்புறம் காலேஜ் வந்தப்ப
பியூட்டி பார்லருக்கு எல்லாரும் போகலாம் .,அது ஒண்ணும் தப்பில்லைங்கற அளவுக்கு பியூட்டி பார்லர் சகஜமாச்சுன்னு ன்னு சொல்றத விட அத்தியாவசியமானதாச்சு .

முதல் முதல்ல ஐய்ப்ரோ பண்றதுக்கு தான் பியூட்டி பார்லர் போயிருந்தேன் .ரொம்பவே கூச்சமா இருந்துச்சு .த்ரெடிங் பண்ணின உடனே கண்ணிலிருந்து தண்ணியா கொட்டிச்சு (கண்ணிலே நீர் எதற்கு ?த்ரெடிங்கப்போ அழுவதற்கு?),எரிச்சல் வேற .வீட்டுக்கு போனவுடனே ஐஸ் வைங்க ன்னு சொல்லி அனுப்பினாங்க .வீட்டுக்கு வந்து பாத்தா புருவம் வடிவமா நளினமா இருந்துச்சி .முகமே பளிச்சுன்னு களை எடுத்த மாதிரி இருந்துச்சி . அப்புறம் பேஷியல் ,ஸ்கால்ப் மசாஜ் ன்னு பியூட்டி பார்லர் நல்லா பழக்கமான இடமாயிருச்சி .

முன்னெல்லாம் பியூட்டி பார்லர் போனா ,நாம சொன்னத செஞ்சுட்டு விட்டுருவாங்க .பேஷியல் பண்ணா முகம் இன்னும் பளிச்சுன்னு இருக்குமேனெல்லாம் லேசா சொல்லிப் பாத்துட்டு தான் .இப்பெல்லாம் ,என்ன செய்யனும்ன்னு முடிவு பண்ணாம உள்ள போறவுங்க கத கந்தல் தான் .முதல்ல ஹோட்டல் மாதிரி ஒரு மெனு கார்ட் கொடுக்குறாங்க .பேஷியல்ல பத்து வகை ,பெடிக்யூர்ல நாலுன்னு படிச்சாலே கண்ணக் கட்டிரும் .அதிலேயும் ரேட் குறைவா ஒண்ண சொல்லிட்டோம்ன்னா உடனே அது உங்களுக்கு சூட் ஆகாது மேடம் ன்னு ஏதாவது தலைய சுத்த வைக்கிற விலையில ஒண்ண சொல்லுவாங்க .

இது போதாதுன்னு ஸ்கின் லைட்டனிங் ,வார்ட் ரிமூவல்ன்னு காஸ்மெட்டாலஜிஸ்ட் செய்ய வேண்டியதெல்லாம் இவங்களே செய்யறாங்க .விதவிதமான கிரீம்கள் விற்பனை வேற . இப்ப புதுசா யூனிசெக்ஸ் சலூன் வேற வந்திருக்கு .நேத்து டி நகர் பக்கம் ஹேர் ஸ்டூடியோ ஒண்ணு இருந்துச்சி .இப்படியே போனா ,ஹேர் ,ஹான்ட் ,புட்ன்னு தனித்தனியா ஸ்டூடியோ ஆரம்பிச்சுடுவாங்க போல .டி வியில வேற நிறைய பியூட்டிஷியன்ஸ் வந்து லைவா சந்தேகத்திற்கு பதில் சொல்றாங்க .சில பல இல்லத்தரசிகள் வேற பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சிகிட்டு வீட்டிலேயே சின்னதா பார்லர் ?? நடத்துறாங்க .

பிரைட்டல்ல நல்ல வருமானம்ன்னு நினைக்கிறேன் .மூணு நாளைக்கு கல்யாணப் பொண்ண குத்தகைக்கு எடுத்துக்குறாங்க .மெகந்தி லிருந்து நெத்தி சுட்டி வரைக்கும் வைச்சு விடுறாங்க .சும்மா சொல்லக் கூடாது ,நல்லாவே அலங்காரம் செஞ்சு விடுறாங்க ,உடைக்கு ஏத்த மாதிரி ,பொண்ணுக்கு ஏத்த மாதிரின்னு .
மொத்தத்துல பாத்தா பியூட்டி பார்லர் நடத்துறவங்களுக்கு ஓரளவு நல்ல வருமானம் தான் போலிருக்கு .

இப்ப, என்ன விலை அழகேன்னு கேட்டா ?"உங்க வசதிக்கு ஏற்ற விலையில கிடைக்குது ன்னு சொல்லத் தோணுது "(ஹப்பா ,டைட்டில சொல்லியாச்சு )

Tuesday, 19 October 2010

மதுரையில் அம்மா

ஒரு வழியாக அம்மாவின் மதுரை திக் விஜயம் முடிந்தது .கொலை மிரட்டல் கடிதம் ,போன் என எப்படியோ இந்த கூட்டத்திற்கு ஒரு நல்ல விளம்பரம் முன்னமே கிடைத்திருந்தது .நல்ல கூட்டம் தான் .ஆனால் இவையெல்லாம் வரப்போகும் ஓட்டுகளா தெரியவில்லை .அமைச்சர் நெப்போலியன் கார் வேறு தாக்கப்பட்டது இருவருக்கும் செய்தி கிடைக்க ஏதுவாக போனது

பளிச்சென்று பதிந்தவை

அம்மாவின் நரை இல்லா தலை .
கரை வைத்த சேலை (மாங்காய் பார்டர் )-ரொம்ப சுமார்.
மேட்ச் இல்லாத கருப்பு கலர் வாட்ச்.

எம்.ஜி.ஆர் பேர் சொல்லப்பட்ட போதும் ,அவர் பாடல்கள் சொல்லப்பட்ட போதும் விசில், கைதட்டல் அதிகம் கேட்டது.

அழகிரி பற்றி (ஏற்கெனவே சொன்னதாக இருந்தாலும்) நிறைய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய பேசியது .
அவர் அஞ்சாநெஞ்சன் அல்ல ,நானே அஞ்சாதவள் -கூல்.

லீலாவதி கொலை முதற்கொண்டு பேசியது -அகழ்வாராய்ச்சி துறையில யாரும் உரை எழுதித் தராங்களா ?

மதுரையை மீட்பேன் +மதுரைக்கு சுதந்திரம் வாங்கித் தருவேன் -மதுரையை மீட்கப்போகும் சுந்தர மீனாட்சி ?

எங்களுக்கும் உள்ளே ஆள் இருக்கிறார்கள் -ஓஹோ!

கின்னஸ் ரெகார்ட் கூட்டம் -?!?!?!?

ஸ்டாலினே மதுரைக்கு விசா வாங்கிட்டு தான் வரணும் -பளிச்:)

நான் ஆணையிட்டால் ,பாட்டை அந்த வரிகளை விட்டுவிட்டு மேற்கோள் காட்டியது .

ஜெயா டி வி புகழ் -அவர்கள் மட்டும் தான் கழக செய்திகளைப் போடுகிறார்கள் (அதை தவிர வேறு எதை போடுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும் )
ஊடகங்கள் நமக்கு என்றுமே சாதகமாக இல்லை

சிறுபடத் தயாரிப்பாளர்கள் சங்கடத்தில் இருப்பது ..புதுசு.

கோவையில் ஐந்து கிமீ முன்பே வாகனத்தை நிறுத்தினார்கள் ,திருச்சியில் பத்து கிமீ ,இன்று வாகனங்களை உள்ளே விட்டுவிட்டு ட்ராபிக் ஜாமாக்கி விட்டார்கள் (ஹி ஹி)
ஏர்போர்ட்டிலிருந்து இங்கு வர பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும் (சைரன் வச்ச காரில் ,இசட் கிளாஸ் செக்யூரிட்டியோட வந்தா அவ்வளவு நேரம் தான் ஆகும் ),இன்றைக்கோ இரண்டு மணிநேரம் ஆகியது -சந்தோசம் -கழகக் கண்மணிகளின் வரவேற்பு ,வருத்தம் -ஆளுங் கட்சியின் சதி -இதில் எது ?

கூட்டணி கணக்கு +கதை

ப்ளாஷ் நியூஸ் :

இப்போது வந்த செய்தி -மதுரையில் நாலு மணியிலிருந்து கரென்ட் இல்லை (எத்தனை மாசமாவோ ?)பவர் கட் ( அதனாலென்ன ஜெயா டிவியில் இன்னமும் பத்து நாட்களுக்கு போடலாமே ?)-வரும் தேர்தலில் தி மு கவின் பவரைக் கட் செய்யுங்கள் .பஞ்ச்

Saturday, 9 October 2010

எந்திரன்

ஒருவழியாக எந்திரன் பாத்தாச்சு.பாத்துட்டு அத பத்தி எழுதலைன்னா எப்படி ?அதான் இந்த பதிவு .

ஆச்சரியங்கள்
சிட்டி ரஜினி ...கலக்கல்ன்னு மட்டும் சொல்லிட்டா பத்தாது .அதுவும் அந்த மேன்னு ஆடு மாதிரி ...அனுமதி கிடைச்சிருந்தா விசில் அடிச்சிருக்கலாம் .
வசி ரஜினி .நிறைய காட்சிகளில் ஸ்மார்ட் +ட்ரிம் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்?)
ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டருல பரபரப்பா நிறைய கூட்டம் ..நன்றி :ரஜினி +ஐஸ் + திகட்ட வைத்த மார்க்கெட்டிங்
இன்ட்ரோ பாட்டு இல்லாத ரஜினி அறிமுகம் ,(சிடியில் எஸ்.பிபி குரலில் வந்த பாடலை கேட்டப்ப இது இன்ட்ரோவா இருக்க முடியாதே தோணிச்சு .ஆனா சென்டிமென்ட் வாழ்க )
கடைசி சண்டை காட்சிகள் +ஸ்பெஷல் எபெக்ட்ஸ்

ஏமாற்றங்கள்
பாடல்கள்
கிளிமஞ்சாரோ பாட்டுக்கு ஆடுனத பத்தி சன் டிவியில ரஜினி பேசிகிட்டே இருந்தார் .ஆனா படத்துல பாத்தா ...பாத்தா ...பாத்து தெரிஞ்சுக்கோங்க
ஐஸ் காஸ்ட்யூம்ஸ் +மேக்கப் ..இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம் .
வில்லன் டேனி ..பாழடைந்த பில்டிங்கில் விடியோ கேம்ஸை போட்டுக் காட்டி ,கட்டுகட்டாக பணம் வாங்கி ...கொடுமைடா சாமி .. ?
ரஜினி ஐஸ் வர நிறைய கட்சிகள் ரெண்டு பேரையும் தனித்தனியா வச்சு எடுத்த மாதிரியே இருக்கு ?கெமிஸ்ட்ரி ?
என்னதான் ஐஸ்வர்யா ராயே காதலியா கெடச்சாலும் இப்படியா ஒரு ஆள் கூட கண்காணிப்புக்கு இல்லாம ரெண்டு நாள் தன்னோட ரோபோவ அனுப்பி விடுவார் ஒரு சயன்டிஸ்ட் ?

முக்கிய செய்திகள் :
ஐஸோட நடிக்கணும்ங்கற ரஜினியோட படையப்பா காலத்து ஆசை நிறைவேறியிருக்கு
நிறைய பேர கை கழுவி விட்ட ஒரு ப்ராஜெக்ட்ட ஷங்கர் ஒரு வழியா முடிச்சு காட்டிட்டாரு

மொத்தத்துல சொல்ல ஒண்ணும் பெருசா இல்ல ...ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம போனா ஒரு தடவ ஜாலியா பாத்துட்டு வரலாம்

Wednesday, 6 October 2010

அம்மா என்றால் அன்பு

சிகிச்சைக்கென தினமும் சமூகத்தின் பல நிலைகளிலிருந்தும் ஏன் நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டிலிருந்தும் கூட நோயாளிகள் வருகிறார்கள் .எச்.ஐ.விக்கென மட்டுமே சிகிச்சை தரும் மையங்கள் குறைவாக இருப்பதும் உள்ளூரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் .இதில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் .

ஆண்கள் அனேகமாக ,டாக்டர் என்று கொஞ்சம் அசால்ட்டாகவே பேசுவார்கள் .பெண்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தாலும் பின்னர் வெகு சகஜமாக வீட்டில் ஒருவருடன் பேசுவது போலவே பேசுவார்கள் .அனேகமாக அம்மா என்றே அனைவரும் கூப்பிடுவார்கள் ."என்னம்மா சொல்றீங்க ?அம்மா என்ன சொல்றாங்களோ அத நா செஞ்சுக்கறேன் ன்னு சொல்லிட்டேன்ம்மா ",இப்படி அன்பையும் நம்பிக்கையையும் சேர்த்தே பொழிபவர்கள் பலர் .வெகு சிலர் மேடம் என்று அழைப்பார்கள் .

இன்னும் சிலரோ அக்கா என்று சொல்லி மாய்ந்து போவார்கள் ."இவரு கிட்ட நா அப்பவே சொன்னேக்கா ,அக்கா கண்டிப்பா கேப்பாங்கன்னு ,நீங்க இன்னிக்கி இருக்கீங்களோ இல்லையோன்னு பயந்துகிட்டே வந்தேன் க்கா ."இப்படி மூச்சுக்கு நூறு அக்கா சொல்லி பேசுவார்கள் .கொஞ்சம் ஸ்டைலாக சிலர் சிஸ்டர் என்று சொல்லிப் பார்ப்பார்கள் .

ஒரு பெண் வருவார் .கர்ப்பமாக இருந்த போது முதன்முதலாக சிகிச்சைக்கு வந்தார் .எப்போதும் "டீச்சர் " என்றே சொல்வார் ."இல்ல டீச்சர் ,ஆமா டீச்சர் "என்று எல்லா வாக்கியங்களின் முடிவிலும் ஒரு டீச்சர் இருக்கும் .அதை விட ,நாம் என்ன கேட்டாலும் எழுந்து நின்று தான் பதில் சொல்வார் .கர்ப்பமாக இருக்கும் போது, படுக்க வைத்து சோதித்துக் கொண்டிருக்கும் போது ,நாம் ஏதாவது கேட்டுவிட்டால் ,உடனே டபாரென்று எழுந்துவிடுவார் .கையைக் கட்டிக் கொண்டு "இல்ல டீச்சர் ..."என்று ஆரம்பிப்பார் .கேட்ட போது பள்ளிகூடத்தில் ஒரு ஆசிரியர் எழுந்து நின்று பதில் சொல்லாததற்கு தண்டனை கொடுத்ததன் பலன் இது .சடாரென்று இவர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிறைய வேடிக்கையாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கும் எங்களுக்கு .

Tuesday, 21 September 2010

கனவு



ஒத்திப் போட்ட கனவுக்கு
என்னவாகும்?
வெயிலில் திராட்சை போல்
உலர்ந்து போகுமா ?
புண் போல் புரையோடி
பின் சீழாய் வடியுமா ?
அழுகின கறி போல்
நாற்றம் எடுக்குமா ?
ஜீராவில் ஊறிக்
காய்ந்த பண்டம் போல்
சீனிப் படிந்து போகுமா ?

கனமான சுமை போல்
அது
தொய்ந்து தொங்குமோ ?

இல்லை வெடிக்குமோ ?



A Dream deferred
Langston Hughes

What happens to a dream deferred?

Does it dry up
like a raisin in the sun?
Or fester like a sore--
And then run?
Does it stink like rotten meat?
Or crust and sugar over--
like a syrupy sweet?

Maybe it just sags
like a heavy load.
Or does it explode?

Wednesday, 8 September 2010

எதைக் கொண்டு வந்தோம் ?

சிகிச்சைக்கு வந்த ஒரு வயதான தம்பதி .கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்து போனார் .சில நாட்களுக்கு முன்னால் மனைவி வந்து போனார் .இவரின் மகனும் இவரும் ஒரே ஊரில் இருக்கிறார்கள் .

மகனுடன் இருக்கிறீர்களா என்று கேட்ட போது ,"ஒட்டிக்கும்ன்னு தனியாவே இருக்க சொல்லிட்டான் "என்று கோபமாக சொன்னார் .உங்களை அழைத்து போகப் போவதாக சொன்னாரே என்று சொன்ன போது ரொம்பவே கோபமான அவர் ,"அவன் கெடக்கறான் பிராடு பய .பேசுறதெல்லாம் பொய் .அப்பா இங்கே இருந்தப்ப ஒரு ராத்திரி கூட வந்து பாத்துக்கலப்பா .அம்மாவே தான் எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டேன் .வீட்டுக்கு கூட போய் வாசல்ல எறக்கி விட்டுட்டு அப்படியே கெளம்பி போய்ட்டான் .நர்ஸ் போடுப்பா ,காசு நா கொடுக்கறேன் சொன்னப்ப கூட கேக்கல .நானே தான் கஷ்டப்பட்டு தூக்கி வச்சு,குளிப்பாட்டி எல்லாம் செஞ்சேன் .
அப்பா செத்தப்புறம், நா தான் பாக்காம கொன்னுட்டேன் ன்னு மருமக எல்லார்கிட்டயும் சொல்றா . இப்ப சொத்துக்கு கேஸ் போட்டிருக்கான் .இவனும் வக்கீலுமா சேந்து எங்கிட்ட நைசா பேசுறாங்க .வக்கீல் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்பா ,இப்படி என்னைய ஏமாத்தி வாங்குன சொத்து எதுவும் நெலைக்காதுன்னு .
ஆமாப்பா ,அம்மாவுக்கு ரொம்ப கோபம்பா .அப்பா ,எல்லாமே அவரே தான் செய்வாரு .எங்கிட்ட எதையும் சொல்லக் கூட மாட்டாரு .கேட்டாலும் ஒனக்கு புரியாதுன்னு சொல்லிருவாரு .அவரு நெறைய படிச்சவரு .நா வெறும் எட்டு தாம்ப்பா படிச்சிருக்கேன் .கரென்ட் பில் ,ரேஷன் கார்டு எதையும் பாக்க கூட விட மாட்டாரு .அப்படியெல்லாம் பாத்தவரே எல்லாத்தையும் போட்டுட்டு தாம்ப்பா போனாரு .இவன் மட்டும் என்ன தூக்கிக்கிட்டா போகப் போறான் .எங்கிட்ட ஒண்ணு பேசுறான் ,பொண்டாட்டி கிட்ட ஒண்ணு பேசுறான் .மொத்தத்துல பொய் பேசுறான் ."

இதே மகன் ,தந்தை மருத்துவமனையில் இருந்த போது எங்கம்மா எங்கப்பாவ சரியாகவே பார்க்கவில்லை .நிறைய படித்த என் அப்பாவிற்கு பொருத்தமில்லாதவர் என் அம்மா .நானே என் அப்பாவை என்னோடு அழைத்து சென்று வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னவர்.

Wednesday, 25 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை

ரெண்டு பேரு வந்து சாபம் கொடுத்திட்டு போன உடனே ..தினம் காலையில எழுந்ததும் நா தொட்டு பார்க்கிறது என் தலைய தான்.நல்ல வேளை டோப்பா வைக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகலை ,அதோட புழுவும் வைக்கலை .
இப்ப கேசவர்த்தினிக்கு வருவோம் .கேசவர்த்தினி போட்டவுடனே என்னோட தல முடி மட்டுமில்ல இத கேட்டுட்டு போட்டுகிட்ட பக்கத்து வீட்டு பூஜா ...ஐயோ சாரி ,எங்க பக்கத்து வீடு பொண்ணு ரெண்டு பேருக்குமே எக்கச்சக்கமா கொட்டிப் போச்சு .இத சரி பண்ண முள்ள முள்ளால எடுக்கிற மாதிரி டாம்காலுக்கு மாறினோம் .தலையில தடவுனா யாருமே நம்ம பக்கத்துல நிக்க முடியாது .அப்படி ஒரு நறுமணம் ,நிறைய மூலிகை சேர்த்திருக்காங்கள் ல அதோட மகிமை .இதுல கொஞ்சம் பரவாயில்லை ....

இப்ப நா ஹையர் செகண்டரி வந்துட்டேன் .எல்லோரும் ஸ்டைலா ஒத்த ஜட போட்டுட்டு வரும் போது ,நா மட்டும் ரெண்டு ஜட தான் .அதே எண்ணெய் அதே மடிச்சு கட்டின அதே நுனி வரைக்கும் ரிப்பன் வச்ச அதே ஸ்டைலு தான். நமக்கு எப்பவும் சொல்லும் ஒண்ணு ஸ்டைலும் ஒண்ணு...:)கிளாசுல " ஒரு நாளிக்காவது ஒத்த ஜட போட்டுக்கிட்டு வாயேன் ன்னு "எத்தனையோ பேர் கேட்டும் ,ம்ஹூம் ...நாங்க மாற மாட்டோம் ல்ல . எங்க ஸ்கூலில ஒரு ஜியாகிரபி மிஸ் இருந்தாங்க .யாராவது ரிப்பன் இல்லாம வந்தா ,கையில இல்ல தரையில கிடக்கிற நாரு ,சனல் ன்னு எதையாவது கட்டி விட்டுருவாங்க .அன்னிக்கி பூரா அதோடயே திரியனும் .அதனால வேற ஸ்டைல் பண்றதுக்கு வாய்ப்பு குறைவு தான் .


ஸ்கூல் முடிச்சு ,காலேஜும் சேர்ந்தாச்சு .இங்க நெனைச்சாப்புல ஸ்டைல் பண்ணலாம் .முடியும் கனிசமா கொறஞ்சு தான் போச்சு (ரொம்ப படிச்சதால ?!?).இங்க நிறைய பேரு "முடிய ட்ரிம் பண்ணி விடு அடியில ஈவனா இல்ல ,"அப்படின்னு பல மாதிரியா தூபம் போட்டு பாத்தாங்க (ஒரு பொறாமை தான் ).ஆனா இப்படி ட்ரிம் பண்ணினவுங்க பல பேரோட கூந்தல் ஆப்பம் பங்கு போட்ட பூனை கதையில போல ஒண்ணுமில்லாம போனதை பார்த்திருந்த நான் ,அசரவே இல்ல .

அப்புறம் கல்யாணம் ஆச்சு .வீட்டுக்காரர் சொன்னாருன்னு ஒரு தடவை முடிய வெட்டிட்டேன் .ஒரு கொண்டை போடுறதுக்கு கூட ஒரு சுத்து வரலை .எங்க மாமியார் (அவங்களுக்கு மூணு மருமகள் ல எனக்கு தான் அவங்கள மாதிரி நீள கூந்தல் ன்னு கொஞ்சம் பெருமை ,அதான் ),எங்க சித்தின்னு (இவங்களுக்கு அவங்க பலம் +அழகு அவங்க கூந்தல்ல தான் இருக்குன்னு நெனப்பு ) நிறைய பேரு கிட்ட திட்டு வாங்கினது தான் மிச்சம் .அதுக்கப்புறம் தான் யார் என்ன சொன்னாலும் சரி முடி கிட்ட கூட கத்திரிகோல் கொண்டு போக கூடாதுன்னு சபதம் ? செஞ்சேன் .

இதுக்கப்புறம் குழந்தை முகம் பார்க்கிறப்ப முடி கொட்டும் அப்படி இப்படிங்கற நிறைய மூட நம்பிக்கைகளைஎல்லாம் கூட தாண்டி என் முடி இன்னமும் அடர்த்தியா இல்லைன்னாலும் நீளமாவாவது இருக்கு .நல்ல வேளை நிறைய இருந்தப்பவே நல்லா ரெட்டை ஜடை போட்டு அனுபவிச்சாச்சு ன்னு தோணும் .இதுக்குன்னு பெரிசா எதையும் செய்யறது இல்லை .முடி வளரதுக்கு டிப்ஸ் ன்னு எங்காவது படிக்கும் போதெல்லாம் எனக்கு என்னோட தோல் டாக்டர் ஒரு தடவை சொன்னது தான் ஞாபகம் வரும் ,"நீ என்ன செஞ்சாலும் ,அது கொட்டனும் இருந்தா கொட்டி தான் தீரும் ."


என்னோட பேஷண்ட்ஸ் யாராவது ,எனக்கு ரொம்ப முடி கொட்டுது ஏதாவது மருந்து எழுதி கொடுங்க ன்னு சொன்னா ,நா சொல்ற ஒரே பதில் இதுதான் ,"அப்படி ஒரு மருந்து இருந்தா நானே சாப்பிட மாட்டேனா ?"

Wednesday, 18 August 2010

உமா சங்கர் -நேர்மைக்கு தண்டனை


பொது வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் நேர்மை என்பது அவமானமாக போய்விட்ட இந்த காலத்தில் உமா சங்கர் போன்ற அதிகாரிகள் பழி வாங்கப்படுவது இயற்கை தான் .நேர்மை என்பது எந்த அரசுக்கும் ஒரு தீண்டத்தகாத விஷயமாகவும் நேர்மையான அதிகாரிகள் வேண்டாத சுமைகளாகவும் மாறிப் போய் வெகு காலமாகிறது . நேர்மையான அதிகாரிகள் விஷமிகளாகவும் ,பிழைக்க தெரியாதவர்களாகவும் ,பிறர் பிழைப்பை கெடுப்பவர்களாகவும் இங்கு கேலிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இவர்களின் உறுதியை சிதைக்க மட்டுமின்றி ,இவர்களை போல் பணியாற்ற முற்படும் பிறரையும் பலவீனப்படுத்தவே . Bureaucracy அரசின் வலது கரமாகவே செயல்படுகிறது .இதில் பலர் அரசையே ஆட்டி வைக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள் ."எஸ் மினிஸ்டர் (Yes Minister )" என்ற பிபிசி தொடர் ஒன்று உண்டு ,அதில் bureaucracy ஆட்சியாளர்களை எப்படி மறைமுகமாக ஆட்டுவிக்கிறது என்பதை
அப்பட்டமாக சித்தரித்திருப்பார்கள் .இதில் பொருந்தாத சிலர் ,ஆட்சிக்கும் அது சார்ந்து வாழ பழகிக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும் தலைவலியாகிறார்கள்.

எது எப்படியானாலும் விசில் ப்ளோவர்ஸ் (Whistle blowers ) கொல்லப்படுகிறார்கள்
தவறை மறைக்க மட்டுமல்ல ,வேறு எவரும் அவ்வாறு துணியாதிருக்கவும். அதே போல் இது போன்ற வழக்குகள் ,வழிக்கு வராதவரை தட்டி வைக்க மட்டுமல்ல ,மற்றவரை அச்சுறுத்தவும் தான் ...


"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை."
என்பதை நினைவில் கொண்டு இது போன்ற இழிவான நடவடிக்கைகளை நிறுத்தி ,உமா சங்கர் அவர்களை மீண்டும் உரியதொரு துறையில் பணியாற்ற அழைக்க வேண்டும் .

நன்றி -பதிவுலக நண்பர்கள்

Friday, 13 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை

நா நாலு இல்ல அஞ்சு படிச்சப்ப ன்னு நெனைக்கிறேன் .மங்கி கிராப்ப விட்டு முடிய வளக்க ஆரம்பிச்சோம் .காலயில அனேகமா எனக்கு தல வாரி விடுறது பொன்னம்மாவா தான் இருக்கும் .ஜாடியிலிருந்த எண்ணெயில பாதி எண்ணெய கீழ கொட்டாம (ரொம்ப கஷ்டம் இது ) ரெண்டு கையிலேயும் ஏந்திக்கிட்டு வருவா .அப்படியே அத என்னோட நடு மண்டையில வச்சு தேச்சு விடுவா .அப்புறம் ஜடைய பின்ன ஆரம்பிப்பா .ஒவ்வொரு கால பின்னின்னப்புறமும் அத டைட் செய்வா பாருங்க , தல வலிக்கும் ,ஆனா பின்னல் மட்டும் கலையவே கலையாது .ஜடைய கழட்டி விட்டப்புறமும் கூட பின்னல் போட்டாப்லேயே இருக்கும் .

அப்புறம் தோள் அளவு மட்டுமே இருந்த என்னோட முடி வளந்து இடுப்பு வரைக்கும் வந்திருச்சி .ரெட்டை ஜடை போட்டுட்டு தான் ஸ்கூலுக்கு போவேன் .நுனி வரைக்கும் எண்ணெய் வச்சு ரிப்பன் வச்சு மடிச்சு கட்டி ....இது அந்த கால கதாநாயகிகளோட மட்டுமில்ல ,என்னோட ஸ்டைலும் கூட .என்னோட சண்டேக்கள் பலவும் என்னோட முடி பராமரிப்புக்கே செலவாச்சு .காலயில எண்ணெய் தேச்சு ,சீயக்கா வச்சு தேச்சு முடிய காயப் போட்டு , ஒரு நாள் போய்டும் .

இப்படியே நடந்துகிட்டு இருந்திச்சு .நா எட்டாவது படிக்கும் போது முடி இன்னமும் அடர்த்தியா இருந்தா நல்லா இருக்குமே ன்னு தோணிச்சு .எங்கம்மா சொன்னங்க ,"நாங்கெல்லாம் சின்ன வயசா இருந்தப்ப ,கேசவர்த்தினி எண்ணெய் தான் தேச்சோம் .அதுக்கப்புறம் தான் முடி அடத்தியா வளந்துச்சி ."இத நம்பி நானும் கேசவர்த்தினிய வாங்கி தேய்க்க ஆரம்பிச்சா முடி கத்தக்கத்தையா கொட்ட ஆரம்பிச்சிருச்சி .

அடுத்த இடுகையில முடியும் ...

Monday, 9 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை




இதை எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை தான் .ஆனா பொறுமையா யோசிக்க இன்னிக்கு தான் நேரம் வந்திச்சு .சரியா யோசிக்காம அரைகுறையா எழுதக் கூடாது இல்லையா ?இத ஒரு தொடர் மாதிரி எழுதலாமா இல்ல சின்னதா முடிச்சிக்கலாமா ன்னு இன்னமும் முடிவு பண்ணல.எழுத எழுத பாத்துக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்கேன் .

சின்ன வயசுல இந்த ஃபேரி டேல்ஸ் படிக்கணும்ன்னா ரொம்ப பிடிக்கும் எனக்கு .அதேலேயும் குறிப்பா அந்த ரபுன்சல் கதை .படிக்கும் போதெல்லாம் ஒரு டவர் மேலேருந்து கூந்தல கீழ போடணும் ன்னா அது எவ்வளவு நீளமா இருந்திருக்கணும் ?அத பிடிச்சி மேலே ஏறனும் னா தல வலிக்காதா ?இல்ல அந்து போகாதா ?இதெல்லாம் எனக்கு வந்த சில சந்தேகம் தான் .


நா பிறந்தப்போ, என்னைய வந்து பாக்கறதுக்கு முன்னாடியே ,நா பிறக்கறதுக்கு முன்னாடியே அதுவும் கூட தப்பு ,கல்யாணத்துக்கு முன்னாடியே என்னோட பேர ,முடிவு செஞ்சாங்க எங்கப்பா .ஒரு வேளை பார்த்திருந்தா வேற பேரு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .ஏன்னா நா பிறந்தப்ப என்னோட தலையில இருந்ததே நாலு முடி தான் .அப்ப இந்த பேர் பொருத்தம் இடிக்குமே !பெயர் ராசியோ என்னமோ பூங்குழலி ன்னு பேரு வச்ச நேரம் என்னோட நாலு முடி நிஜமாவே கூந்தாலாயிருச்சு . இதுக்கு பார்பர் அடிச்ச மூணு மொட்டையும் கூட காரணமாயிருக்கலாம் (நாங்க பகுத்தறிவாளருங்க) .http://poongulali.blogspot.com/2008/08/blog-post.html.


கொஞ்சம் வெவரம் தெரியுற வயசு வரைக்கும் என்னோட முடிய அதிக நீளமா வளர விடாம கட் செஞ்சே வச்சாங்க எங்கம்மா.தோளுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் இருந்தது அதோட நீளம் .முன்னாடி அந்த காலத்து மங்கி கிராப் .இத என்னோட எதித்த வீட்டு ஆண்ட்டியே கட் பண்ணி விடுவாங்க (பியூட்டி பார்லரெல்லாம் சினிமா ஸ்டார்ஸ் மட்டும் போற இடமாயிருந்துது அப்ப ). இதுல நடுவுல கொஞ்ச நாள் ஜட போடுற அளவு வளந்து போன
என்னோட முடிய என்னோட சித்தியும் அம்மாவும் ஜடையோட நா அழ அழ கட் பண்ண ( child abuse ?)இன்னிக்கி வரைக்கும் என் முடி கோணல் மாணல் தான். என்னோட முடிய என்ன நீளத்துல வச்சிக்கனும்ன்னு முடிவு பண்ண எனக்கு உரிமை இருக்குன்னு கூட தெரியாத மண்டாயிருந்திருக்கேன்.

இப்படி மண்டையில மங்கி கிராப்பும் மனசுல ஜட ஆசையும் வச்சுக்கிட்டு நா இருந்த காலத்துல தான் பொன்னம்மா வந்தா எங்க வீட்டுல வேலை பாக்க .

இப்ப யோசிச்சு பாத்ததுல இத ரெண்டு மூணு பாகமா பிரிச்சு எழுதலாம் ன்னு நினைக்கிறேன் .ஏன்னா இது என்னோட நீள கூந்தல் பத்தின நீள கதையில்லையா ?



Wednesday, 4 August 2010

என் கோலங்கள்


சின்னதும் இல்லாமல்
பெரிதாகவும் இல்லாமல்
சரியானதாக இருந்த
என் வீட்டு வாசலில்
கம்பீரமாய் கொலுவிருந்தன
என் கோலங்கள்

புள்ளிகள்
புள்ளிகள் சீண்டி அகன்றும்
குறுக்கே ஓடியும் விளையாடும் கோடுகளென
வாசல் முழுக்கவும்
களித்துக் கிடந்தன

மயில்களின் ஆட்டம்
குயில்களின் கானம்
யானைகளின் ஊர்வலம் என
நித்தம் திருவிழாவாக
இறுமாந்திருந்தது என் வாசலும்

எவர் கண்பட்டதோ
இன்று கையளவாகப் போனது
என் வாசல்
எவர் வீட்டு வாசலில்
ஒண்டுவதென இடம் தேடி
கலங்கி அலைகின்றன
அனாதைகள் போல்
என் கோலங்கள்

Wednesday, 28 July 2010

என் கனவு



பல நாட்கள் ஆகிப் போனது
என் கனவை நான் மறந்தே போனேன்
ஆனால் அப்போது அங்கிருந்தது அது
என் முன்னால்
சூரியன் போல பிரகாசமாய்
என் கனவு

அப்புறம் அந்த சுவர் எழுந்தது
மெள்ள எழுந்தது
மெள்ளவே
எனக்கும் என் கனவிற்கும் நடுவே
எழுந்து கொண்டே இருந்தது
வானம் தட்டும் மட்டும்
அந்த சுவர்

நிழல்
நான் கருப்பாக இருக்கிறேன்
நான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்
என் கனவின் வெளிச்சம்
இனி என்முன் இல்லை
என் மேல்
வெறும் தடிச்சுவர்
வெறும் நிழல்


என் கைகளே
என் கரிய கைகளே
சுவரை உடைத்து வெளியேறுங்கள்
என் கனவை கண்டெடுங்கள்
உதவுங்கள்
இந்த இருட்டை சிதைக்க
இந்த இரவை நொறுக்க
இந்த நிழலை உடைக்க
ஓராயிரம் சூரிய வெளிச்சங்களாக
சுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக



It was a long time ago ...
By Langston Hughes

It was a long time ago.
I have almost forgotten my dream.
But it was there then,
In front of me,
Bright like a sun--
My dream.
And then the wall rose,
Rose slowly,
Slowly,
Between me and my dream.
Rose until it touched the sky--
The wall.Shadow.
I am black.
I lie down in the shadow.
No longer the light of my dream before me,
Above me.
Only the thick wall.
Only the shadow.
My hands!
My dark hands!
Break through the wall!
Find my dream!
Help me to shatter this darkness,
To smash this night,
To break this shadow
Into a thousand lights of sun,
Into a thousand whirling dreams Of sun!

Tuesday, 27 July 2010

விழிப்புணர்வு

சில சமயங்களில் நோயாளிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு மருத்துவர்களுக்கு இருப்பதில்லை .நேற்று நடந்தது இது .வெகு நாட்கள் கழித்து சிகிச்சைக்கென வந்திருந்தார் ஒருவர் .


முந்தைய வாரத்தில் பைக்கிலிருந்து விழுந்ததில் அடிப்பட்டு தையல் போடப்பட்டதாக சொன்னார் ."பைக்கில போயிட்டிருந்தப்ப பின்னாலிருந்து வண்டிக்காரன் தட்டிவிட்டுட்டான் .அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில மூளைக்கு வயித்துக்கு எல்லாம் ஸ்கேன் எடுத்து பாத்துட்டாங்க .எல்லாமே நல்லா இருக்கு .உள்காயம் எதுவுமில்லன்னு சொல்லிட்டாங்க .பின் மண்டையில மட்டும் தையல் போட்டாங்க .

அதுல பாருங்க ,முதல்ல அடிப்பட்டு தலையில ரத்தம் வந்திச்சு .அப்ப வந்து பாத்த டாக்டர் கையில க்ளவுஸ் போடல .வெறுங் கையோட தான் பாத்தார் .தையல் போட்ட டாக்டர் க்ளவுஸ் போட்டிருந்தார் .எனக்கோ சங்கடமா போச்சு .ஆனா எச்.ஐ.வி ன்னு சொன்னா வெளிய அனுப்பிடுவாங்களோன்னு பயமா வேற இருந்திச்சு .சொல்லவும் முடியல .கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரினாலும் பரவாயில்ல .தனியார் தான் .எத்தனையோ மருந்து ,பஞ்சு எல்லாம் எழுதி கொடுத்தாங்க .அதோட ரெண்டு க்ளவுஸ் எழுதி கொடுத்திருந்தா வாங்கிக் கொடுத்திருக்க மாட்டோமா ?

நீங்களாச்சும் ஒங்க ஆஸ்பத்திரியிலிருந்து எல்லா டாக்டருக்கும் ஒரு லெட்டர் எழுதுங்களேன் .எந்த பேஷன்டா இருந்தாலும் க்ளவுஸ் போட்டு தான் பாக்கணும் ன்னு .ஏன்னா யாருக்கு நோய் இருக்கு அந்த அவசரத்துல பாக்க முடியுமா ?"

Tuesday, 20 July 2010

பாட்டியும் பேனும்

பாட்டி இறக்கும் போது அவருக்கு வயது தொண்ணூறை நெருங்கியோ தாண்டியோ இருந்திருக்கும் .ஆனால் அந்த வயதிலும் பாட்டிக்கு தலையில் கத்தையாக வெள்ளையாக ஒன்றிரண்டு கருப்பாகவும் கூட முடி இருந்தது .இதை குறித்து கொஞ்சம் பெருமை தான் பாட்டிக்கு.நீளமுடி இல்லாதவர்கள் எவரேனும் பூ வைத்திருப்பதைப் பார்த்தால் ,"அதுல பூவ அவ ஆணி அடிச்சு தான் மாட்டனும் ளா'"என்பார் நக்கலாக .



குளித்ததும் எண்ணெய் வைத்தது சீவி ,நுனியில் கொண்டை போட்டுக் கொண்டு விடுவார் .இதில் இன்னொரு சிக்கல் இருந்தது .பாட்டியின் கூந்தலில் எப்போதும் குடி இருந்தன நிறைய பேன்கள்.ஒல்லியாக இருந்த என் பாட்டிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் குண்டு குண்டாக மூட்டை பூச்சி அளவில் .





மதியான வேளைகளில் "பேன் இழுப்பது" என்னுடைய பொறுப்பாகி போனது.நான் சோபாவில் உட்கார்ந்து கொள்ள பாட்டி கீழே உட்கார்ந்து கொள்வார் .பேனை பிடிப்பது சுலபமாக இருந்தாலும் அவற்றை கொல்லுவது அத்தனை சுலபமாக இல்லை .நகத்தில் வைத்தது நசுக்கியவுடன் ,கையையே வெட்டியது போல ரத்தம் தெறிக்கும் .இது கொஞ்சம் அருவருப்பாக இருந்ததால் ,இதற்கு மாற்றாக இன்னொரு வழியை கையாண்டோம் .பேன் பார்க்க ஆரம்பிக்கும் முன்னமே ஒரு பழைய மக்கில் மண்ணெண்ணெய் வைத்துக் கொள்வோம் .பேனைப் பிடித்து அதில் போட்டுவிடுவோம் .இது கொஞ்ச காலம் தொடர்ந்தது .





ஒரு முறை ,ஊரிலிருந்து வந்திருந்தார் பாட்டி .வழக்கம் போலவே பட்டர் பிஸ்கட் +இருமல்+பேனுடன் .எக்கச்சக்கமான பேன் .இதைப் பார்த்த, என் வீட்டில் அப்போது பணி செய்து கொண்டிருந்த பெண் சொன்னார் ,"அம்மா ,இது சாவுப் பேன் .அதான் இப்படி அப்பி போயி கெடக்குது "என்று (இதன் பின் இரண்டு வருடமாவது பாட்டி உயிரோடு இருந்தார்) . பேன் சீப்பு வைத்து சீவி சீவி கை வலித்தது தான் மிச்சம் .பேன் குறைந்தாற் போல் தெரியவில்லை .


அம்மா உடனே மெடிக்கர் (பேன் ஷாம்பூ ?) வாங்கி பாட்டியின் தலைமுடியை நன்றாக அலசிவிட்டார் .இதுவே பாட்டியின் வாழ்க்கையில் முதல் ஷாம்பூ பாத்தாக இருக்க வேண்டும் .தலை துடைத்து கொண்டிருந்த பாட்டியிடம் ," என்ன பாட்டி,குளிச்சாச்சா ?"என்று நான் கேட்டவுடன் ,"எதையோ போட்டு ஒங்கம்மா தேச்சுபுட்டா ளா எம்முடிஎல்லாம் ஒண்ணுமில்லாம ஓடாப் போச்சு ....பூரா முடியும் போச்சுப் போ "என்றார் கோபமாக ..

Wednesday, 14 July 2010

அம்மாவின் ஆர்ப்பாட்டம்

நினைத்தபடியே செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில் பெரிய அளவில் கூட்டத்தை சேர்த்து காண்பித்தார் அ .தி.மு.க தலைவி ஜெயலலிதா .தொலைகாட்சியில் பார்த்தவரையில் கண்ணெட்டும் அல்லது காமெரா எட்டும் வரையிலும் தலைகளே தெரிந்தன .இவையெல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது ஒரு பக்கம் இருக்க ,இதில் சில விஷயங்கள் பளிச்சென்று மனதில் பதிந்தன .

1.மகளிர் அணியின் (குத்?)ஆட்டம் .இதை ஜெயா டிவி பெரிதாக காண்பிக்கவில்லை என்றாலும் தமிழன் டிவியில் முக்கியமாக காண்பித்தார்கள் .

2.வழக்கம் போலவே மூலவரான எம்.ஜி.ஆர் மிஸ்ஸிங் .எங்கோ ஏனோ தானோ என்று அவர் முகம் தெரிந்தது. என்று திருந்துவார்களோ தெரியவில்லை .

3.ஏனோ கூட்டம் கொஞ்சம் கூட கலர்புல்லாக இல்லை .இவ்வளவு கூட்டம் சேர்க்க செலவழித்தவர்கள் ,அம்மா படம் போட்ட தொப்பி ,டி.ஷர்ட் (ஓரிருவர் அணிந்திருந்தனர் ) ,பானர்ஸ் என்று இன்னம் கொஞ்சம் செலவழித்திருந்தால் தொலைக்காட்சியில் பார்க்க நன்றாக இருந்திருக்கும் .

4.எல்லோருக்கும் மேடையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன .இந்த மட்டுக்கும் மாற்றம் தான் .ஆனால் உட்கார்ந்திருந்தவர்கள் யாருமே இயல்பாக இல்லை .கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தார்கள் .(கட்சி தாவலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தா ,இவ்வளவு கூட்டம் வந்திருக்கே என்று யோசித்திருப்பார்களோ ?)

5.அம்மாவின் பேச்சு .ஆர்ப்பாட்டத்தின் ஹைலைட்டாக இருக்க வேண்டிய இது ரொம்ப ஏமாற்றமாக இருந்தது .மீண்டும் அரைத்த மாவையே அரைத்தார் .எத்தனையோ முறை எத்தனையோ பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் என்று எல்லோருமே பலமுறை கேட்ட விஷயங்கள் தான் .பேச்சு ஸ்டைல் வேறு அறிக்கை போலவே இருந்தது (அறிக்கை எழுதுற ஆளையே வச்சு பேச்சும் எழுதுனா இந்த கதி தான் .ஆள மாத்துங்க ).வகுப்பில் பாடம் நடத்தும் இழுவை ஆசிரியர் லெக்சர் போல இருந்தது இந்த பேருரை .
இத்தனை கூட்டம் கிடைக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டமாக ,இன்னமும் மக்களை சுண்டி இழுக்கும் படி ஆரவாரமாக பேச வேண்டாமா ?ஏனோ இவர் எல்லா மேடைகளிலும் இப்படியே வழவழா கொழ கொழாவென்றே பேசுகிறார் (கலைஞர் அளவிற்கு இல்லையென்றாலும் ஸ்டாலின் அளவிற்காவது பேச வேண்டாமா ?)
ஒரு எம்.ஜி.ஆர் பாட்டாவது பாடியிருக்கலாம் (திருவளர் செல்வியோ ,நான் தேடிய தலைவியோ என்ற பாட்டையாவது )
இறுதியில் இவர் பேசிய தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுக்கு நல்ல வரவேற்பு.

6.இதற்கு உடனே தி மு க தரப்பு ,ஆட்சி மாறும் என்று கணிக்க இவர் என்ன ஆக்டபஸ் பாலா என்று சமயோசிதமாக கேட்டு வைத்தார்கள் .(நல்லாத்தான் யோசிக்கிறாங்க.பகுத்தறிவு தான் இதுக்கு காரணம் போல )

7.எல்லா தேசிய தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டத்தை முக்கிய செய்தியாக காண்பித்தார்கள் .(அம்மா வெளிய வந்ததே அவுங்களுக்கு செய்தி தான் ...)

8.அடுத்தது என்ன ...ஆவலாக இருக்கிறது .அம்மா கொடநாடு போயாச்சா ?

Saturday, 10 July 2010

அம்மா என்று ...

இறந்து போனவர்களைப் பற்றிய செய்திகளை அதிகம் சுமந்து வரக்கூடாது என்றே பல நேரங்களில் நினைக்கிறேன் .ஆனால் அருகிலிருந்து பார்க்கும் போது சில மரணங்கள் அதிகம் பாதிப்பது நிஜம் .

நேற்று ஒரு பெண்ணை கொண்டு வந்து சேர்த்தார்கள் .உடன் ஒரு பெண் ,அவரின் மகள் ,வயது பதினெட்டு இருக்கும் .இந்த பெண்ணே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.உன்னுடன் துணைக்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்ட போது ,என் தம்பி இருக்கிறான் என்று சொன்னாள்,அவனின் வயது பத்து இருக்கும் .இவர்களை அழைத்து வந்த சித்தப்பா ,செலவுக்கான பணத்தை இந்த சிறுவனிடம் கொடுத்து விட்டு ,இன்னமும் பணம் ஏற்பாடு செய்து வர ஊருக்கு சென்றிருக்கிறார் .

நோயாளியோ மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் .நோயாளியின் உடல் நலம் மோசமாக இருக்கிறது என்பதை தெரிவித்து விட்டோம் என்று உறவினர்களிடம் கையெழுத்து வாங்கும் வழக்கம் உண்டு (DIL).இவர்களிடம் எதை சொல்வது என்று யோசித்துவிட்டு ,சீரியசாகவே இருக்கிறது நிலைமை என்று மட்டும் சொல்லி வைத்தோம் ."ஏதாவது செய்யுங்க ,எங்கப்பாவும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி செத்து போயிட்டார் .இப்ப எனக்கு அம்மாவும் இல்லாம போயிடுவாங்க போலிருக்கு "என்று சொல்லி ஓவென்று அழுதாள் அந்த பெண் .

இன்று அதிகாலையில் அவளின் அம்மா இறந்து போனார் .இருந்ததோ இந்த பெண்ணும் அவள் தம்பியும் .அவள் சித்தப்பா வந்து சேரவே ஒரு மணி ஆயிற்று .தொலைபேசியில் செய்தி சொல்லிய போது ,இவர்களில் சித்தப்பா குழந்தைகளிடம் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளவே ,இருவரையும் கொஞ்ச நேரம் வெளியிலேயே உட்கார வைத்திருந்தோம் .

ஆனாலும் சிறிது நேரத்தில் விளங்கி விடவே ,சிறிது நேரம் அழுது விட்டு ,ஒன்றுமே பேசாமல் எங்களை கடந்து போனாள் அந்த பெண் .வேறு நோயாளிகளுடன் வந்தவர்கள் ஆறுதல் சொல்லி ஏதோ சாப்பிட வாங்கித் தந்தார்கள் .சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தாள்.ஆம்புலன்சில் ஏற்றி போகும் வரையும் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியுடனே கிளம்பி போனாள் .மனம் வாடிப் போனோம் எல்லோருமே .

Wednesday, 7 July 2010

கற்பகசித்தர்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜோசியர்கள் ஒவ்வொரு பரிகாரம் சொல்கிறார்கள் .ஒரு காலத்தில் நாகதோஷ பரிகாரம் வெகு பிரசித்தியாக இருந்தது .அதை செய்ய காளஹஸ்திக்கு எல்லோரும் போனார்கள் ,போகிறார்கள் .பின்பு ,ஏதோ முன்னோர் வழிபாடு சரியில்லை என எல்லோரும் திதி திவசம் என்று காக்கைகளை பிடித்துக் கொண்டிருந்தார்கள் .பின்னர் ஆரம்பித்தது குல தெய்வ வழிபாடு .இந்த காலகட்டத்தில் தான் அம்மாவுக்கு நாங்கள் குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது சங்கடமாக போனது .


எங்கள் அப்பா வீட்டிலோ எல்லோரும் நாத்திகர்கள் .இதில் எங்கள் குல தெய்வம் கருப்பஸ்தர் என்று எப்போதோ எங்கள் அத்தை சொன்னதாக ஞாபகம் .இதுவே தப்பாகி அவர் பெயர் கற்பகசித்தன் என்று தெரிய வந்தது .தெரிய வந்ததும் அம்மா செய்த முதல் காரியம் அவருக்கு வெள்ளியில் கிரீடம் செய்து வைத்தது.அதோடு எங்களை விட்டுவிடவில்லை கற்பகசித்தர் .அவரின் மேல் அம்மாவிற்கு ஏற்பட்ட பரிவு அவருக்கு உற்சாகமளித்திருக்க வேண்டும் .

அங்கிங்கே விசாரித்ததில் கற்பகசித்தரைப் பற்றிய இன்னமும் பல செய்திகள் தெரிய வந்தன .அவரின் பூர்வீகம் ,அவரின் சொந்த ஊர் ,அவர் சார்ந்த சாபம் ,அது மட்டுமல்ல அவர் எங்களின் குல தெய்வம் மட்டுமல்ல ,எங்களின் மூதாதையரும் கூட என்பதும் .இதையெல்லாம் அம்மா பக்தி பரவசத்துடன் சேகரித்துக் கொண்டிருக்க ,அப்பா இதையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதினார் ,"ஆலடி கண்ட கற்பகசித்தன் " என்று பெயரிட்டு .இதை இந்த ஆண்டு ஆலடிப்பட்டி வைத்தியலிங்கச் சாமி கோவில் சித்திரை திருவிழாவின் போது வெளியிட்டோம் .அதோடு அனைவருக்கும் இலவசமாக ஒரு புத்தகம் கொடுத்தும் ஆயிற்று .ஊர் வரலாற்றை பதிவு செய்ததோடு அல்லாமல் அதை தன் ஊரிலேயே வெளியிட்ட சந்தோசம் அப்பாவிற்கு.

Monday, 5 July 2010

பிறந்தநாள் அன்றும் இன்றும்

காலயில ஸ்கூல் அசெம்பிளி முடிஞ்சவுடனே ஒரு அறிவிப்பு செய்வாங்க ."ஆல் தி பர்த்டே சில்டிரன் கம் பார்வர்ட் ."எல்லோரும் வந்தவுடனே ,"ஹாப்பி பர்த்டே "பாட்டு ,மொத்த ஸ்கூலும் பாடும். எங்க ஸ்கூல்ல வித்தியாசமா ,பர்த்டே கொண்டாடுறவுங்க ,"ஐ தாங்க யூ ஐ டூ" ன்னு திரும்பிப் பாடனும்.இது முடிஞ்சப்புறம் ,எச்.எம் ,டீச்சர்ஸ் எல்லாருக்கும் சாக்லேட் ,அப்புறம் வகுப்புல கூட படிக்கிறவுங்களுக்கு (இதுல ரொம்ப நெருங்கிய தோழிகளுக்கு ,"நீ இன்னும் ரெண்டு எடுத்துகோடீ "ன்னு ஸ்பெஷல் கவனிப்பு ). இது தவிர வழக்கம் போல புது டிரெஸ் (என் தம்பியோட பிறந்தநாள் பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு வரும் ,அதுனால அவனுக்கு புது டிரெஸ் கூட பல தடவை கிடையாது ),வீட்டுல பாயாசம் இல்ல கேசரி ,கோயில் +அர்ச்சனை . பிறந்தநாளுக்கு கேக் வெட்டினவுங்க எல்லோரும் கோடீஸ்வரரா தெரிவாங்க .என் வகுப்பு தோழி ஒருத்தி வருஷா வருஷம் பட்டுப்பாவாடை கட்டிட்டு தான் வருவா ,அடேயப்பா ன்னு நெனச்சுக்கிட்டு இருந்தா ஒரே பாவடைய தான் டக் பிரிச்சு கட்டிட்டு வந்திருக்கான்னு அப்புறம் புரிஞ்சுது .

அப்புறம் காலேஜ் வந்தப்ப தான் ,கிரீட்டிங் கார்டு எல்லாம் பெரிசா வந்திச்சு .இருக்கிற நாலு கடையில தேடி ,மனச தொடுற கண்ண பிழியுற மாதிரி விஷயமா எழுதியிருக்கிற கார்டை வாங்கிக் கொடுக்கிறதே ஒரு பெரிய ஹாபியா இருந்துது .இது பத்தாதுன்னு நாமளே கலர் பண்ணி ,கூட நாலு லைன் எழுதி...யாருக்காவது பிறந்தநாள் ,வந்தாலே நம்மளோட கலை ஆர்வம் கரை புரண்டிரும் (அப்படி வந்த சில கார்டு இன்னும் கூட எங்கிட்ட உண்டு ,கொடுத்த தோழிகள் கூட தான் தொடர்பு இல்லாம போச்சு ) .காலேஜுல ஒரே ஒரு தடவ என் தோழிகளுக்கு டிரீட் கொடுத்தேன் .ஒண்ணும் பெரிசா இல்ல ஒரு ஐஞ்சு பேருக்கு காலேஜுக்குள்ளேயே கூல் டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தேன் .அப்பவும் நா குடிச்ச பாட்டில் ஒடஞ்சி அதுக்குள்ளே ரெண்டு எறும்பு வேற செத்துக் கெடந்தது .கடைக்காரர் பயந்து போயி இன்னொன்ன ப்ரீயா கொடுத்தார் (பரிசா கொடுத்தார் ?).

இப்பவெல்லாம் நம்ம பிறந்தநாளை யாராவது ஞாபகம் வச்சுகிட்டு போன் பண்ணினா கூட சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் .சில பேர் ,இத நினைவு படுத்த வலைத்தளங்கள் இருக்காமே ,அங்கிருந்து சொல்லிடறாங்க .சில கடையில எழுதி வச்சுட்டு வந்தா ,ஞாபகமா கார்ட் அனுப்பிடறாங்க .வீட்டுல இருக்கவுங்க அடிச்சி பிடிச்சி நாள் முடியறதுக்குள்ள எப்படியோ ஞாபகம் வந்து ,திட்டு வாங்குறதுக்குள்ள வாழ்த்தி எஸ்கேப் ஆறாங்க .

இது என்னோட பிறந்தநாள் பிளாஷ்பேக் . ஆனா நா சொல்ல வந்த மேட்டர் வேற .இப்ப பாத்தா பிறந்தநாள் கொண்டடலைனா பிள்ளைகளுக்கே தாழ்வு மனப்பான்மை வந்திரும் போல .என்னோட அபார்ட்மென்டுல நாப்பத்தி எட்டு வீடு இருக்கு ,இதுல ஒரு இருவது குட்டிகளுக்கு வயசு பத்துக்கு கீழ .மாசத்துக்கு ஒரு பிறந்தநாள் பார்ட்டியாவது வருது .இதுல ஒருத்தர் வைக்கிறாங்கன்னே மத்தவங்களும் வைக்க வேண்டியதா இருக்கு .போன வருஷம் என்னோட மகனுக்கு பார்ட்டி வச்சப்ப ,வந்த பிள்ளைகள் கிட்ட ,"ஏதாவது கேம் விளையாடலாம் ,என்ன கேம் நீங்களே சொல்லுங்க "ன்னு சொன்னவுடனே , ஒரு குட்டி வேகமா சொல்லிச்சு ,"ஆண்ட்டி என்ன ரிடர்ன் கிப்ட்டுன்னு கெஸ் பண்ணலாம் ."இப்படி ஒரு விளையாட்டா ? ன்னு யோசிக்கிறவுங்களுக்கு எல்லாம் ,ரிடர்ன் கிப்ட் இல்லாம பார்ட்டி வச்சா ,பிள்ளைகளே பார்ட்டிய பாய்காட் பண்ணிடும்.

இது கூட பரவாயில்ல ,ஸ்கூல கூட படிக்கிறவங்களுக்கு கிப்ட் கொடுக்கறது ஒரு பேஷனாகி வருது .ஆளாளுக்கு என்னென்னவோ கொடுக்கறாங்க .ரெண்டு நட்ராஜ் பென்சில ,ஒரு ரப்பர் இத செல்லோ டேப்புல ஒட்டி கொடுக்கிறதுல இருந்து என்னென்னவோ .போன வாரம் என் பையன் வகுப்புல ஒரு பையன் கொடுத்தது என்ன தெரியுமா ?அவன் பேர் போட்ட சின்ன பேன்சி பேக் ஒண்ணு.வகுப்புல மொத்தம் நாப்பத்தி ஐஞ்சு பிள்ளைங்க ,ஒரு பை அம்பது ரூபாயின்னு வச்சா கூட ,கண்ண கட்டுது சாமி.


ஸ்கூல் இதெல்லாம் தடை பண்ணனும் .மூணாங் கிளாசுல இப்படி பெரிசா கொடுக்கிறவன் பணக்காரன் ,சின்னதா கொடுக்கிறவன் கஞ்சன் .கொடுக்காதவன் ஏழைன்னு இல்ல தப்பு பூவர் ன்னு ,பிள்ளைங்க அரிச்சுவடி படிச்சா .....எங்க போயி முடியும் ?

Saturday, 3 July 2010

மாநாடு முடிஞ்சி போச்சு

மாநாடும் முடிஞ்சி போச்சி
வந்த சனம் கலஞ்சி போச்சி
ஊரெல்லாம் வெறிச்சுன்னு தான்
வெறுங்காடா மாறிப்போச்சு

வானம் முட்டும் பந்தலென்ன
கண்ண கட்டும் லைட்டும் என்ன
பாட்டென்ன வேட்டென்ன
பவுசான பேச்சென்ன

கும்மிக்கு ஒரு கூட்டம்
கோலாட்டம் ஒரு கூட்டம்
சொகுசாத்தான் பேசிப் போக
சொகம்கண்ட கூட்டமொண்ணு

எவரெவரோ வந்தாக
எங்கிருந்தோ வந்தாக
வட கண்ட எலி போல
விரும்பித் தான் வந்தாக

வடக்கிலிருந்து வந்தாக
தெக்கு சீமைக்காரர் வந்தாக
அட வெள்ளையும் சொள்ளையுமா
தொரமாரு வந்தாக

கொலுவிருக்கும் சாமியெல்லாம்
தெருவேறி வந்தாக
பட்டுத்துணி சரசரக்க
பவுசாதான் வந்தாக

பேர் சொல்ல வாழ்ந்தவுக
தெருவோட போகையில
கிலோமீட்டர் நீள மேடையிலே
ஒரு குடும்பமாக வந்தாக

பாடி பதவி பெற
புலவரெல்லாம் வந்தாக
எழுத கை கூசுதய்யா
எத எதையோ சொன்னாக

கொழஞ்சித்தான் பேசினாக
குனிஞ்சித்தான் நடந்தாக
தமிழ் வளக்க ஆசயினு
தர பாத்து சொன்னாக

மினிக்கித்தான் திரிஞ்சவுக
மிதிபட்டு வலிச்சாலும்
அம்மான்னு கத்தாம
அய்யான்னே அழுதாங்க

இவுக ஆடிய ஆட்டத்தில்
தமிழ் வளந்து போச்சுதய்யா
ராக்கெட்டுல போனாப்புல
சிலர் மெதப்பேறிப் போச்சுதய்யா

பட்டணத்து பலகையிலே
தமிழ் மணம் தான் வீசுதையா
கோயமுத்தூர் சீமையிலே
குப்ப தமிழ் பேசுதையா

தமிழ்த்தாயி மேலெல்லாம்
வெறுந் தகடு மின்னுதய்யா
அவ காதில தான் வச்ச பூவு
கொண்ட வர மணக்குதையா

Wednesday, 30 June 2010

எச்சம்


மரங்கள் அடர்ந்த தெருவில்
பறவைகளின் பேரிரைச்சல் கேட்காவிட்டாலும்
அவற்றின் மெல்லிய கீச்சுக் குரல்களேனும்
கேட்டுக் கொண்டே தான் இருக்கும்

அவ்வழியே கடக்கும் போது
பலர் மீதில்லாவிட்டாலும்
சிலர் மீதேனும்
அவை மென்று கழித்ததன்
எச்சம் படக்கூடும்

அதை "சீ" என்று துடைத்துவிட்டே
கடப்பவர் பலரெனினும்
நின்று அப்பறவைகளின் மேல்
கல்லெறிந்து போகிறவர்களும் உண்டு
ஏதென்று அறியாமல் பறவைகளும்
பேரிரைச்சல் எழுப்பி அடங்கும்
கல்லெறிய முடியாமல் ....

Friday, 11 June 2010

நம்பிக்கை

நேற்று வழக்கமான பரிசோதனைகளுக்காக ஒருவர் வந்தார் ,ஏகப்பட்ட இனிப்புகள் ,பழங்கள் +சந்தோஷத்துடன் .பல வருஷமாகவே சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் தான் .முதலில் வந்த போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார் .சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் நன்கு முன்னேறி இப்போது நன்றாக இருக்கிறார் .

"எனக்கு மொதல்ல எச்.ஐ.வி இருக்குன்னு சொன்னப்ப ,செத்துரலாம்ன்னு நெனச்சேன் .அப்புறம் ,அட்மிட் ஆகணும்ன்னு சொன்னப்ப ,அதுக்கெல்லாம் செலவாகுமே அது வீண் தானே ன்னு நெனைச்சேன் .நாம செத்தாவது போய்ட்டா இந்த செலவாவது மிச்சப்படுமே ன்னு கூட நெனச்சேன் .ஆனா இங்க வந்த பிறகு ,இங்க வேல பாக்குற எல்லாரும் தைரியம் சொன்னீங்க ,என்ன அன்பா நடத்துனீங்க.அதுக்கப்புறம் தான் உயிர் வாழணும்ன்னு நெனைப்பே வந்தது .அப்பக் கூட, என்னோட ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ற வரைக்கும் இருந்தா போதும்ன்னு நெனச்சேன்.போன மாசம் என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டேன் .அடுத்த மாசம் சின்ன பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் .இப்ப நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .அதுக்கு தான் ஒங்களுக்கு ஸ்வீட் ,எங்க ஊரு மாம்பழம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் ."

Thursday, 3 June 2010

சொல்வதற்கு ஒன்றுமில்லை

பிரசவ கால சிறப்பு சிகிச்சைக்காக எங்களிடம் வந்த பெண் இவர் .எப்போதும் படபடவென்று பேசிக் கொண்டே இருப்பார் .சில வாரங்களுக்கு முன் குழந்தைக்கு ஹெச் .ஐ.வி இருக்கிறதா என்று கண்டறிய ரத்த பரிசோதனை செய்யப்பட்டது .இதில் குழந்தைக்கும் நோய் இருப்பது தெரியவந்தது .

நேற்று வயிற்றுபோக்கு இருப்பதாக சொல்லி குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருந்தார் .பரிசோதனை முடிவுகளை இதுவரையிலும் இவரிடம் தெரிவிக்கவில்லை .குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையை அனுப்பி வைத்தோம் .போகும் முன்னர் ,"டெஸ்ட் எடுத்தீங்களே ரிசல்ட் வந்துவிட்டதா ?"என்று கேட்ட போது நீங்கள் போய் வருவதற்குள் வாங்கி வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்தோம் .

மருத்துவர் பார்த்துவிட்டு இன்னமும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னார் .வேறு மருத்துவரிடம் அனுப்பும் படியும் பரிந்துரைத்திருந்தார் .அதற்கு முன் சொல்லிவிடலாம் என முடிவு செய்து அழைத்து உட்கார வைத்து மெதுவாக ,குழந்தைக்கும் நோய் இருக்கிறது என்று சொன்னோம் .ஆனால் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் .அதிலும் பாசிடிவாக வந்துவிட்டால் நோய் இருப்பது உறுதியாகிவிடும் என்பதையும் சொன்னோம் .


ஆண்ட்டி ,ஆண்ட்டி என்று அதுவரையும் கூட ஓயாது பேசிக் கொண்டே இருந்தவர் ,அதன் பின் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை .அமைதியாகவே உட்கார்ந்திருந்தார் ."எங்க மாமியார் கூட வந்திருக்காங்க ஆண்ட்டி ,அவங்க கேப்பாங்க ரிசல்ட் என்ன ஆச்சுன்னு .ஹெச்.ஐ.வி இருக்குன்னு சொன்னா திரும்பவும் எதுக்கு கூட்டிட்டி வரணும்ன்னு கொழந்தைய டிரீட்மென்ட்டுக்கே கூட்டிட்டு வர விட மாட்டாங்க .டிரீட்மென்ட்டுக்கும் இங்க தானே வரணும் ?நா என்ன சொல்லட்டும் ஆண்ட்டி ?நோய் இல்லன்னு சொல்லிறவா ?அடுத்த தடவ டெஸ்ட் செஞ்ச தானே நிச்சயமா தெரியும் ?ஆனா அடுத்த தடவையும் பாசிட்டிவா வரலாம் தானே ?அப்ப நா என்ன சொல்லட்டும் ?அவங்க எல்லாரும் கேப்பாங்க ஆண்ட்டி?"

நாங்கள் சொன்னோம் ,ரிசல்ட் வரவில்லையென சொல்லி வையுங்கள் .உறுதி செய்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என ."நா அப்படியே சொல்லிடுறேன் .ஒங்க கிட்ட கேட்டா நீங்களும் அப்படியே சொல்லுங்க ."என்று சொல்லிவிட்டு சென்றார்.

பேச்சின் ஊடே அப்படியே உறைந்து போன அவர் முகமும் கண்ணீரை கட்டுபடுத்திக் கொண்டே அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்த அவர் தெளிவும் இன்னமும் மனதை வாட்டுகின்றன .மாமியாருக்கு
விஷயம் தெரிந்துவிடும் என்பதால் கூட அவர் அழாமல் இருந்திருக்கக்கூடும் .

Tuesday, 1 June 2010

அறியாமல்

சில நாட்களுக்கு முன் அம்மா வீட்டிற்கு நான் சென்றிருந்த போது என் சிறு வயது முதல் எங்களிடம் பணி செய்த பெண் வந்தாள்.சின்ன வயதில் (என் திருமணம் வரை )எனக்கு வாராவாரம் தலை தேய்த்து விடுவாள் .இப்போதெல்லாம் இவள் வருவதே அபூர்வம் தான் .ஊர் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ,அவள் தங்கையைப் பற்றி விசாரித்தேன் .(இவள் குடும்பம் மொத்தமும் எனக்கு அத்துப்பிடி .இவள் தங்கையும் எங்களிடம் சில காலம் பணி செய்திருக்கிறாள் )


"அதுக்குத்தாம்மா வந்தேன் .அதுக்கு ரொம்ப முடியல.செவ்வாக்கெழமையே போயிரும்ன்னு நெனைச்சோம் .எங்கெங்கியோ பாத்துட்டேன் .ஒண்ணும் சரியாகல .மொதல்ல கே அம் சி ல சேத்து வச்சிருந்தேன் .என்னென்னமோ டெஸ்ட் பண்ணினாங்க .ரத்தம் தான் கொறையா இருக்கு வேற ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க .அப்புறம் வீட்டாண்ட டிரஸ்ட் ஆஸ்பத்திரில போயி காண்பிச்சேன் .அங்க இருக்கிற டாக்டர் எங்க ஆஸ்பத்திரிக்கு வா நல்லா ஆக்கிரலாம்னு சொன்னாரு .அவரு சொன்ன எடத்துல போயி சேத்தேன்.பதினாலாயிரம் ரூவா குடுத்தேம்மா .வெறும் குளுகோஸ் மட்டும் தான் போட்டாங்க .ரத்தம் வெளிய வாங்கிட்டு வந்து கொடுத்தேன் ,அத மூணு பாட்டில் ஏத்துனாங்க .வேற ஒண்ணுமே செய்யல .மருந்து கூட எழுதி தரலம்மா வீட்டுக்கு போகும் போது .ஏதாவது செஞ்சு காப்பாத்தி விடும்மா .ஒரு பொண்ண கட்டி கொடுத்தாச்சு .இன்னொரு பொண்ணு இருக்கே .கொஞ்சம் பாரும்மா ,"என்று வருத்தமாக சொன்னாள் .


வீட்டிற்கு சென்று ரிபோர்டை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாள் .ரத்தம் மிகவும் குறைவாக இருந்தது .ஏன் குறைகிறது என்ற காரணம் கண்டறியப்படாமலேயே இருந்தது .அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு சென்று பார்த்துவிட்டு போன் செய்தாள் ."நல்லா பாத்தாங்கம்மா .எல்லா டெஸ்டும் எடுத்திருக்காங்க .நாளக்கி வரச் சொல்லியிருக்காங்க ரிபோர்டுக்கு "என்று சொன்னாள் .அப்புறம் போன் ஏதும் வரவில்லை .


ஒரு வாரம் முன்பு அம்மா சொன்னார்கள் அவள் தங்கைக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக .அதோடு அவளை ஜி ஹெச் இல் சேர்த்திருப்பதாகவும் .நேற்று கேட்ட போது ,"பாவம், இறந்து போனாள் "என்று சொன்னார்கள் .

Monday, 10 May 2010

இறுதி வரை

போன வாரத்தில் ,நெடுநாட்களாக சிகிச்சையில் இருந்த ஒரு பெண் இறந்து போனார். எச்.ஐ.வியால் அல்ல ,கர்ப்பப்பை வாய் புற்று நோய் காரணமாக .கிட்டத்தட்ட ஒரு ஏழு மாதங்களுக்கு முன் இவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டறிந்தோம் .உடனே சிகிச்சைகள் ஆரம்பித்தும் ,நோய் குறையவில்லை ,பரவவும் ஆரம்பித்தது .சில மாதங்களிலேயே ,சிறுநீரகம் வரையும் பரவியது .சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்தன .இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று எல்லா நிபுணர்களும் கையை விரித்துவிட்டனர் .


சாதாரண இல்லத்தரசியாக ,இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார் .திடீரென ,தன் கணவருக்கும் தனக்கும் எச்.ஐ.வி இருப்பது தெரிந்தவுடன் சிகிச்சை எங்கு கிடைக்கும் என்பதை கண்டறிந்து வந்து சேர்ந்தார்.ஒருநாள் கூட மாத்திரை மருந்துகள் சாப்பிட மறந்ததில்லை .சிகிச்சைக்கு பணம் தேவைப் படும் என சில சிறப்பு பயிற்சிகள் பெற்று ஆசிரியராக பணிசெய்ய துவங்கினார். ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் நன்றாக தெளிவாக கேட்டுக் கொண்டே கிளம்புவார் .என் இரண்டு குழந்தைகள் கொஞ்சம் பெரியதாக வரும் நான் இருந்தால் போதும் என்று சொல்வார் .


இறுதியாக வந்த போது உடல்நலம் மிகவும் கெட்டிருந்தது .சரியாக சாப்பிட முடியவில்லை .உடல் வேறு வெகுவாக இளைத்திருந்தது .ஆனாலும் ,"நல்லா இருக்கேன் மேடம் .உங்கள பாத்துட்டேன்ல்ல என் ஒடம்பு நல்லாயிரும் .எல்லாரும் என்ன நல்லா பாத்துக்கிறீங்க .அங்க வீட்டிலேயும் எல்லாரும் என்ன நல்ல பாத்துக்குறாங்க .என் பசங்க கூட என்ன தொந்தரவு செய்யறதில்ல .பாப்பா அவளே துணிய துவைச்சுக்குரா .தம்பி கூட அவனே கெளம்பி ஸ்கூல் ,டியூஷன் எல்லாம் போய்க்கறான்.
எங்க நைனா என்ன இப்படி கவனிச்சுக்குவாருன்னு நா நெனைக்கவே இல்ல மேடம் .ஜூஸ் புழிஞ்சு கொடுக்கறாரு .ராத்திரி பகல் பக்கத்திலேயே இருந்து விசிறி விடுறாரு .என் பக்கத்திலே எல்லாரும் எப்பவும் இருக்காங்க மேடம் .கஷ்டத்திலேயும் நா கொடுத்து வச்சவ .நா கண்டிப்பா நல்லாயிருவேன் மேடம் ,"என்று சொல்லிக் கொண்டே வந்தவர் ,"எங்க நைனா கேக்குறாரு ஒன்னைய பொழைக்க வைக்க ஏதாவது வழி இருக்கான்னு கேட்டுட்டு வாடான்னு .சொல்லுங்க மேடம் ,நா நல்லாயிருவேன்ல்ல .எங்க நைனா கேக்கச் சொன்னாரு.நா முன்ன மாதிரி நல்லாயிருவேன்ல்ல ?"இதை அழுதபடியே அவர் கேட்டது இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது .

Friday, 7 May 2010

வீடு விட்டு வீடு வந்து

ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னோட ஹவுஸ் ஓனர்,நா இருக்கிற வீட்டுக்கு அவங்களே குடி வர்ற போறதால வீடு வேணும்ன்னு சொல்லிட்டாங்க .மூணு மாசம் டயம் வேற கொடுத்தாங்க .வீடோ பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு,விளையாட அப்பார்ட்மென்ட் உள்ளேயே நெறைய எடம் வேற .பெரிய பையன் பத்தாவது வேற ,சரி இப்பதைக்கு இங்கேயே வேற வீடு பாக்கலாம் (மொத்தமா நாப்பத்தி எட்டு வீடு இருக்கு )ன்னு முடிவு செஞ்சோம் .


வசதியா ரெண்டு வீடு வேற காலியாச்சு .ஏப்ரல் ,மே மாசத்துல நெறைய பேரு வீடு மாறுவாங்க போல .யார பாத்தாலும் அங்க வீடு காலியா இருக்கு இங்க வீடு காலியா இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க .ஹிந்து ,அந்த டைம்ஸ் ,இந்த டைம்ஸ் ன்னு நேரிய பேப்பர வேற பாத்துகிட்டே இருந்தோம் .(ஹிந்துவில வர்ற வாடகைஎல்லாம் கொடுக்க எப்படி கட்டுபடி ஆகும்ன்னே புரியல ).அதுக்குள்ளே இங்கேயே ஒரு வீட பேசி முடிச்சிட்டோம் .


மே ஒண்ணாம் தேதி ரெண்டாம் தேதி தொடர்ந்து ரெண்டு நாள் விடுமுறையா வரதால அன்னிக்கே வீட மாத்திரலாம்ன்னும் முடிவு செஞ்சோம் .நா இருக்கிற வீடு கிரவுண்ட் ப்ளோர் .இது எதிர் ப்ளாக் ,first ப்ளோர் .பாக்கேர்ஸ் அண்டு மூவர்சுக்கு போன்ல கேட்டா ஐயாயிரம் பத்தாயிரம்னு சாதரணமா சொன்னாங்க .சரி இது சரியா வராதுன்னு ,வாட்ச்மேன் அப்புறம் அவருக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேர வச்சி மாத்திரலாம்ன்னு ஏற்பாடு ஆச்சு .ஏதோ கொஞ்சம் சாமான் ,ஒரு சோபா ,ஒரு கட்டில் ,பிரிட்ஜ் ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன் ,பாத்தா தோண்ட தோண்ட சாமானா வந்துகிட்டே இருக்கு .வெள்ளம் வரப்ப எல்லா இடத்தையும் ஒடச்சிகிட்டு தண்ணி வருமே அத மாதிரி .வந்துக்கிட்டே இருக்கு .இதுல கண்ட கான்பிரன்ஸ்லேயும் கொடுத்த பை வேற ஒரே மாதிரி ,பத்து பதினஞ்சாவது இருக்கும் . நாலு மணி நேரம் முழுசா ஆச்சு சாமான எடுத்து முடிக்க .


புது வீட்டுல போயி கொஞ்சம் கொஞ்சமா அடுக்க ஆரம்பிக்கலாம்ன்னு போனா ,அது இப்ப ஒரு குப்ப மேடு மாதிரி இருக்குது .அத பாத்தவுடனே இந்த வீடு எனக்கு பிடிக்கலன்னு தோணிச்சு .பழைய ஹவுஸ் ஓனர் மேல எக்கச்சக்கமா கோவம் வந்துச்சு .எங்க ஆரம்பிக்கிறதுன்னே தெரியல.தல கால் புரியாம ஒரு குப்ப மேட்டுல நிக்கிற மாதிரி இருக்குது .கால் வலி வேற .இதுக்குள்ள சாப்பாட வச்சி சாப்பிட கூட எடமில்லாம குப்பை எல்லா எடத்திலேயும் .அதிலேயே நடுவில ஒரு சின்ன எடத்த கிளியர் பண்ணி சாப்பிட்டு முடிச்சாச்சு .


கொஞ்சம் நிதானமா யோசிச்சப்ப ,சிக்கல்ல நூல் நுனிய கண்டுபிடிச்ச மாதிரி, ஒவ்வொருத்தார் துணியா எடுத்து அடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்ன்னு தோணிச்சு . அத ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா தெளிவாக ஆரம்பிச்சுது .துணிய முடிச்சாச்சு .அடுத்தது புக் .ஒரு சின்ன லைப்ரரி அளவுக்கு புக் இருந்துது .அத எல்லாத்தையும் சாக்கில அள்ளி நடு ஹாலில கொட்டியிருந்தாங்க .அத பிரிச்சு எடுக்கறதுக்குள்ள ....சொல்லவே முடியாது அத்தன கஷ்டம்.மேலெல்லாம் தூசி ... (புக்கெல்லாம் லைப்ரரியில எடுத்து படிக்கிறதோட நிப்பாட்டிக்கனும்ன்னு நெனைக்கிறேன் )இத ஒதுங்க வச்சி ஹால் கண்ணுக்கு தெரியவே ரெண்டு மணிநேரம் ஆச்சு .


கிட்சனுக்குள்ள போனா சின்க் ஒழுகுது .எல்லா பக்கமும் மேடை சின்னதா தெரியுது .எந்த பக்கம் அடுப்ப வைக்கிறதுன்னு மூளைய கசக்கி யோசிச்சு வைக்க வேண்டியதா இருந்துது (அதுக்கப்புறம் அத மறுபடியும் மாத்தியாச்சு ) .அத எனக்கு வேல செய்யற பொண்ணே முழுசா அடுக்கிட்டா (அவளுக்கு வேண்டாம்ன்னு தோணினதை எல்லாம் அவளே வெளியே போட்டுட்டா ).


இப்படி ஒண்ணொண்ணா சரி பண்ணிக்கிட்டே வந்தோம் .ஒரு வழியா எல்லாம் கிட்டத்தட்ட சரி பண்ணியாச்சு .இன்னமும் கொஞ்சம் சாமான் வெளிய கெடக்குது .அதில பாதி வெளிய போட வேண்டியது தான் (ஏன் இன்னமும் போடலைன்னு கேக்காதீங்க ...பாசம் தான் ).ஆனாலும் சொந்த வீடு இல்லாம இருக்குறது ரொம்ப கஷ்டம் .ஒரு தடவ மாறினதே இத்தன ரோதனையா போச்சு மூணு வருஷத்துக்கு ஒரு முறை வருஷத்துக்கு ஒரு முறைன்னு ஊர் ஊரா போறவங்க எப்படி சமாளிக்கிறாங்களோ ? ..அடுத்த முறை வீடு மாறினா அது சொந்த வீட்டுக்கா தான் இருக்கணும் .....

Friday, 23 April 2010

சந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....

நானும் கடவுளும்
-----------------------

எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .
எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழி சேர்த்தே எழுதப்பட்டிருக்கும் (பூசாரி என்பதன் சுருக்கமாம் ) .மிதமான ஒரு பக்தியே அந்நாளில் அம்மாவுக்கும் இருந்தது.இந்த சூழலில் பெரிய கடவுள் வழிபாடு என்று எதுவும் வீட்டில் நடந்ததில்லை .

கடவுளை எனக்கு தீவிரமாக அறிமுகப்படுத்தியது நான் படித்த ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி .இங்கு கிறிஸ்துவ பாடல்கள் ,பிராத்தனை என்று முழு வீச்சில் கடவுள் எனக்கு கடவுள் அறிமுகமானார் .அதனுடன் பைபிளைப் படிக்கும் scripture என்ற பாடத்திற்கு வருடா வருடம் பரிசு வழங்கப்படும் .அதுவும் நான் பள்ளி முடிக்கும் வரை எனக்கே தரப்பட்டதால் நான் பைபிளை தீவிரமாக படித்தேன் .இப்படி இருந்த போதும் ஒரு நாள் கூட என் ஆசிரியர்கள் யாரும் என்னிடம் மதமாற்றத்தை பற்றியோ ,உங்கள் கடவுள் கல்,களிமண் என்றோ பேசியதில்லை .காலை வந்ததும் ஒரு பாடல் ,சாப்பிடும் போது ஒன்று ,வீட்டிற்கு கிளம்பும் போது ஒன்று என ஒரு குதூகலமான மதமாக எனக்கு அறிமுகமாகியது கிறிஸ்துவம் .இன்றும் நான் சிறந்த பிராத்தனையாக கருதுவது ,நான் பள்ளியில் கற்றுக் கொண்ட ,"பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே /Our Father which art in heaven" என்ற பிராத்தனை தான் .

இது ஒரு பக்கம் இருந்தாலும் ,தினமும் காலையில் சாமி கும்பிட்டு திருநீறு பூசி ,அதனடியில் குங்குமம் வைத்து ( கண்ணாடி பார்த்து தான்) பள்ளிக்கு செல்வதும் கூட என் அன்றாட வழக்கமாக இருந்தது.இதை செய்தால் நல்லது என்ற நம்பிக்கையை விடவும் இதை செய்யாமல் விட்டுவிட்டால் ஏதேனும் தீமை ஆகி விடுமோ (ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால் என்று பெரியார்தாசன் பயந்து போனாரே அது போல ) என்ற ஒரு பயமே இதன் அடித்தளத்தில் இருந்தது .பூ தொடுத்து சாமி படத்துக்கு சூட்டுவது பிள்ளையாருக்கு அருகம்புல் வைப்பது என்று தினம் சாப்பிடுவதைப் போலவே ஒரு வழக்கமாக செய்து கொண்டிருந்தேன் .கல்லூரி வரை கடவுளைப் பற்றியோ எந்த ஒரு தீவிர சிந்தனையோ சந்தேகமோ எனக்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும் .

கல்லூரி இறுதி ஆண்டில் திருமணம் ஆனது .என் மாமியார் வீட்டிலோ பக்தி கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது .இதில் சில காலம் திக்குமுக்காடிப் போன நான் ,மூச்சடைத்துப் போனேன் .ஒன்றிரண்டு சாமி படங்கள் மட்டுமே பார்த்து பழகிய எனக்கு இங்கே பூஜை அறையில் இருந்த கிட்டத்தட்ட இருபது படங்கள் ,வழிப்பாட்டு முறைகள் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தது .இதனூடே ,முதல் ஆறு மாதங்களில் கர்ப்பமாகவில்லை என்பதற்காக என் மீது திணிக்கப்பட்ட பரிகாரங்களும் வேண்டுதல்களும் காரணமாக இதுவரை நான் பெரிதாக சிந்தித்திராத கடவுளை நான் வெறுக்க துவங்கினேன் .இதில் last straw வாக அமைந்தது ஒரு திருப்பதி விஜயம் .பணத்திற்கு பெருமாள் பணயம் இருப்பதாக தோன்றியது எனக்கு .பணமில்லாதவர்கள் தள்ளப்படுவதும் ஐம்பது ரூபாய் தருபவர்கள் இன்னும் சில நிமிடங்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவதும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் லஞ்சமாக கொடுத்த பத்து ரூபாயை "சீ ,இவ்வளவு தானா ?" என்று ஒரு ஊழியர் தூக்கி எறிந்த போது கடவுள் எனக்கு அந்நியரானார் .
கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டேன் .பரிகாரங்கள் செய்ய மறுத்தேன் .நானும் நாத்திகத்திற்கு மாறிவிட்டதாக எல்லோரும் பயந்து போனார்கள்.

என் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் இது .என் தோழி ஒருத்தி திருப்பதியைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தாள் .நான் வழக்கம் போலவே குறை சொல்லிக் கொண்டிருந்தேன் ."ஏன் இப்படி சொல்றீங்க ""என்று வருத்தமாக கேட்டாள் . "நீ ஏன் பெருமாள் தான் பெரிய கடவுள்ன்னு சொல்ற ?" என்று கேட்டேன் நான் ."அவரு தான் நாம கேட்டத கொடுக்குறாரு "என்றாள் ."பணம் கேட்பதும் பெறுவதும் தான் பக்தியா ?"என்று நான் கேட்டதிலிருந்து என்னிடம் கடவுள் பற்றியே பேசுவதில்லை அவள் .
அன்றிலிருந்து என் மருத்துவமனையிலும் எனக்கு நாத்திக பட்டம் கொடுக்கப்பட்டுவிட்டது .

பெண்ணாக இருந்து கொண்டு திருநீறு அணியாமல் விரதங்கள் இல்லாமல் கோவிலுக்கு செல்லாமல் இருப்பது என்னை சுற்றிய பல பேருக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது .என்னை சுற்றி இருப்பவர்கள் பலரும் என்னிடம் கடவுளைப் பற்றி பேசாதிருப்பதே நல்லது என்றே நினைக்கிறார்கள் .


இதைத் தொடர்ந்து சிந்தித்ததில் எனக்கு புரிந்தது இது தான் .
சகலத்தையும் இயக்கும் ஒரு சக்தி இருப்பதாகவே நம்புகிறேன் நான் .அந்த சக்தி நம்முள் இருக்கிறது .அதை உணர்த்து கொள்ள வேண்டுமே தவிர்த்து அதற்கென வெளி மரியாதைகள் செய்வதில் அர்த்தமில்லை . இதை உணரும் வரை எந்த கோவிலிலும் கடவுள் கிடைக்கப் போவதில்லை . இதை உணர்ந்து கொண்டால் எந்த கோவிலிலும் கடவுளை தேட வேண்டியதில்லை .

http://sandanamullai.blogspot.com/2010/04/blog-post_12.html
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

நன்றி சந்தனமுல்லை .

Wednesday, 21 April 2010

தேர்தல் நோய்

சில நாட்களுக்கு முன்னால் ஒரு நோயாளியை அதிகப்படியான வயிற்று வலியுடன் அழைத்து வந்தார்கள் . சில நாட்களாக அவர் அதிகம் குடித்ததாக சொன்னார்கள் . தாங்க முடியாமல் துடியாய் துடித்து கொண்டிருந்தவருக்கு முதலுதவிகள் செய்த பின் ,பரிசோதனைகள் செய்ததில் கணையம் ரொம்பவே புண்ணாகி இருப்பது போல் தெரிந்தது .அதற்கான சிகிச்சை வசதிகள் எங்களிடம் இல்லாததால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தோம் .


நான்கு நாட்களுக்கு முன்னால் ,இவரின் மனைவி சிகிச்சைக்கு வந்தார் .எப்படி இருக்கிறார் என்று விசாரித்த போது ,நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததாகவும் ,இப்போது நலமாக இருப்பதாகவும் சொன்னார் .அதோடு ,"ரொம்ப மாசமா குடிக்காம இருந்தார் .இப்பத் தான் தொடர்ந்து இப்படி அதிகமா குடிச்சு ஒடம்புக்கு வந்திடுச்சி" என்று சொன்னார் .இவ்வளவு நாளா குடிக்காம இருந்தவரு ஏன் திடீருன்னு இப்படி குடிச்சாரு? "என்று கேட்ட போது ,"கட்சியில இருக்காரு .எலக்க்ஷன் வேலைக்கு பென்னாகரம் போனாரு ,அங்க தான் இப்படி ஊத்தி விட்டு வேல வாங்கியிருக்காங்க .மூணு மாசமா அங்க தான் இருந்தாரு .அதில வந்த வென தான் ."

Saturday, 17 April 2010

இன்று பிறந்தநாள் ...


60௦ வருடங்கள் பொறுப்பான மகளாக ,அன்பான தங்கையாக,
57 வருடங்கள் நல்ல அக்காவாக,
39 வருடங்கள் இலக்கணம் மாறாத மனைவியாக ,மருமகளாக ,
37 வருடங்கள் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே கொட்டித் தரும் அன்னையாக,
35 வருடங்கள் சிறந்த ஆசிரியராக,
20 வருடங்கள் சிறந்த பேராசிரியராக,
5 வருடங்கள் மிகச் சிறந்த துறைத் தலைவராக,


இன்னமும் .................
மருமகனிடமும் மருமகளிடமும் மறைத்து பேசத் தெரியாத மாமியாராக,
பேரப் பிள்ளைகளிடம் பாசத்தை மட்டுமல்ல
கண்டிப்பையும் காட்டும் ஆச்சியாக,
புத்தக ஆசிரியராக,
பொருளாதார வல்லுனராக,
தன்னை செதுக்கிக் கொண்டே
தன்னை சுற்றி உள்ளோருக்கான பாதையையும் சேர்த்தே செதுக்கும் வழிகாட்டியாக,
இவை எல்லாமுமாகவும் ,


இன்னும் பலவாகவும்


வாழ்ந்து கொண்டிருக்கும்

என் அம்மாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள் .....







Tuesday, 13 April 2010

சொல்லாமல் ....

நான்கு வருடமாக தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர் .எப்போதும் சிரித்த முகத்துடனும் ஒரு உற்சாகத்துடனும் இருப்பார் .போன முறை வந்த போது ரொம்பவே டல்லாக தெரிந்தார் .

கேட்ட போது ,"ஒடம்புக்கு ஒண்ணுமில்லமா ,எல்லாம் வெசனம் தான் என்று சொன்னார் ."எம்மக இஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிட்டா.கஷ்டப்பட்டு படிக்க வச்சேன் .அந்த படிப்ப முடிச்சிருந்தா கூட பரவாயில்ல .அதையும் பாதியில விட்டுட்டு ஹாஸ்டல்ல இருந்து ஓடிப்போயிட்டா . சொல்லவே இல்ல .ஸ்கூல் முடிஞ்ச ஒடனே ,ஒரு வருஷத்துல காசு சேத்துட்டு கட்டி கொடுத்திருறேன்ன்னு சொன்னேன் .இல்ல கண்டிப்பா படிப்பேன்னு சொன்னா .கடன வாங்கி சேத்து விட்டேன் .இப்படி பண்ணிட்டா .சொல்லவே இல்ல .இப்படிம்மா ன்னு சொல்லியிருந்தா கூட படிப்ப முடிச்சு கட்டிக் கொடுத்திருக்கலாம் .ஒண்ணுமே சொல்லல்ல இந்த பொண்ணு.


போலீஸ் ஸ்டேஷணுல அவங்கப்பா பொண்ணே இல்லன்னு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டாரு .என்னையும் போடச் சொன்னாரு .எனக்கு கையெல்லாம் நடுங்குது .அவ அசங்காம அழகாக கையெழுத்து போடுறா .இதுக்கு தானாடி ஒன்னைய படிக்க வச்சேன்னு கேட்டா ,பதிலே இல்ல .எம்பக்கம் திரும்பிக் கூட பாக்கல.அந்த இன்ஸ்பெக்டர் சொல்றாரு ,ஏம்மா உங்கம்மா நிக்குறாங்க ,ஏதாவது பேசுமா ன்னு .வாயே தொறக்கல .எப்படி கடன வாங்கி நகைய செஞ்சி போட்டேன்னு சொன்னா ,ஒடனே செல்லு ,செயினு எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு நிமிந்து நிக்குறா .ஒண்ணும் சொல்லாமையே இருந்திட்டியே ன்னு கேக்குறேன் ,பதிலே சொல்லாம நிக்குறா .


என்னமோம்மா ,சாகப் போயிட்டேன் .என் சின்னப் பொண்ணு தான் ,எனக்காக இரும்மா ன்னு சொல்லி அழுதா.என்
வீட்டுக்காரு ரொம்ப குடிப்பாரு .வீடு பூரா தொரத்தி அடிப்பாரு .இந்த பிள்ளைங்களுக்காக தான் எல்லாமே பொறுத்து போறேன் .இப்படி சொல்லாமையே இருந்து மோசம் பண்ணிட்டா . காலேஜுல அவங்க அப்பாவுக்கு தெரியாம சொல்லிட்டு வந்திருக்கேன் .வந்தா சேத்துக்கோங்க .பீஸ நா கட்டுறேன்னு .படிப்பாவது மிஞ்சட்டும்."

பாவம் ,போகும்வரை அழுது கொண்டே இருந்தார் .

Wednesday, 7 April 2010

தீர்வு ?

கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளையும் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் ஒரு பெண் .தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு நோய் வந்துவிட்டதே என்பதே தாங்க முடியாததாக இருந்தது அவருக்கு .அதிலும் குழந்தைக்கு நோய் வரக்கூடும் என்பதை பற்றிய சந்தேகங்கள் வேறு அவரை வதைத்துக் கொண்டிருந்தன .இது போதாதென வீட்டில் மற்றவர்களுக்கு தொற்றி விடுமோ என்ற பயம் வேறு .இதற்கு பயந்து அவர்களை தனியே வைத்தால் அவர்களை கவனிக்க முடியாது போய் விடுமோ என்ற பயம் வேறு.அவர் பதட்டமும் பார்க்கவே சங்கடமாக இருந்தது .

சரியான சிகிச்சைகள் செய்தால் குழந்தைக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவே என்று சொன்ன போதும் அந்த ஒரு சதவீதத்தில் இந்த குழந்தை வந்துவிட்டால் ?என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதனால் இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினார் .நாங்கள் சொன்னோம் ,அதை பற்றிய முடிவை உங்கள் மகனிடமும் மருமகளிடமும் விட்டுவிடுங்கள் .இதை பற்றி கலந்து பேசி முடிவு எடுப்பதாக சொன்னார் .

அடுத்ததாக ,இவரின் இன்னொரு பெரிய சந்தேகம் ,மாதவிடாய் காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பது .அந்த ரத்தப் போக்கினால் பிறருக்கு நோய் வரலாமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர் சொன்னார் ,"எப்படியும் இவங்கள என்கூட தான் வச்சுக்கப் போறேன் .ஆனா மத்தவங்களையும் நா பாதுகாக்கணும் .இந்த பொண்ணு தூரம் ஆகிறப்ப மத்தவங்களுக்கு எதவும் வந்திரக்கூடாது .இனிமே இவளுக்கு கொழந்தையும் வேண்டாம் .அவங்க ஒடம்ப அவங்க பாத்துகிட்டா போதும் .அதனால கர்ப்பபைய எடுக்க ஏற்பாடு செஞ்சு தாங்க ,"என்றார் .எல்லாவற்றையும் விளக்கி சொல்லிவிட்டு சொன்னோம் ,இருபது வயது பெண்ணுக்கு கர்ப்பப்பையை அகற்றுவது அவளை கொல்வதற்கு சமம் ,நோயின் தன்மை பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள் .திருமணம் செய்து குடித்தனம் நடத்தும் இருவருக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்கவும் தெரியும் என்று நம்புங்கள் ,என்று சொல்லி அனுப்பி வைத்தோம் .

இறுதி முடிவு இன்னமும் சொல்லாமல் சென்றிருக்கிறார்கள் .....காத்திருக்கிறோம்

Tuesday, 30 March 2010

மடமை

கர்ப்பமாகயிருந்த போது சிகிச்சைக்கு வந்தார் இந்த பெண் .பரிசோதனையின் போது கர்ப்பபையில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது .பல சிக்கல்களுக்கு இடையே தீவிர கவனிப்பின் பின் பிரசவம் ஆனது .சிக்கலான பிரசவம் தான் .இது நடந்து பத்து மாதங்கள் இப்போது .இந்த பத்து மாதங்களாக சரியாக சிகிச்சைக்கு வரவில்லை .திடீரென்று போன வாரத்தில் வந்தார் .மூன்று மாத கர்ப்பத்தோடு .

சிசேரியன் செய்தே முதல் குழந்தையை பிரசவித்திருக்கிறோம் .அதுவும் பத்து மாதங்களுக்கு முன்னர் தான் .கர்ப்பப்பையில் கட்டி வேறு .எதை கேட்டாலும் ஒரே அழுகை .கோபம் தான் வந்தது எங்களுக்கு .சரி ஸ்கேனும் மற்ற பரிசோதனைகளும் செய்து பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ,கணவனும் மனைவியும் சொன்னார்கள் ,"ஆம்பிள பிள்ளையா இருந்தா வச்சிக்கிறோம் ,பொண்ணுன்னா வேண்டாம் ."

"வைத்தியம் பாக்கிற டாக்டர் ,பிரசவம் பாக்கிற டாக்டர் ,இங்க வந்தா உங்கள நோகாம கவனிக்கிற சிஸ்டர் எல்லாரும் பொம்பளைங்க ,ஆனா உங்களுக்கு ஆம்பள கொழந்த வேணும் ?" என்று நன்றாக திட்டி அனுப்பி வைத்தோம் .

Thursday, 25 March 2010

வேர் தேடும் கிளைகள்


விதையுள் முளையாக
ஒன்றாக கிடந்த வேரும் கிளையும்
வானோக்கி ஒன்றும்
மண்நோக்கி ஒன்றுமாய்
வெவ்வேறாய் வளர்ந்து போயின .

பின்னாளில் ,
கிளை விண்தொட்ட பின்னும்
வேர் மண் தூர்த்த பின்னும்
ஒன்றாய் கிடந்தும் காணாததை எண்ணி,
கிளை கீழ் வர முடியாமலும்
வேர் மேல் எழ முடியாமலும்
அயர்ந்தும் போயின .

அதிசயமாய் ,
கிளை தொட்டு வேரொன்று விழுதாக கிளம்பி
மண் பிளந்து வேர் தேடி செல்லும்.
மண்ணடியில்,
வேரும் ,கிளையின் வேரும்
எவரும் காணாமல் நீருருஞ்சிக் கொண்டே
பழங்கதைகள் பேசிக் கிடக்கக் கூடும் ....

Friday, 19 March 2010

மீண்டும் தெருவோரத்தில் கண்ணகி


சிங்காரச் சென்னையின் சாலைகளை அழகு படுத்துவதற்காக முக்கிய சாலைகளில் ஓவியங்கள் வரையப்படுவது தெரிந்ததே .அதே போல் நமது அரசுக்கு தமிழ் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் உள்ள அளவிட முடியாத பற்றும் தெரிந்ததே :)

இரண்டு வாரங்களாக கிரீன்வேஸ் சாலையில் இந்த ஓவிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .இதில்ஒரு பக்கம் ,அழகிய இயற்கை காட்சிகள் வரைந்து முடித்தாயிற்று .இன்னொரு பக்கம் ,சிலப்பதிகாரக் காட்சிகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள் .இதுவரையிலும் சரிதான் .

கண்ணகி சிலையை ஒரு அரசு வைத்ததும் ,இன்னொரு அரசு எடுத்ததும் ,மீண்டும் ஒரு அரசு வைத்ததும் நாம் அறிந்ததே .இதற்காக தமிழர் பண்பாட்டு சின்னம் கண்ணகி என்றும் அதை அகற்றியது தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முழங்கியதும் கூட தெரிந்த விஷயம் தான் .(இந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ,என் அம்மா சொன்னது ,"கண்ணகிய அவ புருஷனும் தெருவில நிப்பாட்டுனான் .இவங்களும் தெருவில நிப்பாட்டிட்டாங்க .")

இப்போது தெருவோரத்தில் சுவற்றில் கண்ணகியை வரைந்து கொண்டிருக்கிறார்கள் .சிலப்பதிகாரத்தை மக்களுக்கு நினைவுபடுத்தும் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதே .ஆனால் ...............நமது சாலையோர சுவர்கள் பொது கழிப்பிடங்களாக பயன்படுவது தெரிந்த விஷயம் ....இந்நிலையில் சுவற்றில் கண்ணகியை வரைவது சரியா ?இதனால் தமிழர் பண்பாட்டு சின்னம் அடையக் கூடிய அவமானத்திற்கு யார் பொறுப்பு ?

Wednesday, 17 March 2010

வம்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நோயாளியின் உறவினர் என்று சொல்லி சிலர் வந்தார்கள் .வேறு மருத்துவமனையில் இருக்கும் அவரை இங்கே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .அதோடு நோயாளி சிறிது மனநிலை பாதித்த நிலையில் இருப்பதையும் சொன்னார்கள் .

சுமார் ஐந்து மணியளவில் நோயாளியை அழைத்து வந்தார்கள் .வந்தவர் செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமில்லை .உள்ளே வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவரை ஒரு வழியாக வார்டு வரை இழுத்தே வந்துவிட்டார்கள் .இதில் கொஞ்சம் சமாதமான அவர் ,திடீரென்று கர்ணன் கதையை சொல்லத் தொடங்கினார் .செடேட் செய்ய ஊசிகள் போட்ட பின் தூங்கவில்லை என்றாலும், அமைதியானார் .சிகிச்சைக்கும் ரத்தம் எடுப்பதற்கும் ஒத்துழைத்தார் .

அடுத்தும் சற்று அமைதியாகவே தான் இருந்தார் .நேற்று என்னுடன் பணிபுரியும் இன்னொரு மருத்துவர் ,ரொம்ப அழகு ,வயது அறுபத்தி நாலு .இவர் வழக்கம் போல் எல்லா நோயாளிகளை பார்த்து விட்டு இவரையும் பார்க்க போன போது ,உடனிருந்த நர்சிடம் ,"நீங்க வெளிய இருங்க ,இவங்க என் அத்த பொண்ணு .இவங்களுக்கும் எனக்கும் கணக்கு இருக்கு ,அத நா பேச வேண்டியிருக்கு .அதனால எங்கள தனியா விடுங்க ,"என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் .பயந்து போன அந்த மருத்துவர் இந்த நொடி வரை அவர் அறை பக்கமே போகமால் நடுங்கிப் போயிருக்கிறார் . இதுவும் ஒரு வகை occupational hazard போலும்.....

Monday, 15 March 2010

சட்டசபை திறப்பு விழா

சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த கோலாகல விழாவில் என் மனதில் பதிந்த சில நிகழ்வுகள் ...


1.தமிழக முதல்வர் கைத்தாங்கலாக என்றாலும் மேடைக்கு நடந்தே வந்தது .
2.உள்ளே சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேட்டரி கார் .
3.சோனியா காந்தி கட்டியிருந்த சிம்பிளான அழகான ஒரியா ? காட்டன் புடவை
4.மேடையிலும் பார்வையாளர் தடுப்புகளிலும் நிரம்ப தெரிந்த மங்கலமான மஞ்சள்
5.முதல்வர் "இந்திராவின் மருமகளே ,இந்தியாவின் திருமகளே" என்று அடுக்கு ? மொழியில் பாராட்டிக் கொண்டிருக்கும் போது ,அதை கவனியாமல் சோனியா கையிலிருந்த பேப்பர் கட்டில் (முதல்வர் உரையின் மொழிபெயர்ப்பு ?) ஏதோ தேடிக் கொண்டிருந்தார் .இதை மீண்டும் மீண்டும் கேட்டு அவருக்கும் அலுத்து விட்டதோ என்னவோ ?
6.எனது மருத்துவக் கல்லூரி ஆசிரியர் டாக்டர் .சுதா சேஷய்யன் .சட்ட சபை உறுப்பினர்கள் யாரையாவது தொகுக்க சொல்லியிருக்கலாம் ?
7.விழா மலரை சோனியா சபாநாயகருக்கு வழங்குவார் என்று இருமுறை இரு மொழிகளில் சொல்லியும் சோனியா அதை வாங்கி சட்டென்று பின்னால் கொடுத்தது .
8.எதிர்கட்சிகள் என்று எவரும் பெரிதாக தென்படாதது .அம்மா ஒருவேளை திடீர் பிரசன்னமாகியிருந்தால் விழா நிஜத்தில் களை கட்டியிருக்கும்
9.சோனியா காந்தியின் பொருத்தமான பேச்சு ,நிகழ்வுக்கு பொருத்தமாக இருந்தது .
10.முதல்வர் ஏனோ புலம்பித் தள்ளினார் .கூட்டணியை உடைக்க சதி செய்கிறார்கள் என்று ஒரே புலம்பல் + சுய பிரச்சாரம் அவர் பேச்சில் .
11.சோனியாவும் பிரதமரும் மறக்காமல் காங்கிரஸ் முதல்வர்களையும் எம்.ஜி ஆரையும் நினைவு கூர்ந்தது .
12.பிரதமர் ,சி.சுப்பிரமணியம் நாட்டின் பசியைப் போக்க பாடுபட்டார் ,எம்.ஜி.ஆர் ஏழைகளின் பசியைப் போக்க சத்துணவு திட்டம் கொண்டுவந்தார் ,கருணாநிதி இப்படியொரு பிரமாண்ட சட்டசபையை கட்டியிருக்கிறார் என்று சொன்னார் .அவர்கள் மக்கள் தேவைகளுக்காக பாடுபட்டார்கள் ,இவர் காசை கொட்டி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று குத்தி காட்டுகிறாரோ என்று தோன்றியது .
13.அ.தி.மு.க மேடை போல் பிற தலைவர்கள் கீழேயே அமர்ந்திருந்தது .
14 . எல்லாவற்றையும் விட ,குறிப்புகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு அசத்தலாக பேசக் கூடிய தமிழக முதல்வர் ,முழு பேச்சையும் எழுதிக் கொண்டு வந்து வாசித்தது .வயதாகி விட்டதையா ,வயதாகி விட்டது :(


இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ,புதிய சட்டசபையை கட்டியதை பாராட்டி விருது வழங்கும் விழாக்கள் எப்போது ஆரம்பம் ?

Saturday, 13 March 2010

ஏவாளின் மகள்

முட்டாளாகவே இருந்திருக்கிறேன் நான்
மதியத்தில் உறங்கப் போய் ,சில்லிரவில்
ஆறுதலற்ற சிலீர் நிலவடியில் கண்விழிக்க .
முட்டாள் நான் ,
என் ரோஜாவை பூக்கும் முன்னமே கிள்ளிப் போட..
முட்டாள் நான் ,
லில்லியை மலரும் முன் ஒடித்து போட ..

என் தோட்டம் படர்ந்த எல்லைகளை
நான் பராமரிக்கவில்லை .
கைவிடப்பட்டு வாடிப்போய்
என்றும் அழாதது போல் இன்று அழுகிறேன்.
ஐயோ , நான் உறங்கப் போகையில் கோடையாய் இருந்தது
விழித்து பார்க்கையிலோ கடும்பனியாய் குளிர்கிறது !

வரப்போகும் வசந்தம் பற்றி
உங்கள் விருப்பம் போல் பேசுங்கள் ..
இதமாய் கதிர் காயும் இனிய நாளையைப் பற்றியும்..
இனி புன்னகையும் இல்லாமல் ,
இனி கீதங்களும் இல்லாமல்,
என் நம்பிக்கையும் எல்லாமும் முழுவதாய் உரியப்பட்டு
தனியே இருக்கிறோம் , என் துயர்களும் நானும்


A DAUGHTER OF EVE
by: Christina Rossetti (1830-1894)


A fool I was to sleep at noon,
And wake when night is chilly
Beneath the comfortless cold moon;
A fool to pluck my rose too soon,
A fool to snap my lily.

My garden-plot I have not kept;
Faded and all-forsaken,
I weep as I have never wept:
Oh it was summer when I slept,
It's winter now I waken.

Talk what you please of future spring
And sun-warm'd sweet to-morrow:--
Stripp'd bare of hope and everything,
No more to laugh, no more to sing,
I sit alone with sorrow.

Wednesday, 10 March 2010

தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol)

போன வாரத்தில் தான் "தி லாஸ்ட் சிம்பல் " படித்து முடித்தேன் .முந்தைய கதைகள் போல் இல்லை என்றாலும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது .அதில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களும் சடங்குகளும் உண்மையே என்று ஆரம்பத்திலேயே கூறப்பட்டிருப்பது இன்னமும் ஆச்சரியத்தை கூட்டியது .இதை எழுத ஐந்து வருடங்கள் ஆனது ஆச்சரியமில்லை தான்.


நேற்று இரவு டிஸ்கவரியில் வந்த ஒரு நிகழ்ச்சி .தாஜ் மகாலைப் பற்றியது .நிஜமாகவே ஷா ஜகானின் காதல் மனைவிக்காக மட்டும் கட்டப்பட்டதா தாஜ் மகால் என்பதை ஆராய்ச்சி செய்தார்கள் .கொஞ்சம் மேலோட்டமாகவே இருந்தது .இவர்கள் சொல்ல வந்தது என்னவென்றால் ,ஷா ஜகான் ,குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் சொர்க்கத்தை அச்செடுத்தாற்போல் தாஜ் மகாலைக் கட்டியிருக்கிறார் என்பதே .இதற்கு சான்றாக தாஜ் மகாலில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் உள்ளனவாம் .ஆனால் எதற்காக இப்படி கட்டினார் என்பதையும் கொஞ்சம் பேசினார்கள் .அதற்கு விடை ஷா ஜகான் தனக்கு கொடுத்துக் கொண்ட பட்டங்களில் இருக்கிறதாம் .இந்த பட்டங்கள் கடவுளுக்கு நிகரானவர் என்பதாக பொருள் தருபவை (ஆனால் பல மன்னர்களின் பட்டங்கள் இப்படி தானே இருக்கின்றன ).அதனால் வழக்கமான கல்லறை தோட்டங்கள் போல் அல்லாமல் தாஜ் மகால் அமைந்திருக்கிறது என்றார்கள் .இறுதியாக அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ,ஷா ஜஹான் மிகவும் நல்ல அரசர் என்று கூறினார் .இன்னொரு வெளிநாட்டு பேராசிரியரோ ,அவர் ஆடம்பர மோகம் கொண்டு அகங்காரம் கொண்டவர் என்று சொன்னார் .இப்படியாக இரு கருத்துகளை சொல்லி நிகழ்ச்சியை முடித்தார்கள் .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ,"தி லாஸ்ட் சிம்பல் "புத்தகம் தான் .டான் பிரவுன் தனது படைப்புகளில் சரித்திரத்தை அழகாக கலந்து கதை சொல்கிறார் . இதில் நிஜமான இடங்கள் வருவது பெரும் ஈர்ப்பாக இருக்கிறது ."டா வின்சி கோட்" வெளிவந்த போது சுஜாதா தமிழில் "பொன்னியின்
செல்வனுக்கு " பிறகு யாருமே சரித்திரம் புனைவுகளோடு கலந்த தளத்தில் கதை சொல்ல முற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் .ஏன் ?

Tuesday, 9 March 2010

பிறந்தநாள்

ஒரு அம்மா மகன் .மாதந்தோறும் சிகிச்சைக்கு சரியாக வரும் இவர் தன் மகனை மட்டும் சரியாக அழைத்து வருவதில்லை .அதிகம் வற்புறுத்தி சொன்னால் வருடம் ஒரு முறை அழைத்து வருவார் .சரியான சிகிச்சையும் கொடுப்பதில்லை .எந்த ஒரு பரீட்சையும் அவனுக்கு செய்வதில்லை .இது உதாசீனம் என்றாலும் மகனை அழைத்து வந்தால் அவனுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயமே முக்கிய காரணம் .


ஒரு வழியாக போன வாரத்தில் இவனை அழைத்து வந்தார் .ரத்த சோதனைக்காக ,வயதை கேட்கையில் (பார்மில் நிரப்ப வேண்டும் ) ,பதிமூணு முடிஞ்சி பதினாலு ஆரம்பிக்க போகுது என்று சொன்னான் அவன் .சொல்வதைப் பார்த்தால் பிறந்தநாள் நெருக்கத்தில் இருக்குமோ என ,உனக்கு என்னைக்கு பிறந்தநாள் ?என்று கேட்டேன் ."எனக்கு தெரியாது" என்றான்."எங்கம்மா சொன்னதே இல்ல . இதுவரைக்கும் எனக்கு கருத்து தெரிஞ்சு எனக்கு எங்கம்மா பெறந்தநாள் கொண்டாடுனதே இல்ல .நா கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாங்க .நா பெறந்தப்ப கொடுத்த ஆஸ்பத்திரி சீட்டெல்லாம் வீட்டில இருக்கு .அதையும் என்னைய பாக்க விடமாட்டேங்குறாங்க .அவங்களும் பாத்து சொல்ல மாட்டேங்குறாங்க .டேய், அத தொடாதடான்னு சத்தம் போடுறாங்க . ஆஸ்பத்திருக்கு என்னைய கூட்டிட்டு போங்கன்னு சொல்றேன் ,அதெல்லாம் முடியாது ,பக்கத்திலே பாத்துக்கிரலாம் ன்னு சொல்றாங்க .பக்கத்துல பாத்து ஊசி போட்டா எனக்கு சீக்கிரம் நல்லாவே ஆக மாட்டேங்குது ,"என்றான் மிக வருத்தமாய் .இத்தனையையும் அவன் அம்மா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் எந்த ஒரு சலனமும் இல்லாமல் .


நோய் இருப்பது குழந்தைகளுக்கு தெரிந்து விடுமோ என்ற பயம் பெற்றோரை பலவாறாக ஆட்டி வைக்கிறது .ஆனால் அதற்கென மருத்துவமனைக்கு வராமல் ஒளித்து வைப்பது எதற்கும் தீர்வில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள் .சற்று விவரம் தெரிந்த குழந்தைகள் தங்களை சுற்றி ஏதோ மர்மம் இருப்பதாக குழம்பிப் போகிறார்கள் .இப்படி அவர்களின் மருத்துவ அறிக்கைகளை ஒளித்து வைப்பது, இன்னமும் அவர்களின் குழப்பத்தை அதிகப்படுத்துகின்றது .குழந்தையிடம் உரிய காலத்தில் பக்குவமாக உண்மையை எடுத்து சொல்வது மட்டுமே இதற்கு உறுதியான தீர்வாக முடியும் .

Monday, 8 March 2010

அனுபவம் புதுமை

ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிம்லா போயிருந்தப்ப இது நடந்தது .நாங்க அங்க இருந்தப்ப தான் மம்மி பார்ட் த்ரீன்னு நெனைக்கிறேன் ,ரிலீஸ் ஆயிருந்துது .என் கணவரும் என் பிள்ளைகளும் ஒடனே படத்த பாக்கணும் முடிவு பண்ணிட்டாங்க .என் கணவரோட நண்பர் ஒருத்தர் சிம்லாவில இருந்தார் .அவர் நானும் வரேன்ன்னு டிக்கட்டுக்கும் ஏற்பாடு பண்ணிட்டாரு .நைட் ஷோ .இது ஹிந்தி டப்பிங்கா இருக்கப் போகுது அத விசாரிச்சிக்கோங்கன்னு சொன்னா யாரும் கண்டுக்கல .


ராத்திரி படத்துக்கு கெளம்பியாச்சு .ஊருக்கு அடியில தியேட்டர் .நிசமா தான் .ஊருக்கு அடியில த்ரில்லர் படத்துல சேஸ் சீன்ல வர்ற அண்டர்கிரவுண்ட் டனல் மாதிரி ஒரு வழியில போனோம் .ரொம்ப தூரமா இருந்துது .நடந்து தான் வர்ற முடியுமாம் .டனல் ஏதோ பிரிட்டிஷ் காலத்துல கட்டினதாம் .அங்கங்க மேலேயிருந்து தண்ணி சொட்டு சொட்டா விழுந்துகிட்டு இருந்துது .அப்பப்ப ஒண்ணு ரெண்டு எலி வேற .

இத கடந்து போனா தியேட்டர் ?ஆள் அரவமே இல்லாத ஒரு எடம் .வெளிய ஒரு பிட்டு படம் போஸ்டர் .பக்குன்னு இருந்துச்சு .சரி உள்ளூர் காரர் தான் ஒருத்தர் தொணைக்கு இருக்காரேன்னு தைரியமா போய்ட்டோம் .ஷோ நேரம் ஆகிடுச்சி .ஒரு ஆளு கூட இல்ல .வாசலில ஒரு லைட்டு .கதவு தெறந்திருந்திச்சி. தெறக்காத ஒரு பாப்கார்ன் மிஷீன் .அவ்வளவு தான் .சரியான எடத்துக்கு தான் வந்திருக்கோம்ன்னு நண்பர் சொன்னாரு .திரும்பி போயிடலாம்ன்னு சொன்னேன் .வசதியா சத்தியத்துல போயி படத்த பாத்துக்கலாம்ன்னு சொல்லி பாத்தேன் .இல்ல இவ்வளவு தூரம் வந்துட்டு ,என்னன்னு விசரிக்கலாம்ன்னு கேட்டா ,மொத்தம் அஞ்சு டிக்கட் தான் வித்திற்கு (நாங்க அஞ்சு பேர் தான் ).இன்னும் கொஞ்ச பேர் வந்தா படம் போடுவோம் இல்லைன்னா ஷோ கேன்சல்ன்னு சொல்லிட்டாங்க .


கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தர் வந்து உள்ள போய் உக்காந்துக்கோங்கன்னு சொன்னார் .நா இன்னும் கொஞ்ச பேர் வந்த பின்னாடி போலாம்ன்னு சொன்னேன் .யாரு கேக்கப் போறா ?உள்ள போயாச்சு .ஹோன்னு இருந்துச்சி .நாங்க அஞ்சு பேர் மட்டும் .கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் ரெண்டு பேர் வந்தாங்க .படம் பாத்தா ஹிந்தி டப்பிங் .ஒரு மண்ணும் புரியல .ஷோவ கேன்சல் பண்ணியிருந்தா கூட பரவாயில்லைன்னு தோணிச்சு .கிழிஞ்ச சீட் .காலுக்கடியில அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டிருந்த எலி .ரொம்ப கிலியாவே இருந்துது .நல்லவேளை இன்டர்வெல் இல்லாம படத்த போட்டாங்க .பாஸ்ட் பார்வர்ட் பண்ணியிருந்தா கூட சந்தோஷப்பபட்டிருப்பேன்.
இப்படியா திகில்லாவும் தில்லாவும் படம் பாத்து முடிச்சோம் .

தெரியாத ஊருல படம் பாக்கப் போகக் கூடாதுன்னு நல்லா புரிஞ்சுது .

Thursday, 4 March 2010

நித்தியானந்தா

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்ட ஸ்கூப் நியூஸ் இதுதான் .ஆனால் இத்தனை முக்கியத்துவம் தர இந்த செய்தியில் என்ன இருக்கிறது ?அப்படி என்ன வேறு எவரும் வேறு எந்த சாமியார்களும் செய்யாததை இவர் செய்து விட்டார் என்று இத்தனை பிளாஷ் நியூஸ் ?இத்தனை பதிவுகள் ?இத்தனை சாடல்கள் ?

ஆனால் நித்தியானந்தாவிற்கு இது நிச்சயம் நல்ல விளம்பரம் தான் .இதற்கு முன் இவரை அறியாத பலருக்கும் இப்போது அவர் அறிமுகமானவராகி இருக்கிறார் .ஒருவேளை அதற்காக அவரே இந்த சிடியை பதிவு செய்திருக்கக் கூடும் ?சன் டிவியில் நல்ல விலைக்குக் கூட விற்றிருக்கலாம் .இல்லை இவருக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ என்னவோ இப்படியாக பழி? வாங்கியிருக்கிறார்கள் .

கொஞ்ச நாளில் எல்லா பரபரப்பு செய்திகளைப் போல இதுவும் கடந்து போகும் ....


Monday, 1 March 2010

உயிர்த்தெழுதல்

சுடர் அறிவில்லை வார்த்தைகளில்லை கண்ணீரில்லை
கல்லாய் கிடக்கிறது என் இதயம் என்னுள்
நம்பிக்கை அச்சம் மறந்து மரத்து போனதாய்
இருபுறமும் பாருங்கள்,நான் தனியாகவே வசிக்கிறேன் .
துயரில் மங்கிப் போன என் பார்வையை உயர்த்தையில்
அழியாத குன்றுகள் எவற்றையும் நான் காணவில்லை .
உதிர்ந்து கொண்டிருக்கும் இலையில் என் வாழ்க்கை
ஏசுவே ,துரிதப்படுத்துங்கள் என்னை ....

வாடிக் கொண்டிருக்கும் இலை போல என் வாழ்க்கை
வெறும் உமிக்காய் சுருங்கியது என் அறுவடை
நிஜத்தில் என் வாழ்க்கை சுருக்கமாய் வெற்றிடமாய்
தரிசான மாலை போலும் சோர்வானதாய் ....
உறைந்து போனது போல் என் வாழ்க்கை
எந்த மொட்டும் பசுமையும் நான் காணவில்லை
ஆனால் வசந்தத்தின் சாறு அதில் நிச்சயம் ஏறும்
ஏசுவே ,என்னில் எழுங்கள் ....

உடைந்த கிண்ணம் போல் என் வாழ்க்கை
என் ஆன்மாவிற்கு துளி நீரும் கொள்ள முடியாத
உடைந்த கிண்ணம் போல் என் வாழ்க்கை
தவிக்கும் குளிரில் கதகதப்பற்றதாய் ....
அழிந்து விட்ட அதை நெருப்பில் வீசுங்கள்
உருக்கி வார்த்தெடுங்கள் மீண்டும் மீண்டும்
என் அரசருக்குரியதாய் அது ஆகும் மட்டும் ,
ஏசுவே ,என்னில் பருகுங்கள் ....



A BETTER RESURRECTION
by: Christina Rossetti (1830-1894)


HAVE no wit, no words, no tears;
My heart within me like a stone
Is numb'd too much for hopes or fears;
Look right, look left, I dwell alone;
I lift mine eyes, but dimm'd with grief
No everlasting hills I see;
My life is in the falling leaf:
O Jesus, quicken me.

My life is like a faded leaf,
My harvest dwindled to a husk:
Truly my life is void and brief
And tedious in the barren dusk;
My life is like a frozen thing,
No bud nor greenness can I see:
Yet rise it shall--the sap of Spring;
O Jesus, rise in me.

My life is like a broken bowl,
A broken bowl that cannot hold
One drop of water for my soul
Or cordial in the searching cold;
Cast in the fire the perish'd thing;
Melt and remould it, till it be
A royal cup for Him, my King:
O Jesus, drink of me.

Tuesday, 23 February 2010

பாத்திரம் அறிந்து

சிகிச்சைக்காக புதிதாக வந்த ஒரு பெண் .நிறைய படித்தவர் .பல வருடங்களாக தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியும் என்று கூறினார் ,கிட்டத்தட்ட பத்து வருடங்களாக .ஆனால் தான் எந்த சிகிச்சையும் இதுவரை செய்து கொள்ளவில்லை என்றும் கூறினார் .

இவரின் கணவர் திருமணம் ஆகி மூன்று வருடங்களிலேயே இறந்துவிட்டார் .கணவருக்கு எச்.ஐ.வி இருப்பது இவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியுமாம் .தெரிந்தும் ஏன் அவரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு ,பாவம் என்று செய்து கொண்டேன் என்று கூறினார் ."சரி பாவம் என்று திருமணம் செய்து கொண்டீர்கள் ,எதற்காக காண்டம் உபயோகிக்கவில்லை ?"என்று கேட்டேன் ."அவர் செத்து போய்ட்டா ,ஒடனே நானும் செத்து போயிடனும்ன்னு நெனைச்சேன் .அதனால எச்.ஐ.வி வராம பாத்துக்கனும்ன்னு தோனல .அவரு மூனே வருஷத்தில செத்து போனப்ப தான் பயமா இருந்துது .அப்புறமும் ஒடம்பு நல்லாயிருந்த வரைக்கும் பெரிசா ஒண்ணும் தோனல .ஆனா இப்ப நெனைக்கும் போது இப்படி முட்டாளா இருந்திருக்கோமே ன்னு வருத்தமா இருக்கு .எதுக்காக அப்படி அன்னிக்கி முடிவு எடுத்தேன்னு யோசிக்கவே இப்ப வருத்தமா இருக்கு .எங்க வீட்டில எல்லாருக்கும் பிடிச்ச பிள்ள நான் .அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பாடுபடுவாங்களோ.."என்று சொல்லி ஓவென்று அழுதார் .

Saturday, 20 February 2010

என்னவென்று சொல்வது ?

என் மகனின் பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள் இவை .

1.ஓபன் ஹவுசிற்கு, என் மகனுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை வந்திருந்தார் .அவன் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக பெற்றிருப்பதாக ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் .ஆசிரியர் "அவன் இந்த டெர்ம் முழுவதும் நிறைய நாட்கள் வரவில்லை .லீவ் லெட்டரும் கொடுக்கவில்லை .பெற்றோரை அழைத்து வா என்று சொன்னேன் ."என்று சொன்னார் .அந்த தந்தையோ இல்லை அவன் ஒரு நாளோ இரண்டு நாளோ தான் லீவ் போட்டிருக்கிறான் என்று சொன்னார் .ஆசிரியர் ரெஜிஸ்டரை காட்டினார் .மகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான் .அவர் ஆசிரியரையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் முகத்தில் அவமானம் +அதிர்ச்சி +ஏமாற்றம் .

2.பள்ளி வாசலில் காலையில் ஒரு மாணவி ,ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம் . காரில் வந்து இறங்கினாள் .கார் போகும் வரை கேட்டருகே நின்று கொண்டிருந்தாள் .ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும் வேகமாக வெளியே வந்தவள் ,எதிர் திசையில் நடந்து போய்விட்டாள்.எதிரே இருக்கும் கடைக்கு போகிறாளோ என்று பார்த்தால் கடையையும் தாண்டி ரோட்டை கடந்து போய்விட்டாள் .

3.பள்ளிவிட்ட பிறகு ,ஆட்டோவுக்கு வந்தாள் ஒரு சிறுமி .எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் .ஆட்டோ ஓட்டுனர் ,அந்த சிறுமியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் .இன்னமும் சிலர் வரவேண்டும் போலும் .பேசிக் கொண்டிருந்த போதே கிச்சுகிச்சு மூட்டுவது போல் விளையாடினார் .அங்கே இங்கே தொட்டுக் கொண்டு .உடன் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ,விஷமச் சிரிப்புடன் .

Saturday, 13 February 2010

கோலமும் நானும் பாட்டியும்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ,நேரம் கிடைக்கும் போது பகலிலோ மாலையிலோ கோலம் போடுவது வழக்கம் .எப்போதும் பெரிய கோலங்களை தான் போடுவேன் .இது நேரம் ஆகும் என்பதால் சுற்றி சுற்றி உட்கார்ந்து மெதுவாக போட்டுக் கொண்டிருப்பேன் .

இப்படி ஒருநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன் .வசதியாக உட்கார்ந்து கோடுகளை இழுத்துக் கொண்டிருந்தேன் .மாடியில் வீட்டில் இருந்த பாட்டி ,நான் பாதி கோலத்தில் இருக்கும் போது இறங்கி வந்து படிக்கட்டில் உட்கார்ந்தார் .ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் .

நான் கோலத்தில் ஒரு பக்கம் முடித்துவிட்டு இன்னொரு பக்கம் சென்று உட்காரப் போனேன் .உடனே சட்டென்று ,"கோலத்த நின்னுகிட்டு இழுளா ,சப்பாணி பொம்பள மாதிரி ஒக்காந்து இழுக்கா .நேரா நின்னுக்கிட்டு இழு ,"என்றார் வேகமாக .நான் உடனே ,"நின்னுக்கிட்டே கோலம் போட்டா கால் வலிக்கும் பாட்டி "என்றதும் "ஆமா ,இப்படி கெழவி கணக்கா ஒக்காந்துட்டே இழுத்தா தான் வெளங்குமோ?கத்தி போல நின்னுக்கிட்டு இழு "என்றார் மீண்டும் .

அன்றிலிருந்து கோலம் போடும் போது முடிந்தவரை நின்று கொண்டு தான் போடுகிறேன் . நின்று கொண்டு புள்ளி வைக்கும் போது அது ஒரு சீராகவும் விழுகிறது ,கோலமும் முழுமையாக சமமாக இருக்கிறது .

Thursday, 11 February 2010

குழந்தைக்காக

புதிதாக சிகிச்சைக்கு வந்த பெண் .வந்தவுடன் சொன்னார் ,"போன வருடமும் அதற்கு முந்தின வருடமும் பரீட்சை செய்த போது எனக்கு எச்.ஐ.வி இல்லை ,இப்போது செய்த போது இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள் ."எதற்காக வருடா வருடம் பரீட்சை செய்து கொண்டீர்கள் என்று கேட்ட போது ,"அவருக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்பது மூன்று வருடங்களாக தெரியும் அதனால் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்று ."

உங்கள் கணவருக்கு இருப்பது தெரியும் என்றால் ஏன் நீங்கள் காண்டம் உபயோகிக்கவில்லை என்று கேட்டேன் .குழந்தை வேண்டும் என்பதற்காக என்றார் அழுதபடி .திருமணம் ஆகி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன .குழந்தை இல்லை .குழந்தைக்கான முயற்சியில் ,விரும்பியோ கட்டாயத்தின் காரணமாகவோ ஈடுபட்டதில் எஞ்சியது எச்.ஐ.வி மட்டுமே .

Friday, 5 February 2010

தவிப்பு

தம்பதியராக சிகிச்சைக்கு வருபவர்கள் தான் இவர்களும் .கணவர் ஏதோ தாக்குதலில் அடிபட, ரத்தம் ஏற்றியதில் எச்.ஐ.வி வந்தது .பல வருடங்கள் ஆன பின்னரும் இருவருக்கும் அதை ஏற்றுக் கொள்வது சிரமமாகவே இருக்கிறது .சொல்லும் போதெல்லாம் அழுகை வரும் .

போன வாரத்தில் வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார்கள் .அப்போதும் ,"அடிப்பட்டப்ப செத்து போயிருவாருன்னு தாங்க நெனைச்சோம் .ஆனா அதில பொழைக்க வச்ச ஆண்டவன் இதில எங்கள மாட்டிவிட்டுட்டான் ,"என்று சொல்லி அழுதார் மனைவி .மேலும் ,"பசங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சிகிட்டே இருந்தோம் .பெரியவன் இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கான் .ரெண்டாவது பையன் ஸ்கூல் படிக்கிறான் .பெரியவன்கிட்ட போன வாரம் தான் சொன்னோம் .நாளைக்கு ஒடம்புக்கு ஏதாவது முடியலைன்னா அவனுக்கு தெரியனும் இல்லையா .அப்படியே இடிஞ்சி போயிட்டான் .எப்படிம்மா எப்படிம்மா ன்னு கேட்டுகிட்டே இருந்தான் .ரிபோர்டெல்லாம் காண்பிச்சோம் .சரிம்மா ஒடம்ப நல்லா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு விட்டுட்டான் .ஏத்துப்பான்னு நெனைக்கவே இல்ல .இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ,"என்றும் சொன்னார் .

தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்று தெரிந்த அந்த ஒரு நொடியை விடவும் ,எவரும் அறியாமல் சிகிச்சைக்கு வந்து சென்ற அந்த சில நேரங்களை விடவும் மகனிடம் சொல்ல முடிவெடுத்த அந்த ஒரு நொடியை விடவும் ஏன் அவனிடம் சொன்ன அந்த ஒரு நொடியை விடவும் கூட அவன் பதிலுக்கென காத்திருந்த அந்த ஒரு நொடி வலி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும் .

Tuesday, 2 February 2010

அழகாக

நேற்று வந்த ஒரு கணவன் மனைவி .எப்போதாவது ஒரு முறை தான் இந்த கணவருக்கு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வர நேரம் கிடைக்கும் .இவர் அழைத்து வராவிட்டால் வழி தெரியாது என்று இவர் மனைவியும் சரியாக சிகிச்சைக்கு வருவதில்லை .ஆனால் வரும் போதெல்லாம் நான் என் மனைவியை எப்படி தாங்குகிறேன் என்பதை பற்றிய பிரதாபம் அதிகம் இருக்கும் ."நான் ஜூஸ் போட்டுக் கொடுத்தேன் "."நான் பழம் வாங்கிக் கொடுத்தேன் .""அவங்க தான் அழுது உடம்பைக் கெடுத்துக்குராங்க".இப்படியே பேசிக் கொண்டிருப்பார் .

இவர்களின் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்,திருமணம் ஆன சில மாதங்களிலேயே .தீக்காயங்களுடன் இருந்த மகளுக்கு தொட்டு எதுவும் செய்ய வேண்டாம் ,உங்களுக்கு அவளுக்கு இருக்கும் நோய் வரலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லியும் ,மகளுக்கு சிகிச்சை செய்தததில் இவருக்கு எச்.ஐ.வி வந்தது .கணவருக்கு இல்லை ."செத்தப்பக்கூட தொட்டு அழக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு ,எப்படிங்க எம்பிள்ளைய தொடாம இருக்க முடியும் ?"என்று சொல்லி அழுவார்.

மகளை நினைத்து அழுது கொண்டே இருப்பதாக கணவர் அங்கலாய்ப்பார் .நேற்று வந்தவர் ,"வரவர இவ அழகு கொறையுது .மொகம் ஒரு களையா இல்ல .ஒடம்பு வேற கொஞ்சம் மெலியிற மாதிரி இருக்கு .நா ஒப்பனா சொல்றேன் டாக்டர் .இவ செத்தாலும் கூட எனக்கு கவலயில்ல ,ஆன இவ சாகுற வரைக்கும் அழகா இருக்கணும் ,அதுதான் முக்கியம் .அதுபடி நீங்க பாத்துக்கோங்க ."

"மொதல்ல நீங்க அவங்கள ஆஸ்பத்திரிக்கு ஒழுங்கா கூட்டிட்டு வாங்க .அழகாக தான் இருக்காங்க (நிஜமாகவே அழகாக களையாக இருப்பார் ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் .இதுக்கு மேல அழகாக தெரியணும்ன்னு சொல்றீங்க ,அப்ப நீங்க இங்க கூட்டிட்டு வரக் கூடாது ,பியூட்டி பார்லருக்கு தான் அவங்கள கூட்டிட்டு போகணும் .ஒரு பேசியல் பண்ணி முடிய வெட்டி விட்டு ஜீன்ஸ் போட்டுவிட்டா இன்னுமே அழகாக இருப்பாங்க .சினிமாவில இல்ல சீரியலில கூட நீங்க நடிக்க வைக்கலாம் ,"என்று சொன்னேன் கோபமாக .

"அவர் தப்ப எப்பவுமே ஒத்துக்க மாட்டாரு .என்னையே கொற சொல்வாரு "என்று
வருத்தமாக சொல்லிவிட்டு சென்றார் அவர் .

Monday, 1 February 2010

தாலி

சில நாட்களுக்கு முன்னால் நடந்தது . காலையிலேயே மருத்துவமனை அல்லோகலப்பட்டது . வெளியூரிலிருந்து வரும் பலர் காலையிலேயே வந்து இங்கேயே குளித்துவிட்டு பரிசோதனைக்கு வருவது வழக்கம் .இவ்வாறு குளித்த பெண் ஒருவர் தன் தாலி செயினைக் குழாயின் மேல் மாட்டி வைத்து விட்டு குளித்து இருக்கிறார் .மறந்து விட்டு வந்தவர் திரும்ப சென்ற போது செயின் இல்லை .மூணு பவுன் என்று சொல்லி சத்தமாக அழுதுக் கொண்டிருந்தார் .ஆளாளுக்கு அவரவர் கருத்தை வழக்கம் போல் ,சொல்லிக் கொண்டிருந்தார்கள் ."தாலியைக் கழற்றலாமா ?"மூணு பவுனு !தங்கம் விக்கிற விலையில போனா கிடைக்குமா ?"தங்கம் கெடைச்சா சும்மா விடுவாங்களா ?"ஆஸ்பத்திரியில வந்து கழட்டிட்டு குளிக்கனுமா ?என்று தங்கம் சம்பந்தமாகவும் தாலி சம்பந்தமாகவும் பல கருத்துகள் .அந்தப் பெண்ணோ அழுதுக் கொண்டே இருந்தார் .

இந்த அமளிகள் ஓய்ந்து ஒரு மணி நேரம் சென்ற பின் மீண்டும் சத்தம் என் அறைக்கு வெளியே .இருபெண்களின் குரல்கள் மட்டும் ஓங்கி கேட்டது .நடந்தது இது தான் .இந்தப் பெண் குளித்து விட்டு வந்த பின் இன்னொரு பெண் குளிக்க சென்றிருக்கிறார் .செயினைப் பார்த்த இவர் அதை எடுத்து வந்துவிட்டிருக்கிறார் .இப்போது அதை அந்த பெண்ணிடம் திரும்ப தந்துவிட்டார் ,"தாலியை கழட்டின நீயெல்லாம் பொம்பளையா " என்பது போன்ற
அறிவுரைகளை இணைத்து .அமைதியாய் அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தார் தாலியை தொலைத்தவர் .

எங்களுக்கு எஞ்சியது இரண்டு கேள்விகள் தான் ,அந்தப் பெண் நகையை ஒரு பொது இடத்தில் கழற்றி வைத்தது விட்டு அஜாக்கிரதையாய் இருந்தது பெரிய தவறு .ஆனால் ,எடுத்தவர் எதற்காக அதை எடுத்தார் , எதற்காக திரும்ப தந்தார் ?

Saturday, 23 January 2010

இப்படியும் சிலர்

எச்.ஐ.வி நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியாக நேரம் தவறாமல் எடுத்துக் கொள்வது அதி முக்கியமானது .சிலர் இதை பற்றி எத்தனை முறை கூறினாலும் கவனக்குறைவாக இருந்து விட்டு பின்னர் வருந்துகிறார்கள் .


இவர் ஒரு பள்ளி ஆசிரியர் .வயது நாற்பது .கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .ஆனால் மருந்துகளை சரிவர சாப்பிடுவதில்லை .இதில் குடி பழக்கம் வேறு .எத்தனை முறை எப்படி எப்படியோ(அன்பாக ,மிரட்டி,.. ) எடுத்து சொல்லியும் பயனில்லை .ஒவ்வொரு முறையும் மிகவும் முடியாமல் போகும் போது இவரின் வயதான தந்தையும் சகோதரரும் இவரைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் .உடல்நலமான பின் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சரியாக வருவார்.மறுபடியும் வேதாளமாக இவர் முருங்கை மரம் ஏற இவரின் வீட்டார் விக்கிரமாதித்தனைப் போல சளைக்காமல் பிடித்துக் கொண்டு வருவார்கள் .இப்படி பல முறை .

சில நாட்களுக்கு முன்னால் மீண்டும் வந்தார் ,பல மாதங்களுக்கு பின் .வழக்கம் போலவே பல தொந்தரவுகள் .
நான் :எப்படி இருக்கீங்க ?
அவர் :ரொம்ப முடியல
நான் :ஏன் வரல ?
அவர் :வர முடியல
நான் :ஒடம்பு இவ்வளவு மோசமாகற வரைக்குமா வராம இருக்கிறது
அவர் :அந்த கெழவன் காசு இல்லன்னுட்டான் .
நான் :வயசான காலத்துல அவர் எத்தன தடவ தான் உங்களுக்காக கஷ்டப்படுவாரு
அவர் :என்ன கஷ்டம் சின்ன மகன் தான் கொடுக்கிறான்ல
நான் :சரி ,மாத்திர சாப்பிட்டீங்களா ?
அவர் :அப்பப்ப சாப்பிட்டேன்
நான் :ஏன் ஒழுங்கா சாப்பிடல ?
அவர் :இந்த ஒரு தடவ காப்பாத்தி விட்டுருங்க இனிமே ஒழுங்கா சாப்பிடுறேன் .
நான் :ஒரொரு தடவையும் இப்படித்தான சொல்றீங்க .
அவர் :இந்த தடவ அப்படியில்ல ,நா ஒழுங்கா சாப்பிடாம வந்தா என்ன உங்க செருப்பால அடிங்க

இப்படியாகவே ஒவ்வொரு முறையும் எங்களின் உரையாடல் இருக்கும் .
இந்த முறையும் முடிந்தவற்றை செய்து அனுப்பியிருக்கிறோம் .