Monday, 28 December 2009

விருதும் இல்லாமல் விழாவும் இல்லாமல்


காலையில கண் முழிச்சா
நா "கண் திறக்கும் கதிரவன்" தான்
பேஸ்ட கொஞ்சம் பிதுக்கையில
நா "பல் துலக்கும் பகலவன்" தான்

குளிச்சிட்டு வரும் போது
நா "அழுக்ககற்றும் ஆதவன் "தான்
சாப்பிடும் போதும் கூட
"உண்டு செரிக்கும் உத்தமன் " நான்

நொடிக்கு தான் ஒண்ணாக
நூறு கோடி பட்டமுண்டு
கண்ஜாடை செஞ்சுபுட்டா
விழா எடுக்க கூட்டமுண்டு

நேத்து சொன்ன வாழ்த்தெல்லாம்
நடுச்சாமம் கரைஞ்சிருச்சி
உச்சி மண்ட குளுந்ததெல்லாம்
தல சீவ உதிந்திருச்சி

இன்னைக்கி பொழுது இப்ப
சொகமில்லா பொழப்பாச்சி
காது குளிர நாலு சொல்லு
கேக்காத பொழுதாச்சி

அய்யான்னு சொல்லுவாங்க
அய்யன்ன்னு சொல்லுவாங்க
மெத்த படிச்சவுங்க
மெருகாத்தான் சொல்லுவாங்க

அதிசயப் பேச்செல்லாம்
அசராம சொல்லுவாங்க
புதுசு புதுசாத்தான்
படிச்சு வந்து சொல்லுவாங்க

இத்தனையும் இல்லாம
ராப்பொழுது கழியாது
இந்த பாட்டு கேக்காம
சோறு கூட செமிக்காது

நாளைக்கி பொழுது வந்தா
கோடி ஜனம் கூடி வரும்
ஆரவாரம் கோஷமெல்லாம்
வானம் முட்ட கேட்டு வரும்

ஆனாலும் அது வரைக்கும்
காத்திருக்க தெம்பு இல்ல
நல்ல வார்த்த கேக்காம
துண்டுக்குள்ள உசிரு இல்ல

மனசு மாய்ஞ்சு போகுமுன்னே
புத்துசிரு பாச்சிடுங்க
நேத்து எடுத்த படத்த கொஞ்சம்
டிவியில போட்டுடுங்க

Tuesday, 22 December 2009

கைராசி

"அந்த டாக்டர் கை பட்டவுடனே எனக்கு சரியாயிடும் ","அந்த ஆஸ்பத்திரியில கால் மிதிச்சவுடனே என் கொழந்த சுகமாயிரும் "மருத்துவர்களை பெரிதும் ஆட்டி வைக்கும் கைராசி குறித்த கருத்துகள் இவை .


இங்கே குடும்ப மருத்துவர் என்று எடுத்துக் கொண்டால் அவரின் வெற்றியை தீர்மானிப்பது பெரும்பாலும் அவரின் கைராசி தான் . மருத்துவ கல்லூரியில் சுமாராக படித்தவர்கள் பலர் நடைமுறையில் பெரிய வெற்றி பெறுவதும் ,மெத்தப் படித்து பதக்கம் வாங்கியவர்கள் சுமாரான வெற்றி பெறுவதும் இதனால் பல நேரம் நடக்கிறது .


ஒரு மருத்துவர் மேல் அவரிடம் சிகிச்சைக்கு வருபவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது இந்த கைராசி என்னும் செண்டிமெண்ட் .ஒருவேளை,ஆதரவாக பேசிப் பழகும் மருத்துவர்களை கைராசி நிறைந்தவர்களாக மக்கள் நினைக்கிறார்களோ என்று நினைத்தால் எனக்கு தெரிந்த ஒரு பிரபல ராசியான மருத்துவர் "ம்","சரி " என்ற இரு சொற்களை (?) மட்டுமே அதிகமாக பயன்படுத்தக் கூடியவர்.ஒருவேளை ,நிறைய பட்டங்கள் வாங்குவதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்று பார்த்தால் ,பட்டம் எதுவுமே வாங்காத ஆர்.எம்.பி டாக்டர்களுக்கு பிராக்டிஸ் அள்ளிக் கொண்டு போகிறது .மருத்துவரின் புறத் தோற்றம் இதற்கு காரணமாக இருக்குமோ என்று யோசித்தால் அதுவும் ஒரு சரியான காரணமாக தெரியவில்லை .


ஒருவேளை நிஜமாகவே இதில் ஏதும் ராசி இருக்கிறதோ என்று பார்த்தால் ,சிலருக்கு ராசியாக இருக்கும் மருத்துவர் வேறு சிலருக்கு ராசியற்றவராக இருக்கிறார் .இது குறிப்பாக மகப்பேறு நல மருத்துவர்களுக்கு அதிகம் பொருந்தும் .ஒரு ,குடும்பத்திற்கு அந்த மருத்துவரிடம் சென்றால் கண்டிப்பாக சுகப்பிரசவம் ஆகும் இல்லை தாங்கள் நினைக்கும் (பல நேரங்களில் ஆண் குழந்தை ) குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் .இன்னொரு குடும்பம் (அதே மருத்துவருக்கு அடுத்த வீட்டில் இருந்தால் கூட ) அங்கே போனால் கண்டிப்பாக சிசேரியன் தான் என்று சொல்லி அந்த பக்கமே போக மாட்டார்கள் .


பிறர் சொல்லக் கேட்டு இந்த கைராசி என்பது வாய்வழி செய்தியாகப் பரவி ஒரு மருத்துவரின் வெற்றியை நிர்ணயம் செய்கிறது .இதன் காரணமாக ஒரு மருத்துவர் கைராசியானவராக அறியப்படுவது அவசியமாகிறது .ஆனால் இதை சாத்தியமாக்குவதோ பெரிய மந்திர வித்தையாக இருக்கிறது .சிலருக்கு எந்த முயற்சியும் இல்லாமலே நிறைவேறுகிறது சிலருக்கு எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் வெறும் கனவாகவே இருந்து போகிறது


எது எப்படியோ, பக்தர்களுக்கு கடவுள் மேல் இருக்கும் பக்தி போல, இப்படி ஒரு நம்பிக்கை பற்றுதலோடு இந்த வர்த்தக யுகத்திலேயும் மக்கள் மருத்துவர்களை மதிக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான் .

Saturday, 19 December 2009

பார்பக்யூ நேஷன்

என் மகனோட பிறந்தநாள் ஏழாம் தேதி .வெளிய சாப்பிடலாம்ன்னு பார்பக்யூ நேஷன்ங்கற ஒரு இடத்துக்கு போனோம் .இது டி நகர் ,உஸ்மான் ரோடு ஜாய் ஆலுக்காஸ் முருகன் இட்லி கடை இரண்டுக்கு நடுவில ஒரு சந்துல இருக்கு .
முதலே டேபிள் முன்பதிவு செஞ்சுகிட்டு தான் போனோம் .

உள்ளே பெரிய வித்தியாசமா எதுவும் செய்யலைன்னா கூட நல்லா இருந்தது .சீட்டிங் ரொம்ப வசதியா இருந்தது .கொஞ்ச நெருக்கத்தில போட்டிருந்தாக் கூட கச்சடாவா இல்லாம போட்டிருந்தாங்க .

முக்கியமான விஷயம் என்னன்னா ,சாப்பாடு புஃபே முறையில் .ஒருத்தருக்கு 450ரூ .முதலா ஸ்டார்டர்ஸ் தராங்க .இதுக்கு அழகா நம்ம டேபிளேயே ஒரு சின்ன கிரில் வச்சிருக்காங்க .வெஜ் ( உருளைக் கிழங்கு ,காளான் ,கொடை மிளகாய் ) ,அப்புறம் நான் வெஜ் (சிக்கன் ,இறால் ) .இந்த ஐட்டங்கள் காலியாக ஆககொண்டு வந்து வச்சுக்கிட்டே இருக்காங்க .இது தவிர கபாப் ,குழந்தைகளுக்கு ஸ்மைலீஸ் இன்னும் வேற விஷயங்களும் வந்து செர்வ் பண்ணாங்க .டேபிள் மேல ஒரு கொடி வச்சிருக்காங்க .அத நீங்க மடக்கி விடுற வரைக்கும் இப்படி செர்வ் பண்ணுவாங்களாம் .

இதுக்கப்புறம் வழக்கமான புஃபே .ஆனாலும் நிறைய வெரைட்டி இருந்தது .குறிப்பா ஐஸ் கிரீம் ,சீஸ் கேக் எல்லாமே நல்லா இருந்தது .ரொம்ப அருமையா செர்வ் பண்ணினாங்க .உடனே உடனே கேக்கறதுக்கு முன்னாலேயே எல்லாமே கொண்டு வந்தாங்க .சாப்பாடும் ரொம்ப சுவையா இருந்தது .நிதானமா திகட்ட திகட்ட சாப்பிட்டோம் .

http://www.barbeque-nation.com/

Wednesday, 16 December 2009

தாய்க்கு தலைமகன்

இந்த பெண்மணி எங்களிடம் சிகிச்சைக்கு வந்த போது வெளியில் பல தவறான சிகிச்சைகள் செய்யப்பட்டு உடல்நலம் சற்று கவலைக்கிடமாக இருந்தது.சரியான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நன்கு தேறியது.இப்போது கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக இங்கு தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார் .இவருக்கு வயது நாற்பத்து ஐந்து இருக்கும் .

எப்போதும் இவரை அழைத்து வருவது இவரின் மகன் .வயது பதினெட்டிலிருந்து இருபதிற்குள் தான் இருக்கும் .ஆனால் அவன் தன் அம்மாவை பார்த்துக் கொள்ளும் விதம் அலாதியானது .ஒவ்வொரு முறை வரும்போதும் ,"எங்கம்மா நல்லா இருக்காங்களா ?"என்று ஒரு நூறு முறையாவது கேட்டுக் கொள்வான் ."வேற ஏதாவது டெஸ்ட் செய்யனும்ன்னா யோசிக்காதீங்க டாக்டர் ,கண்டிப்பா செய்திருங்க "இதை ஒரு ஐம்பது முறை ."வெயிட் கூடியிருக்காங்களா ? ரிப்போர்ட் எல்லாம் நல்லா இருக்கா?" என்று இவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருப்பான் .

எல்லா சோதனைகளும் முடிந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பும் முன்னர் கண்டிப்பாக ஒரு முறை என் அறையின் உள்ளே வந்து ,"நிச்சயமா ,எங்கம்மா நல்லா இருக்காங்கல்ல ,"என்று உறுதி செய்து கொண்ட பின்னரே கிளம்புவான் .இத்தனையையும் மெல்லிய ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருப்பார் அவன் அம்மா .

Saturday, 12 December 2009

செருப்"பூ"

ஊருக்கு போயிருந்த போது தோட்டத்திற்கு சென்றிருந்தோம் . அப்பா ,அம்மா ,பத்தி பெரியம்மா ,நாகூர் மாமா (அப்பாவின் மாமா மகன் ). இந்த தோட்டத்தில் தான் என் தாத்தா ,பாட்டி ,அத்தை ,பெரியப்பா ஆகியோரின் கல்லறைகள் இருக்கின்றன .மற்ற இடங்களில் ஏதோ பயிரிடப்பட்டிருந்தது .கல்லறைகள் இருந்த இடத்தை சுற்றி மட்டும் செம்பருத்தி ,அரளி என்று பூக்கள் பூத்து சின்ன அளவில் என்றாலும் அழகிய பூந்தோட்டமாக இருந்தது .

இதை நான் பார்த்துக் கொண்டிருக்கையில் என் கண்ணை பறித்தது அரளி செடியில் பூத்திருந்த ஒரு செருப்"பூ".ஒரு நீல நிற ஹவாய் செருப்பு ஒன்று துளையிடப்பட்டு கட்டி தொங்க விடப்பட்டிருந்தது .இது ஏதும் பறவைகளை விரட்ட தொங்க விட்டிருக்கிறார்களோ என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் போதே , மாமா சொன்னார் ,"அழகா பூத்தோட்டம் போட்டிருக்காகள்லா அதனால ,கண்ணு பட்ரும்ன்னு இப்பிடி செருப்பக் கட்டி தொங்கவிட்டிருக்காங்க .மத்தபடி காக்காவுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் கூட இல்ல ."

Thursday, 3 December 2009

எப்பொழுதும் எனதே


எப்பொழுதும் எனதே
இந்நாள் துவக்கிய ஒளியின் காலம் .
இனி விடுமுறைகள் இல்லை
பருவங்களின் நேர் சுழற்சி போலும்
கதிரவனின் சுழற்சி போலும்
என்றும் பிறழாமல் ...


பழையதே கருணை
புதியவர் குடிகளே
பழையதே தான் கிழக்கும்
அவனது ஊதா நிரல்கள் மேல் மட்டும்
ஒவ்வொரு உதயமும் , என்றும் முதலாய்


Always Mine!
By Emily Dickinson

Always Mine!No more vacation !
Term of Light this Day begun!
Failless as the fair rotation
Of the Seasons and the sun

Old the Grace, but new the Subjects—
Old, indeed, the East,
Yet upon His Purple Programme
Every Dawn, is first

Monday, 23 November 2009

ஒரு நூறு வருடங்கள்

ஒரு நூறு வருடங்கள் ஆன பின்
எவருக்கும் தெரியவில்லைஅந்த இடம்
அங்கே நிகழ்த்தப்பட்ட வேதனையும்
அமைதி போல் அசைவில்லாமல்

களைகள் வெற்றிக்களிப்பில் தழைத்தன
அவ்வழி உலாவினார் அந்நியர்
வாசித்தும் போனார்
முதிர்ந்து உதிர்ந்தவர்களின் தனி எழுத்திடத்தில்

கோடைவயல்களில் வீசும் தென்றல்கள்
பாதையை நினைவுகூறி அலையும்
நினைவு தவறவிட்ட சாவியை
உள்ளுணர்வு சேகரித்துக் கொள்ளும்

Emily Dickinson - After a hundred years

After a hundred years
Nobody knows the Place
Agony that enacted there
Motionless as Peace

Weeds triumphant ranged
Strangers strolled and spelled
At the lone Orthography
Of the Elder Dead

Winds of Summer Fields
Recollect the way --
Instinct picking up the Key
Dropped by memory --

காது வளர்த்து


பாட்டி பாமடம் என்றும் சொல்லப்படும் தண்டட்டி அணிந்திருப்பார் .ஒரு காதில் இரண்டு உருளைகள் போன்ற அமைப்பில் இரண்டு காதுகளிலும் .பார்க்க கனமாக தெரிந்தாலும் அத்தனை கனம் இல்லை என்றே சொல்லுவார் .லேசாக இருக்க உள்ளே அரக்கு வைத்திருப்பார்களாம் .

நானும் என் அக்காவும் எங்களுக்கு ஆளுக்கொரு காதில் இருக்கும் பாமடத்தை தர வேண்டும் என்று வேடிக்கையாக கேட்போம் பாட்டியிடம் .எப்படி சீண்டிய போதும் பாட்டி ,"ஏளா ,அந்த பாமடம் ரெண்டும் ஒங்க அத்தைக்கு தான் " என்ற ஒரே பதிலை மட்டுமே கூறுவார் .நானும் அக்காவும் விடாமல் ,"ஒரு காது பாமடத்தை ரெண்டு அத்தைக்கும் குடுங்க .இன்னொரு காதுல இருக்க பாமடத்தை நாங்க ரெண்டு பெரும் எடுத்துக்கறோம் ."இதற்கும் பாட்டி அசைய மாட்டார் ,"ஏளா ,ஒங்க அத்த சும்மா விடுவான்னு நெனைச்சீகளோ "என்று பதில் வரும் .இதற்கு மேல் பேசினால் பதிலே பேச மாட்டார் பாட்டி .இறுதியாக பாட்டியின்
விருப்பப்படியே பாமடம் போய்ச் சேர்ந்தது இரண்டு அத்தைக்கும் .

பாட்டியின் காதை நான் சிறு வயதிலிருந்தே பார்த்து அதிசயித்திருக்கிறேன் .எப்படி இப்படி பெரிய ஒட்டையாக்க முடியும் என .அறுத்து எடுத்திருப்பார்களோ என்று நினைத்திருக்கிறேன் பல நேரம் .பாட்டியின் காது ஒரு புதிராகவே இருந்தது எனக்கு பல காலம் .பாட்டியிடமே கேட்ட போது அவர் சொன்னது இது .

முதலில் காதில் சாதாரண ஓட்டை எல்லாருக்கும் காது குத்துவது போலவே போடுவார்களாம் .உடனே அதிலொரு ஓலையை சொருகி வைப்பார்களாம் .சில நாள் கழித்து மீண்டும் கொஞ்சம் பெரிய ஓலையாக வைப்பார்களாம் .இப்படி ஓலையின் அளவை பெரிதாக்கிக் கொண்டே போவார்களாம் சில காலம் .துவாரம் கொஞ்சம் பெரிதானவுடன் பாமடத்தை மாட்டிவிடுவார்களாம்.பின்னர் அந்த பாமடத்தின் கனத்திலேயே காது நீளமாகி விடுமாம் .

இப்படியாகவே காது வளர்த்திருக்கிறார்கள் .

Saturday, 21 November 2009

விடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்


விடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்
உதயமே-எனக்காக ஒரு கொடி உண்டா ?
நள்ளிரவில் நானொரு குமரி மட்டுமே
அட -மணமகளாவது எத்தனை கிட்டத்தில்
இரவே உன்னைக் கடந்த பின் நான் ,
கிழக்கு நோக்கி ,வெற்றி நோக்கி


நள்ளிரவே ,நல்லிரவு .அழை குரல் கேட்கிறது
கூடத்தில் தேவதைகளின் அசைவொலி கேட்கிறது
மெள்ள என் எதிர்க்காலம் படியேறிக் கொண்டிருக்கிறது
என்சிறுவயது பிராத்தனையில்
நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்
சீக்கிரத்திலேயே சிறுபிள்ளை இல்லை என்றாக
நித்தியமே ,வருகிறேன் நான்.
மீட்பனே ..நான் பார்த்திருக்கிறேன் அந்த முகத்தை
இதன் முன்னாலும் .....





A Wife--at Daybreak I shall be--
Emily Dickinson


A Wife -- at daybreak I shall be --
Sunrise -- Hast thou a Flag for me?
At Midnight, I am but a Maid,
How short it takes to make a Bride --
Then -- Midnight, I have passed from thee
Unto the East, and Victory --


Midnight -- Good Night! I hear them call,
The Angels bustle in the Hall --
Softly my Future climbs the Stair,
I fumble at my Childhood's prayer
So soon to be a Child no more --
Eternity, I'm coming -- Sir,
Savior -- I've seen the face -- before
!

Friday, 20 November 2009

குருக்க்ஷேத்ரா




சென்னை " செட்டிநாட் வித்யாஷ்ரம் " மாணவர்களைக் கொண்ட நாடகக் குழு வருடா வருடம் ஒரு இதிகாசம் சார்ந்த கதையை மேடை நாடகமாக்கி வழங்குவது வழக்கம் .சென்ற வருடம் பீஷ்மர் என்ற நாடகத்தை இந்த குழு நடத்தியது .இந்த வருடம் "குருக்க்ஷேத்ரா "என்ற நாடகத்தை நேற்று முதலாக அரங்கேற்றினார்கள் .

கதை ,வசனம் ,இயக்கம் ,உடையலங்காரம் இவற்றை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள அரங்குகளை வடிவமைப்பது தோட்டாதரணி .நடிப்பும் இசையும் முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே .ஆங்கில நாடகமாக அரங்கேற்றப்பட்டது வழக்கம் போலவே .
திரௌபதியின் சுயம்வரத்துடன் துவங்கியது கதை .துரியோதனனின் மரணத்துடன் முடிவடைந்தது .

1. மாணவர்கள் என்றே நாம் உணர முடியாத அத்துணை நடிகர்களின் நடிப்பும் அதற்கான உழைப்பும் பாராட்டத் தக்கது .
2.விநாயகரும் வியாசரும் காட்சிகளை விவாதிக்கும் படி அமைத்து சில இடங்களில் கதையை நகர்த்திய விதம் சிறப்புக்குரியது.இதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருந்தது .
3.உடையலங்காரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் நேர்த்தியாக இருந்தது .எல்லோருக்கும் மேல் துண்டே வித்தியாசப்படுத்தும் படியாக அமைக்கப்பட்டிருந்தது.
4.அரங்க அமைப்பு நன்றாக இருந்தது .ஆனால் நிறைய காட்சிகளுக்கு ஒரே அமைப்பு பொருந்தவில்லை .
5. வசனங்கள் முதலிலேயே பதிவு செய்யப்பட்டு வாயசைத்த போதும் ..அது தெரியாத அளவிற்கு மாணவர்களின் நடிப்பு இருந்தது .
6.மிக சிறப்பாக அமைந்திருந்த காட்சிகள் முதல் காட்சியான திரௌபதியின் சுயம்வரத்தை ஊர் பெண்கள் விவாதிக்கும் காட்சி ,சிசுபாலன் வதம் ,இறுதிக் காட்சியான துரியோதனன் மரணம் .
7.மயிலிறகும் ,குழலும் இல்லாத கண்ணன் ,கதை எப்போதும் சுமக்காத பீமன் என சில உடைகள் வித்தியாசமாய் .
8.துகிலுரிதலும் ,கீதோபதேசமும் கண்டிப்பாக இருக்கும் என்று நினைத்தேன் .அவை இரண்டுமே காட்சியாக்கப் படவில்லை .
9.துரியோதனனாக நடித்த ஆதித்யா என்ற மாணவரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது .நடை ,முகபாவங்கள் என்று எல்லாமே அத்தனை அற்புதமாக இருந்தது .இந்த ஒரு மாணவரின் முன் மற்ற அனைவரின் நடிப்பும் மங்கலாக அதிகம் எடுபடவில்லை .
10.கதையில் வழக்கமான யுத்தத்தை காட்டாமல் ,பாத்திரங்களின் மனப் போக்கு ,ஆசைகள் ,ஈகோக்கள் என்ற அளவில் நாடகமாக்கியிருந்தது சிறப்பு .ஆனால் பார்க்க வந்திருந்த கூட்டத்தில் பலர் இளம் மாணவர்கள் (ஆரம்ப பள்ளி முதல் ).இவர்களுக்கு இது எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை .
11 .காட்சிகளை சிறிது நேர இடைவெளி கூட தெரியாமல் மாற்றினாலும் கொஞ்சம் அதிக நீளமாக இருந்தது போலிருந்தது .வசனங்கள் காரணமாக இருக்கலாம் .
12.நாடகம் முடிந்து அதில் நடித்த அத்தனை பெரும் மேடைக்கு வந்த போது தான் ,ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நாடகத்தில் நடித்திருப்பதே தெரிந்தது .

உழைப்பைக் கொட்டிக் கொடுத்து நாடகத்தை நேர்த்தியாக உண்டாக்கியிருக்கிறார்கள்.மகாபாரதத்தை கதையாக மட்டும் பார்க்காமல் அதை மனிதர்களின் பிரதிபலிப்பாக அலச முயன்றிருக்கிறார்கள் .இதிகாச கதைகளை வெறும் கதைகளாக இல்லாமல் அவை சொல்ல வந்த செய்திகளையும் கொண்டு சேர்க்கும் பணியில் இது ஒரு சிறப்பான முயற்சியாகும் .

(நாடகம் நேற்று 19 துவங்கி இந்த ஞாயிறு 22 வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் "செட்டிநாடு வித்தியாஷ்ரம்"பள்ளியின் ராஜா முத்தையா அரங்கத்தில்
தினம் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது )

Thursday, 19 November 2009

அத்தை சொன்ன கதை -6

என் தாத்தா நல்ல உயரமும் அதற்கேற்றார் போல் உடல் வாகும் உடையவர் என்று சொல்வார்கள் .என் சின்ன அத்தை மீது பாசம் அதிகம் அவருக்கு .அவரை பிரியமாக ராசாத்தி என்றே கூப்பிடுவாராம் .இதில் கொள்ளை பெருமை என் அத்தைக்கு .

என் அத்தைக்கு முதல் குழந்தை பிறந்த போது தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயது இருந்திருக்கும் .பிரசவத்தை தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகம் இருந்ததாம் அத்தைக்கு ."பிளீடிங் ரொம்ப ஆகிக்கிட்டு இருந்தது .எங்கம்மா சொன்னா ,குளிச்சிட்டு கொஞ்சம் வெளிய வந்து உக்காரு .அசதி கொறையும்ன்னு. குளிக்கப் போனா தல சுத்தி விழுந்திட்டேன் .அறுவது கிலோவுக்கு கொறையாம வெயிட் இருந்திருப்பேன் .பூசணிக்கா விழுந்தா மாதிரி பொத்துன்னு சத்தம் கேட்டிருக்கணும் .வெளிய இருந்த எங்கய்யா ஒடனே வந்துட்டாரு .அப்படியே என்ன ரெண்டு கைலேயும் தூக்கி கொண்டு போய் ,அலாக்கா கட்டில் மேல போட்டாரு .வேட்டியெல்லாம் ரத்தம் .எம்பிள்ளைய என்ன செஞ்சீங்க ன்னு கத்திக்கிட்டே எங்கம்மா ஓடி வந்தா .அந்த வயசிலேயும் எங்கய்யாவுக்கு அவ்வளவு பலம் இருந்தது . "



தாத்தாவின் பலம் மட்டுமல்ல அவர் அத்தை மேல் வைத்திருந்த பாசமும் தெரிந்தது எனக்கு .

Wednesday, 18 November 2009

எப்போதும் சொல்வதில்லை

மரங்களில் ஒரு முணுமுணுப்பு - கவனிக்க :
காற்று போலிருக்க ஓசை போதாமல் -
ஒரு நட்சத்திரம் -தேடுமளவு தூரத்தில் இல்லாமல்
தொடுமளவு அருகிலும் இல்லாமல்

ஒரு நீள -நீளமான மஞ்சள் -புல்தரை மீது.
ஒரு அரவம் -காலடிகள் போலும்
நம்முடையதைப்போல் நம் செவியடையாமல்
ஆனால் அலங்காரமாய் -இன்னமும் இனிமையாய்

திரும்பும் குறுமனிதர்களின் ஒரு விரைவு
புலப்படாத வீடுகளை சென்றடைய
இவை எல்லாமும் - இன்னமும்
நான் சொல்ல நேர்ந்தால்
நம்பமுடியாததாகவே தான் இருக்கும்.

சின்ன படுக்கையில் குருவிகள்பற்றியும்
எத்தனை காண்கிறேன் நான் என
சிறகுகள் வரை போதாத அவற்றின் இரவு ஆடைகளும்
அவை சிறகுமறைக்க முயன்றதை
நான் கேட்ட போதும்

ஆனால் எப்போதும் சொல்வதில்லை
என வாக்களித்திருக்கிறேன் நான்
எப்படி மீறுவேன் அதை ?
அதனால் நீ உன்வழி போகலாம்
நான் என் வழியில்
பாதை தவறும் என்ற அச்சமின்றி


A Murmur in the Trees — to note —
by Emily Dickinson

A Murmur in the Trees — to note —
Not loud enough — for Wind —
A Star — not far enough to seek —
Nor near enough — to find —

A long — long Yellow — on the Lawn —
A Hubbub — as of feet —
Not audible — as Ours — to Us —
But dapperer — More Sweet —

A Hurrying Home of little Men
To Houses unperceived —
All this — and more — if I should tell —
Would never be believed —

Of Robins in the Trundle bed
How many I espy
Whose Nightgowns could not hide the Wings —
Although I heard them try —

But then I promised ne'er to tell —
How could I break My Word?
So go your Way — and I'll go Mine —
No fear you'll miss the Road.

Saturday, 14 November 2009

சில காயங்களின் கதை

காலையில நா கணினியில 8.30 க்கு பேர் போட்டாகனும் ,இல்லைனா சம்பளம், லீவ் ஏதாவது ஒண்ணுக்கு வேட்டு வச்சுருவாங்க எங்க எச்.ஆரில .நிகழும் விரோதி ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்து நாலாம் நாள் அதிகாலை மணி 8.20 இருக்கும் (எனக்கு அது அதிகாலை தான் )என் கணவரோட (எனக்கு வாங்கின ஸ்கூட்டி தான் நா ஒட்டாம அவரோடதாகிருச்சி ) ஸ்கூட்டியில அவர் ஓட்டிகிட்டு வர பின்னால நான் (வழக்கம் போல தான் ).சரியா ஆஸ்பத்திரி வாசலில எப்படி விழுந்தேன்னு தெரியல ஏன் விழுந்தேன்னு தெரியல .ஆனா விழுந்திட்டேன் .வண்டி என்னமோ மெதுவா தான் போய்க்கிட்டிருந்தது .அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல .


கண் முழிச்சி பாத்தா கட்டிலில படுத்திருக்கேன் ."நா எங்க இருக்கேன்"ன்னு கேக்க முடியல .ஏன்னா நல்லா தெரிஞ்ச எடம் ஆச்சே . என்னைய சுத்தி டாக்டர் ,எங்க நர்ஸ் ,எங்க கவுன்சிலர் ன்னு ஏகப்பட்ட கூட்டம் .எல்லாரும் அழற நெலமையில நின்னுக்கிட்டிருந்தாங்க (இத்தன அன்பா எம்மேல ன்னு எனக்கு தெரிய வச்ச இறைவனுக்கு நன்றி .ம்ம்ம்ம்....கொஞ்சம் மிதமான முறையில தெரிய வச்சிருக்கலாம் ).டிரசெல்லாம் ரத்தம் .முடியெல்லாம் ரத்தம் .மொகத்திலிருந்து வேற வழிஞ்சிக்கிட்டுருந்தது .காதுல வேற யாரோ ஆட்டோ ஓட்டுற மாதிரி ஒரு வலி .
பின்னணியில ரெண்டு கொரல் கேட்டது .ஒண்ணு என் கணவரோடது .அவர்கிட்ட அங்கே இருக்க டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார் ...."பிரெய்ன் சி.டி ஸ்கேன் எடுக்கணும் தையல் போடனும் ".
என் கணவர் ,"இன்சூரன்ஸ் இருக்கு .
"டாக்டர்:"அப்ப மலருக்கு ஷிப்ட் பண்ணிரலாம் "
கணவர் ""சரி "
இப்ப இப்ப, இந்த முக்கியமான நேரத்தில தான் எனக்கு முழுசா சுய நினைவு வந்திச்சி (இறைவனுக்கு நன்றி )
நான் :"நா அப்போல்லோவுக்கு போறேன் .அங்க என் பிரதர் இன் லா (அக்கா கணவர் )இருக்கார் (மொகத்தில அடி பட்டிருக்கு .கொஞ்சம் அங்கங்கே கிழிஞ்சிருக்கு .இவங்கள விட்டா மொகத்தில டிராக் போட்டுருவாங்க .அப்பல்லோ பணம் வாங்கினாலும் பிளாஸ்டிக் சர்ஜன் வச்சி தையல் போடுவாங்க ன்னு தான் .அம்மாவுக்கும் வரது சுலபம் . )
டாக்டர்: "ஓகே "டிடி எல்லாம் போட்டுருங்க .

அதுக்குள்ளே எங்க ஸ்டாப் எல்லாரும் வந்துட்டாங்க .ஜே ஜே ன்னு கூட்டம் .அதுக்கு அடுத்தது என்னோட தோழி கம் என்கூட வேல பாக்குற டாக்டர் அவங்களும் வந்தாங்க .அவள பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி .என்னனாலும் மொகத்தில அடி இல்லையா ,அதான். ஊசி போடவே அரைமணி நேரம் ஆச்சு (பேஷண்ட்ஸ் பாவம் ).அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் வந்திருச்சி..வீல் சேருல வந்து ஆம்புலன்சில ஏற வெளிய வந்தா அங்க ஒரு கூட்டம் நிக்குது (எங்க மக்கள் தான்-வெளியாட்கள் காஷுவாலிடியில ஏதோ மீட்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருப்பாங்க இல்லன்னா ஏதோ வி ஐ பி போலிருக்குன்னாவது ) .எல்லாரும் என்னையே டென்ஷனா பாத்திட்டிருந்தாங்க .

ஆம்புலன்சில ரெண்டு சிஸ்டர்ஸ் (அக்கா தங்கை இல்லீங்க )வந்தாங்க என் கூட .அவங்களும் வழியற ரத்தத்த பயந்து போயி பாத்திட்டிருந்தாங்க . அங்கிருந்து என் தம்பிக்கு போன் போட்டேன் .வந்து சேருன்னு .(வீட்டம்மாகிட்ட உத்தரவு வாங்கணுமே )ஒரு வழியா அப்பல்லோ வந்து சேர்ந்தேன் (ஆம்புலன்சில வந்தது கொஞ்சம் தமாஷாவே இருந்தது ).

நா வரும் போதே எங்கம்மாவும் என் தம்பியும் இருந்தாங்க .காயத்த பாத்து பயந்து போயிட்டாங்க .தாங்க மாட்டாருன்னு வீட்டிலேயே எங்கப்பாவ விட்டுட்டு வந்திட்டாங்க . எங்கம்மா கொஞ்சம் தைரியமானவுங்க .என் தம்பி மொகத்தில டென்ஷன பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி (ஷேம் ஷேம் பப்பி ஷேம்).உடனே முதலுதவி எல்லாம் செஞ்சாங்க .ஸ்கேனுக்கு அனுப்புனாங்க .அதோட மொகத்துக்கு ஒரு த்ரீ டி ஸ்கேனும் எடுத்தாங்க (அப்பல்லோன்னா சும்மாவா ).ஸ்கேன்ல ஒண்ணும் இல்ல.(மூளையாவது இருக்காமா ன்னு கேட்டான் என் தம்பி )

கொஞ்ச நேரம் கழிச்சு பிளாஸ்டிக் சர்ஜன் வந்தாரு .அழகா இன்னொருத்தருக்கு பாடம் எடுத்துகிட்டே தையல் போட்டாரு (படுத்திருந்த டெக்ஸ்ட் புக் - நான் ). நெத்தியில ,மூக்கில ,உதட்டுல ,மோவாயில ன்னு வரிசையா .மொகத்த நல்லா தரையில தேச்சிருப்பேன் போல .எல்லாம் போட்டுட்டு வலிக்கு ஊசியும் போட்டுட்டு ...நல்லா இருக்குன்னு (அவர் போட்ட தையல் தான்)சொல்லிட்டு போனார் அவர் .ஒரு நாள் அங்க இருந்திட்டு (இல்லைனா சொத்தை எழுதி வைக்கனுமே ) வீட்டுக்கு வந்திட்டேன் .

ஒரு வாரம் சென்று திடீருன்னு ஒரே தலை சுத்து ,வாந்தி ,மயக்கம் .உக்காந்தா எந்திரிக்க சொல்லுது எந்திரிச்சா உக்கார சொல்லுது . மறுபடியும் அதே அப்பல்லோ .முதல்ல இ.என் டி டாக்டர் ,அப்புறம் ந்யூரோ சர்ஜன் (மூளையில ஏதாவது லேட் ரத்தக் கட்டு இருக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க ).அவர் தான் கூலா பாத்திட்டு ...இது அடிபட்டா சகஜம் தான் .மூளையில ஒண்ணும் தொந்தரவு இல்லன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வச்சாரு .அதுக்கப்புறம் ஒரு நாலு நாள் கழிச்சு அது சரியா போச்சு (அது வரைக்கும் அப்பாடி ....சோதனை மேல் சோதனை பாட்டு தான் எம்மனசுல ரீவைன்ட் ஆகி ஆகி ஓடிகிட்டிருந்துது ---மன்னிச்சிக்கோங்க வாத்தியாரே ..ஒங்க பாட்டு எதுவும் அப்ப ஞாபகம் வரல-எப்படி வரும் ?நீங்க தான் இப்படி பிழிய பிழிய சோகப் பாட்டெல்லாம் பாடிப் படுத்த மாட்டீங்களே )


பின்குறிப்பு :இப்ப நல்லா இருக்கேன் .என்ன, வாயில தையல் போட்ட இடம் கொஞ்சம் வீங்கிப் போயிருக்கு .பேச முடியல சரியா .இன்னும் கொஞ்ச நாள் ஆகும் போல .ஒரு பல்லு கொஞ்சம் ஒடஞ்சிருக்கு .வாய தொறந்தா வலிக்குது (எங்க தாத்தா என்ன பேசாமடந்தை ன்னு கூப்பிடுவாரு -நா வளவள ன்னு பேசுவேன்னு -இப்ப நிஜ பேசாமடந்தை ஆகிட்டேன் )மொகத்தில தையல் போட்ட தழும்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு (என் தோழி சொன்னா திருநீறு அலர்ஜி ஆனா மாதிரி இருக்குன்னு சொன்னா --அப்ப மூக்கில ...சரி வரிசையா கோடு --தலையெழுத்த எழுதும் போது இங்க் லீக் ஆனா மாதிரி - நாளடைவில சரியாயிடும் )

எல்லாரும் திருஷ்டின்னு ஆளுக்கொரு பரிகாரம் சொல்ல, எங்கம்மா (காக்கைக்கும் ......) துர்க்கைக்கு எலுமிச்சைபழம் குத்தினாங்க ....அப்புறம் விழுந்த எடத்தில இப்ப யாரையாவது வச்சி எலுமிச்சை சுத்தி போடணுமாம் .அப்புறம் இன்னும் என்னென்ன சொல்லப் போறாங்களோ தெரியல ...

Friday, 13 November 2009

ஒரு பாவமான இதயம்

ஒரு பாவமான இதயம் ,
கிழிந்து போன இதயம் ,
கந்தலாகிப் போன இதயம்,
ஓய்வுக்கென அமரும் .
மேற்கில் வெள்ளியாய்
வடிந்து கொண்டிருக்கும்
நாளில் கவனமின்றி
மெல்ல தரையிறங்கும்
இரவிலும் கவனமின்றி ..
வானில் எரியும்
விண்மீன்களையும் கவனியாமல் ...
விழித்திரையில் மோதும்
அறியாத நேர்க்கோடுகளில்
மட்டுமே கவனமாய்

அப்பக்கம் நேர்ந்த தேவதைகள்
தூசடைந்த இவ்விதயம் கண்ணுற்று
மிருதுவாய் அதன் தவிப்பை தளர்த்தி
இறைவனடி கொண்டே சேர்த்தார்.
அங்கே, வெறும்கால்களுக்கு செருப்பு.
அங்கே, பெரும் புயல் காற்றில் சேகரித்த
அலையும் பாய்மரங்களை
நீல புகலிடங்கள்
கைபிடித்தே வழிநடத்தியும் போகும்



A poor—torn heart—a tattered heart
By Emily Dickinson

A poor—torn heart—a tattered heart—
That sat it down to rest—
Nor noticed that the Ebbing Day
Flowed silver to the West—
Nor noticed Night did soft descend—
Nor Constellation burn—
Intent upon the visionOf latitudes unknown.

The angels—happening that way
This dusty heart espied—
Tenderly took it up from toil
And carried it to God—
There—sandals for the Barefoot—
There—gathered from the gales—
Do the blue havens by the hand
Lead the wandering Sails.


Thursday, 12 November 2009

இப்படியும்

சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது இது .ஒரு தம்பதியர் .ஒரிசாவிலிருந்து .இவர்களுடன் ஒரு பெரியவர் .சிகிச்சைக்கென வந்திருந்தார்கள் .ஒரு மாதம் முடிந்திருக்கும் .மீண்டும் இரு இளைஞர்கள் ஒரிசாவிலிருந்து .உடன் அதே பெரியவர் .இவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரியும் .
உடன் வருபவர்களுக்கு ஒரியா மட்டுமே தெரியும் .

ஒவ்வொரு முறையும் இவர் வேறு நபர்களுடன் வருவதை நான் ஒரு கேள்வியுடன் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அவர் சொன்னார் ,"நான் அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்றவன் .எங்கள் ஊரில் எச்.ஐ.வி நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் என்று எதுவும் இல்லை .அதனால் நோய்க்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களை நான் இங்கே அழைத்து வருகிறேன் .அவர்கள் கொஞ்சம் தேறியதும் அவர்களை அங்கேயே சிகிச்சையை தொடரச் செய்கிறேன் ."

எச்.ஐ.வி என்ற பெயரை சொல்லவே கூச்சப்படும் பலர் இருக்க வயதான காலத்தில் இவ்வாறு சேவை செய்ய இப்படியும் சிலர் .

Friday, 23 October 2009

அத்தை சொன்ன கதை 5

தாத்தா பெரிய படிப்பாக அறியப்பட்ட ஐந்தாம் வகுப்பு படித்தவர் .பாட்டியோ படிக்காதவர் .பாட்டி தான் படிக்கவில்லை என்பதை பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டோ கவலைப்பட்டோ நான் கண்டதில்லை . இது சம்பந்தமாக அத்தை சொன்ன கதை ஒன்று ,


"எங்க தேன்மொழிக்கு (என் அத்தை மகள் ) நாலு வயசு இருக்கும் .எங்கய்யா ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாரு .அது ஒரு சாதாரண அ னா ,ஆவன்னா புக்கு தான் .இவ அத பாத்துக்கிட்டிருந்தா .எங்கம்மா வந்து என்னளா படிக்க ன்னு கேட்ட ஒடனே ,இவ சட்டுன்னு அதெல்லாம் ஒங்களுக்கு தெரியாது பாட்டி ன்னு சொல்லிட்டா .எங்கய்யா சிரிச்சிட்டாரு .எங்கம்மாவுக்கு வந்துதே ஒரு கோவம் .இவ சொன்னது கூட அவளுக்கு கோவம் இல்ல .இவ சொன்னதுக்கு எங்கய்யா சிரிச்சிட்டாருன்னு தான் ."

Wednesday, 21 October 2009

அத்தை சொன்ன கதை 4

தாத்தா அமைதியானவர் என்றே சொல்வார்கள் .புகைப்படத்தில் கூட சாந்தம் தவழவே அமர்ந்திருப்பார் .இவரைப் பற்றி என் அத்தை சொன்ன கதை ஒன்று .


"எங்கய்யா ரொம்ப அமைதியா இருப்பாரு .ஆனா கோவம் வந்துதுன்னா முன்னால நிக்க முடியாது .ஒரு தடவ எங்க பெரிய அண்ணன எதுக்கோ ,என்னன்னு நெனவு இல்ல ,அடிக்க வந்தாரு .ஒடனே எங்கண்ணே ஓடிட்டாங்க .வெரட்டிக்கிட்டே வந்தாரு .ரெண்டு பெரும் விடாம வெரட்டிகிட்டே கோவில் வரைக்கும் வந்துட்டாங்க .(சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ).


கோவில்கிட்ட எங்கம்மா தண்ணி எடுத்துகிட்டு வந்திட்டிருந்தா .எங்கண்ணே ஒடனே எங்கம்மா கைய பிடிச்சிக்கிட்டாங்க .பிடிக்க போனா ,எங்கம்மா கொடத்தொட நிக்கா .அண்ணன பிடிக்க போனா இவ விழுந்துருவா .எங்கையா பாத்துட்டு பேசாம வந்துட்டாரு .வீட்டுக்குள்ள வந்து பேசாம ஒக்காந்திருந்தாரு.எங்கண்ணனும் தைரியமா ,உள்ள வந்தாங்க .உள்ள வரும் போதே பிடிச்சிட்டாரு எங்கய்யா .கதவிடுக்குல கைய வச்சி ,நங்கு நங்குன்னு சாத்திட்டாரு.

இன்னொரு தடவ எங்க சின்னண்ணன அடிச்சிப்புட்டாரு .அவன போயி அடிச்சீங்களேன்னு ஏச்சு ஏச்சு ,ஒரு நாள் பூரா ஏசுனா எங்கம்மா.இவன் அடி தாங்க மாட்டாம்லா. "


சின்ன வயது முதலே என் அப்பா ஒல்லியாகவும் என் பெரியப்பா கொஞ்சம் பூசினாற்போலவும் இருப்பார்களாம் .

Monday, 19 October 2009

கூண்டில் அடைந்து

கூண்டுக்குள் ஒரு பறவை
தானியம் பிரிப்பதும் உண்பதும் தவிர்த்து
வேறு பணியின்றி
அழகு செய்வதும் பேணுவதும் கடமையென்று
அண்டை கூண்டுகளில் இருக்கும் பறவைகள் போலவே ...


வெளியே இருப்பவை பூனைகள் மட்டுமே
என்ற அச்சுறுத்தலில்
கூண்டுக்குள் இருப்பதே சுகமென்று
பழகிக் கொண்டு
சுற்றியிருக்கும் கம்பிகளும்
தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டும்
பாதுகாப்பிற்கே என்றும் மகிழ்ந்து போய்


வெளியேற திமிரும் இன்னொரு பறவையை
ஆணவம் பிடித்ததாய் அவமானம் செய்து
அது வெளியே போனபின் விரித்த சிறகை
அண்ணாந்து ஆர்வமாய் வாய்பிளந்து பார்த்து
வானத்தை எட்டினால் மட்டுமே சிறகுகள் வருமென
கூண்டுக்குள் மீண்டும் சமாதானமாகி


எவருமற்ற ஒரு பொழுதில்
பறப்பதாய் பாவிக்கையில்
கைகளுக்கடியில் சிறகுகள் இருப்பதை அறிந்ததும் ,
எதற்கென்று புரியாதிருந்து ,பின்
பூட்டும் கம்பியும் இது போலவே என்றுணர்ந்து
கதவை கொத்தி வானத்தில் பறந்துபோகும்


எனினும்
கூண்டுக்குள் மீண்டும் வந்தடையும்
தானியம் பிரிக்கவும் அழகு பார்க்கவும்

Tuesday, 13 October 2009

அத்தை சொன்ன கதை-3

"எங்கண்ணே படிச்சிட்டு லேட்டா தான் வந்து படுப்பான் .அரிக்கன் லைட்டுக்கு கீழ பேப்பர் சுத்தி வச்சிருப்பான் .வெளிச்சம் வெளிய தெரியக் கூடாதுன்னு .படுக்கும் போதும் லைட்ட அமத்தி போட்டுட்டு வர மாட்டான் .தீய கொஞ்சமா ரொம்ப வெளிச்சம் வராம கொறச்சி வச்சிட்டு வந்து படுப்பான் .படுத்துக்கிட்டு பாடத்த சொல்லிக்கிட்டே இருப்பான் .முணுமுணுன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் .வாய மூடிட்டு படுல ன்னு சொன்னாலும் கேக்க மாட்டான் .


ஏதாவது மறந்து போச்சின்னா ஒடனே எந்திரிச்சி போவான் .வெளக்க கொஞ்சம் கூட்டி வைப்பான் .திருப்பி படிப்பான் .மறுபடியும் வெளக்க கொறச்சி வச்சிட்டு வந்து படுத்துக்குவான் .திரும்பியும் மொதலெருந்து சொல்லி பாப்பான் முணுமுணுன்னு .மறந்து போச்சுன்னா திருப்பி போவான் .மறுபடியும் வெளக்க ஏத்தி வச்சி படிப்பான் .படுத்துகிட்டு சொல்லி பாப்பான் .இப்படி செஞ்சுகிட்டே இருப்பான் .மறக்காம சொல்லி பாத்த பெறகு தான் போயி வெளக்க அமத்தி போட்டுட்டு தூங்க வருவான் ."

இதிலிருந்து நான் அறிந்து கொண்டவை
1.என் அப்பா வெகு சிறப்பாக படித்ததாக சொல்வார்கள் .அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.
2.என் அத்தையின் பேரன் என் அப்பாவை அதிகம் பார்த்திராவிட்டாலும் ,நல்ல மதிப்பெண் வாங்கிய போதெல்லாம் என் அப்பாவிற்கு தொலைபேசியில் தெரிவித்து ,ஏதாவது பரிசு வாங்கிக் கொள்வான் .ஏன் என்று யோசித்திருக்கிறேன் .இப்போது தெரிந்தது .
3.இதை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் மகனிடம் சொன்னேன் ,"பாத்தியா ,ராஜம்மா பாட்டி சொன்னாங்கல்ல ,தாத்தா எப்படி படிச்சிருக்காங்கன்னு !"உடனே என் மகன் சொன்னான் ,"ஆமாம்மா ,படிச்சு முடிக்கிற வரைக்கும் தாத்தா லைட்ட ஆப் பண்ண மாட்டாங்க ,இந்த ஒரு லைன்ன அந்த பாட்டி எப்படி கத மாதிரி சொன்னாங்க !சூப்பரா இருந்திச்சி "

அத்தை சொன்ன கதை- 2


(ராஜம்மா அத்தை -செல்லமாக சின்ன அத்தை )

என் தாத்தா வெகு அருமையாக கதை சொல்வாரென சொல்வார்கள் .அதனாலோ என்னவோ, என் பெரிய அத்தையும் (அப்பாவின் அக்கா -பகவதி அத்தை  ) அப்பாவும் கூட அழகாக கதை சொல்வார்கள் .சாதாரண செய்தியைக் கூட ஒரு கதை போல் நேர்த்தியாக சொல்லும் திறமை வாய்ந்தவர்கள் இவர்கள் .ஆனால் என் சின்ன அத்தை (அப்பாவின் தங்கை )கதை சொல்லி நான் அதிகம் கேட்டதில்லை .இந்த முறை ஊருக்கு சென்ற போது சின்ன அத்தைக்கும் அந்த திறமை இருப்பது தெரிந்தது .



அவர் சொன்னதில் ஒன்று ."நானும் எங்க சின்ன அண்ணனும் (என் அப்பா )தான் எங்கம்மா கூட கட்டில்ல படுப்போம் .எங்கம்மா நடுவில படுத்திருப்பா .செவரு பக்கமா நா படுத்திருப்பேன் ,அந்தப் பக்கம் எங்க சின்ன அண்ணே படுத்திருப்பான் .இதுல யார பாத்து எங்கம்மா படுக்கனும்ன்னு போட்டி நடக்கும் .ஏன்பக்கம் திரும்பி படும்மான்னு நா சொல்லுவேன் .இல்ல ஏன்பக்கம் தான் பாக்கணும்ன்னு எங்கண்ணே சொல்லுவான் .இப்படியே சண்ட போடுவோம் .அப்புறம் ,வாரத்தில நாலு நாளு ஏன்பக்கம் பாத்து எங்கம்மா படுப்பா ,மீதி மூணு நாளு எங்கண்ணே பக்கம் . இப்படி முடிவு பண்ணிக்கிட்டோம் ."

என் பாட்டி இறந்த போது அவருக்கு வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கும் .சில காலம் வேறு படுக்கையில் இருந்தார் .சில மாதங்களாக எதிர்பார்த்த நிகழ்வாகவே இருந்தது பாட்டியின் மரணம் .அப்போது கேவிக் கேவி அடக்க மாட்டாமல் அழுத அன்று ஐம்பது வயதை தாண்டிய என் அப்பாவை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள் .பாட்டி அப்பாவை "ஏலே ,சின்ன மணி "என்றே அழைப்பார். அப்பாவுக்கும் பாட்டி மீது நிறைய பாசம் உண்டு என்றறிந்த எனக்கும் கூட அது ஆச்சரியமாகவே இருந்தது இதைக் கேட்கும் வரையில் .

Thursday, 1 October 2009

கல்லானாலும்

தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர். ஆரோக்கியமாகவே இருக்கிறார் .எதை சொல்லும் போதும் இவரிடம் ஒரு தயக்கம் இருக்கும் .பயந்தே பேசுவது போல் இருக்கும் இவரின் பேச்சும் .வந்தவுடன் எல்லாம் சொல்லிவிட்டு மாத்திரைகள் எழுத ஆரம்பிக்கும் போதே ,"வீட்டுல பேசனும்ன்னு சொன்னா "என்று ஆரம்பிப்பார் .உடனே கைபேசியில் பேசுவார் .பாதி நேரம் பேசுவது மகளாக இருக்கும் ."அம்மா வெளியே போயிருக்காங்க "என்று பதில் வரும் .இல்லை அம்மாவை தேடி அழைத்து வந்து பேச வைக்கும் அந்த வாண்டு .எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் விசாரித்துக் கொள்வார் இவர் மனைவி .

ஒரு முறை இவர் மனைவியின் தம்பியும் உடன் வந்திருந்தார் .வீட்டுல பேசுங்க என்று இவர் சொன்ன உடனே ,அவர் சொன்னார் ,"நா தான் வந்திருக்கேன்ல ,நா சொல்லிக்கிறேன் அவ கிட்ட ."இவர் ,"இல்ல அவளே பேசிரட்டும் என்று இருவரும் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் . நான் "பரவாயில்லை நான் பேசிடறேன் ,"என்று இந்த பிரச்சனையை முடித்து வைத்தேன் .இவர் மச்சினர் சொன்னார் ,"எங்கக்கா ,சாட்டையை அங்கிருந்தே சுத்தி எங்க எல்லாத்தையும் ஆட்டி வைக்கிறா ."

பாவம் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த நோயை வைத்திருக்கும் கணவரின் நிலையால் பரிதவிக்கும் அந்த பெண்ணின் நிலை சங்கடம் தான் .

Monday, 21 September 2009

பிள்ளை மனம்

ஒரு பதிமூன்று வயது பெண் குழந்தை .கருவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டது .போன வாரம் தந்தையுடன் சிகிச்சைக்காக வந்திருந்தாள் .

தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாளா என்று கேட்ட போது ,சரியாகவே சாப்பிடுவதாக சொன்னார் தந்தை.பின்னர் ,இந்த நோய் இருப்பது உங்கள் மகளுக்கு தெரியுமா என்று ஜாடையாக கேட்ட போது ,"இன்னமும் தெரியாது "என்று அந்த தந்தை சொன்னார் .உடனே குறுக்கிட்ட அந்த பெண் ,"எனக்கு எச்.ஐ.வி இருப்பது எனக்கு தெரியும் "என்றாள்.

எப்போது தெரியும் என்பதை விசாரித்த போது ,"ஒரு வருடம் முன்னதாகவே தெரியும் "என்றும் சொன்னாள் ."உங்கள் மகளுக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியாதா ?"என்று தந்தையைக் கேட்ட போது ,"தெரியாது "என்றே சொன்னார் அவர் .இதைக் கேட்டதும் அந்த பெண் கேவிக் கேவி அழத் தொடங்கினாள் .


தனியே அழைத்துச் சென்று ஆறுதல் சொல்லி கேட்ட போது ,"எனக்கு போன வருஷம் இங்க ஒரு தடவ வந்து போன பிறகு நான் வெளியே கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.எனக்கும் எச்.ஐ.வி இருக்கதால தான் என்னைய இங்க மட்டும் கூட்டிட்டு வராங்கன்னு தெரிஞ்சுது .ரொம்ப அழுக அழுகையா வந்தது .இப்போ பரவாயில்ல .ஆனா எங்கப்பா இன்னும் எனக்கு தெரியாதுன்னு நெனைச்சிகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சவுடனே அழுக வந்திருச்சி ."
எத்தனை வேதனை இந்த சிறு வயதில் ...

Friday, 11 September 2009

புத்திர சோகம்

ஒரு தம்பதியர் .கணவரை சிகிச்சைக்கென சேர்த்திருந்தார்கள் .மூளைக் காய்ச்சல் ,காச நோய் என்று பல நோய்கள் .இவர் மருத்துவமனையில் இருக்கும் போது உடனிருந்தது மனைவியும் தந்தையும் .அம்மா ஊரிலிருப்பதாகவும்,அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார் .அம்மா பயந்து வரவில்லை என்று சொன்னார்கள் .பின்னர் அம்மாவை பார்த்துவிட்டுத்தான் சிகிச்சை செய்து கொள்வேன் என்று வம்பாக வீடு சென்றார் ,பாதி சிகிச்சையிலேயே .சில மாதங்கள் சென்ற பின் ,இவர் மனைவி சிகிச்சைக்கு வந்த போது தான் ,இவர் ஊரிலேயே இறந்து போனது தெரிய வந்தது .


போன வாரம் இவர் மனைவி வந்திருந்தார் .தன் மாமியார், கணவரின் மரணத்திற்கு இவரைக் காரணம் காட்டியதால் தன் அம்மா வீட்டோடு இருந்து பணிக்கு சென்று கொண்டிருக்கிறார் .போன மாதம் தன் கணவரின் நினைவு நாளுக்கு ஊருக்கு சென்றதாகக் கூறினார் .அவரின் அம்மா ,அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்ட போது ,"அம்மா ,அம்மா ன்னு உயிரா இருந்திட்டு இவர் போய்ச் சேர்ந்துட்டார் .அவங்க இவரு போன பிறகே கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாங்க .இப்ப முழுசா மன நோயாளி மாதிரி ஆயிட்டாங்க .அவன் சாகல ,எதுக்கு தெவசம் பண்றீங்க ன்னு கேக்குறாங்க .நீ ஏன் தாலி போட்டுக்கல ன்னு என்னயக் கேக்குறாங்க .அங்க ஒரு டாக்டர் மருந்து கொடுத்திருக்கார் .அதெல்லாம் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றாங்க .இவரு கடைசியில என்னையும் என் பிள்ளைங்களையும் தவிக்க வச்சதும் இல்லாம ,அவங்க அம்மாவையும் பைத்தியமாக்கிட்டு போயிட்டாரு ,"என்றார் அழுதபடி .

Wednesday, 9 September 2009

நீ

நீ
நட்சத்திரங்கள் இல்லாத இரவைப்போல் என்றிருப்பேன்
உன் கண்களை காணாதிருந்திருந்தால்
நீ
கனவுகள் இல்லாத உறக்கம்போல் என்றிருப்பேன்
உன் கானங்களை கேளாதிருந்திருந்தால்...



Quiet Girl
by Langston Hughes


I would liken you
To a night without stars
Were it not for your eyes.
I would liken you
To a sleep without dreams
Were it not for your songs.

Thursday, 3 September 2009

எங்காவது


எங்காவது நிச்சயம் இருக்கத்தான் வேண்டும்
பார்த்திராத முகமும் கேட்டிராத குரலும்
ஒரு பதில் எனக்கு தராத ,
பதிலே தந்திராத ஒரு இதயமும் ...ஐயோ பாவம் நான் ....

எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
கடல் தாண்டி நிலம் தாண்டி விழிபரப்பும் தாண்டி
திசையற்று திரியும் நிலவுக்கப்பால் -அதை
இரவிரவாய் தொடரும் விண்மீன்களுக்கப்பால்



எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
தடுக்க ஒரு சுவரோடும் ஒரு வேலியோடுமட்டும்
பசும்புல்வளர்ந்த விரிப்பில் விழுந்து கிடக்கும்
இறந்துகொண்டிருக்கும் வருடத்தின் இறுதி இலைகளோடு மட்டும்


Somewhere or Other
by Christina Rossetti

Somewhere or other there must surely be
The face not seen, the voice not heard,
The heart that not yet - never yet - ah me !
Made answer to my word.

Somewhere or other, may be near or far ;
Past land and sea, clean out of sight ;
Beyond the wandering moon, beyond the star
That tracks her night by night.

Somewhere or other, may be far or near ;
With just a wall, a hedge, between ;
With just the last leaves of the dying year
Fallen on a turf grown green.

Wednesday, 2 September 2009

காஸபியான்க்கா


எரியும் தளத்தில் நின்றான் சிறுவன்
அவனை விடுத்து பிறர் போயின பின்பும்
போரின் சிதைவுகள் வெளிச்சமிட்டே
மாண்டவர் மீது சுடர்ந்தது நெருப்பு

எழிலாய் பொலிவாய் நின்றே இருந்தான்
புயலை ஆள பிறந்தவன் போல
சிறுபிள்ளை போல் தோன்றி, செருக்குடனே,
நரம்புகளில் வீரம் ஊறிப் பிறந்தான்


உருண்டு பரவி கனன்றது நெருப்பு
தந்தை சொல்லின்றி அவன் போவதாயில்லை
மரணத்தின் மயக்கத்தில் கீழே தந்தை
இனி இவன் குரல் அவர் கேட்பதற்கில்லை

உரக்கக் கேட்டான் ,"சொல்லுங்கள் தந்தையே ,சொல்லுங்கள்
இன்னமும் என் பணி முடியவில்லையா ?"
மகனின் நினைவற்றும் கிடந்தார் தலைவர்
அவர் நிலை இவன் அறியவுமில்லை

"பேசுங்கள் தந்தையே” மீண்டும் கேட்டான்
இப்பொழுதேனும் நான் போகலாமா ?"
குண்டுகள் முழங்கி பதிலைச் சொல்லின
வேகமாய் பரவிக் கொண்டி ருந்தது நெருப்பு

நெற்றியில் நெருப்பின் அனல்மூச் சுணர்ந்தான்
காற்றில் அலையும் கேசத்திலுணர்ந்தான்
மரணத்தின் விளிம்பில் காவல் தனியாய்
நம்பிக்கை குறைந்தும் துணிவுடன் நின்றான்


மீண்டும் ஆனால் அதிரக் கேட்டான்
"என் தந்தையே, நான் இருக்கத்தான் வேண்டுமா ?"
பாய்மரம் வழியே திரை வழியேயும்
அவன் மீதேறி சுழன்று போனது நெருப்பு

கலத்தைப் போர்த்தி அட்டகாசச் சுடராய்
சரசரவென்று கொடியை எட்டிப் பிடித்தே
வானில் ஆடும் கொடி போல் தாவி
பெருக்கெடுத்து வீரச்சிறுவன்மேலே படர்ந்தது நெருப்பு

தொடர்ந்து வெடித்தது இடியின் ஓசை
சிறுவன்! ஐயோ ! எங்கே ?எங்கே?
துகள்களை வெகுதூரம் இறைத்துப் போன
காற்றைக் கேளுங்கள் ....காற்றைக் கேளுங்கள்


கொடியும் கம்பமும் சுக்கானும் கலத்தோடழிந்தன
தம் பணி சிறப்பாய் முடித்தனவாய்
அங்கே அழிந்தது அனைத்திலும் மேன்மையாய்
வாய்மை பூண்ட சிறு இதயம் மட்டும்….



CASABIANCA
by: Felicia Dorothea Hemans (1793-1835)
THE boy stood on the burning deck
Whence all but him had fled;
The flame that lit the battle's wreck
Shone round him o'er the dead.

Yet beautiful and bright he stood,
As born to rule the storm;
A creature of heroic blood,
A proud, though childlike form.

The flames rolled on -- he would not go
Without his father's word;
That father, faint in death below,
His voice no longer heard.

He called aloud -- "Say, father, say,
If yet my task is done?"
He knew not that the chieftain lay
Unconscious of his son.

"Speak, father!" once again he cried,
"If I may yet be gone!"
And but the booming shots replied,
And fast the flames rolled on.

Upon his brow he felt their breath,
And in his waving hair,
And looked from that lone post of death
In still, yet brave despair.

And shouted but once more aloud,
"My father! must I stay?"
While o'er him fast, through sail and shroud,
The wreathing fires made way.

They wrapt the ship in splendor wild,
They caught the flag on high,
And streamed above the gallant child,
Like banners in the sky.

There came a burst of thunder sound--
The boy -- oh! where was he?
Ask of the winds that far around
With fragments strewed the sea!--

With mast, and helm, and pennon fair
That well had borne their part--
But the noblest thing that perished there
Was that young, faithful heart.

Monday, 31 August 2009

கனவு போல் ...


கதிரிழந்த ஆறுகள் ஆழத்துள்
அலைகளை அழுகிற அவ்விடத்தில் ,
மந்திரித்தது போலே உறங்குகிறாள்.
நிழல்கள் மகிழ்வாய் துணை சேரும்
இவ்விடம் தேடி நெடும் தூரம்,
ஒற்றை விண்மீன் வால் பற்றி
பின்தொடர்ந்து வந்தவளாய் .
துயில் கலைக்க வேண்டாம் ,உறங்கட்டும்.


வீணில் விறைத்துகிடக்கும் அந்தியை நாடி
குளிர் நீர் இறைக்கும் ஊற்றுகள் நாடி
சிவந்து வெளுக்கும் பகல் விடுத்தாள்
காடுகள் நிறைத்த கதிர் விடுத்தாள்.
துயில் வழியே ,திரையூடே போல்
வானம் வெளிறியதாய்தெரியக் காண்கின்றாள்
சோககீதங்கள் இசைத்தலையும்
வானம்பாடியின் குரலும் கேட்கின்றாள்


ஓய்வு ஓய்வு ,பரிபூரண ஓய்வு
உச்சி முதல் மார்புவரை சாற்றியதாய்.
மேற்கில் ஊதா நிலம் நோக்கி
அவள் முகம் சாய்த்தே கிடக்கின்றாள் .
மலையிலும் வெளியிலும் முதிர்ந்திருக்கும்
மணிகளை அவள் காணப்போவதில்லை
அவள் கைகள் தொட்டே ரசிக்கின்ற
மழைத்துளியையும் உணரப் போவதில்லை


ஓய்வு , ஓய்வு ,இனி எப்பொழுதும்
பாசிப் படர்ந்த கரையோரம்
ஓய்வு ஓய்வு மனதாழம் வரை
காலம் இல்லாது ஓயும் வரை.
எந்த வலிக்கும் கலையாத உறக்கம் இது
எந்த பகலுக்கும் விடியாத இரவு இது
அவளுறையும் பூரண அமைதியையே
உவகை முந்தி நீக்கும் வரை




DREAM LAND

by: Christina Rossetti (1830-1894)



WHERE sunless rivers weep
Their waves into the deep,
She sleeps a charmed sleep:
Awake her not.
Led by a single star,
She came from very far
To seek where shadows are
Her pleasant lot.

She left the rosy morn,
She left the fields of corn,
For twilight cold and lorn
And water springs.
Through sleep, as through a veil,
She sees the sky look pale,
And hears the nightingale
That sadly sings.

Rest, rest, a perfect rest
Shed over brow and breast;
Her face is toward the west,
The purple land.
She cannot see the grain
Ripening on hill and plain;
She cannot feel the rain
Upon her hand.


Rest, rest, for evermore
Upon a mossy shore;
Rest, rest at the heart's core
Till time shall cease:
Sleep that no pain shall wake;
Night that no morn shall break
Till joy shall overtake
Her perfect peace.

Friday, 28 August 2009

தனிமை


இரவில் தூக்கமில்லை,
இப்போது தனிமை மட்டுமே
என் படுக்கையருகே இருக்க வருகிறாள் .
அவள் காலடிச் சத்தங்கள் நெருங்கும் வரையும்
சோர்ந்த பிள்ளையாய் அசந்துக் கிடக்கிறேன்
மெல்ல விளக்கை ஊதி நிறுத்தி
இருளைக் கூட்டினாள் , பார்த்துக் கிடக்கிறேன் .
இடமும் புறமும் அசையாதமர்ந்து
அமர்ந்தே சோர்ந்து தலையைக் கவிழ்கிறாள்.
அவளும் முதிர்ந்தவள் ,
அவளும்,போர்களை சண்டையிட்டறிந்தவள்
மாலையாய் அதனால் பெருமைகள் சுமப்பவள் .

சோகம் சூழ்ந்த இருளினூடே
கரைவிட்டு மெல்ல அகலும் அலையும்
வெறும் கரை தொட்டு அரை மனதாய் விலகும் .
விந்தைக் காற்றொன்றும் வீசி முடித்ததும்
எதுவும் இல்லை ...அமைதி மட்டும்.
ஏற்றுக் கொள்கிறேன் நானும்
தனிமையை நாடி அவள் கரம் பற்றவும்
இறுகப்பற்றி அவள்வசம் காத்துக்கிடக்கவும்,
கண்ணில் விரியும் தரிசில் எங்கும்
மழை ஒற்றை ஒலியாய் நிரம்பும் வரையும்


Loneliness
By Katherine Mansfield

Now it is Loneliness who comes at night
Instead of Sleep, to sit beside my bed.
Like a tired child I lie and wait her tread,
I watch her softly blowing out the light.
Motionless sitting, neither left or right
She turns, and weary, weary droops her head.
She, too, is old; she, too, has fought the fight.
So, with the laurel she is garlanded.

Through the sad dark the slowly ebbing tide
Breaks on a barren shore, unsatisfied.
A strange wind flows… then silence. I am fain
To turn to Loneliness, to take her hand,
Cling to her, waiting, till the barren land
Fills with the dreadful monotone
of rain

Thursday, 27 August 2009

குருதட்சனை




எண்பது வயதை கடந்தவர் திரு.வெங்கடராமன் என்பவர் . தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் .அதை விட முக்கியமாக தன் மாணவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் .2007 ல் ஒரு பழைய மாணவர்களின் சந்திப்பின் போது இவர் கடன் தொல்லை காரணமாகவும் வாடகை பிரச்சனை காரணமாகவும் தன் ஓய்வூதியத்தில் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதை அறிந்த இவரின் மாணவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர் .




அதன்படி இவரின் மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதவர்களின் பங்களிப்போடு பத்து லட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டது .இதில் நாமக்கல் அருகே குருசாமிபாளையம் என்ற ஊரில் நிலம் வாங்கி இதில் இரண்டு மாடி வீடும் கட்டப்பட்டது ."குருநிவாஸ் " என்று இதற்கு பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது . இந்த வீட்டை தங்கள் ஆசிரியருக்கு காணிக்கையாக்கியிருக்கும் மாணவர்கள் ,அதை இந்த வருடம் ஆசிரியர் தினத்தன்று அவரிடம் முறைப்படி ஒப்படைக்கவிருக்கிறார்கள் .




ஆசிரியர் மீது மரியாதை இல்லாத மாணவர்கள் ,மாணவர்கள் மீது அதிகம் ஈடுபாடு இல்லாத ஆசிரியர்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிற இன்றைய காலகட்டத்தில் ,ஒரு ஆசிரியருக்கு அதுவும் தமிழாசிரியருக்கு நன்றி பாராட்டியிருக்கும் இந்த மாணவர்களை பாராட்டுவோம் .நன்மக்களாய் தன் மாணவரை உருவாக்கிய அந்த ஆசிரியரையும் போற்றுவோம் .

Tuesday, 25 August 2009

நானும் அவளும்


அவள் பாடிக்கொண்டே தான் இருந்தாள்
பசுமை போர்த்திய ஓடையின் கரையில்
உற்சாகம் சுமந்த கதிரின் ஒளியில்
துள்ளிக் களிக்கும் மீன்களை பார்த்துக் கொண்டே

நான் அழுதுக்கொண்டே தான் இருந்தேன்
நிழல்கள் போர்த்திய நிலவின் ஒளியில்
கண்ணீராய் இலைகளை ஓடையில் உதிர்க்கும்
மே மாத மலர்களைப் பார்த்துக் கொண்டே

நான் நினைவுகளால் அழுதேன்
அவள் நம்பிக்கைகளால் பாடினாள்
என் கண்ணீரைக் கடல் விழுங்கிக் கொண்டது
அவள் பாடல்கள் காற்றில் உயிர் இழந்து கரைந்தன


Song (She Sat And Sang Alway)
by Christina Rosetti

She sat and sang alway
By the green margin of a stream,
Watching the fishes leap and play
Beneath the glad sunbeam.

I sat and wept alway
Beneath the moon's most shadowy beam,
Watching the blossoms of the May
Weep leaves into the stream.

I wept for memory;
She sang for hope that is so fair:
My tears were swallowed by the sea;
Her songs died on the air.

Friday, 21 August 2009

மீண்டும் வா




இரவிலுறங்கும் அமைதியில் என்னிடம் வா
கனவில் பேசும் மௌனத்தில் என்னிடம் வா
செழித்த கன்னமோடு ஒளிரும் கண்களோடும் வா
ஓடையில் நீந்தும் கதிரொளி போலும் வா
கடந்து போன
என் நினைவே ,நம்பிக்கையே ,என் காதலே
கண்ணீரில் மீண்டும் என்னிடம் வா


தித்திக்கின்ற கனவே ,
திகட்டத் தித்திக்கின்ற கனவே ,
கசந்தினிக்கின்ற கனவே
சொர்க்கத்தில் அன்றோ நீ விழித்திருக்க வேண்டும்.
அங்கே காதல் ததும்பி
உயிர்கள் களித்திருக்கும்
தாகித்திருக்கும் கண்கள் கதவில் காத்திருக்கும்
மெல்லத் திறக்கும் கதவும்
உள்ளுறையச் செய்து மீண்டும் அகற்றாதிருக்கும்


மரணத்தில் விரைத்திட்ட என் உயிர் வாழ்ந்திருக்க
என் கனவுகளில் என்னிடம் வா
துடிப்பிற்கொரு துடிப்பாய் மூச்சுக்கொரு மூச்சாய்
உனக்கு தருவேன்
மீண்டும் கனவில் என்னிடம் வா
மெல்லச் சொல்லி மெல்லச் சாய்ந்திரு
அன்று போலவே ,என் அன்பே ,என்றோ போலவே



Echo
by Christina Rossetti

Come to me in the silence of the night ;
Come in the speaking silence of a dream ;
Come with soft rounded cheeks and eyes as bright
As sunlight on a stream ;
Come back in tears,
O memory, hope, love of finished years.

O dream how sweet, too sweet, too bitter sweet,
Whose wakening should have been in Paradise,
Where souls brimfull of love abide and meet ;
Where thirsting longing eyes
Watch the slow door
That opening, letting in, lets out no more.

Yet come to me in dreams that I may live
My very life again though cold in death :
Come back to me in dreams, that I may give
Pulse for pulse, breath for breath :
Speak low, lean low,
As long ago, my love, how long ago.

Thursday, 20 August 2009

கதை

இது ரொம்ப வருஷங்களுக்கு முன்னால நடந்தது .என் பெரிய மகனுக்கு அஞ்சு வயசு இருக்கும் அப்ப .இவனும் கத சொன்னா தான் தூங்குவான் .அதவும் நெறைய சொல்லணும் .நெறைய நேரம் எங்கப்பாவோட உக்காந்து டிஸ்கவரி சேனல் பார்ப்பான் .

இவனுக்கு முதல் முறையா வெறகு வெட்டி கதைய சொல்றேன் .தண்ணிக்குள்ள கோடாலி விழுந்ததும் வெறகு வெட்டி ஓ ன்னு அழுதான் ன்னு நான் சொல்றேன் .இவன் கேக்குறான் ,
"எதுக்கு அழுதான் ?"
"கோடாலி இல்லைனா வெறகு வெட்ட முடியாது .வெறகு வெட்டி விக்கலைன்னா இவனுக்கு காசு கெடைக்காது அதுக்குத் தான் .புதுசு வாங்கவும் காசு இல்ல."
"அதுக்கு எதுக்கு அழனும் ?டிஸ்கவரி சேனல்ல கையில காலில எதையோ மாட்டிக்கிட்டு தண்ணிக்குள்ள போறாங்களே ,அது மாதிரி போயி எடுத்திட்டு வர வேண்டியது தானே ?"

Wednesday, 19 August 2009

கதை

தினம் ராத்திரி என் மகனுக்கு கதை சொல்லனும்.அதவும் புதுப்புதுக் கதையா வேற சொல்லணும் .இதுக்காக நானும் நிறைய கதை படிக்க வேற வேண்டியிருக்கு .இப்ப அது இல்ல விஷயம் .இப்ப ரெண்டு நாள் முன்னால கதைன்னு ஆரம்பிச்சான் .நானும் சரி யோசிச்சு சொல்றேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் ,புதுசா எதுவுமே ஞாபகம் வரல .ஹரிச்சந்திரன் கதையை சொல்லி ரொம்ப நாளாயிடுச்சி.சரி அதையே சொல்லிருவோம்ன்னு சொல்லியாச்சு .


கதைய இழுத்து இழுத்து சொல்லி முடிச்சேன் (ஏன்னா அப்புறம் சின்ன கதைன்னு சண்டை போடுவான் இல்லைனா இன்னொரு கதை சொல்லணும் ).சொல்லி முடிச்சிட்டு ,இப்ப இந்த கதையிலிருந்து ஒனக்கு என்ன தெரியுதுன்னு கேட்டேன் .
நான் சின்ன பிள்ளையா இருக்கப்ப ,"எந்த கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லக் கூடாதுங்கறது "தான் இந்த கதையோட முதல் நீதி.இவன் சொன்னான் ,"நல்லவங்கள டிரிக் (trick) பண்ணக் கூடாது ."

Monday, 17 August 2009

பொக்கிஷம்

முதலில் கதையை ஒரு கவிதையாக சொல்ல முற்பட்ட சேரனுக்கு பாராட்டுக்கள் .
காமெராவை இயக்கியவருக்கு பாராட்டுக்கள் .
கடிதம் எழுதுவது எப்படி ,அது எப்படி பயணிக்கிறது என்பதை இந்த தலைமுறைக்கு சொன்னதுக்கும் சேரனுக்கு பாராட்டுக்கள் .
நிலா ,காற்று ,வானம் பாடல் இனிமை .


அப்புறம்,
காதலை கவிதையாக சொல்வது சரிதான் அதற்கென ஒரு மூன்று மணிநேரம் அதையே ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருப்பது சரியா ?
சேரன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை(தெரியும் ...பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை )
ஒப்பனை வேறு சரி சொதப்பல் .
ஆனாலும் சேரன் நதீராவை விட தன்னை அதிகம் காதலிக்கிறார் என்பது தெரிகிறது ,படம் முழுவதும் அவரே .அவர் கடிதங்களையும் அவரே வாசிக்கிறார் .நதீராவின் கடிதங்களையும் பெரும் நேரம் அவரே வாசிக்கிறார் .மூன்று மணி நேரத்தில் முக்கால் பாகத்திற்கு மேல் இவர் முகம் மட்டுமே திரையில் தெரிகிறது .

பத்ம பிரியா பல காட்சிகளில் ஒரே உடை .ஒரே காமெரா ஆங்கிளில் அவரைக் காண்பிக்கிறார்கள் .நன்றாக தான் நடித்திருக்கிறார் .
விஜயகுமாரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது .
சேரனின் மனைவியாக வருபவரின் ஒப்பனையும் சரியில்லை .தேவையில்லாமல் இழுத்து இழுத்து பேசுகிறார் .
மகனின் காதலும் கொஞ்சமும் யதார்த்தமில்லாமல்... மொபைலுக்கும் கடிதத்திற்கும் அல்லது அந்தகால காதல் இந்த கால காதல் என்று வேறுபடுத்த முயன்றிருக்கிறார் .மகனாக வருபவர் அவர் வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறார் .ஆனால் கடிதம் வாசிப்பதை தவிர வேறு யாருக்கும் எந்த வேலையும் பெரிதாக இல்லை .

கடிதம் சரியாக போகிறதா என்று பார்க்கக் கூடவே சேரன் செல்லும் காட்சி ஒரு அழகிய கவிதை .அதே போல் டிரங் கால் போடப்போகும் இடத்தில் "மழை எப்ப நிக்கும்" என்று கேட்கும் காட்சியும் .இதுபோல் காட்சிகளை கவிதையாக்காமல் கவிதைகளை வாசிப்பதை மட்டுமே காட்சியாக்கியது ஏன் ?

Wednesday, 12 August 2009

பாடல்


நான் இறந்த பின், என் அன்பே
சோகங்கள் இசைக்க வேண்டாம்
என் தலைமாட்டில் ரோஜாக்கள் நட்டுவைக்க வேண்டாம்
சைப்பிரஸ் நிழலாய் படரவும் வேண்டாம்
என்மேல் போர்த்திய புற்கள் எல்லாம்
பனிதொட்டு மழைதொட்டு நனைந்து கிடக்கட்டும்
உங்கள்,
விருப்பம் போல் என்னை நினைத்துக் கொள்ளலாம்
விருப்பம்போல் என்னை மறந்தும் போகலாம்


இருண்ட நிழல்களை நான் காணப் போவதில்லை
மழையின் ஈரம் உணரப் போவதுமில்லை .
பாடிக்கொண்டே இருக்கும் வானம்பாடி
அதன் முனகல் எனக்கு கேட்கப்போவதில்லை
உதயமும் அஸ்தமனமுமில்லா அந்தியினூடே
கனவுகள் கண்டு நான் களித்துக் கிடக்கையில்
உங்களை,
விருப்பம்போல் நான் நினைத்துக் கொள்ளலாம்
விருப்பம் போல் நான் மறந்தும் போகலாம்




Song
by Christina Rossetti

When I am dead, my dearest,
Sing no sad songs for me ;
Plant thou no roses at my head,
Nor shady cypress tree :
Be the green grass above me
With showers and dewdrops wet ;
And if thou wilt, remember,
And if thou wilt, forget.
I shall not see the shadows,
I shall not feel the rain ;
I shall not hear the nightingale
Sing on, as if in pain ;
And dreaming through the twilight
That doth not rise nor set,
Haply I may remember,
And haply may forget.

Monday, 10 August 2009

அனுபவம் புதுமை

நேத்து ஒரு தொலைக்காட்சிக்காக என் மகனுக்கு கண்ணன் வேஷம் போட வேண்டியிருந்தது .இதுக்காக உடை மத்த சமாச்சாரம் எல்லாம் வாங்க வடபழனியில "திலகம் டிரஸ் மெட்டிரியல்ஸ்" லுக்கு சனிக்கிழமை போனோம் .சின்ன பொந்து மாதிரி இருந்த கடையில வள்ளுவர்ல இருந்து ஸ்பேஸ் சூட் வரைக்கும் வச்சிருந்தாங்க .நாங்க போனப்ப இன்னொரு அம்மா அப்பாவும் அவங்க கண்ணனுக்கு வேணுங்கறத எடுத்திட்டு இருந்தாங்க .



நா பாத்திட்டு இருக்கும் போது இன்னொரு அம்மா அப்பா வந்தாங்க .அவங்க பையனுக்கு அடுத்த மாசம் ஃபான்ஸி டிரஸ்ஸாம் .அதுக்கு ஸ்பேஸ் சூட் பாக்க வந்திருந்தாங்க .கடைக்காரர் ஒரு மாசம் முன்னால புக் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார் . இதுக்கு தேவையானது எல்லாமே இருக்கான்னு பாத்தாங்க கொஞ்ச நேரம் .



அப்புறம் நாங்க கண்ணன் டிரஸுக்கு எடுக்குற நகை அத இத பாத்ததும் ராஜா வேஷம் போடலாம்ன்னு தோணியிருக்கும் போல .கட்டபொம்மன் வேஷம் போட்டிரலாமான்னு பேசிக்கிட்டாங்க .உடனே கடைக்காரர் சொன்னார் ,"போடலாம் ஆனா பரிசு கிடைக்காது .அதெல்லாம் ஸ்கூலிலேயே சொல்லுவாங்க , விடுதலை போராட்ட வீரர் வேஷம் போடனும்ன்னு .அப்ப போட்டாத் தான் பரிசு கிடைக்கும் ."




உடனே இவங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டாங்க . அப்புறம் ,"கலாம் வேஷம் போடலாமா ?"கடைக்காரர் சொன்னார் ," அம்மா ,இப்பெல்லாம் மரம் ,பழம்ன்னு தான் வேஷம் போடுறாங்க .அப்படி புதுசா போட்டாத் தான் பரிசு கிடைக்கும் .அப்துல் கலாமெல்லாம் அவுட் ஆஃப் ஃபாஷன் "

Friday, 7 August 2009

பாட்டி

ஊருக்கு போய் வந்ததில் சில சுவாரசியமான நிகழ்வுகளை சேமிக்க முடிந்தது .


என் அத்தை ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாராம் .உடன் பயணம் செய்தவர்களில் ஒரு வயதானவரும் இருந்தார் போல .அவர் இவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததில் அவரும் ஆலடிப்பட்டியையோ அதன் சுற்று வட்டாரத்தையோ சேர்ந்தவர் என்று தெரிந்ததாம் .அது மட்டுமல்ல அவர் என் பாட்டியையும் தாத்தாவையும் நன்கு அறிந்திருந்தாராம் .

அவர் சொன்னாராம் ,"உங்க அம்மா ரொம்ப அழகு .அவங்களை கல்யாணம் கட்டிக்கிட பெரிய போட்டியே இருந்துது .அதில நானும் ஒருத்தன் .நானும் உங்க அப்பாவும் ,வசதி மத்த விஷயங்கள்ல ஒரே அளவு தான் .ஆனா ,உங்கம்மாவ வைத்தியலிங்கப் பூசாரிக்குக் கட்டிக் கொடுத்திட்டாங்க .அவரு புத்திசாலி .அவரும் உங்கம்மாவும் படிப்பு இருந்தா நல்லா இருக்கலாம்ன்னு தெரிஞ்சு உங்க எல்லாரையும் கஷ்டப்பட்டு நல்லா படிக்க வச்சிட்டாங்க .நீங்களும் நல்லா இருக்கீங்க .நா என் பிள்ளைகளைப் படிக்க வைக்கல ."

இதை என் அத்தை என் பாட்டியிடம் வந்து சொல்ல ,பாட்டிக்கு சரி கோபம் வந்ததாம் ."எவன் அவன் ,இந்த வயசுல (பாட்டிக்கு அப்போது எழுபது வயசுக்கு மேலிருக்கும் ) இந்த பேச்சை பேசுற வெவஸ்த கேட்டவன் " என்று திட்டித் தீர்த்தாராம் .

Wednesday, 5 August 2009

அனுபவம் புதுமை

நேத்து சாயங்காலம் .வீட்டுகிட்ட ஒரு கோவில் .அதுகிட்ட நடந்து போய்கிட்டிருந்தேன் .ஆள் நடமாட்டம் அதிகமில்ல .ஓரமா ஒரு சுமோ நின்னுக்கிட்டுருந்தது .திடீர்ன்னு ஒருத்தர் வந்து ,"சிஸ்டர் கொஞ்சம் பொடவை கட்டிவிடமுடியுமா "ன்னு கேட்டார்.பாத்தா கார் கிட்ட பொண்ணு .பதச்சு போயி நின்னுக்கிட்டுருந்தது .

"கோவிலுக்கு வந்தோம் .சுத்தி முடிச்சு வரதுக்குள்ள புடவை கழண்டிருச்சி ,கொஞ்சம் கட்டிவிட முடியுமா ?பிளீஸ் ?"எனக்கா சந்தேகம் .எதுக்கு நம்மள நிப்பாட்டி கேட்கணும் .நா புடவை கட்டியிருந்தா கூட பரவாயில்லை .நானே சுரிதார் போட்டிருக்கேன் .கோவிலுக்குள்ள எத்தனையோ பொம்பளைங்க இருந்திருப்பாங்களே ?ன்னு.
"வெளிய எங்கயாவது போறீங்களா "ன்னு கேட்டேன் .
"இல்ல வீட்டுக்கு தான் போறோம் .
"அப்புறம் என்ன, கார்ல ஏறி உக்காந்து போக வேண்டியது தானே ?வீட்டில போய் கட்டிக்கலாம் ."
"இல்ல சிஸ்டர் ,பிளீஸ் கொஞ்சம் கட்டி விட முடியுமா ?இப்படியே போக முடியாது ."

சரி, துணிஞ்சிற வேண்டியது தான்னு பக்கத்தில போய் நின்னா அந்த பொண்ணு அழத் தயாராகிக்கிட்டுருந்தது ."எனக்கு கட்ட தெரியாது .சுரிதார் போடுறேன்னு சொன்னேன் .இவரு கேக்கல ,"ன்னு புலம்பிச்சு .வயசு கூட பதினாறில் இருந்து பதினெட்டுக்குள்ள தான் இருக்கும் .கார் மறைவுல நிக்க வச்சு (பாவம் வெக்கமா வேற இருந்தது போல ) கட்டி விட்டேன் .

வித விதமா சாரி பின் வேற குத்தியிருக்கு .புடவை வேற வெந்தைய கலருல வளவள துணி .வழுக்கிக்கிட்டே போச்சு .ஒவ்வொரு மடிப்பு எடுக்கும் போதும் ,"தாங்க்ஸ் ஆண்ட்டி ,தாங்க்ஸ் ஆண்ட்டி "ன்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சு. மடிச்சு "சொரிகிக்கோமா" ன்னு சொன்னா ,அத கூட பாவம் சரியா செய்ய தெரியல .அவரு வேற ,"சிஸ்டர் முந்தானையையும் சரி பண்ணி விட்டுருங்க "ன்னு சொல்றார்.அதையும் சரி பண்ணி விட்டுட்டு ,"சுமாரா கட்டியிருக்கேன் .அப்படியே ஏறி உக்காந்து வீட்டுக்கு போயிடுங்கன்னு "சொல்லிட்டு வந்தேன் .அவங்க சொன்ன தாங்க்ஸ் காத்துல தொரத்திக்கிட்டே வந்துது .

Tuesday, 4 August 2009

அம்மன் கொடை

அடுத்த நாள் ,கிடா வெட்டி சாமி கும்பிடுவார்களாம்.இதோடு மூன்று நாள் கொடை நிறைவு பெற்றது .

கொடை பார்க்க சென்றது ஒரு சிலிர்ப்பான அனுபவம் தான் .ஆனால் பலரைப் போல விடிய விடிய பார்க்க சிரமமாக தான் இருந்தது .முதல் நாள் மட்டும் இரவு பன்னிரண்டு மணி வரை பார்க்க முடிந்தது.

இந்த சாக்கில் ஊரையும் கொஞ்சம் சுற்றிப் பார்க்க முடிந்தது .உறவினர் பலரை சந்திக்கவும் முடிந்தது . என் அப்பாவின் அத்தை மகள் வீட்டில் நுங்கு (முழுதாக கொடுத்தார்கள் .நோண்டித் திங்க ஸ்பூனும் கொடுத்தார்கள் )சாப்பிட்டதும் ,பத்தி (பத்திரக்காளி என்பதன் சுருக்கம் இது .அப்பாவின் நெருங்கிய நண்பர் வள்ளிநாயகம் பெரியப்பாவின் மனைவி இவர் ) பெரியம்மா ரைஸ் மில்லில் இரவில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டதும் இன்னமும் நாவிலும் மனதிலும் தித்திப்பாய் ...

Saturday, 1 August 2009

அம்மன் கொடை

சாமியாட்டம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது .கோவிலுக்குள் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தது .இது தவிரவும் இன்னொரு பக்கம் தாயார் கூத்து நடக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது .

விமர்சையான கொடையாகவே இருந்தது தெரிந்தது .சுத்து வட்டாரங்களில் இந்த கொடை மிக பிரபலமாக இருப்பது ஏன் என்றும் புரிந்தது .அன்றிரவும் கரகாட்டம் இருந்தது .ஆடியது இன்னொரு குழுவினர் .இவர்களுக்கான ஏற்பாடை செய்து கொண்டிருந்தவர்கள் குழுவினரை தேடிக் கொண்டிருந்திருப்பார்கள் போலும் .
பல தடவை மைக்கில் கூப்பிட்டபடியே இருந்தனர் ."கரகாட்ட கோஷ்டி எங்கிருந்தாலும் வரவும் ,கரகாட்டம் ஆடுபவர்கள் எங்கிருந்தாலும் உடனே வரவும் ,கரகாட்டம் ஆடுபவர்களை கமிட்டி மெம்பர்கள் கூப்பிடுகிறார்கள் உடனே வரவும் ,கரகாட்ட குழுவினரை புக் செய்த .......அழைக்கிறார் உடனே வரவும் ",என்று அழைத்தப்படியே இருந்தனர் வெகு நேரம் .

Friday, 31 July 2009

அம்மன் கொடை

சாயங்காலம் திரும்ப ஊர் சுற்ற ? கிளம்பினோம் .தெரிந்தவர்களை எல்லாம் பார்த்து விட்டு வர வேண்டும் என்பதால் ஒவ்வொரு வீடாக சென்று வந்தோம் .ஊரையே ஒரு முறை வலம் வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும் .

இரண்டாம் நாள் கொடையின் சிறப்பு சாமியாட்டம் .
பந்தலில் ஒரு பக்கம் ,பொங்கல் விட்டுக் கொண்டிருந்தார்கள் .பொங்கல் முடிந்தவுடன் கொட்டடிக்க ஆரம்பித்தார்கள் .கொட்டடிக்க அடிக்க சாமியாட்டம் துவங்கியது .சரியான இட நெருக்கடி .சாமிக்கு ஆடவே இடமில்லை ."எடம் விடுங்கையா ...வழிய மறிச்சு நிக்காதீங்க " என்று சொல்லியபடியே சிலர் கூட்டத்தை விலக்கி சாமிக்கு ஆட இடம் கொடுக்க முயன்றுக் கொண்டிருந்தனர் .ஆட இடமில்லாமலோ என்னவோ, சாமி முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தது .


இந்த நெரிசலில் சிலர் சாமிக்கு மாலைகள் போடத் துவங்கினர் .எல்லாம் கொஞ்சமே பூக்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் .இந்த மாலைகளின் நார்கள் எல்லாம் சேர்ந்து சாமியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன .இதை எடுக்க ஒருவர் முயல அது இன்னமும் கொஞ்சம் இறுகிப் போனது .ஒருவழியாக ,சில மாலைகளை கழற்றி போட்டனர் .

கொஞ்சம் மூச்சு விட முடிந்தாலோ என்னவோ சாமி கொஞ்சம் வலுவாக ஆடத் துவங்கினார் இப்போது .இந்த ஆட்டம் அதிகாலை மூன்று மணி வரை தொடருமாம் .

Wednesday, 22 July 2009

அம்மன் கொடை

அடுத்த நாள் காலை தான் கோவிலுக்கு போக முடிந்தது .

கோவிலுக்குள்ளே நல்ல கூட்டம் .அதைவிட அதிகமாக குப்பையும் .ஒரு பக்கம் குடும்பம் குடும்பமாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .இன்னொரு பக்கம் சக்கரை பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் .அந்த தொன்னைகளும் மிச்சமாகிப் போன சக்கரை பொங்கலும் காலில் மிதிபட்டு பிசிபிசுவென இருந்தது .சுத்தம் செய்ய யாரும் முற்பட்டதாகக் கூடத் தெரியவில்லை .ஆனாலும் கோவில் திருவிழாவிற்கான களையோடு இருந்தது என்றே சொல்ல வேண்டும் .

வெளிப் பிரகாரம் முழுவதும் கடைகள் ,செருப்பு கடைகள் உட்பட .கொடைக்கென போட்டிருப்பதாக சொன்னார்கள் .நல்ல விற்பனை ஆகிக் கொண்டிருந்தது .விடிய விடிய இந்த கடைகள் திறந்திருக்குமாம் .வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம் .

Tuesday, 21 July 2009

அம்மன் கொடை




கரகம் தான் அன்றைய மட்டும் அல்ல கொடையின் ஹைலைட் போலும் .




இரவில் வீடு திரும்பிய போது மணி பன்னிரண்டு இருக்கும் .திரும்பி வர வழியே இல்லை .கோவிலை சுற்றி ஒரு சுற்று பாதை வழியாக தான் வர முடிந்தது .அப்படியொரு கூட்டம் .வழியில் அப்படியே புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தேன் .




கோவிலுள் ஆண்கள் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர் .ஓலையில் மஞ்சள் நிற பூக்களை பரப்பி வைத்து அவர்கள் பூ கட்டுவது பார்க்கவே அழகாக இருந்தது .அவர்களை முதலில் ஒரு புகைப்படம் எடுக்க ,சரியாக விழவில்லை அது .மீண்டும் எடுக்க நான் முற்படும் போது ,சட்டென நிமிர்ந்து பார்த்த ஒருவர் ,"அட போட்டோ படமா எடுக்கீங்க ?"என்று கேட்டப்படியே பெரிதாய் சிரித்து ஒரு போசும் கொடுத்தார்.

Saturday, 18 July 2009

அம்மன் கொடை




ஊரே வாய் பிளந்து பார்த்திருக்க ,இரண்டு கரகங்கள் எடுத்து வந்து வைக்கப்பட்டன .இரண்டு பெண்களும் ஒரு ஆணும் வந்தனர் .

மினு மினு வென ஒரு ஒப்பனை .
நல்ல கருப்பு நிறத்தில் போர்வையை போர்த்திக் கொண்டிருந்தனர் .
விலக்கிய போது சரியான அரைகுறை ஆடையில் இருந்தனர் .
கரகத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு தலையில் தூக்கி வைத்து ஆட ஆரம்பித்தனர். அந்த ஆண் ,சும்மா கரகம் இல்லாமலேயே ஆடினார் .
சிறப்பாக ஆடினார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது ஆனால் முன்னும் பின்னுமாக நடந்து ஆடிக் கொண்டே இருந்தனர் .

இப்போது மூன்றாவதாக ஒரு பெண் வந்து நின்று கொண்டிருந்தார் .இன்னும் கொஞ்சம் அதிக ஒப்பனையுடன் .ஆட்டம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டே இருந்தார் .இவர் ஆட ஆரம்பித்தவுடன் தெரிந்தது ஏன் கூட்டம் முழுவதும் இங்கே காத்துக் கிடக்கிறதென்று .

அந்த மூன்றாவது பெண்ணும் அந்த ஒரு ஆணும் சேர்ந்து ஆடிய ஆட்டம் ஆபாசமாக இருந்தது என்று சொன்னால் கூட போதாது .கூட்டத்தினுள் அந்த பெண்ணை தூக்கிப் போட்டு ,இழுத்து என்று காணக் கூசும் நடனமாக அது இருந்தது .நேரம் ஆக ஆட்டமும் மோசமாகிக் கொண்டே இருந்தது.கூட்டம் என்னமோ சங்கடங்கள் ஏதும் இன்றி தான் பார்த்துக் கொண்டிருந்தது .எங்களுக்கு தான் கூச்சமாக இருந்தது போலும் ,கிளம்பி விட்டோம் .


காலையில் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது ,அதிகாலை மூன்று மணிக்கு ஆட்டம் முடிந்ததாக சொன்னார்கள் .நேரம் ஆக ஆக அதிகம் ஆபாச பேச்சுகளும் இருந்ததாகவும் சொன்னார்கள் .நாங்கள் கரகம் சுமந்தே ஆடவில்லையே என்றதற்கு ,இப்படிப்பட்ட ஆட்டம் ஆடுபவர்களுக்கு தான் அதிகம் வாய்ப்பு கிடைக்கிறதாம் .இவர்களை கஷ்டப்பட்டு தேடி புக் பண்ணி வருகிறார்களாம் .

என் உறவுப் பெண் ஒருவர் சொன்னார் ,"நாங்களெல்லாம் யாரும் இத பாக்க போறதில்ல .ஊருல இருக்க வயசானவங்க தான் இத ஒக்காந்து விடிய விடிய பாப்பாங்க ."

Friday, 17 July 2009

அம்மன் கொடை




உட்காரக் கூடிய இடங்களில் எல்லாம் ஆட்கள் முன்பே நிறைந்திருந்தார்கள் .இப்போது நிற்கக் கூட இடம் இல்லை .வில்லுப்பாட்டு மேடையருகே அதிகம் முப்பது பேர் இருந்திருப்பார்கள் .கூட்டம் முழுவதும் கரகாட்டத்தை பார்க்கவே மொய்த்துக் கொண்டிருந்தது .

கரகாட்டம் ஆரம்பிக்கும் முன்னரே மேள வாத்தியக்காரர்கள் நின்று வாசித்து கொண்டிருந்தார்கள் .இவர்கள் வாசிப்பு ஆட்டத்திற்கு ஒரு முன்னோட்டம் போலிருந்தது .ஆட்டத்திற்கான மூடை கொண்டு வருவதிலும் இந்த வாசிப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன் .அந்த விளக்குகளின் ஒளியில் வெட்கையில் வியர்த்து வழிந்துக் கொண்டிருந்தது .ஆனாலும் அசராமல் சாமியாட்டத்தில் துவங்கி வாசித்துக் கொண்டே இருந்தார்கள் . பல மணி நேரம் ஆகியிருக்கும் இவர்கள் முடிக்கும் போது .

ஒரு தடவை கூட சோர்வோ ,களைப்போ தெரியவே இல்லை வாசிப்பில் ....

Thursday, 16 July 2009

அம்மன் கொடை

கொட்டடிக்க ஆரம்பித்த உடன் கூட்டத்தை ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது .

சுடலைமாடசாமி கோவிலருகில் ஒரு கூட்டமும் ,கரகம் பார்க்க தயாராக ஒரு கூட்டமும் என்று கூட்டம் பிரிந்து கிடந்தது .கொட்டடித்தவுடன் இரண்டு மூன்று பேர் சாமி ஆட ஆரம்பித்தார்கள் .ஆடுபவர்களுக்கு அலங்காரம் நடந்தது .சலங்கை கட்டிய அந்த கம்பும் சலங்கை வைத்த கருப்பு அரைக்கால் சட்டையும் போடாமல் நேரில் வந்தால் நிஜ சுடலைமாடனையே எவருக்கும் அடையாளம் காண முடியாது .இப்படியாக சுடலைமாடன்கள் ஆட ஆரம்பிக்கவும்
வழக்கம் போல எல்லோரும் மாலை போடவும் குறி கேட்கவும் தயாராக நின்றனர் .ஆனால் சுடலைமாடனின் ஆட்டம் அன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானது இல்லை போலும் .ஆரம்பித்தஒரு அரை மணி நேரத்தில் சாமியாட்டம் முடிந்து போனது .

கூட்டம் கலையும் முன்னரே வில்லுப்பாட்டுக்கென ஒரு மேடையும் கரகாட்டத்திற்கு இடமும் தயாராகிக் கொண்டிருந்தது .

Tuesday, 14 July 2009

அம்மன் கொடை




கொடை அன்று சாயங்காலம் தான் போய் சேர்ந்தோம் ஆலடிப்பட்டிக்கு .ஊரில் ஒரு திருவிழாவிற்கான அறிகுறிகளோ பரபரப்போ அதிகம் காணப்படவில்லை என்றே சொல்லலாம் அந்த நேரத்தில் .கேட்ட போது ,ஆரம்பிக்க இரவு ஆகும் என்பதால் கூட்டம் இனிதான் வரும் என்று சொன்னார்கள் .


ஒரு ஒன்பது மணி போல ,கோவில் பக்கம் போனோம் .ஜகஜோதியாய் விளக்குகள் ,அலங்காரங்கள் என்று களைக்கட்டியிருந்தது .கூட்டம் பரவாயில்லை இப்போது . வழியில் சுடலைமாடசாமி கோவில் . கோவில் வாசலில் உட்கார்ந்து திருநீர் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர் .பக்கத்தில் ஒரு பெரிய உண்டியலையும் வைத்திருந்தார்கள் .இங்கு தான் கொட்டடடிக்க ஆரம்பிப்பார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் .எதிரே வில்லுப் பாட்டுக்கான ஆயத்தங்களை ஒரு குழுவினர் செய்து கொண்டிருந்தார்கள் .இடம் பிடித்து உட்கார்வதில் ஆர்வமாக ஒரு கூட்டம் சுற்றி வந்து கொண்டிருந்தது .

மற்றபடி ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த கொட்டு சத்தம் இன்னமும் கேட்க ஆரம்பிக்கவில்லை .இன்னமும் நேரம் இருப்பதாக தோன்றவே ,பக்கத்தில் இருந்த ஜவுளிக் கடைக்குள் நுழைந்தோம் .ஊருக்கு போய் வந்ததன் நினைவாக இருக்கட்டுமே என்று ஒரு புடவையும் எடுத்துக் கொண்டேன் .வெளியே வந்து பார்த்தால் கூட்டம் அதிகமாகியிருந்தது .

கொட்டும் அடிக்க ஆரம்பித்திருந்தார்கள் .

Monday, 13 July 2009

வடை

இது சமையல் குறிப்பு இல்லை .


ஒரு பதினைந்து நாளுக்கு முன்னால ,ஞாயித்துக்கிழமை ,வெண்பொங்கல் செஞ்சேன் .சரி ,நல்லா இருக்குமேன்னு உளுந்து வடைக்கும் மாவு ரெடி பண்ணி வடையும் தட்டிப் போட்டாச்சு .கொஞ்சம் வேகட்டும்ன்னு அடுப்புல தீயை குறைச்சிட்டு ,உள்ளே போனா டம்முன்னு சத்தம் .ஓடி வந்து பாத்தா ,போட்டிருந்த நாலு வடையில ஒண்ணைக் காணோம் .அடுப்பு பூரா எண்ணெய் .

எங்கடா வடைன்னு தேடினா அது எங்கயோ ஒரு பக்கத்தில போய் விழுந்திருக்கு .சரி ஏதோ தண்ணி அதிகமாகி தெறிச்சிருக்கும் போலன்னு உள்ளே கிடந்த வடைய திருப்பி போட்டுட்டு நின்னுட்டிருக்கேன் ,திரும்பவும் ஒரு டமார் .இப்ப இன்னொரு வட வெளிய குதிச்சிது .கூடவே ஒரு ரெண்டு கரண்டி எண்ணையும் ...


நல்ல வேளை முன் ஜாக்கிரதையா கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டிருந்தேன் .அப்படியும் முகத்தில கொஞ்சம் எண்ணெய் பட்டுப் போச்சு .பயத்தில அப்படியே ஓடிப் போய் தண்ணிய முகத்தில அள்ளி அள்ளி ஊத்தினேன் ( பாவ மன்னிப்பு சிவாஜி மாதிரி )எரிச்சல் மெதுவா குறைஞ்சது .அதுக்கப்புறம் அடுப்பை சுத்தம் பண்ணி மிச்சம் இருந்த மாவையும் சுட்டு முடிச்சேன் (என் தைரியத்த என்னாலேயே பாராட்டாம இருக்க முடியல ).


வெளிய குதிச்ச ரெண்டு வடையும் பாத்தா இப்ப வடை மாதிரியே இல்லை .ரெண்டு லேயரா பிரிஞ்சிருந்தது .வெளி ஓடு அப்படியே வெடிச்சு உள்ள ஒரு சுத்து மாவா தெரிஞ்சது .இதுக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு இன்னமும் யோசிச்சிட்டுருக்கேன் .


முகத்தில ஒரு பக்கத்தில மட்டும் இப்ப ரெண்டு மூணு தழும்பு இருக்கு .நிஜமாவே நிலா மாதிரி இருக்கு என் முகம் இப்ப ....

Tuesday, 7 July 2009

மாப்பிள்ளை முறுக்கு

சிகிச்சைக்கு வரும் ஒரு தம்பதியர் இவர்கள் .கணவர் ஓரினச் சேர்க்கையின் மூலம் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் .இப்போது மனைவிக்கும் இவர் மூலம் இந்நோய் .இரண்டு குழந்தைகள் .முறையான சிகிச்சை ,அதை செய்து கொள்வதற்கேற்ற வசதிகள் ,அமைதியான குடும்பம் என்று பெரிய சிக்கல்கள் ஏதும் இன்றிதான் போய்க் கொண்டிருக்கிறது இவர்கள் வாழ்க்கை .

ஒரு முறை மருத்துவமனைக்கு வந்த போது ,இவர் மனைவி ரொம்பவே வருத்தமாகவும் ,படபடப்பாகவும் இருந்தார் .என்ன என்று விசாரித்த போது ,"இவரு ரொம்ப சண்ட போடுறார்,"என்று கூறினார் .சண்டைக்கான காரணம் ,"இவ அம்மா அப்பா என்ன மரியாதையா நடத்தல .என்ன பாக்கும் போது ஏதோ ஒப்புக்கு பேசி வைக்கிறாங்க .என்கிட்டே ,மாப்பிள்ள நல்லா இருக்கீங்களா ?மாத்திரையெல்லாம் சரியா சாப்பிடுறீங்களா ன்னு கூட விசாரிக்கறதில்ல .அப்புறம் கோவம் வருமா ,வராதா ?"

Saturday, 4 July 2009

பெண்ணுரிமை

பல நூறு வருஷமா தான்
பூட்டி தான் வச்சாங்க
கெணத்துக்குள்ள தவள போல
மாட்டி தானே வச்சாங்க

உரிமையெல்லாம் தந்து புட்டோம்
கரிசனந்தான் கொண்டு புட்டோம்
மேடையில ஏத்திபுட்டோம்ன்னு ....
சொந்த கத எதுக்கு இப்ப?

என்ன உரிம தந்தீக ?
எப்படித்தான் தந்தீக ?
எங்கிருந்து தந்தீக ?
எவருடையத தந்தீக ?

கல்லில மாவு அரைச்சோம்
கிரைண்டரில் அரைக்கும் உரிம தந்தீக
கிணத்தடியில் தொவச்சிக்கிட்டோம்
மிஷினில் தோய்க்கவும் உரிம தந்தீக

அட பிள்ள ஒன்னு பெத்துகிடத்தான்
பெரிய உரிம தந்தீக
பத்து மாசம் சொமந்தப்புறம்
ஒரு எழுத்துக்கு உரிம தந்தீக

பாரி வள்ளல் பரம்பர தான்
பேகனுக்கு ஒறவிவுக
வாரி கொடுத்தே வாழ்ந்து விட்ட
எம் .ஜி ஆரு போல் இவுக

வீட்டிலிருந்து வாசலுக்கு
போக உரிம தந்தீக
அட அப்புறமா வேலைக்கும்
போக உரிம தந்தீக

சம்பளத்த கொண்டு தந்தா
சேல வாங்க உரிம தந்தீக
மெச்சி தான் சொல்ல வேணும்
ரவிக்க வாங்கவும் உரிம தந்தீக

அள்ளி அள்ளி தந்தீக
அசத்தலா தந்தீக
சிம்மாசனம் மேலேறி
பகட்டா தான் தந்தீக

எத்தன நாள் சொன்னாலும்
சொல்லவே முடியாது
எப்படித்தான் சொன்னாலும்
வெளங்க சொல்ல இயலாது

சொந்த பெரும பேசிகிட்டு
அதிகாரம் ஏத்திக்கிட்டு
பெருசாக பேசாதீக
அதிலொண்ணும் பெருமையில்ல

ஒங்க வழி பாத்துகிட்டு
ஒழுங்க தான் போய்க்கிடுங்க
எங்க வழி நேராத்தான்
நாங்களே செஞ்சுக்குறோம்

Tuesday, 16 June 2009

அதே 32 கேள்விகள்

இந்த 32 கேள்விகள் சங்கிலியில் என்னையும் இணைத்துவிட்ட சகோதரர் ரிஷானுக்கு நன்றி


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
இந்த பெயர் என் அப்பாவின் நீண்ட நாள் கனவு .என் அம்மா எனக்கு பத்ரா என்றும் என் பாட்டி எனக்கு லிங்கேஸ்வரி என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் .ஆனால் சொல்ல இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாக தெரியவில்லை .என் பெயரின் அழகை நான் சிறு வயதில் உணரவில்லை (ஸ்டைலாக இல்லை என்று வருந்தியிருக்கிறேன் ).உணர்ந்ததிலிருந்து பிடித்துப் போனது .

பெயர்க்காரணம் இங்கே :
http://poongulali.blogspot.com/2008/08/blog-post.html

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பொசுக்கென்று நான் அழுவதாக சொல்வார்கள் ...அழுது ஒரு நாள் ஆகிவிட்டது .

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
சிறு வயதில் என் கையெழுத்தைக் கண்டு என் பெரியப்பா ஆனந்த கண்ணீர் சிந்தியிருக்கிறார் ."டாக்டர் கையெழுத்து மாதிரி இல்லாம தெளிவா இருக்கு" என்று பாராட்டு பெறுகிறது என் கையெழுத்து .பிடிக்கும் எனக்கு


4. பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா வைக்கும் மீன் குழம்பு


5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
பார்த்தவுடன் சிரித்து வைப்பேன் .ஆனால் நட்பாக அவகாசம் தேவைப்படுகிறது .


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
திருச்செந்தூர் கடலில் ஒரு தடவை குளித்து திக்கு முக்காடிப் போனேன் .அதிலிருந்து கடல் குளியல் என்றாலே வெறுப்பு தான் ."குத்தால அருவியிலே குளிச்சது போலிருக்குதா ?"அருவி குளியல் அதுவும் குற்றாலக் குளியல் போல சுகம் வேறு இல்லை .

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
உடல் மொழியை


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
பிடித்தது -பலரிடமும் அன்பாக பழக முடிவது
பிடிக்காதது -சோம்பல்

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

பிடித்தது -கடின உழைப்பு
பிடிக்காதது -முன்கோபம்


10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
எப்போதும் அம்மா மடியிலேயே இருக்க முடியாததற்கு வருந்துகிறேன்


11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
பச்சை நிற சுரிதார்


12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் அறையில் ஏ .சி யின் சத்தத்தை மட்டும்


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்


14. பிடித்த மணம்?
மல்லிகை


15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
சாந்தி -http://punnagaithesam.blogspot.com/
இணையத்தில் அறிமுகமாகி நல்ல தோழியாகிப் போனவர் .எனக்கு சொந்தமாகவும் இருக்கக் கூடும் .எல்லோரிடத்தும் நல்லதையே காண்பவர் .
செல்லமாக "தலைவி "


துரை -கவிதைகள் http://duraikavithaikal.blogspot.com/
நாட்டு நடப்புகளை கவிதையில் அள்ளி வருபவர் .கடைசியில் டிவிஸ்ட்டோடு முடியும் இவர் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு .



16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு
கவிதைகள் .உணர்வுகளை வார்த்தைகளாக சொல்வது சுலபமில்லை .ஆனால் இவர் கவிதைகளில் உணர்வுகள் வார்த்தைகளுள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன .நான் முதலில் படித்த இவரின் கவிதை "எலும்பு கூட்டு ராஜ்ஜியங்கள் ".அன்றிலிருந்து இந்தக் கவிஞரின் ரசிகையாகிப் போனேன் .

17. பிடித்த விளையாட்டு?
குறுக்கெழுத்து ,பிஞ்சிங் த நோஸ்

18. கண்ணாடி அணிபவரா?
வருத்தத்துடன் சிறிது காலமாக .


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மனதை அதிகம் சிரமப்படுத்தாத படங்கள் ....
மிகவும் பிடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளை "


20. கடைசியாகப் பார்த்த படம்?
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் ......காசை தெண்டம் பண்ணிட்டோமே என்ற வேதனையுடன்


21. பிடித்த பருவகாலம் எது?
மழைக்காலம்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எப்போதுமே திரும்பத் திரும்பப் படிப்பது பிரேமா பிரசுரத்தின் "விக்கிரமாதித்தன் கதைகள் "


23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
வேறு நல்ல படம் கிடைக்கும் போது


24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - தண்ணீர் விழும் சத்தம்
பிடிக்காத சத்தம்- அதிகமாக இருக்கும் எந்த சத்தமும்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
அமெரிக்கா,மனம் என்னமோ வீட்டை தான் சுற்றி வந்தது


26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் மேடைப் பேச்சு


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
நேரத்திற்கேற்ப ஒரு பொய் பேசுவது

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
நிறைய குட்டிச் சாத்தான்கள் இருக்கின்றன ,குறிப்பாக
தூங்கிக் கொண்டே இரு என்று சொல்லும் சாத்தான்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
கொடைக்கானல்

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
சீ இவளா ,என்று எவரும் சொல்லாமல்

31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
தொலைக்காட்சி பார்ப்பது


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
ஒரு இனிய பயணம்

Monday, 15 June 2009

தாயிற் சிறந்த .....





ஒரு ஆராய்ச்சிக்காக பாலியல் தொழில் செய்யும் சில பெண்களோடு பணி புரிய நேர்ந்தது .ஆளுக்கொரு கதை இருக்கும் .சில சுவாரசியமாக ,சில வழக்கம் போல .

இவர்களுள் குறைந்த வயதுடைய பெண் ஒருவர் .வயது பதினெட்டு .இவரோடு எப்போதும் வரும் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் .கேட்டால் பக்கத்து வீடு என்று சொல்வார்.


மாதம் ஒரு முறை என பரிசோதனைக்கு வரும் போதெல்லாம் போதையிலேயே இருப்பார் .கேட்டால் ஊரிலிருக்கும் கோவில்கள் பேரையெல்லாம் சொல்லி இல்லவே இல்லை ,தனக்கு அந்த பழக்கமே கிடையாது என்று சத்தியம் செய்வார்.ஒரு முறை பரிசோதனைக்கு வந்த போது ,மிக அதிக போதையில் இருந்தார் .சரியாக பேசக் கூட முடியவில்லை .வீட்டிற்கு அனுப்பி விட்டோம் .

அடுத்த நாள் வந்த போது இதை பற்றி கேட்டு பயன் ஏதும் இல்லை என்பதனால் ,வழக்கம் போல நான் சோதனைகளை மட்டும் செய்து கொண்டிருந்தேன் .நான் ஒன்றும் கேட்காமல் இருந்தது அந்த பெண்ணை உறுத்தியிருக்க வேண்டும் ."என் மேல கோவமா ?"என்றார் மெதுவாக .நான் அமைதியாகவே இருந்தேன் ."நேத்து ரொம்ப குடிச்சிட்டேன் போல .கஸ்டமர் குடிக்கச் சொன்னான் ."

"இப்படியா குடிக்கிறது ?நிப்பாட்டலாமே ,மருந்து மாத்திரை எல்லாம் இருக்கு "என்று கேட்டேன். சிரித்துக் கொண்டார் ,"எனக்கு பதிமூணு வயசிலிருந்து இந்த பழக்கம் இருக்கு .நா பெரிய பொண்ணு ஆன உடனே எங்கம்மாவும் எங்க மாமாவும் கஸ்டமர் கூட்டிட்டு வந்தாங்க .குடிச்சா தான் அந்த வயசுல வலி தெரியாம இருக்கும் ன்னு குடிக்க பழக்குனாங்க .அப்புறம் அப்படியே பழக்கம் ஆயிருச்சி ."உங்கம்மா எங்கே ?"என்று நான் கேட்டதற்கு ,"மாசா மாசம் என்கூட வராங்களே அவங்க தான் எங்கம்மா .இங்க அத சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க .நா சொன்னேன்ன்னு சொல்லிராதீங்க ,"என்று பதில் சொன்னார் .

நான் மீண்டும் ,"குடிப் பழக்கம் விடறதுக்கு வைத்தியம் பாக்கலாமா ?"என்று கேட்க ,"நீங்க நிப்பாட்ட மருந்து குடுப்பீங்க ,நானும் நிப்பாட்டுவேன் .ஆனா வீட்டுக்கு வந்ததும் கஸ்டமர் வருவாங்க ,அப்ப திருப்பி குடிக்க தோணும் ,சரி நானே குடிக்காம இருந்தாலும் கஸ்டமர் கம்பனிக்கு குடிக்க சொல்வாங்க ,அப்ப என்ன செய்யறது ?"


Thursday, 11 June 2009

மிட்டாய்க்காரன்


பீய்ங் பீய்ங் பீய்ங்ங்ங்ங்ங்ங் ...........

இந்த சத்தம் கேட்டதுமே உற்சாகம் தொத்திக் கொள்ளும் நான் சிறுமியாய் திருநெல்வேலியில் இருந்த நாட்களில் .மிட்டாய்க்காரன் வருவதை அறிவிக்கும் ஓசையாக அறிந்துவைத்திருந்தேன் இதை .மிட்டாய்க்காரன் வந்ததும் ஆச்சியிடம் சில்லறையை வாங்கிக் கொண்டு தெருவில் இறங்கி ஓடுவேன் .


தலையில் ஒரு தலைப்பாகை .கையில் ஒரு நீள கம்பு .அதற்கு தலைப்பாகையாய் ஒரு பொம்மை .அதன் கீழ் சுத்தப்பட்டிருக்கும் மிட்டாய் .அதோடு வருகை அறிவிக்கும் அந்த ஒலி .ச்சுயிங் கம் போல பஞ்சு மிட்டாய் நிறத்தில் இருக்கும் இந்த மிட்டாய் .இதை நேர்த்தியாக கொஞ்சம் விசாரிப்புகளுக்கு பிறகு கையில் வாட்சாகவும் ,விரலில் மோதிரமாகவும் ,சில நேரங்களில் காதில் கம்மலாகவும் கூட சுற்றி விடுவார் .பெருமையாக இருக்கும் .வாட்சை மெதுவாக கொஞ்சம் நக்கி, கொஞ்சம் கடித்து என்று தின்பதற்கும் அத்தனை சுவை .


பல வருடங்களாகி விட்டன .நானும் மிட்டாய்க்காரனை இல்லாமல் போய் விட்டதாக கருதி ,மறந்து தான் போயிருந்தேன் .கொடைக்கு சென்ற போது கோவிலுக்கு வெளியே, கூட்டத்தில் ,சுற்றி வரும் சிறுவர்கள் நடுவே ,அட ,மிட்டாய்க்காரனே தான் .

Wednesday, 10 June 2009

கரெண்ட் கொடுங்கள் ??????

ஒரு நாள் காலை ,நான் மருத்துவமனைக்குள் நுழைகிறேன் ,ஒரு பெண் ,என்னை ஓடி வந்து பிடித்துக் கொண்டார் .என் நோயாளி ஒருவரின் சகோதரி இவர் ."என் தம்பி போய் விட்டான் ,போய் விட்டான் "என்று கதறினார் ."இவர்கள் கவனிக்காமல் என் தம்பியைக் கொன்று விட்டார்கள் "என்று குற்றம் சாட்டினார் ,பணியிலிருந்த மருத்துவர் செவிலியர் மீது .


என்னவென்று விசாரித்த போது ,செவிலியரில் ஒருவர் சொன்னார் ,"டாக்டர் ,காலயில ஆம்புலன்சில வந்தாங்க .வரும்போதே அவர் இறந்து போயிருந்தார் .வந்த உடனே கரெண்ட் வைங்க ,கரெண்ட் வைங்கன்னு கத்தினாங்க .இப்ப கரெண்ட் வைக்காததால தான் அவர் இறந்து போயிட்டார்ன்னு சொல்றாங்க ,"என்று சொன்னார் .


நான் தனியே அவரை அழைத்து விசாரித்தேன் .வீட்டில் காலையில் தலை சுற்றுகிறது என்று அவர் தம்பி சொல்லியதாகவும் இவர் ஜூஸ் கலக்கி கொண்டு வரும் முன் மயங்கி விழுந்து கிடந்ததாகவும் .அதன் பிறகு பேச்சு மூச்சே இல்லை எனவும் கூறினார் .அதன் பிறகு ஆம்புலன்சிற்கு போன் செய்து இங்கு அழைத்து வந்ததாகவும் கூறினார் .வீட்டில் இருக்கும் போதே தன் தம்பி இறந்துவிட்டதை தான் உணர்ந்ததாகவும் கூறினார் .


பின்னர் எதற்காக கரெண்ட் வையுங்கள் என்று சொன்னீர்கள் என நான் கேட்டதற்கு ,"சிவாஜி படத்தில் கரெண்ட் வைச்சி இறந்த ரஜினிகாந்துக்கு உயிர் கொண்டு வந்தாங்க தானே ?அதுமாதிரி இங்க வந்தவுடனே செஞ்சிருந்தா ,என் தம்பியும் நல்லாயிருப்பான் ,"என்று சொன்னார் .

பொறுமையாக ,"உங்க தம்பி இங்க வரதுக்கு ரொம்ப முன்னாலேயே இறந்து போய்ட்டார் .அவருக்கு இந்த மாதிரி கரெண்ட் எல்லாம் வச்சி உயிர் கொண்டு வர முடியாது ,"என்று விரிவாக விளக்கம் சொல்லி அனுப்பி வைத்தோம் .

Tuesday, 9 June 2009

என் கொலுசுகள்


தீராத மையல் எனக்கு
என் கொலுசுகள் மேல்
அவை அணியாத கால்களை
காணவே அருவருக்கும் மனம்
கணுக்கால் மறைக்கும் செருப்புகள் கூட
நான் அணிவதில்லை
என் கொலுசுகளுக்கு
மூச்சடைக்கும் என


உரத்த குரலில்
அதிர பேசும் வாயாடிகள் அல்ல
என் கொலுசுகள்
வாயடைத்து போன ஊமைகளும் அல்ல.
செல்லமாய் சிணுங்கி
என் பாதங்களுடன் மோகித்துக் கிடக்கின்றன
என் கொலுசுகள்


என் பாதத்தில் பங்குபெற வந்த
மெட்டிகள் மேல்
பொல்லாத கோபம்
என் கொலுசுகளுக்கு
இன்னமும் அவற்றினிருந்து
ஒரு அடி தள்ளித்தான் கிடக்கின்றன


பட்டுப்புடவை மேல் மட்டும்
என் போலவே
ஆசைதான்
என் கொலுசுகளுக்கும்
எட்டியதை
இழை இழையாய் பிரித்து
உடுத்திப் பார்க்கின்றன


நான் மட்டும் இருக்கும் போது
சிரித்து
என் கால்களில் சறுக்கி விளையாடி
உரிமை கொள்ளும்
என் கொலுசுகள்


நான் புதிதொன்றை
மாற்றும் போதும்கூட
பல்லிளித்து
வருத்தம் காட்டாமல்
விலகிக் கொள்ளும்


என் மேல் தீராத மையல் தான்
என் கொலுசுகளுக்கும்

Monday, 8 June 2009

என்றுமே மக்கள் திலகம்

ஆலடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற மலைக் கோவில் என சொல்லி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள் .போன நேரம் மதியம் பன்னிரண்டு .கடும் வெயில் .மலைக்கு மேல் ஏறி முருகனை பார்ப்பது பற்றி நினைக்கக் கூட முடியவில்லை .கீழிருந்த ஒரு ராமர் கோவிலில் வழிபட்டு திரும்பினோம் .

அந்த ராமர் கோவிலில் அந்த நேரத்திலும் நல்ல கூட்டம் .வெளியில் முறுக்கு ,ஐஸ் ,அண்ணாச்சி பழம் (இதை தோல் சீவி அழகாய் தந்தார்கள் ,அத்தனை சுவை )இவற்றுடன் சுண்டலும் விற்றுக் கொண்டிருந்தார்கள் .உள்ளே சாமிக்கான அலங்காரத்தில் இளநீர் ,ஈந்தங் குலை போன்றவையும் இடம்பெற்றிருந்தன .

ஒரு பக்கம் ராமர் கதையும் காதில் விழுந்துக் கொண்டிருந்தது .குரலையும் சொல்லும் பாங்கையும் வைத்துப் பார்க்கும் போது திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றியது .ஆனால் ஒரு பெரியவர் ,(அவரை ஒட்டிய சாயல் கூட )ஒரு நாற்காலியில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

அதில் ராமர் ஆட்சியின் பெருமைகளைப் பற்றி சொல்லி விட்டு ,".நீங்கள் ஏதோ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியைப் பற்றி சொல்வதாக எண்ணிக் கொள்ளக் கூடாது . நான் சொல்வது அந்த ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சியை பற்றி .ஆனால் இந்த ராமச்சந்திரன் ஆட்சியும் அந்த ராமச்சந்திரன் ஆட்சியைப் போல் தான் இருந்தது .அவர் இருந்தப்ப விலை ஏறியதா ,மக்கள் இப்படி கஷ்டப்பட்டார்களா ?
அந்த ஸ்ரீ ராமச்சந்திரனைப் போலவே இந்த ராமச்சந்திரனும் மக்களுக்கு நன்மையே செய்தார் ,"என்று முடித்தார் .